192திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



உடைந்து ஓட - திருமால் தனது வஞ்சனையினால் இட்ட புத்த இருளானது
சிதறி ஓடவும், சேய இளம் பரிதி என - செந்நிறமுடைய இளஞாயிற்றினைப்
போல, ஒருவர் வந்து சிவன் அருளால் அவதரித்தார் - ஒருவர் வந்து
சிவபெருமான் திருவருளால் அவதரித்தருளினர்.

     வளம்பதி, மெலித்தல். அமாத்தியர் - மறையோரில் அமைச்சுத்தொழில்
பூண்டு வரும் ஓர் குடியினர். மறையின் நெறியும் சிவாகமத்தின் துறையும்
விளங்க வெனக்கூட்டுக;

"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க"

என ஆளுடைய பிள்ளையாரின் அவதார விசேடங்கூறும் பெரிய
புராணச்செய்யுள் இங்கு நோக்கற்பாலது. திரிபுரத்தவுணர் செய்யும் கொடுமைக்
காற்றாது இந்திரன் முதலியோர் விண்டுவைச் சரணடைந்து கூற, திருமால்
அவர்களின் வெலற்கருந்திறலையுன்னி ஓர் சூழ்ச்சியால் வெல்லக் கருதிப்
புத்த சமயத்தை யுண்டாக்கி அவர்கட்குப் போதித்துச் சிவநேயத்தினின்றும்
வழுவுமாறு புரிந்தனன் என்பது புராண கதை;

"சாக்கிய ருருவின் மாய னாங்கவர் புரத்திற் சார்ந்து
கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே ணியன்மே லன்பு
நீக்கியவ் வவுணர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில்
ஆக்கிநல் லிலிங்க பூசை யறிவொடு மகற்றி னானே"

என்னும் கூர்ம புராணச்செய்யுள் காண்க. இவர் தந்தையார் பெயர்
சம்புபாதாசிருதர் எனவும், தாயார் பெயர் சிவஞானவதியார் எனவும்
திருப்பெருந்துறைப் புராணம் கூறும். (4)

பேர்வாத வூரரெனப் பெற்றுத்தம் பிறங்குமறைச்
சார்வாய நூல்வழியாற் சடங்கெல்லா நிறைவெய்தி
நீர்வாய விளமதிபோ னிரம்புவார் வேதமுதற்
பார்வாயெண் ணெண்கலையும் பதினாறாண் டினிற்பயின்றார்.

     (இ - ள்.) வாதவூரர் எனப் பேர் பெற்று - திருவாதவூரர் என்னும்
பிள்ளைத்திருநாமம் பெற்று, தம் பிறங்கும் மறைச்சார்வு ஆய நூல் வழியால்
- தமது விளங்கும் வேதத்தின் சார்பாகிய நூலிற் கூறும் நெறிப்படி, சடங்கு
எல்லாம் நிறைவு எய்தி - சடங்குகள் அனைத்தும் நிறைதலைப் பொருந்தி,
நீர்வாய இளமதிபோல் நிரம்புவார் - குளிர்ந்த தன்மை வாய்ந்த இளம்பிறை
வளர்வது போல வளருமவர், பார்வாய் வேத முதல் எண்ணெண் கலையும் -
புவியின் கண் வேதத்தை முதலாகவுடைய அறுபத்து நான்கு கலைகளையும்,
பதினாறு ஆண்டினில் பயின்றார் - பதினாறு வயதளவிற் கற்றுணர்ந்தார்.

     மறைச்சார்வாய நூல் - போதாயனீயம் முதலிய கற்ப சூத்திரங்கள்.
நிறை வெய்தி - நிறைவிக்கப்பெற்று.