450திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) பொய் இல் மறையின் புறத்து அமணர்புத்தர்க்கு அன்றி -
பொய்யில்லாத மறைக்குப் புறம்பினராகிய சமணர் புத்தர்களுக்கே யல்லாமல்,
வாய்மை உரை செய்யும் மறை நூல் பல தெரிந்தும் - வாய்மையை
யுரைக்கும் பல மறைநூல்களை ஓதியும், சிவனே பரம் என்று அறியாது -
சிவபெருமானே முழுமுதற் கடவுளென் றுணராமல், கையில் விளக்கினொடும்
கிடங்கில் வீழ்வார்போல் - கையிலுள்ள விளக்கோடும் குழியில் வீழ்பவரைப்
போல, மனம் கலங்கி ஐயம் அடைந்த பேதையர்க்கும் - அறிவு கலங்கி
ஐயுறவுற்ற மூடர்களுக்கும், அவை அறிவித்தன அன்றோ - அவை
தெரிவித்தன அல்லவா.

     மறையின் புறத்தமணர் புத்தர் - வேதபாகியராகிய சமணர்புத்தர்கள்
ஐயமடைந்த பேதையர் என்றது வைதிகருள்ளே சைவரல்லாத ஏனையரை
வேதத்தைப் பயின்று வைத்தும் சிவனே பரமெனத் தெளியாமையால் 'கையில்
விளக்கினொடும்' என்றார். கிடங்கு - கிணறும் ஆம், (56)

கண்டுகூடற் கோமகனுங்* கற்பு நிறைந்த பொற்புடைய
வண்டு கூடுந் தாரளக வளவன் மகளு மந்திரியுந்
தொண்டு கூடு மடியாருங் காழிக் காசைத் தொழுதுதுதி+
விண்டு கூடற் கரிய+ மகிழ் வெள்ளத் தழுந்தி வியந்தனரால்.

     (இ - ள்.) கூடல் கோமகனும் - கூடல் மன்னனாகிய பாண்டியனும்,
கற்பு நிறைந்த பொற்பு உடைய - கற்புநிறைந்த அழகினையுடைய, வண்டு
கூடும் தார் அளகவளவன் மகளும் - வண்டுகள் கூடும் மாலையை யணிந்த
கூந்தலையுடைய வளவர்கோன் பாவையாகிய மங்கையர்க்கரசியாரும்,
மந்திரியும் தொண்டுகூடும் அடியாரும் கண்டு - குலச்சிறையாரும்
தொண்டுபூண்ட அடியார்களும் இந்நிகழ்ச்சியைக் கண்டு, காழிக்கு அரசைத்
தொழுது துதிவிண்டு - காழிமன்னராகிய பிள்ளையாரை வணங்கித் துதிமொழி
கூறி, கூடற்கு அரிய மகிழ்ச்சிவெள்ளத்துள் அழுந்தி வியந்தனர் -
பிறரடைதற்கு அரிய மகிழ்ச்சி வெள்ளத்துள் அழுந்தி வியப்புற்றனர்.

     அளகத்தையுடைய மகள் என்க. விண்டு - விளம்பி. (57)

நன்றி தேறார் பின்புள்ள மான மிழந்து நாணழிந்து
குன்று போலுந் தோணிபுரக் கோமா னெதிரே யாங்களுமக்
கின்று தோற்றே மெமையீண்டு நீரே வென்பீ ரெனநேர்ந்து
நின்று கூறக் கவுணியர்கோ னனையா ருய்யு நெறிநோக்கா.

     (இ - ள்.) நன்றி தேறார் பின்பு உள்ள மானம் இழந்து நாண் அழிந்து
- செய்ந்நன்றி தேறாத அச் சமணர் பின் எஞ்சியுள்ள மானத்தை இழந்து
நாணமும் அழிந்து, குன்றுபோலும் தோணிபுரக்கோமான் எதிரே -
மலைபோலும் தோணிபுரத்தோன்ற லாகிய பிள்ளையார் திருமுன் வந்து,
இன்று யாங்கள் உமக்குத் தோற்றேம் - இன்று யாம் உமக்குத் தோற்றோம்;
ஈண்டு எமை நீரே வென்றீர் என - இவ்விடத்தில் எம்மை நீரே
வென்றீரென்று, நேர்ந்து நின்று கூற - உடன்பட்டுச் சொல்ல, கவுணியர்கோன்
- கவுணியர் தலைவராகிய பிள்ளையார், அனையார் உய்யும் நெறிநோக்கா -
அச் சமணர் உய்தி பெரும் வழியைக் கருதி.

     திருமடத்திலே தீயிட்ட தீச்செயலுக்கு ஒறுக்காது விடுத்த நன்றியை
அவர்கள் அறியாமையால் 'நன்றிதேறார்' என்றார்; உறுதி இன்னதென்
றறியாதவர் என்றுமாம். உள்ள மானம் - மனமானம் எனலும் பொருந்தும்.


     (பா - ம்.) *கோமானும். +காழிக்கரசைத் துதித்திறைஞ்சி.
+விண்டுகூறற்கரிய.