மடம்படு மறிவு நீங்கி வல்வினைப் பாசம் வீசித்
திடம்படு மறிவு கூர்ந்து சிவபரஞ் சோதி பாதத்
திடம்படு மன்பு வாவென் றீர்த்தெழ வெழுந்து நாரை
தடம்படு மாடக் கூடற் றனிநக ரடைந்து மாதோ. |
(இ
- ள்.) மடம்படும் அறிவு நீங்கி - அறியாமையோடு கூடிய அறிவு
நீங்கப் பெற்று, வல்வினைப்பாசம் வீசி - வலிய வினைக்கட்டை அறுத்து,
திடம்படும் அறிவு கூர்ந்து - உறுதியாகிய மெய்யுணர்வு பெற்று, சிவபரஞ்
சோதி - பாதத்து இடம்பாடும் அன்பு - சிவபரஞ் சுடரின் திருவடிக்கண்
பரந்த அன்பு, வா என்று ஈர்த்து எழ - வருவாயாக என்று இழுக்க, நாரை
எழுந்து - நாரையானது புறப்பட்டு, தடம்படும் மாடக் கூடல் தனி நகர்
அடைந்து - அகன்ற மாடங்கள் நிறைந்த கூடலாகிய ஒப்பற்ற பதியை
அடைந்து.
மடம்படும்
அறிவு - சிற்றறிவு. திடம்படும் அறிவு - மெய்யுணர்வு.
மாது, ஓ : அசைகள். (14)
வாங்கிய திரைசூழ் பொற்றா மரைபடிந் திமையா வேழந்
தாங்கிய விமான மேய தலைவனைத் தாழ்ந்து சூழ்ந்து
தேங்கிய வருட்க ணோக்கத் தெரிசித்துத்* திருமுன் வைகி
ஓங்கிய கருணை மேனி யுள்ளுறத் தியானஞ் செய்து. |
(இ
- ள்.) வாங்கிய திரைசூழ் பொற்றாமரை படிந்து - வளைந்த
அலைகள் சூழ்ந்த பொற்றாமரையின்கண் நீராடி. இமையா வேழம் தாங்கிய
விமானம் மேய - இமையாத யானைகளால் தாங்கப்பட்ட விமானத்தின் கண்
எழுந்தருளிய, தலைவனை - சோம சுந்தரக் கடவுளை, தாழ்ந்து சூழ்ந்து -
வணங்கி வலம் வந்து, தேங்கிய அருள் கண் நோக்க - அவ்விறைவன்
நிறைந்த அருளையுடைய திருக்கண்ணாற் பார்த்தருள, தெரிசித்து - அவனது
அருளுருவைத் தரிசனஞ் செய்து, திருமுன் வைகி - திருமுன் இருந்து,
கருணை ஓங்கிய மேனி - கருணை நிறைந்த திருமேனியை, உள்ளுறத்
தியானம் செய்து - உள்ளே பொருந்தத் தியானித்து.
இறைவன்
அருட்கண்ணால் நோக்க அதனாற் றரிசித்தலை,
"கண்ணுதலான்
றன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி" |
எனத் திருவாதவூரடிகள்
அருளிச் செய்தல் காண்க. (15)
இந்நிலை
நியம மூவைந் தெல்லைஞான் றியன்று பின்னாள்
அந்நிலை யொழுகு நாரை யாடக கமலந் தோய்வான்
வன்னிலை மதில்சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து
மின்னிலை வேல்போற் றுள்ளு மீன்கவர்ந் துண்கு மென்னா. |
(பா
- ம்.) * நோக்கந் தெரிசித்து.
|