|
உருவக் குன்றின் மீது
இருந்து - அறிவில்லாத பன்றி வடிவாகிய
அம்மலையின்மேல் இருந்து, கோதற நோற்று நின்ற காரணம் யாது என -
குற்றம் நீங்கத் தவஞ் செய்து நின்ற காரணம் யாதென்று வினவ, குறுமுனி
நிகழ்த்தும் - அகத்திய முனிவன் கூறும்.
தமிழை
வளர்த்தோருள் முதன்மை பூண்டிருத்தலின் அகத்தியனைத்
'தமிழக்கிறைவன்' என உபசாரமாகக் கூறினார். இருந்தவர் எலாம்
என்பதற்குப் பெரிய தவத்தோரெல்லாம் என்றுரைத்தலும் பொருந்தும். நின்ற
காரணம் - நின்றமைக்குக் காரணம். (52)
வேனில் வேளென விளங்குவிச் சாதர னென்னுந்
தான யாழ்மகன் புலத்தியன் றவத்தினுக் கிடையூ
றான பாண்செயப் பன்றியாச் சபித்தன னறவோன்
ஏன மாகுவோ னுய்வதென் றெனக்கென முனிவன். |
(இ
- ள்.) வேனில் வேள் என விளங்கு - வேனிற் காலத்துக்குரிய
காமனைப் போல வடிவம் பெற்று விளங்கும், விச்சாதரன் என்னும் தான யாழ்
மகன் - விச்சாதரன் என்று கூறப்படும் தானங்கள் அமைந்த யாழில் வல்ல
இயக்கன் ஒருவன், புலத்தியன் தவத்தினுக்கு இடையூறு ஆன பாண் செய -
புலத்திய முனிவன் தவத்துக்கு இடையூறு விளைத்தலையுடைய
இசைப்பாட்டினைப் பாட, அறவோன் பன்றியா சபித்தனன் - அம்முனிவன்
அவனைப் பன்றியாமாறு சபித்தனன்; ஏனம் ஆகுவோன் - அங்ஙனம்
பன்றியாகும் அவன், உய்வது எனக்கு என்று என - எனக்கு
இச்சாபத்தினின்று நீங்குதற்குரிய காலம் யாதென்று வினவ, முனிவன் - அப்
புலத்திய முனிவன்.
பாண்செய
என்பதற்குக் கீழ்மை செய்ய என்றும் உரைக்க. முன்னரும்
கூறப்பட்டது. ஆக என்பது ஈறு தொக்கது. ஆக - ஆகும்படி. (53)
மன்னர் மன்னனாந் தென்னவன் வந்துநின் வனத்திற்
றுன்னு பல்வகை விலங்கெலாந் தொலைத்துனை மாய்க்கும்
பின்ன ரிவ்வுருப் பெறுகெனப் பணித்தன னியக்கன்
அன்ன வாறுவந் திறந்துபின் பழவுரு வடைந்தான். |
(இ
- ள்.) மன்னர் மன்னனாம் தென்னவன் வந்து - இராசராச
பாண்டியன் வந்து, நின் வனத்தில் துன்னு பல்வகை விலங்கு எலாம்
தொலைத்து - நின் காட்டில் நெருங்கிய பல வகையான விலங்குகளையெலாம்
மாய்த்து, உனை மாய்க்கும் - உன்னையுங் கொல்லுவான்; பின்னர் இவ்வுருப்
பெறுக எனப் பணித்தனன் - பின் இந்த வடிவத்தைப் பெறக்கடவை என்று
அருளிச் செய்தனன்; இயக்கன் - அந்த இயக்கன், அன்னவாறு வந்து இறந்து
பின் பழ உரு அடைந்தான்; அங்ஙனமே பன்றியாக வந்து இறந்து பின்
பழைய வடிவத்தைப் பெற்றனன்.
|