II


348திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



[கலிநிலைத்துறை]
மாழை மான்மட நோக்கிதன் மணாளனை வணங்கிப்
பீழை யேழ்பவங் கடந்துநின் னடிநிழல் பெற்றோர்
சூழ நீசிவ புரத்தில்வீற் றிருப்பது தொழுதற்
கேழை யேற்கொரு கருத்துவந் தெய்திய தெந்தாய்.

     (இ - ள்.) மாழைமான் மட நோக்கி தன் மணாளனை வணங்கி -
இளமை பொருந்திய மான் போலும் பார்வையையுடைய மடப்பத்தையுடைய
உமையம்மையின் நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை வணங்கி, பீழை
ஏழ்பவம் கடந்து - துன்பத்தையுடைய எழுவகைப் பிறவியையுங் கடந்து,
நின் அடி நிழல் பெற்றோர் - நினது திருவடி நிழலை அடையப்
பெற்றோர்கள், சூழ - சூழா நிற்க, நீ சிவபுரத்தில் வீற்றிருப்பது - நீ
சிவலோகத்தின்கண் வீற்றிருக்குங் காட்சியை, தொழுதற்கு - கண்டு
வணங்குதற்கு, எந்தாய் - எம் தந்தையே, ஏழையேற்கு ஒரு கருத்து வந்து
எய்தியது - அறிவில்லாத அடியேனுக்கு ஓர் எண்ணம் வந்து தோன்றியது.
மாழை - இளமை; இஃது இப்பொருட்டாதலை,

"மைபூத்தலர்ந்த மழைக்கண் மாழைமானேர் நோக்கின்"

என்னும் சிந்தாமணிச் செய்யுள் உரை நோக்கியுணர்க. மடப்பத்தையுடையாள்
என விகுதிப் பொருளோடு இயைக்க; மருட்சியும் மடப்பமும் உடைய நோக்கு
என்றுமாம். (28)

என்ற காவல னன்பினுக் கெளியராய் வெள்ளி
மன்ற வாணரவ் வுலகையில் வுலகிடை வருவித்
தின்று காட்டுது மிவற்கெனத் திருவுளத் தெண்ணம்
ஒன்றி னாரஃ துணர்ந்ததா லுருத்திர வுலகம்.

     (இ - ள்.) என்ற காவலன் அன்பினுக்கு எளியராய் - என்று கூறிக்
குறையிரந்த வரகுண வேந்தன் அன்பிற்கு எளியவராகி, வெள்ளி மன்றவாணர்
- வெள்ளியம்பலமுடைய சோம சுந்தரக் கடவுள், அவ்வுலகை இவ்வுலகிடை
வருவித்து இன்று இவற்குக் காட்டுதும் என - அச்சிவலோகத்தை இந்த
நிலவுலகின்கண் வருவித்து இன்று இவ்வன்பனுக்குக் காட்டுவேமென்று,
திருவுளத்து எண்ணம் ஒன்றினார் - திருவுள்ளத்தின்கண் எண்ணியருளினார்;
உருத்திர உலகம் அஃது உணர்ந்தது - அச்சிவலோகம் அதனை உணர்ந்தது.

     எண்ணம் ஒன்றினார் - எண்ணம் பொருந்தினார்; எண்ணினார். ஆல்
: அசை. (29)