ஊதியம்
- பேறு. நீதியினால் - நீதியுடன். நினது திருவருளே
வாதவூரராகத் தோன்றிற்றென அவர் பெருமையை வியந்துரைத்தான்.
அருளால் என மூன்றனுருபு விரித்து, அவதரித்து மந்திரியாகிய என விகுதி
பிரித்துக் கூட்டுதலுமாம். (82)
மாயா விருத்தியினான்
மாழாந்து மாதவரை
ஆயா தொறுத்தே னருநரகத் தாழ்ந்துநான்
வீயாம லின்றனையார் மெய்ம்மையெலாந் தேற்றியவென்
தாயானாய் தண்ணளிக்கென் றமியேன்செய் கைம்மாறே. |
(இ
- ள்.) மாயா விருத்தியினால் மாழாந்து - மாயையின்
விருத்தியினால் மயங்கி, மாதவரை ஆயாது ஒறுத்தேன் - தவசிரேட்டராகிய
வாதவூரரை ஆராயாது ஒறுத்தேன் (அதனால்), நான் அரு நரகத்து ஆழ்ந்து
வீயாமல் - அடியேன் கரை யேறுதற்கரிய நரகத்தின்கண் அழுந்திக்
கெடாமல், இன்று - இப்பொழுது, அனையார் மெய்மை எலாம் தேற்றிய என்
தாயானாய் - அவ்வடிகளின் உண்மைகளனைத்தையும் தெளிவித்த என்
அன்னைபோல்வாய், தண் அளிக்கு தமியேன் செய்கைம்மாறு என் - நினது
குளிர்ந்த அருளுக்கு அடியேன் செயுங் கைம்மாறு யாது (ஒன்றுமில்லை).
விருத்தி
- செய்கை, அவரது மெய்ம்மை அறிந்து வழிபட்டு வீயாமல்
உய்ந்தேன் என்பான் நரகத் தாழ்ந்து வீயாமல் தேற்றிய என்றான். (83)
நின்னையுணர்ந்
தவர்வேத நெறிவேள்வி செய்தூட்டும்
இன்னமுதிற் கழிசுவைத்தோ விவளிடும்பிட் டெவ்வுயிர்க்கும்
மன்னவனே செந்துவர்வாய் மலர்ந்தமுது செய்தனையால
அன்னையிலா வுனகிவளோ ரன்னையாய் வந்தாளோ. |
(இ
- ள்.) நின்னை உணர்ந்தவர் - நின்னியல்பினை அறிந்த
முனிவர்கள், வேத நெறி - மறையிற் கூறிய வழியே, வேள்வி செய்து ஊட்டும்
இன் அமுதில் - வேள்வி புரிந்து அதில் உண்பிக்கும் இனிய அவியுணவினும்,
இவள் இடும் பிட்டு கழிசுவைத்தோ - இவ்வந்தி இட்ட பிட்டு மிகவுஞ்
சுவையுடையதோ, எவ்வுயிர்க்கும் மன்னவனே - எல்லா உயிர்கட்கும்
இறைவனே, செம்துவர்வாய் மலர்ந்து அழுது செய்தனை - மிகவும் சிவந்த
திருவாயினைத் திறந்து அமுது செய்தருளினை; அன்னை இலா உனக்கு -
தாயில்லாத உனக்கு, இவள் ஓர் அன்னையாய் வந்தாளோ - இவளோர்
தாயாகி வந்தனளோ.
மன்னவனே
அமுது செய்தனை, இது கழி சுவைத்தோ, இவள்
அன்னையாய் வந்தாளோ என வினை முடிவு செய்க. (84)
அன்றுசிறுத்
தொண்டரிடும் பிள்ளைக் கறியமுதும்
மென்று சுவைதெரிந்த வேடனிட்ட வூனும்போல்
நன்றுநரை யாட்டியிடு பிட்டு நயந்தருந்தி
என்று மடியார்க் கெளிவந்தா யெந்தாயே. |
|