328திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கல்லென்றதிர் சும்மைப்புனல் கடிமாமதிற் புறம்போய்
இல்லங்களுஞ் சிறுதுச்சிலு மறித்திட்டிருங் கடல்வாய்ச்
செல்லுங்கல நாவாய்பல திமில்போற்சுமந் தேகிப்
புல்லும்புரி சையுந்தள்ளியுள் புகுகின்றதை யன்றே.

     (இ - ள்.) கல் என்று அதிர் சும்மைப்புனல் - கல்லென்று ஒலிக்கும்
ஒலியையுடைய அவ்வெள்ளநீர், கடிமாமதில் புறம்போய் - காவலையுடைய
பெரிய மதிலின் புறத்தே சென்று, இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு -
பல இல்லங்களையும் சிறிய குடில்களையும் கீழ் மேலாகத் தள்ளி (அவற்றை),
இருங்கடல் வாய்ச் செல்லும் கலம் நாவாய் பல திமில் போல் - பெரிய
கடலின்கண் ஓடும் மரக்கலங்களாகிய நாவாய்களையும் பல
தோணிகளையும்போல, சுமந்து ஏகி - சுமந்து சென்று, புல்லும் புரிசையும்
தள்ளி உள்புகுகின்றது - பொருந்திய மதிலையுந் தள்ளி உள்ளே
செல்லாநின்றது.

     கல்லென்று, ஒலிக்குறிப்பு. துச்சில் - குடிசை யென்னும் பொருட்டு.
புகுகின்றதை. ஐ சாரியை. (58)

மறுகும்பல பொருளாவண மணிவீதியு மன்றுஞ்
சிறுகுங்கண மதமாநிரை சேருந்தெரு வும்போய்
முறுகுஞ்சின மொடுதெண்டிரை மூரிப்புன றாவிக்
குறுகும்படி கண்டஞ்சினர் கொடிமாநக ருள்ளார்.

     (இ - ள்.) தெள்திரை மூரிப்புனல் - தெள்ளிய அலைகளையுடைய
வெள்ள நீர், முறுகும் சினமொடு - கன்றிய சினத்துடன், மறுகும் பல
பொருள் மணி ஆவண வீதியும் - வீதிகளிலும் பல பொருள் நிறைந்த
அழகிய கடைத்தெருக்களிலும், மன்றும் - அம்பலங்களிலும், சிறுகும் கண
மதம் மாநிரைசேரும் தெருவும் போய் - சிறிய கண்களையுடைய
மதமயக்கங்கொண்ட யானைக்கூட்டங்கள் சேர்ந்த தெருக்களிலுஞ்சென்று,
தாவிக் குறுகும்படி - தாவி வருந்தன்மையை, கொடிமாநகர் உள்ளார் கண்டு
அஞ்சினர் - கொடிகள் நெருங்கிய பெரிய நகரிலுள்ளவர்கள் பார்த்து
அஞ்சினார்கள்.

     கண - கண்ண; கண்ணினை உடையவாகிய. மூரி - பெருமை. படி -
தன்மை. (59)

சிலர்மைந்தரை யெடுப்பார்களுஞ் சிலர்மைந்தரைக் காணா
தலமந்தழு வாருஞ்சில ரங்கைத்தளிர் பற்றிக்
குலமங்கையர் தமைக்கொண்டுயப் போவார்களுங் குறுகுந்
தலமெங்கெனத் திகைப்பார்களுந் தடுமாறுகின் றாரும்.

     (இ - ள்.) சிலர் மைந்தரை எடுப்பார்களும் - புதல்வர்களை எடுப்பார்
சிலரும், சிலர் மைந்தரைக்காணாது அலமந்து அழுவாரும் - புதல்வர்களைக்
காணாமல் சுழன்று அழுவார் சிலரும். அம்கைத்தளிர் பற்றி - அழகிய