512திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     ஐம்முகம் சிவத்திற்கு அடை. சைவச் செந்தீ - சிவாக்கினி. ஈசானம்,
தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும்
பஞ்சமந்திரங்களால் அருத்தி என்றுமாம். மனு நூற்றுப் பத்தால் -
சகத்திரநாம மந்திரத்தால். அகத்தினும் என்னும் உம்மை எச்சப்
பொருட்டு. (41)

வாசமஞ் சனநீ ரோடு மந்திர மலர்கைக் கொண்டு
பூசையின் பயனை முக்கட் புண்ணியன் கையி னல்கி
நேசநெஞ் சூறக் கண்க ணிறையநீ ரூறிச் சோர
ஈசனை யிறைஞ்சி யாரு மஞ்சலித் தேத்தல் செய்வார்.

     (இ - ள்.) வாச மஞ்சன நீரோடு மலர் கைக்கொண்டு - மணம்
ஊட்டிய திரு மஞ்சன நீருடன் மலரையுங் கைக்கொண்டு, மந்திரம் -
அவற்றுடன் சிவமூல மந்திரத்தால், பூசையின் பயனை - வழிபாட்டின்
பயனை, முக்கண் புண்ணியன் கையில் - மூன்று கண்களையுடைய
அறவடிவினனாகிய இறைவன் திருக்கரத்தில், நல்கி - கொடுத்து, நெஞ்சு
நேசம் ஊற - உள்ளத்தின்கண் அன்பு சுரக்க, கண்கள் நிறைய நீர் ஊறிச்
சோர - கண்கள் நிறைய நீர் சுரந்து ஒழுக, யாரும் - யாவரும், ஈசனை
இறைஞ்சி - சோமசுந்தரக் கடவுளை வணங்கி, அஞ்சலித்து ஏத்தல்
செய்வார் - கைகூப்பித் துதிப்பா ராயினர்.

     நல்குதல் - அர்ப்பணஞ் செய்தல். (42)

               எண்சீரடியாசிரிய விருத்தம்
பழியொடு பாச மாறு கெடவாச வன்செய் பணிகொண்ட வண்ட
                                              சரணம்
வழிபடு தொண்டர் கொண்ட நிலைகண்டு வெள்ளி மணிமன்று ளாடி
                                               சரணம்
செழியன்வி ளிந்தி டாத படிமாறி யாட றெளிவித்த சோதி சரணம்
எழுகடல் கூவி மாமி யுடன்மாம னாட விசைவித்த வாதி சரணம்.

     (இ - ள்.) பழியொடு பாசம் மாறு கெட - பழியும் பாசமுமாகிய பகை
கெட, வாசவன் செய் பணி கொண்ட அண்ட சரணம் - இந்திரன் செய்த
பணியினை ஏற்றுக் கொண்டருளிய தேவனே அடைக்கலம்; வழிபடு
தொண்டர் கொண்ட நிலை கண்டு - வழிபடும் அடியாராகிய புலிக்கான்
முனியும் பதஞ்சலியும் உள்ளத்திற் கொண்ட உறுதியைக் கண்டருளி,
மணிவெள்ளி மன்றுள் ஆடி சரணம் - அழகிய வெள்ளியம்பலத்தின்கண்
திருக்கூத்தாடி யருளியவனே அடைக்கலம்; செழியன் விளிந்திடாதபடி மாறி
யாடல் தெளிவித்த - இராசசேகர பாண்டியன் இறவாவாறு கான்மாறி யாடிக்
காட்டியருளிய, சோதி சரணம் - ஒளி வடிவினனே அடைக்கலம்; எழு கடல்
கூவி - ஏழு கடல்களையும் அழைத்து, மாமியுடன் மாமன் ஆட இசைவித்த
ஆதி சரணம் - மாமியாகிய காஞ்சனமாலையுடன் மாமனாகிய
மலயத்துவசனும் ஆடுதற்கு அவனை அழைத்தருளிய கடவுளே அடைக்கலம்.

     இந்திரன் உற்ற பழியையே யன்றி அவனது அனாதி பாசத்தையும்
போக்கின ரென்பார் ‘பழியொடு பாச மாறு கெட’ என்றார். ஆடி, பெயர்.
இச் செய்யுளிலும், வருஞ் செய்யுள்களிலும் கூறப்படுகின்ற வரலாறுகளை
இப்புராணத்து ஆண்டாண்டுக் காண்க. (43)