38திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



நிலத்தைத் தனக்கு நல்கும் போர்த்திருவினால், ஆன்ற நிறை நிதிச்
செழியன் - மிகவும் நிறைந்த நிதியினையுடைய பாண்டியனது, செங்கோல்
நலம் தரு மதுரை நோக்கி நண்ணுவார் - செங்கோலால் நன்மை பொருந்திய
மதுரையை நோக்கி வருவாராயினர்; நண்ணும் எல்லை - அங்ஙனம்
வரும்பொழுது.

     அடுக்கு தொழிற் பயில்வுப்பொருட்டு. தொல்காப்பியப் பாயிரவுரையில்
"நிலந்தரு திருவிற் பாண்டியன்" என்பதற்கு ‘மாற்றாரது நிலத்தைக்கொள்ளும்
போர்த்திருவினையுடைய பாண்டியன்’ என நச்சினார்க்கினியர் உரை கூறியது
இங்கு நோக்கற்பாலது; வேற்று நாட்டு மன்னர்களாலே திறையாகத் தரப்பட்ட
திரு என்றுமாம். திருவின் என்பதற்குத் திருவுடன் என்றுரைத்தலுமாம். (13)

பற்பல கலைமாண் டேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற
அற்புத மூர்த்தி யெந்தை யாலவா யடிக ளாங்கோர்
கற்பமை கேள்வி சான்ற கல்வியின் செல்வ ராகிச்
சொற்பதங் கடந்த பாத மிருநிலந் தோய வந்தார்.

     (இ - ள்.) பற்பலகலை - பலவகைப்பட்ட கலைகளையுடைய,
மாண்தேர்ச்சிப் பனுவலின் பயனாய் நின்ற அற்புதமூர்த்தி எந்தை -
மாட்சிமைப்பட்ட தேர்ச்சியை யுடைய மறையின் பயனாய் நிலைபெற்ற
ஞானமூர்த்தியும் எம் தந்தையும் ஆகிய, ஆலவாய் அடிகள் - மதுரைப்
பிரானாகிய சோமசுந்தரக்கடவுள், ஆங்கு - அங்கு, ஓர் கற்பு அமை
கேள்வி சான்ற கல்வியின் செல்வராகி - கற்றலும் அமைந்த கேள்வியும்
நிறைந்த ஒரு புலவராகி, சொல்பதம் கடந்த பாதம் இருநிலம் தோயவந்தார்
- சொல்லளவைக் கெட்டாத திருவடிகள் இப்பெரிய நிலத்திற் றோய நடந்து
வந்தார்.

     கற்பும் அமை கேள்வியும் சான்ற என்க;

"கற்றல் கேட்ட லுடையார் பெரியார்"

என்பது திருநெறித்தமிழ்மறை. கல்வியின் செல்வர் - கல்வியாகிய
செல்வத்தை யுடையர்; சாரியை அல்வழிக்கண் வந்தது. பாதம் சொற்பதங்
கடந்ததாதலைப்

"பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்"

என்னும் திருவாசகத்தானறிக. (14)

அவ்விடை வருகின் றாரை நோக்கிநீ ராரை நீவிர்
எவ்விடை நின்றும் போது கின்றனி ரென்ன வன்னார்
வெவ்விடை யனையீர் யாங்கள் விஞ்சைய ரடைந்தோர் பாவம்
வௌவிடு பொருநை நாட்டின் வருகின்றே மென்ன லோடும்.

     (இ - ள்.) அவ்விடை வருகின்றாரை நோக்கி நீர் ஆர் - அங்கு
வருகின்றவரை நோக்கி நீவிர் யாவர், நீவிர் எவ்விடை நின்றும்
போதுகின்றனிர் என்ன - நீவிர் எங்கிருந்து வருகின்றீர் என்று கேட்க,