438திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) நந்துநாகு நீர்வண்டு செல் நடைவழி - சங்கும் நத்தையும்
நீர் வண்டும் செல்லும் வழி, எழுத்தாய் வந்து வீழினும் வீழும் - எழுத்தாக
வந்து வீழினும் வீழும்; அவ்வழக்கின் - அவ்வழக்கைப் போல, நின்கையில்
சிந்து சாம்பரும் சிறு சொலும் - நினதுகையிலிருந்து சிந்திய சாம்பலும்
பொருளில்லாத சிறு சொல்லும், மருந்து மந்திரம் போல் - முறையே
மருந்தையும் மந்திரத்தையும் போல, சந்து சூழ் மலையான்சுரம் தணித்தன
கண்டாய் - சந்தன மரங்கள் நெருங்கிய பொதியின் மலையினையுடைய
பாண்டியன் வெப்புநோயைப் போக்கின.

     நந்து நாகு நீர்வண்டு, மருந்து மந்திரம் என்பவற்றில் செவ்வெண்கள்
தொகை பெறாவாயின. செல் நடை, ஒரு பொருட் பன்மொழி. வீழ்தல் -
தற்செயலாய்ப் பொருந்துதல். இழித்துரைக்குங் கருத்தால் 'சிந்து சாம்பலும்
சிறு சொலும்' என்றார். கண்டாய், முன்னிலையசை. நந்து முதலியவை
கடற்கரை மணல் முதலியவற்றில் ஊர்ந்து செல்லுங்கால் உண்டாகும்
கீற்றுக்கள் எழுத்தாய் அமையினும் அமையும், அங்ஙனம் அமையினும்
அதனை அவை அறிந்து எழுதின வெனல் சாலாது என்க; இது குணாக்கர
நியாயம் எனப்படும். மேல், இயல்பாக நீங்கிய சுரத்தை நீர் தீர்த்ததாகக்
கருதல் தகாது என்று கூறியவர், நீ சிந்திய சாம்பலும் சொல்லிய சொல்லும்
மருந்தும் மந்திரமும் போலாகி அரசன் வெப்பினைப் போக்கி யிருப்பினும் நீ
மருந்து எனவும் மந்திரம் எனவும் அவற்றை அறிந்து வழங்கினாயல்லை என
இப்பொழுது கூறினார் என்க. (30)

உங்கண் மந்திர மோடொன்றிற் றீட்டுக வோரெட்*
டெங்கண் மந்திரந் தன்னையுந் தீட்டுக விரண்டும்
அங்கி வாயிடின் வெந்தது தோற்றதவ் வங்கி
நுங்கி டாதது வென்றதென் றொட்டியே நுவலா.+

     (இ - ள்.) உங்கள் மந்திரம் ஏடு ஒன்றில் தீட்டுக - நுங்கள்
மந்திரத்தை ஒரு பனையேட்டில் தீட்டக் கடவீர்; எங்கள் மந்திரம்
தன்னையும் ஓர் ஏட்டு தீட்டுக - எங்கள் மந்திரத்தையும் ஒரு ஏட்டில்
வரையக் கடவேம்; இரண்டும் அங்கியவாய் இடின் -
இவ்விரண்டேட்டினையும் நெருப்பின்கண் இட்டால், வெந்தது தோற்றது -
வெந்த ஏடு தோல்வியடைந்தது; அவ்வங்கி நுங்கிடாதது வென்றது என்று -
அத்தீயினால் உண்ணப்படாத ஏடு வெற்றி பெற்றது என்று, ஒட்டியே நுவலா
- வஞ்சினங் கூறி.

     சைவ சமயிகள் பிறரையுயம் உளப்படுத்தி 'உங்கள் மந்திரம்' என்றனர்.
தீட்டுக என்னும் வியங்கோள் முற்றுக்கள் முறையே முன்னிலையிலும்
தன்மையிலும் வந்தன. அங்கிவாய், வாய் ஏழனுருபு. வெந்த ஏட்டில்
வரையப்பெற்ற மந்திரத்தை யுடைய சமயம் தோற்றது எனவும், அதற்கு
எதிரானது வென்றது எனவும் கருத்துக் கொள்க. ஓட்டல் - பணையம்
(பந்தயம்) விதித்தல். (31)


     (பா - ம்.) *உங்கள் மந்திர மோரேட்டிற் றீட்டுகவோ ரேட்டில்
+நுவல்வார்