நரி பரியாக்கிய படலம்287



இருவகைச் சாரியு மெதிர்ந்து வட்டமாய்
வருவழி ஞெகிழபோன் மறுகெ லாமொரு
துரகத மேநிலை நின்ற தோற்றமொத்
தொருவற நடத்தினா ரொருக ணத்தினே.

     (இ - ள்.) இருவகைச் சாரியும் எதிர்ந்து - இடசாரியும் வலசாரியுமாக
எதிர்ந்து, ஞெகிழிபோல் வட்டமாய் வருவழி - கொள்ளி வட்டம்போல்
வட்டமாக வருமித்து, மறுகு எலாம் ஒரு துரகதமே நிலை நின்ற தோற்றம்
ஒத்து - வீதி யனைத்தும் ஒரு குதிரையே நிலைத்து நின்ற தோற்றம்
போன்று, ஒருவுஅற - அத் தோற்றம் நீங்குதலில்லையாக, ஒரு கணத்தின்
நடத்தினார் - ஒரு கணப்பொழுதில் நடத்திக் காட்டினர்.

     ஞெகிழி - கொள்ளி. (99)

இந்நிலை யலமரு மிவுளி மேலொரு
மின்னிலை வேலினான் வினவத் தங்கையின்
மன்னிய கங்கணம் விடுத்து மாநகர்
தன்னிலை காட்டிய தன்மை யொத்தது.

     (இ - ள்.) இந்நிலை அலமரும் இவுளி - இங்ஙனம் சுழலும்
குதிரையின் தன்மை, மேல் - முன்னாளில், ஒரு மின் இலை வேலினான்
வினவ - மீன்போன்ற தகட்டு வடிவினையுடைய வேற்படையேந்திய
வங்கியசேகரபாண்டியன் இரந்து கேட்க, தம்கையில் மன்னிய கங்கணம்
விடுத்து - இறைவன் தமது திருக்கரத்தில் நிலை பெற்ற கங்கணமாகிய
பாம்பினை விடுத்து, மாநகர் தன்நிலை காட்டிய தன்மை ஒத்தது - பெரிய
நகரின் பழைய எல்லையாகிய நிலையினைக் காட்டிய தன்மையை ஒத்தது.

     அலமரல் - சுழலல்; வட்டமாக வருதல். கங்கணம் விடுத்து நகர்
எல்லை காட்டியதனைத் திருவால வாயான படலத்திற் காண்க. (100)

பன்னிற முடையவாம் பரியும் வீதியுட்
பின்னிய வாவெனப் பின்னி வட்டமாய்த்
தன்னிகர் மதுரையாந் தையல் கையணி
துன்னிய பன்மணித் தொடியும் போன்றவே.

     (இ - ள்.) பல் நிறம் உடையவாம் பரியும் - பல நிறங்களையுடைய
தாவுங் குதிரைகளும், பின்னியவா என வீதியுள் வட்டமாய்ப் பின்னி -
பின்னிவைத்த வாறு போல வீதியுள் வட்டமாகப் பின்னி, தன்
நிகர்மதுரையாம் தையல் - தனக்குத்தானே ஒத்த மதுரையாகிய பெண், கை
அணி - கையில் அணிந்த, பல் மணி துன்னிய தொடியும் போன்ற -
பலமணிகள் பதித்த வளையையும் போன்றன.