II


விறகுவிற்ற படலம்381



"மாத்திரைக ளொன்பானுந் தானங்க ளெட்டானும்
ஏத்துங் கிரியையென் நீரைந்தும் - கோத்துப்
பதின்மூன் றெழுத்தாற் றொழிலைந்தும் பண்ணின்
மதியோர்க ளைந்துநிற மாம்"

என்னுஞ் செய்யுளாலறிக. நல்யாழ் - குண முழுதும் பொருந்திக் குற்ற
முழுதும் நீங்கின யாழ். குணங்களை,

"சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு
நல்ல குமிழும் தணக்குடனே - மெல்லிலாய்
உத்தம மான மரங்க ளிவை யென்றார்
வித்தக யாழோர் விதி"
 
"தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும்
உளதா யொருங்கூன மின்றி - அளவ
முதிரா திளகாது மூன்றாங்கூ றாய
அதுவாகில் வீணைத்தண் டாம்"

"கோடே பத்த ராணி நரம்பே
மாடக மெனவரும் வகையின வாகும்"
 
"செம்பகை யென்பது பண்ணோ டுளரா
இன்பமி லோசை யென்மனார் புலவர்"

என்பன முதலியவற்றால் அறிக. குற்றம் - நரம்பின் குற்றம்; அவை
செம்பகை, ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்பன : அவற்றின் இயல்பை,

"ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்"
 
 
"கூட மென்பது குறியுற விளம்பின்
வாய்வதின் வாராது மழுங்கியிசைப் பதுவே"
 
"அதிர்வெனப் படுவ திழுமென வின்றிச்
சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே"

என்பவற்றாலறிக. இவை மரக் குற்றத்தால் வருவன என்பதை,

"நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயங்கும்
பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற்படல்கோ
ணேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல்
சேரினேர் பண்க ணிறமயக் கம்படுஞ் சிற்றிடையே"

என்பதனாலறிக. இம்மேற்கோள்கள் சிந்தாமணி உரையில்
நச்சினார்க்கினியராற் காட்டப் பெற்றன. தேனொழுகிற்றென்ன
நரம்பை வீக்கி என்றுமாம். (27)