II


506திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



     (இ - ள்.) தன் கிளை அன்றி - தனது இனமாகிய பறவைகளே
யல்லாமல், வேற்றுப் பறவைகள் தாமும் - வேறு இனப் பறவைகளும், தன்
போல் - தன்னைப் போல, நன்கதி அடைய வேண்டிற்றே - சிவகதி
அடையுமாறு இறைவனிடத்து வரம் வேண்டியதே, இந்நாரை செய்த
அன்பினில் வியப்போ - இந்த நாரை புரிந்த அன்பினில் வியப்புளதோ
(அன்றி), ஈசன் அருளினில் வியப்போ - (அதற்கு எளிவந்த) இறைவன்
அருளின்கண் வியப்புளதோ, அன்பர்க்கு இன்பு உருவான ஈசன் -
அன்பர்கட்கு இன்ப வடிவமாய் விளங்கும் சிவபிரானது அருள், அன்பருக்கு
எளிதே - அன்பர்களின் அன்புக்கு எளிதே.

     முன் கரிக் குருவி தன் கிளையெல்லாம் தன் போல் மேன்மையெய்த
வரம் பெற்றது. இந்நாரையோ அவ்வளவன்றி வேற்று இனப் பறவைகளும்
நற்கதியடைய வேண்டிற்று, இதனது அன்பிருந்தவாறென்னே என வியந்தபடி.
அன்பினில் வியப்போ அருளினில் வியப்போ என்னும் வினாவுக்கு ஈசனருள்
அன்பர் அன்புக் கெளிதே எனர் சமற்காரமாக விடை கூறப்பட்டது.

"முட்டி லன்பர்த மன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்றதட் டருளொடுந் தாழ்வுறும் வழக்கால்"

என்னும் திருத்தொண்டர் புராணச் செய்யுள் இங்கு நோக்கற்பாலது.
கொல், ஐய என்பன அசைகள். (24)

மறக்கு றும்புக் களைகட்டு மண்ணின்மேல்
அறப்பெ ரும்பயி ராக்கி யதன்பயன்
சிறக்க நல்கிட வுண்டு செருக்குவான்
துறக்க மெய்தி யிருந்தான் சுகுணனும்.

     (இ - ள்.) சுகுணனும் - சுகுண பாண்டியனும், மறக் குறும்புக்
களைகட்டு - பாவமாகிய சிறிய களையைப் பிடுங்கி, மண்ணின் மேல் -
நிலவுலகின் மேல், அறப்பெரும் பயிர் ஆக்கி - அறமாகிய பெரிய பயிரை
வளர்த்து, அதன் பயன் சிறக்க நல்கிட உண்டு செருக்குவான் - அதன்
பயன் மிகவும் கைகூட (அதனை) உண்டு களித்தற் பொருட்டு, துறக்கம்
எய்தி இருந்தான் - துறக்க நாட்டினை அடைந்திருந்தான்.

     இவ்வுலகிற் புரிந்த அறத்தின் பயனை நுகர்ந்து களித்தற் பொருட்டுத்
துறக்க மெய்தினன் என்றார். செருக்குவான் : வினையெச்சம். (25)

                       ஆகச் செய்யுள் - 2321.

                       கூடற்காண்டம்
                         முற்றிற்று.


     குறிப்பு : ஒவ்வொரு செய்யுட் பதவுரை யீற்றிலும் எ - று என
விரித்துக் கொள்க.