476திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



"ஒப்புடைய மாதரு மொண் பொருளு நீ"
என்னும் தேவாரமும் காண்க. மகிழ்ச்சி செய்தலை,

"மக்கண் மெய்தீண்ட லுடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு"

என்பது முதலியவற்றா லறிக. (34)

மூத்தவள் சிறுவர் சால மூர்க்கார யுள்ளா ரேனை
மாத்தளி ரியலி னாட்கோர் மைந்தனுண் டிவனு மன்ன
தீத்தொழி னாக மன்ன சிறார்களு மல்லற் செல்வம்
பூத்தநீ ணியமத் தூடு போய்விளை யாடல் செய்வார்.

      (இ - ள்.) மூத்தவள் சிறுவர் சால மூர்க்கராய் உள்ளார் - மூத்தாள்
புதல்வர் மிகவுங் கொடியராயுள்ளவர், ஏனை மாத்தளிர் இயலினாட்கு ஓர்
மைந்தன் உண்டு - மாந்தளிர் போன்ற மென்மையுடைய இளையாளுக்கு ஒரு
புதல்வன் உளன்; இவனும் - இம்மைந்தனும், அன்ன தீத்தொழில் நாகம்
அன்ன சிறார்களும் - அந்தக் கொடுந் தொழிலையுடைய பாம்புபோன்ற
சிறுவர்களும், மல்லல் செல்வம் பூத்த நீள் நியமத்தூடு போய் - பெருஞ்
செல்வம் நிறைந்த நீண்ட கடைவீதி யூடு சென்று, விளையாடல் செய்வார் -
விளையாடுவாராயினர்.

     எதுகை நோக்கி மாத்தளிர் என வலித்தது. நியமம் - கடைத்தெரு.
(35)

முந்திய மணாட்டி மைந்தர் முகிழ்முலை யிளைய பாவை
மைந்தனை யொருநாட் சீறி யடித்தனர் வருந்தி யீன்ற
சந்தணி முலையாண் மாற்ற டனையரை வைதா ளீன்ற
பைந்தொடி தானுஞ் சீறி யிளையளைப் பழித்து வைவாள்.

     (இ - ள்.) முந்திய மணாட்டி மைந்தர் - முந்திய மனைவியின்
புதல்வர்கள், முகிழ் முலை இளையபாவை மைந்தனை - தாமரை மொட்டினை
யொத்த கொங்கைகளையுடைய இளைய மனைவியின் புதல்வனை, ஒரு நாள்
சீறி அடித்தனர் - ஒருநாள் சினந்து அடித்தனர்; வருந்தி ஈன்ற சாந்து அணி
முலையாள் மாற்றாள் தனையரை வைதாள் - அவனை வருந்திப்பெற்ற சாந்து
அணிந்த கொங்கையையுடைய அவ்விளையாள் மூத்தாள் புதல்வர்களை
வைதனள்; ஈன்ற பைந்தொடி - அப்பிள்ளைகளைப் பெற்ற பசிய வளையலை
யணிந்த மூத்தாள், தானும் சீறி இளையளைப் பழித்து வைவாள் - தானுஞ்
சினந்து இளையவளை இகழ்ந்து நிந்திப்பாளாயினள்.

     மணவாட்டி எனற்பாலது மணாட்டி என்றாயது. அவனை வருந்தி யீன்ற
என்றும், அவர்களை யீன்ற என்றும் விரித்துரைக்க, மாற்றாள் - சக்களத்தி.
(36)

எந்த வூரெந்தச் சாதி யார்மகள் யாவர் காணச்
செந்தழல் சான்றா வெங்கோன் கடிமணஞ் செய்து வந்த
கொந்தவிழ் கோதை நீயென் கொழுநனுக் காசைப் பட்டு
வந்தவ ளான காமக் கிழத்திக்கேன் வாயும் வீறும்.

     (இ - ள்.) நீ எந்த ஊர் எந்தச் சாதி - நீ எந்த வூரினள், என்ன
மரபினள், யார் மகள் - யாவர் புதல்வி, யாவர்காணச் செந்தழல் சான்றா -
யாவர் முன்னிலையில் சிவந்த அனல் சான்றாக, எம்கோன் கடிமணம் செய்து
வந்த கொந்து அவிழ் கோதை - எமது நாயகன் திருமணஞ் செய்து வந்த