வலைவீசின படலம் 163



மாலையை யணிந்த கூந்தலையுடையாய், உற்ற இக்குற்றம் தன்னால் - நேர்ந்த
இக் குற்றத்தினால்.

     இராமுகம் - இரவினிடம்; இருள். அறியாமையுடைய உள்ளமென்பதனை
இங்ஙனம் இலக்கணையாகக் கூறினார்;

"அகம் குன்றி மூக்கிற் கரியார்"

எனத் திருக்குறளிலும்;

"கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே"

எனத் திருக்கோவையாரிலும் வருதல் காண்க. (4)

விரதமு மறனு மின்றி மீன்படுத் திழிஞ ரான
பரதவர் மகளா கென்று பணித்தனன் பணித்த லோடும்
அரதன வாரந் தாழ்ந்த வாரமென் முலையா ளஞ்சி
வரதநிற் பிரிந்து வாழ வல்லனோ வென்று தாழ்ந்தாள்.

     (இ - ள்.) விரதமும் அறனும் இன்றி மீன்படுத்து - நோன்பும்
அறனுமில்லாமல் மீன்களைப் பிடித்துக் கொலைபுரிதலால், இழிஞர் ஆன
பரதவர் மகள் ஆக என்று பணித்தனன் - இழிஞராகக் கருதப்படுகின்ற
பரதவரின் மகளாகக்கடவை என்று கட்டளையிட்டான்; பணித்தலோடும் -
அங்ஙனம் பணித்தவளவில், அரதன ஆரம் தாழ்ந்த - மாணிக்கமாலை
தொங்கியசையும், ஆரம்மென் முலையாள் அஞ்சி - சந்தனக்குழம் பணிந்த
மெல்லிய கொங்கையையுடைய தேவி அச்சுற்று, வரத - வள்ளலே, நின்
பிரிந்து வாழவல்லனோ என்று தாழ்ந்தாள் - யான் நின்னைப்பிரிந்து
வாழவல்லனோ என்று கூறி வணங்கினாள்.

"நோன்பென்பது கொன்று தின்னாமை"

என்பதனால் கொலை செய்வார் நோன்புடையரல்லராதலையும்,

"அறவினை யாதெனிற் கொல்லாமை"

என்பதனால் அவர் அறமுடையரல்லராதலையும்,

"கொலைவினைஞ ராகியமாக்கள் புலைவினையர்"

     என்பதனால் அவர் இழிவெய்துதலையும் அறிக. (5)

வீங்குநீர்ச் சடையா னீங்கு மெல்லியல் பிரிவு நோக்கி
வாங்குநீர்க் கானல் வாழ்க்கை வலைஞர்கோன் மகளாய் வைகி
ஆங்குநீ வளர்நாள் யாம்போந் தருங்கடி முடித்து மென்னாத்
தேங்குநீ ரமுதன் னாளைச் செலவிடுத் திருந்தா னிப்பால்