II


இசைவாதுவென்ற படலம்445



பொருள் உரைத்தாய் நீயே - அங்ஙனங் கூறியருளிய வனாகிய நீயே,
பாதிநாரி உரு ஆனாய் என்று - ஒருபாதி பெண்வடிவமாயினை என்று
கூறி, பிறர்பழித்தால் - புறச்சமயிகள் ஏசினால், அடியேன் விடை ஏது
அறைவேன் - (அவருக்கு) அடியேன் யாது விடை யிறுப்பேன்?

"அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன்"

என, இப்புராணத்து நம்பியாரூரர் துதியிற் கூறியிருத்தல் இங்கு நோக்கற்
பாலது. நானா - பல, மகளிராசையை நீத்தல் வேண்டுமென்று கூறிய நீயே
பாதி நாரியுருவானது ஆன்மாக்களக்குப் போகத்தை யூட்டிக்
கன்மந்தொலைத்து அருள்புரிதற் கென்னும் உண்மையுணராது புறச்சமயிகள்
நின்னைப் பழித்துரைப்பார்; அவர்க்குக் கூறும் விடை யாதும் இல்லை
யென்க.

"தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடி
பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி வீடுவர்காண் சாழலோ"

என்னும் திருவாசகம் இங்கே சிந்திக்கற்பாலது. (35)

வரத னாகி யெவ்வுயிர்க்கு மாயா விருத்தி வலியடக்கிச்
சரத மான வீட்டின்பந் தருவாய் மதுரைத் தனிமுதலே
சரத மான வீட்டின்பந் தருவாய் வீடு பெறுவார்போல்
விரத யோக நிலையடைந்தா யென்பார்க் கென்னான்                                  விளம்புவளே.

     (இ - ள்.) வரதனாகி - அருட்கொடை யுடையவனாகி, எவ்வுயிர்க்கும்
மாயாவிருத்தி வலி அடக்கி - எல்லா வுயிர்களுக்கும் மாயாமலத்தின்
தொழில் வலியை அடக்கி, சரதமான வீட்டு இன்பம் - அறியாத
வீட்டின்பத்தினை, மதுரைத் தனிமுதலே தருவாய் - மதுரையில்
அமர்ந்தருளிய ஒப்பற்ற முழுமுதற் கடவுளே நீயே அருளுவை யாயினை;
சரதமான வீட்டின்பம் தருவாய் - (அவற்றுக்கு) அவ் வின்பத்தை அருளும்
நீயே, வீடு பெறுவார்போல் - வீட்டினை விரும்பி யோகுசெய் வாரைப்போல,
விரத யோகநிலை அடைந்தாய் என்பார்க்கு - (அரிய) நோன்புகளையுடைய
யோகநிலையை அடைந்தனை என்று பழிப்பார்க்கு, நான் என் விளம்புவன் -
யான் யாது கூறுவேன்.

     நீ யோகநெறியில் நிற்பது ஆன்மாக்களை யோகநெறியிற் புகுத்திப்
பேரின்பவீடு அளித்தற்கு என்னும் உண்மை யுணராது புறச்சமயிகள்
நின்னைப் பழித்துரைப்பர்; அவர்க்குக் கூறும் விடை யாதும் இல்லை யென்க.
இவ்வியல்பினரை நோக்கியே,

"போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிய லோரார்
யோகியா யோக முத்தி யுதவத லதுவு மோரார்
வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
ஊகியா மூட ரெல்லா மும்பரி லொருவ னென்பார்"