94திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



உணர்ந்த கேள்வியா ரிவரொ டொல்லைபோய்ப்
புணர்ந்த வாயிரம் பொன்னு மின்றமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க வின்றென
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்.

     (இ - ள்.) உணர்ந்த கேள்வியார் இவரொடு - உண்மை யுணர்ந்த
கேள்வி வல்லாராகிய இப்புலவரோடும், ஒல்லைபோய் - விரைந்து சென்று,
புணர்ந்த ஆயிரம் பொன்னும் - பொருந்திய ஆயிரம் பொன்னையும்,
இன்தமிழ் கொணர்ந்த வேதியன் இன்று கொள்க என - இனிய பாசுரத்தைக்
கொண்டுவந்த வேதியன் இப்பொழுதே கொள்ளக் கடவனென்று, மணந்த
தாரினான் - மணம் வீசும் மாலையையணிந்த பாண்டியன், மகிழ்ந்து
நல்கினான் - மகிழ்ந்து அளித்தான். (92)

வேந்த னேவலால் விபுதர் தம்மொடும்
போந்து மீண்டவைப் புறம்பு தூங்கிய
ஆய்ந்த பொற்கிழி யறுக்கு நம்பியை
நேர்ந்து கீரனில் லெனவி லக்கினான்.

     (இ - ள்.) வேந்தன் ஏவலால் - பாண்டியன் ஏவலினால், விபுதர்
தம்மொடும் மீண்டு போந்து - புலவரோடும் திரும்பிச் சென்று, அவைப்
புறம்பு தூங்கிய - கழகத்தின் வெளியிற் றொங்கிய, ஆய்ந்த பொன் கிழி
அறுக்கும் நம்பியை - சிறந்த பொன் முடிப்பை அறுக்கும் அத்தருமியை,
கீரன் நேர்ந்து நில் என விலக்கினான் - நக்கீரன் எதிர்ந்து அறுக்காதே
நில் என்று தடுத்தான். விபுதர் - புலவர். இதனால் முன்பு கீரன்
ஆண்டிருந்தில னென்பது பெற்றாம். (93)

குற்ற மிக்கவிக் கென்று கூறலுங்
கற்றி லானெடுங் காலம் வெம்பசி
உற்ற வன்கலத் துண்ணு மெல்லைகைப்
பற்ற வாடினான் பண்பு பற்றினான்.

     (இ - ள்.) இக்கவிக்குக் குற்றம் என்று கூறலும் - இந்தப் பாடலுக்குக்
குற்றம் (உண்டு) என்று கூறலும், கற்றிலான் - தமிழ்ப்புலமை யில்லானாகிய
அவ்வேதியன், நெடுங்காலம் வெம்பசி உற்றவன் - நீண்ட காலமாகக் கொடிய
பசி உற்றவனாய், கலத்து உண்ணும் எல்லை - கலத்தின்கண் உணவுபெற்று
உண்ணுங்கால், கைப்பற்ற வாடினான் - (உண்ணற்கவெனத் தடுத்து ஒருவன்)
கையைப் பற்றிக் கொள்ள வாட்டமடைந்த ஒருவனது, பண்பு பற்றினான் -
தன்மையை அடைந்தான்.

     குற்றமின்றெனக் கூறுதற்கேற்ற வலியிலானென்பார் ‘கற்றிலான்’
என்றார். (94)