மண் சுமந்த படலம்387



அவற்றுக்கு மறுமொழி கொடுத்து மூங்கைத் தன்மை நீங்கினாள், வளவன்
கண்டு - சோழன் அதனைப் பார்த்து, சிவனே எல்லாத் தேவர்க்கும் தேவன்
என்னாத் தேறினான் - சிவபெருமானே எல்லாத் தேவர்களுக்கும்
தேவனாவானென்று தெளிந்தான்.

     ஈறிலான் - சுட்டு. இறை - விடை. வாதவூரடிகள் தாம்
வினாவியவற்றையும் அந் நங்கையின் விடைகளையும் ‘திருச்சாழல்’ என்னும்
பதிகமாகப் பாடியருளினார் என்க.

"பூசுவதும் வெண்ணீ பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதுந் திருவாயான் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவ னெவ்வுயிாக்கு மியல்பானான் சாழலோ"

என்னும் பாட்டில் முன்னிரண்டடியும் வினாவாகவும் பின்னிரண்டடியும்
விடையாகவும் கொள்க. (112)

பின்பர வாரம் பூண்ட பிரானருள் விளையப் பாடும்
அன்பரை முனிவர் மூவா யிரவரை யடியிற் றாழ்ந்து
முன்பவர் சொன்ன வாறே மூர்க்கரைத் தடிந்து மன்றுள்
இன்பரை நடங்கண் டேத்தி யிறைமகன் சைவ னானான்.

     (இ - ள்.) பின்பு - பின், அரவு ஆரம் பூண்டபிரான் அருள்
விளையப்பாடும் அன்பரை - பாம்பை ஆரமாக அணிந்த ஆண்டவனது
திருவருள் விளையுமாறு பாடும் அன்பராகிய மாணிக்கவாசகரையும், முனிவர்
மூவாயிரவரை - அந்தணர் மூவாயிரவரையும், அடியில் தாழ்ந்து - அடிகளில்
வீழ்ந்து வணங்கி, மூர்க்கரை அவர் முன்பு சொன்னவாறே தடிந்து -
மூர்க்கர்களாகிய புத்தர்களை அவர் முன் சொல்லியபடியேஒறுத்து, மன்றுள்
இன்பரை - பொதுவிலாடும் இன்பவடிவினரை, நடம் கண்டு ஏத்தி - அவர்
திருக்கூத்தினைக் கண்டு வழுத்தி, இறைமகன் சைவன் ஆனான் -
சோழமன்னன் சைவனாயினன்.

     அடியிற்றாழ்ந்து என்பது ஒரு சொல்லாய் அன்பரை மூவாயிரவரை
என்ப வற்றுக்குத் தனித்தனி முடிபாயிற்று. அவர் சொன்னவாறே
-அப்புத்தர்கள் தாமே சொன்னவாறு. கொண்டதுவிடார் என்பார் ‘மூர்க்கரை’
என்றார். சைவனாகி அடியிற்றாழ்ந்து ஏத்தினான் என்று கருத்துக்கொள்க.
மாணிக்கவாசகர் பணியால் நாமகள் புத்தர்களின் நாவை விட்டகல அவர்கள்
மூகையானமை அறிந்த ஈழத்தரசன் தனது ஊமைப் பெண்ணை அழைத்து
அவளது ஊமைத் தன்மையைத் தீர்க்குமாறு வேண்ட அவர் அங்ஙனமே
புத்தர் கூறிய தருக்கத்திற் கெல்லாம் அப்பெண் மாறு கூறுமாறு செய்து
ஊமை தீர்த்தனர் என்றும், அதனை அறிந்து ஈழமன்னன் சைவனாயினான்
என்றும், புத்தர்களின் ஊமைத் தன்மையையும் இங்ஙனமே தீர்த் தருளுமாறு
ஈழத்தரசனும், சோழ மன்னனும் முதலாயினார் வேண்டிக்கொள்ள அடிகள்
அவர்களது மூகையையும் போக்கினர் என்றும், பின் புத்தரெல்லாரும்
சிவவேடம் பூண்டு சைவராயினர் என்றும் திருவாதவூரடிகள் புராணம்
கூறும். (113)