II


கான்மாறியாடின படலம்97



பிறையை அணிந்தவனே, மதியாதவர் மதியில் பதியாய் - கருதாதவர்கள்
கருத்திற் பொருந்தாதவனே, பதினெண் கணமும் பரவும் துதியாய் -
பதினெண் கணங்களாலும் துதிக்கப்படுந் துதியினை யுடையவனே, சரணம்
- வணக்கம், சுடரே சரணம் - பேரொளியா யுள்ளவனே வணக்கம்.

     ஆடிய - பொருந்திய என்றுமாம். மதியாதவர் - சிந்தியாதவர். மதி
தற்போதமாகிய அறிவுமாம். பதிதல் - தங்குதல். பதினெண்கணம் முன்பு
உரைக்கப்பட்டன. (24)

பழையாய் புதியாய் சரணம் பணிலக்
குழையாய் சரணங் கொடுவெண் மழுவாள்
உழையாய் சரணம் முருகா தவர்பால்
விழையாய் சரணம் விகிர்தா சரணம்.

     (இ - ள்.) பழையாய் - எல்லாவற்றினும் பழமையானவனே, புதியாய்
- எல்லாவற்றினும் புதுமையானவனே, சரணம் - வணக்கம்; பணிலக்
குழையாய் சரணம் - சங்கக் குழையினையுடையவனே வணக்கம்; கொடுவெண்
மழுவாள் உழையாய் சரணம் - கொடிய வெள்ளிய மழுப்படையையும்
மானையுமுடையவனே வணக்கம்; உருகாதவர்பால் விழையாய் சரணம் -
(நின்னை நினைந்து) மனமுருகாத வரிடத்துச் (செல்ல) விரும்பாதவனே
வணக்கம்; விகிர்தா சரணம் - விகிர்தனே வணக்கம்.

     இறைவன் பழமையுடைய எவற்றினும் பழமையுடையனும் புதுமையுடைய
எவற்றினும் புதுமை யுடையனுமாதலை
,

"முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"

என்னும் திருவாசகத்தானறிக; எல்லாம் தோன்றுதற்கு முன்னும் எல்லாம்
அழிந்த பின்னும் இருப்பவன் என்பது கருத்து. உருகாதவர் பால்
விழையாமையை,

"உள்ள முருகி லுடனாவ ரல்லது
தெள்ள வறியரென் றுந்தீபற
சிற்பரச் செல்வரென் றுந்தீபற"

என்னும் திருவுந்தியாராலும்,

"நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்
பொக்க மிக்கவர் பூவுநீருங் கண்டு
நக்கு நிற்ப னவர்தமை நாணியே"

என்னும் தேவாரத்தாலும் அறிக. விகிர்தன் - வேறுபாடுடையவன். (25)