178திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     படகினும் தோணியும், தோணியினும் சோங்கும் பெரியனவாமென்க.
விடவு - பிளவு. ஓருயிர் வினைவயத்தால் வெவ்வேறுடம்பெடுத்து உழுலுதல்
போல் இவன் மீன் பிடிக்கும் வினையால் வெவ்வேறு கலங்களிற் புகுந்து
உழன்றான் என்பதனால் இது தொழிலுவமம். (38)

முன்னர் வீசினாற் பின்னுற முளைத்தெழு முயன்று
பின்னர் வீசினான் முன்னுறப் பெயர்ந்தெழும் வலத்தில்
உன்னி வீசினா லிடம்பட வுருத்தெழு மிடத்தின்
மன்னி வீசினால் வலத்தெழு மகரவே றதுதான்.

     (இ - ள்.) மகர ஏறு - அச்சுறாமீன், முன்னர் வீசினால் பின்னுற
முளைத்து எழும் - முன்னே வலை வீசினால் பின்னே தோன்றி மேலெழும்;
முயன்று பின்னர் வீசினால் - முயன்று பின்னே அவ்வலையினை வீசினால்,
பெயர்ந்து முன்னுற எழும் - (அப்பின்னிடத்து நின்றும்) போய் முன்னே
எழும்; வலத்தில் உன்னி வீசினால் - வலப்புறத்தில் (அது இருக்குமிடம்)
அறிந்து வீசினால், இடம்பட உருத்து எழும் - இடப்புறத்தின்கண் சினந்து
மேலெழும்; இடத்தில் மன்னி வீசினால் - இடப்புறத்தில் பொருந்த வீசினால்,
வலத்து எழும் - வலப்புறத்தில் மேலே எழும்.

     மன்னி என்பதனை மன்ன வெனத் திரிக்க.

     சுறவின் ஆண் ஏறெனப் படுதலை,

"கடல்வாழ் சுறவும் ஏறெனப் படுமே"

என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தானறிக. அது, பகுதிப்பொருள்
விகுதி. தான், அசை. (39)

எறிவ லைப்படு மகமலர்ந் தீர்ப்பவ னுள்ளம்
மறுத லைப்பட வலையினும் வழீஇப்பொரு ளாசை
நெறிம லர்க்குழ னல்லவர் நினைவென நினைவுற்
றறிப வர்க்கரி தாம்பரம் பொருளென வகலும்.

     (இ - ள்.) எறி வலைப்படும் - வீசிய வலையின்கண் அகப்படும்;
அகமலர்ந்து ஈர்ப்பவன் உள்ளம் மறுதலைப்பட - (அகப்பட்டதென)
மனமகிழ்ந்து இழுப்பவனுடைய உள்ளம் வருந்த, வலையினும் வழீஇ -
அவ்வலையினின்றும் வழுவி, பொருள் ஆசை நெறிமலர்க்குழல் நல்லவர்
நினைவு என - பொருளாசை மிக்க நெறித்த மலரணிந்த கூந்தலையுடைய
விலை மகளிர் நினைவுபோலவும், நினைவுற்று அறிபவர்க்கு அரிதாம்
பரம்பொருள் என - சிந்தித்து அறிபவர்க்கு அறிதற்கரிய சிவபரம்
பொருள்போலவும், அகலும் - நீங்கும்.

     மறுதலைப்பட - மகிழ்ச்சிக்கு மாறாக; துன்பமுண்டாக. வலையினும் -
வலையினின்றும், விலை மகளிர் மனம் ஒருவழி நில்லாமைபோல ஓரிடத்து
நில்லாமையாலும், ஆன்ம போதத்தால் அறிவேமென முயல்வார்க்குப்
பரம்பொருள் அறியப்படாதகலுதல்போல அகப்படாது நீங்குதலாலும்