II


நாரைக்கு முத்திகொடுத்த படலம்501



அங்கு வசிக்கும் மீன்கள் நமக்கு இரையாகத் தகாதன என்று, இரை
வேண்டும் நாரை - இரையை விரும்பி வந்த நாரை, வெறுத்து அங்கு
இருந்தது - அதனை வெறுத்து அங்கு இருந்தது.

     வெறுத்து - உணவை வெறுத்து. ஆல் : அசை. (11)

[அறுசீரடி யாசிரிய விருத்தம்]
தன்னிகர்* தவத்தோர் யாருந் தடம்படிந் தேறி நித்த
மன்னிய கரும முற்றிச் சந்தியா மடத்தில் வைகி
மின்னிய மகுடஞ் சூடி வேந்தனா யுலகங் காத்த
பொன்னியல் சடையான்+கூடற் புராணநூ லோது கின்றார்.

     (இ - ள்.) தன் நிகர் தவத்தோர் யாரும் - தனக்குத் தானே ஒப்பாகிய
தவத்தினையுடைய முனிவரனைவரும், தடம்படிந்து - வாவியில் நீராடி, ஏறி -
கரையேறி, நித்தம் மன்னிய கருமம் முற்றி - நாள் தோறும் நிலைபெற்ற
வினைகளைக் குறைவறச் செய்து, சந்தியா மடத்தில் வைகி - சந்தியா
மடத்திலே தங்கி, மின்னிய மகுடம் சூடி - விளங்கா நின்ற திருமுடி தரித்து,
வேந்தனாய் உலகம் காத்த - சுந்தர பாண்டியனாய் உலகினைப் புரந்தருளிய,
பொன் இயல் சடையான் - பொன் போலும் அழகிய சடையையுடைய சோம
சுந்தரக் கடவுளின், கூடல் புராணநூல் ஓதுகின்றார் - மதுரை மான்மிய
நூலினை ஓதி வருவாராயினர்.

     தனக்குத் தானேயொப்பாகிய தவம் என்க. தந்நிகர் என்று பாடமாயின்
தம் என்பது தவத்தோரைக் குறிக்கும். (12)

அண்ணலெம் பெருமான் செய்த வருள்விளை யாட்டு மாதிப்
பண்ணவன் சிறப்புங் கூடற் பழம்பதிச் சிறப்புந் தீர்த்தத்
தெண்ணருஞ் சிறப்புஞ் சேர்ந்தோர்க் கெளிவரு மிறைவ                                         னென்னும்
வண்ணமு மெடுத்துக் கூறக் கேட்டங்கு வதியு நாரை.

     (இ - ள்.) அண்ணல் எம்பெருமான் செய்த அருள் விளையாட்டும் -
இறைவனாகிய எம் பெருமான் செய்தருளிய திருவிளையாடல்களையும்,
ஆதிப் பண்ணவன் சிறப்பும் - முதற் கடவுளாகிய சொக்கலிங்க மூர்த்தியின்
சிறப்பினையும், கூடல் பழம் பதிச் சிறப்பும் - அவனது பழம் பதியாகிய
கூடல் என்னும் தலத்தின் சிறப்பினையும், தீர்த்தத்து எண் அருஞ் சிறப்பும் -
பொற்றாமரைத் தீர்த்தத்தின் அளவிறந்த சிறப்பினையும், சேர்ந்தோர்க்கு -
அம் மூர்த்திதலம் தீர்த்தங்களை அடைந்தோர்க்கு, இறைவன் எளி வரும்
என்னும் வண்ணமும் - அவன் எளிதில் வந்து அருள் புரிவான் என்னுந்
தன்மையையும், எடுத்துக்கூற - எடுத்துச் சொல்ல, அங்கு வதியும் நாரை
கேட்டு - அங்கே தங்கியிருக்கும் நாரை அவற்றைக் கேட்டு. (13)


     (பா - ம்.) * தந்நிகர். +பொன்னியற் சடையான்.