|
(இ
- ள்.) மூவைந்து ஞான்று எல்லை - பதினைந்து நாள் வரை,
இந்நிலை நியமம் இயன்று - இவ்வொழுக்கமாகிய கடப்பாட்டிற் பொருந்தி
நின்று, பின்னாள் - வழி நாள், அந்நிலை ஒழுகும் நாரை - அங்ஙனம்
ஒழுகிய நாரை, ஆடக கமலம் தோய்வான் - பொற்றாமரையின்கண் நீராடுதற்
பொருட்டு, வல்நிலை மதில் சூழ ஞாங்கர் வந்துழி - வலிய நிலையையுடைய
சுற்று மதிலின் மருங்கு வந்த பொழுது, பசியால் வெந்து - பசித் தீயினால்
வெந்து கருகுதலால், மின் இலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து
உண்கும் என்னா - ஒளியையுடைய தகட்டு வடிவமான வேற்படையைப்
போலத் துள்ளுகின்ற மீன்களைப் பிடித்து உண்பேமென்று.
தோய்வான்
: வினையெச்சம். மின் நிலைத்த வேல் என்றுமாம். (16)
சிறிதுளத் துள்ளி நாதன் றிருவருள் வலத்தாற் பின்னர்
அறிவுவந் தச்சோ விந்த வறப்பெருந் தீர்த்தத் துள்ளே
எறியுமீ னருந்த வாசை யெழுந்ததே யெனக்கிப் போதிப்
பிறவியென் றொழிவ தென்னாப் பேரஞ ரடைந்து பின்னும். |
(இ
- ள்.) உளத்து சிறிது உள்ளி - உள்ளத்தே சிறிது கருதி, நாதன்
திருவருள் வலத்தால் - இறைவன் திருவருள் வலியால், பின்னர் அறிவு
வந்து - பின்பு அறிவு வரப்பெற்று, அச்சோ - ஐயோ, இந்த அறப் பெருந்
தீர்த்தத்துள்ளே - இந்த அறவடிவாகிய பெரிய தீர்த்தத்தினுள்ளே, எறியும்
மீன் அருந்த - தாவுகின்ற மீனை அருந்த, ஆசை எழுந்ததே - எனக்கு
இப்போது அவா உண்டாயிற்றே (இங்ஙனம் ஆனால்), இப்பிறவி என்று
ஒழிவது என்னா - இந்தக் கொடிய பிறவி எப்பொழுது ஒழியுமோ என்று,
பேர் அஞர் அடைந்து - பெருந் துன்பமுற்று, பின்னும் - மீண்டும்.
இங்ஙனம்
பசி முதலிய துன்பம் உண்டாய வழிப் பழைய பயிற்சி
வயத்தால் ஒரோ வழி நினைவு புலன்கள் மேற்செல்லுதலும், தமது
மெய்யுணர்வால் அதனையொழித்துப் பிறப்பறுத்தலும் மெய்யுணர்ந்தார் கண்
நிகழ்வனவென்க. அச்சோ : இரக்கப் பொருளில் வந்த இடைச் சொல். (17)
சுந்தரச் செம்மல் பாதத் துணைமல ரன்பிற் றோய்ந்து
சிந்தைவைத் திருக்கு மெல்லை தேவரு மறையுஞ் செய்யும்
வந்தனைக் கரியயா னாரை மனநினை வடிவாய்த் தோன்றி
எந்தமக் கினியாய் வேண்டும் வரமென்கொ லியம்பு கென்றான். |
(இ
- ள்.) சுந்தரச் செம்மல் பாதத்துணை மலர் - சோம சுந்தரக்
கடவுளின் திருவடிகளாகிய இரண்டு தாமரை மலர்களிலும் வைத்த, அன்பில்
தோய்ந்து - அன்பிற் படிந்து, சிந்தை வைத்திருக்கும் எல்லை - அந்நிலையில்
மனத்தைப் பதியவைத்திருக்கும் போது, தேவரும் மறையும் செய்யும்
வந்தனைக்கு அரியான் - தேவர்களும் வேதங்களுஞ் செய்யும்
வழிபாட்டுக்கும் எட்டாத அவ்விறைவன், நாரை மனம் நினை வடிவாய்த்
தோன்றி - அந்நாரை தன் மனத்து நினைத்த வடிவமாகத் தோன்றி,
எந்தமக்கு இனியாய் - எனக்கு இனிய நாரையே வேண்டும் வரம் என்கொல்
இயம்புக என்றான் - உனக்கு வேண்டிய வரம் யாதோ அதனைக்
|