II


விறகுவிற்ற படலம்379



     அடுத்தவன் - வெற்று நாட்டிலிருந்து வந்தவன். எழீஇ, சொல்லிசை
யளபெடை. சுருதி மடுத்து என்பதற்குப் பண்ணமைத்து என்றுரைத்தலுமாம்.
அவன் இசை பாடுவான் வல்லான் யாவன் என்று கருதியென்னலுமாம். (23)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
வண்டறை கொன்றை யான்முன் வந்துநீ யாரை யென்றான்
பண்டரு விபஞ்சி* பாணபத்திர னடிமை யென்றான்
முண்டக மலரோன் மாயோன் புரந்தரன் முதன்மற் றேனை
அண்டருந் தன்குற் றேவ லடிமையாக் கொண்ட வம்மான்.

     (இ - ள்.) வண்டு அறை கொன்றையான் முன் வந்து - வண்டுகள்
ஒலிக்கின்ற கொன்றை மாலையையணிந்த இறைவன் திருமுன் வந்து, நீ யார்
என்றான் - நீ யாவன் என்று வினாவினான்; முண்டகமலரோன் - தாமரை
மலரை இருக்கையாகவுடைய பிரமனும், மாயோன் - திருமாலும், புரந்தரன்
முதல் மற்று ஏனை அண்டரும் - இந்திரன் முதலிய ஏனைய தேவர்களுமாகிய இவர்களை, தன் குற்றேவல் அடிமையாக் கொண்ட அம்மான் - தனது
குற்றேவல் செய்யும் அடிமைகளாகக் கொண்ட இறைவன், பண்தரு விபஞ்சி -
பண்ணமைந்த யாழ் வல்லோனாகிய, பாண பத்திரன் அடிமை என்றான் -
பாணபத்திரன் அடிமை என்று கூறியருளினான்.

     யாரை, ஐகாரம் முன்னிலைக் கண் வந்தது. விபஞ்சி - யாழ்; ஈண்டு
யாழ் வல்லான் என்னும் பொருட்டு. மற்று : அசை. அடிமையென்றான்
இஃதொரு வியப்பிருந்தவாறென்னையென்க.

"எப்புன்மையரை மிகவேயுயர்த்தி விண்ணோரைப் பணித்தி"

என்னும் திருவாசகம் இங்கே சிந்திக்கற்பாலது. (24)

கனியிசைக் கிழவன் றன்கீழ்க் கற்பவ ரநேகர் தம்முள்
நனியிசைக் கிழமை வேட்டு நானுமவ் வினைஞ னானேன்
தனியிசைக் கிழவ னோக்கித் தசையெலா மொடுங்க மூத்தாய்
இனியிசைக் கிழமைக் காகா யென்றெனைத் தள்ளி                                          விட்டான்.

     (இ - ள்.) கனி இசை கிழவன் தன் கீழ்க் கற்பவர் அநேகர் தம்முள் -
சுவை கனிந்த இசையில் வல்ல அப்பாண பத்திரனிடத்து இசை கற்கும்
மாணவகர் பலருள், இசைக்கிழமை - இசை கற்றற்கு உரியனாதலை, நனி
வேட்டு - மிகவும் விரும்பி, நானும் அவ்வினைஞன் ஆனேன் - நானுங்
கற்குந்தொழிலுடையனானேன்; தனி இசைக் கிழவன் நோக்கி - ஒப்பற்ற
இசைக்குரிய அப்பாணபத்திரன் என்னைப் பார்த்து, தசை எல்லாம் ஒடுங்க
மூத்தாய் - தசை முற்றும் ஒடுங்குமாறு முதியவனாயினை (ஆகலின்,) இனி
இசைக் கிழமைக்கு ஆகாய் என்று - இனி நீ இசை கற்றற்கு உரியனாக
மாட்டாய் என்று கூறி, எனைத் தள்ளிவிட்டான் - என்னை நீக்கிவிட்டான்.


     (பா - ம்.) * விபஞ்சிப்பாண, + பாணன் பத்திரன்.