II


பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த படலம்469



     (இ - ள்.) திண்தேர் துசை நின்று - வலிய தேரின் மேல் நின்று,
அடல் நேமி திரித்து விட்டான் - கொல்லுதலையுடைய திகிரிப்படையைச்
சுழற்றி விட்டான்; ஏன வேந்தன் கண்டு விலக்கி - பன்றியரசன் பார்த்து
(அதனைத்) தடுத்து, கடுங்காலில் பாய்ந்து - கடிய காற்றைப் போல விரைந்து
பாய்ந்து, தண்தேர் உடையத் தகர்த்தான் - தண்ணிய (நிழலையுடைய) தேர்
சிதையும்படி உடைத்தான்; வண்டு ஏறு தாரான் - வண்டுகள் மொய்க்கும்
மாலையையணிந்த பாண்டியன், பரி தன்னில் பாய்ந்து - (பின்பு) குதிரைமேற்
பாய்ந்து ஏறி, விடவேலை வலம் திரித்தான் - நஞ்சு பூசிய வேற்படையை
வலமாகச் சுழற்றினான். (42)

சத்திப் படைமேல் விடுமுன்னர்த் தருகண் வீரன்
பத்திச் சுடர்மா மணித்தார்ப்பரி மாவின் பின்போய்
மொத்திக் குடர்செம் புனல்சோர முடுகிக் கோட்டாற்
குத்திச் செகுத்தான் பொறுத்தானலன் கூடல் வேந்தன்.

     (இ - ள்.) சத்திப்படை - (அங்ஙனஞ் சுழற்றிய) வேற்படையை, மேல்
விடு முன்னர் - தன் மீது விடுதற்கு முன்னரே, தறுகண் வீரன் -
அஞ்சாமையையுடைய அப்பன்றி வீரன், பத்திச் சுடர் மாமணித்தார்ப்
பரிமாவின் பின் போய் - ஒளி வரிசையையுடைய பெரிய மணிகளையுடைய
கிண்கிணி மாலையையணிந்த அந்தக் குதிரையின் பின் சென்று, மொத்தி -
தாக்கி, குடர் செம்புனல் சோர - குடரும் குருதியும் சோர, கோட்டால்
முடுகிக் குத்தி - கொம்பினால் விரைந்து குத்தி, செகுத்தான் - அதனைக்
கொன்றனன்; கூடல் வேந்தன் பொறுத்தான் அலன் - பாண்டியன் அது
கண்டு பொறுக்கலாற்றாது.

     பரிமா : இருபெயரொட்டு. குடரும் புனலும் சோரக்குத்தி என்க. குடர் :
போலி. (43)

மண்ணிற் குதித்து வலிகண்டு வராக வேந்தை
எண்ணித் தலையிற் புடைத்தான்கை யிருப்புத் தண்டாற்
புண்ணிற் படுசெம் புனலாறு புடவி போர்ப்ப
விண்ணிற் புகுந்தான் சுடர்கீறி விமான மேலால்.

     (இ - ள்.) மண்ணில் குதித்து - நிலத்திலே குதித்து, வலி கண்டு
வராக வேந்தை எண்ணி - வலியினைக் கண்டு பன்றியரசனை மதித்து, கை
இருப்புத் தண்டால் தலையில் புடைத்தான் - கையிலுள்ள இருப்
புலக்கையாலே தலையில் அடித்தான்; புண்ணில்படு செம்புனல் ஆறு புடவி
போர்ப்ப - அந்தப் புண்ணினின்று பொழியும் குருதியாறு புவியை மூட, சுடர்
கீறி விமான மேலால் விண்ணில் புகுந்தான் - சூரிய மண்டலத்தைக் கிழித்து
விமான மீதேறி விண்ணுலகடைந்தனன். எண்ணி என்பதற்கு அடிக்குமிடத்தை
ஆராய்ந்து எனப் பொருள் கொண்டு, வலி கண்டு எண்ணி வேந்தைத்
தலையிற் புடைத்தான் என்றியைத் துரைத்தலுமாம். போரிற்புறங் கொடாது
உயிர் துறந்த வீரர் ஞாயிற்றின் மண்டிலம் வழியாகச் சென்று துறக்கம் புகுவர்
என்ப. (44)