II


398திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



எங்கு ளானெனத் தேடுவா ரிவரெதி ரயல்வாய்
அங்கு ளார்சில ரறிந்தவா றறைகுவா ரவனேற்
றிங்கு ளான்விற கெடுத்தொரு முதுமக னிவன்பாற்
பொங்கு மேழிசைப் பத்திர னடிமையாய்ப் போந்தான்.

     (இ - ள்.) எங்கு உளான் எனத் தேடுவார் இவர் எதிர் - எங்கு
இருப்பான் எனத் தேடுவாராகிய இவரெதிரே, அயயல்வாய் அங்குளார்
சிலர் - அங்கே அருகிலுள்ளார் சிலர், அறிந்தவாறு அறைகுவார் -
தெரிந்தவாறு சொல்வார், அவன் நேற்று இங்கு உளான் - அவன் நெரு நல்
இங்கு இருந்தான், ஒரு முதுமகன் - ஒரு கிழவன், விறகு எடுத்து - விறகு
சுமந்து. இவன்பால் - இவ்வேம நாதனிடத்து, பொங்கும் ஏழ் இசைப் பத்திரன்
- விளங்குகின்ற ஏழு இசையிலும் வல்ல பாண பத்திரனது. அடிமையாய்ப்
போந்தான் - அடிமையாகி வந்தான்.

     அயல்வாய் பக்கத்து மனையிடங்கள். அடிமையாய் - அடிமையென்று
கூறி. அறைகுவார் என்பது வருஞ்செய்யுளில் 'என' என்பதனைக் கொள்ளும்.
(60)

பாடி னான்பின்பு பட்டது தெரிகிலேம் பானாள்
ஓடி னானெனக் கேட்டலு மொற்றர்போய்க் கொற்றஞ்
சூடி னானவை யடைந்தவர் சொல்லிய வாறே
ஆடி னார்வியப் படைந்தனு மானமுற் றரசன்.

     (இ - ள்.) பாடினான் - (வந்து) பாடினான், பின்பு பட்டது
தெரிகிலேம் - பின்னர் நிகழ்ந்த செய்தியை அறியோம். பால் நாள்
ஓடினான் - பாதி இரவில் அவ்வேமநாதன் ஓடினான், என - என்று
கூற, கேட்டலும் - கேட்டவளவில், ஒற்றர் போய் - உழையோர் சென்று,
கொற்றம் சூடினான் அவை அடைந்து - வெற்றி மாலையைச் சூடிய
பாண்டியனது அவையைச் சார்ந்து, அவர் சொல்லியவாறே ஆடினார் -
அவ்வயலோர் கூறியவாறே கூறினார்; அரசன் வியப்பு அடைந்து அனுமான
முற்று - பாண்டியன் அதிசயித்து ஐயமுற்று.

     பட்டது - நிகழ்ந்தது. கொற்றம் - வெற்றி; வாகை. ஆடினார் -
கூறினார். அநுமானம் - ஐயம்; கருதுதலுமாம். (61)

தன்ன டைந்தவத் தந்திரித் தலைவனை நோக்கி
என்ன வாறவன் போனவா றிங்கினும் போன
பின்னை யாதுநீ செய்தனை யெனவிசைப் பெருமான்
தென்னர் கோனடி தொழுதுதன் செய்தியை மொழிவான்.

     (இ - ள்.) தன் அடைந்த அத்தந்திரித் தலைவனை நோக்கி -
தன்னைச் சார்ந்து நின்ற அந்த யாழ்த் தலைவனாகிய பாணபத்திரனைப்
பார்த்து, அவன் போனவாறு என்னவாறு - அவன் போன விதம் என்ன
வகை, இங்கினும் போன பின்னை - இங்கு நின்றும் போயினபின், நீ யாது