2567. கொன்றை அம் தெரியல் வேய்ந்த கூடல் எம் பெருமான்
                                                        செம்பொன்
மன்றல் அம் கமலத்து ஆழ்ந்து வழிபடு நாவலோனை
அன்று அகன் கரை ஏறிட்ட அருள் உரை செய்தேம்
                                                        இப்பால்
தென் தமிழ் அனையான் தேறத் தெருட்டிய திறனும்
                                                        சொல்வாம்.
1
உரை
   
2568. முன்பு நான் மடக் கூடல் முழு முதல் ஆணையால் போய்
இன்புற அறிஞர் ஈட்டத்து எய்தி ஆங்கு உறையும் கீரன்
வன்புறு கோட்டம் தீர்ந்து மதுரை எம் பெருமான் தாளில்
அன்பு உறு மனத்தன் ஆகி ஆய்ந்து மற்று இதனைச்
                                                     செய்வான்.
2
உரை
   
2569. கட்டு அவிழ் கடுக்கை அண்ணல் கண்ணினால் அவிந்த
                                                        காளை
மட்டு அவிழ் மலரோனாலும் மாயவனாலும் காக்கப்
பட்டவன் அல்லன் நல் நுதல் விழிப்படு தீ நம்மைச்
சுட்ட போது உருப்பம் தீர்த்துக் காத்தது இச் சுவணக்
                                                        கஞ்சம்.
3
உரை
   
2570. இப் பெரும் தடமே எம்மை எம்மையும் காப்பது என்னாக்
கப்பிலா மனத்தான் மூன்று காலமும் மூழ்கி மூழ்கி
அப்பனை ஆலவாய் எம் அடிகளை அடியார் சேம
வைப்பினை இறைஞ்சி நித்தம் வழிபடும் நியமம் பூண்டான்.
4
உரை
   
2571. மையறு மனத்தான் வந்து வழிபடு நியமம் நோக்கிப்
பை அரவாரம் பூண்ட பரஞ்சுடர் மாடக் கூடல்
ஐயனும் அணியன் ஆகி அகம் மகிழ்ந்து அவனுக்கு ஒன்று
செய்ய நல் கருணை பூத்து திரு உளத்து இதனைத்
                                                     தேர்வான்.
5
உரை
   
2572. இலக்கணம் இவனுக்கு இன்னும் தெளிகில இதனால்
                                                          ஆய்ந்த
நலத்த சொல் வழூச் சொல் என்பது அறிகிலன் அவை தீர்
                                                          கேள்விப்
புலத்தவர் யாரைக் கொண்டு போதித்து இவனுக்கு என்னா
மலைத் தனு வளைத்த முக்கண் மன்னவன் உன்னும்
                                                          எல்லை.
6
உரை
   
2573. பங்கயச் செங்கை கூப்பிப் பாலின் நேர் மொழியாள்
                                                        சொல்வாள்
அங்கணா அம்கை நெல்லிக் கனி என அனைத்தும் கண்ட
புங்கவா நினது சங்கைக்கு உத்தரம் புகல வல்லார்
எங்குளர் ஏனும் என் நெஞ்சு உதிப்பது ஒன்று இசைப்பேன்
                                                        ஐயா.
7
உரை
   
2574. பண்டு ஒரு வைகல் வெள்ளிப் பனிவரை இடத்து உன்
                                                      பாங்கர்ப்
புண் தவழ் குலிசக் கோமான் பூ மகன் மாயப் புத்தேள்
அண்டரும் சனகன் ஆதி இருந்தவர் பிறரும் ஈண்டிக்
கொண்டனர் இருந்தார் இந்தக் குவலயம் பொறாது மாதோ.
8
உரை
   
2575. தாழ்ந்தது வடகீழ் எல்லை உயர்ந்தது தென் மேற்கு எல்லை
சூழ்ந்தது கண்டு வானோர் தொழுது உனைப் பரவி ஐய
ஊழ்ந்திடும் அரவம் பூண்டோய் ஒருவன் நின் ஒப்பான்
                                                          அங்கே
வாழ்ந்திட விடுத்தால் இந்த வையம் நேர் நிற்கும் என்றார்.
9
உரை
   
2576. பைத்தலை புரட்டு முந்நீர்ப் பௌவம் உண்டவனே எம்மை
ஒத்தவன் அனையான் வாழ்க்கைக்கு உரியளாகிய உலோபா
முத்திரை இமவான் பெற்ற முகிழ் முலைக் கொடி ஒப்பாள்
                                                              என்று
இத்திரு முனியை நோக்கி ஆயிடை விடுத்தாய் அன்றே.
10
உரை
   
2577. விடை கொடு போவான் ஒன்றை வேண்டினான் ஏகும்
                                                         தேயம்
தொடை பெறு தமிழ் நாடு என்று சொல்லுப வந்த நாட்டின்
இடை பயில் மனித்தர் எல்லாம் இன் தமிழ் ஆய்ந்து
                                                        கேள்வி
உடையவர் என்ப கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல்
                                                       வேண்டும்.
11
உரை
   
2578. சித்தம் மாசு அகல அந்தச் செம் தமிழ் இயல் நூல்
                                                          தன்னை
அத்தனே அருளிச் செய்தி என்றனன் அனையான் தேற
வைத்தனை முதல் நூல் தன்னை மற்று அது தெளிந்த
                                                          பின்னும்
நித்தனும் அடியேன் என்று நின் அடி காண்பேன் என்றான்.
12
உரை
   
2579. கடம்பமா வனத்தில் எம்மைக் கண்டனை இறைஞ்சி
                                                         உள்ளத்து
திடம் பெற யாது வேட்டாய் அவை எலாம் எம்பால்
                                                         பெற்றுத்
திடம் பெற மலயத்து எய்தி இருக்க என விடுத்தாய்
                                                         சென்று
குடம் பெறு முனியும் அங்கே இருக்கின்றான்
                                                    கொடியினோடும்.
13
உரை
   
2580. இனையது உன் திரு உள்ளத்துக்கு இசைந்ததேல் இவற்குக்
                                                          கேள்வி
அனைய மாதவனைக் கூவி உணர்த்தென வணங்கு கூற
இனைய நாண் இகழ்ச்சி எல்லா மறந்திடாது இன்று
                                                        சொன்னாய்
அனையதே செய்தும் என்னா அறிவனை நினைத்தான்
                                                          ஐயன்.
14
உரை
   
2581. உடைய நாயகன் திருவுளம் உணர்ந்தனன் முடிமேல்
அடைய அஞ்சலி முகிழ்த்தனன் அரும் தவ விமானத்து
இடை புகுந்தனன் பன்னியோடு எழுந்தனன் அகல்வான்
நடையன் ஆகி வந்து அடைந்தனன் நற்றமிழ் முனிவன்.
15
உரை
   
2582. இயங்கு மாதவத் தேரினும் பன்னியோடு இழிந்து
புயங்கன் ஆலயம் புகுந்து நாற்புயம் புடை கிளைத்துத்
தயங்கு செம் பவளா சலம் தன்னையும் அதன்பால்
வயங்கும் இந்திர நீலமால் வரையையும் பணியா.
16
உரை
   
2583. பெருகும் அன்பு உளம் துளும்ப மெய் ஆனந்தம் பெருக
அருகு இருந்தனன் ஆவயில் கீரனும் அம் பொன்
முருகு அவிழ்ந்த தாமரை படிந்து இறைவனை முன்போல்
உருகு அன்பினால் இறைஞ்சுவான் ஒல்லை வந்து
                                                     அடைந்தான்.
17
உரை
   
2584. இருந்த மாதவச் செல்வனை எதிர் வர நோக்கி
அருந்த வாவிற்கு இயல் தமிழ் அமைந்தில எம்பால்
தெரிந்த நீ அதை அரி தபத் தெருட்டு எனப் பிணியும்
மருந்தும் ஆகிய பெருந்தகை செய்யவாய் மலர்ந்தான்.
18
உரை
   
2585. வெள்ளை மாமதிப் பிளவு அணி வேணி அம் கருணை
வள்ளலார் பணி சிரத் தினு மனத்தினும் தாங்கிப்
பள்ளம் ஏழையும் பருகினோன் பணியும் நக்கீரன்
உள்ளம் மாசு அற வியாகரணத்தினை உரைக்கும்.
19
உரை
   
2586. இருவகைப் புற உரை தழீஇ எழுமதமொடு நால்
பொருளொடும் புணர்ந்து ஐ இரு குற்றமும் போக்கி
ஒரு விலை இரண்டு அழகொடு முத்தி எண் நான்கும்
மருவு ஆதி நூலினைத் தொகை வகை விரி முறையால்.
20
உரை
   
2587. கருத்துக் கண் அழி ஆதிய காண்டிகை யானும்
விருத்தியான் நூல் கிடைப் பொரு துளக்கற விளக்கித்
தெரித்து உரைத்தனன் உரைத்திடு திறம் கண்டு நூலின்
அருத்த மே வடிவு ஆகிய ஆதி ஆசிரியன்.
21
உரை
   
2588. தருக்கு இன்பமும் கருணையுந் தழைய மா தவனைக்
திருக்கரங் களான் மகிழ்ச்சியுள் திளைத்திடத் தடவிப்
பெருக்க வேண்டிய பேறு எலாம் பீடுற நல்கி
இருக்கையில் செல விடுத்தனன் ஆலவாய் இறைவன்.
22
உரை
   
2589. பொன்னாளொடும் குறு முனி விடை கொடு போன
பின்னை ஆர் உயிர்க் கிழத்தி தன் பிரானை நேர் நோக்கி
என்னை நீ இவற்கு உணர்த்திடாது இத் தவப் பொதியின்
மன்னனால் உணர்த்தியது என மதுரை நாயகனும்.
23
உரை
   
2590. தன்னை நித்தலும் வழிபடும் தகுதியோர் சாலப்
பொன் அளிப்பவர் தொடுத்த மற்சரம் இலாப் புனிதர்
சொன்னசொல் கடவாதவர் துகள் தவிர் நெஞ்சத்து
இன்னவர்க்கு நூல் கொளுத்துவது அறன் என இசைப்ப.
24
உரை
   
2591. இவன் மடுத்த மற்சரத்தினால் யாம் உணர்த்தாது அத்
தவனை விட்டு உணர்த்தினம் எனச் சாற்றினான் கேட்டுக்
கவலை விட்டு அக மகிழ்ச்சி கொண்டு இருந்தனள் கதிர்
                                                               கால்
நவ மணிக்கலம் பூத்தது ஓர் கொடி புரை நங்கை.
25
உரை
   
2592. கற்ற கீரனும் பின்பு தான் முன் செய்த கவிகண்
முற்றும் ஆய்ந்து சொல் வழுக்களும் வழா நிலை முடிபும்
உற்று நோக்கினான் அறிவின்றி முழுதொரும் உணர்ந்தோன்
சொற்ற பாடலில் பொருள் வழுச் சொல்லினேன் என்னா.
26
உரை
   
2593. மறையின் அந்தமும் தொடாத தாள் நிலம் தொட வந்த
நிறை பரம் சுடர் நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன்
சிறிய கேள்வியோர் கழியவும் செருக்கு உடையோர் என்று
அறிஞர் கூறிய பழம் சொல் என் அளவிற்றே அம்ம.
27
உரை
   
2594. அட்ட மூர்த்தி தன் திருவடிக்கு அடியனேன் பிழைக்கப்
பட்ட தீங்கினால் எனை அவன் நுதல் விழிப் படுதீச்
சுட்டது அன்றி என் நெஞ்சமும் சுடுவதே என்று என்று
உட்டதும்பிய விழுமநோய் உவரியுள் ஆழ்ந்தான்.
28
உரை
   
2595. மகவை ஈன்ற தாய் கைத்திடு மருந்து வாய் மடுத்துப்
பகைபடும் பிணி அகற்றிடும் பான்மைபோல் என்னை
இகல் இழைத்து அறிவுறுத்தினாற்கு ஏழையேன் செய்யத்
தகுவது யாது என வரம்பிலா மகிழ்சியுள் தாழ்ந்தான்.
29
உரை
   
2596. மாதவன் தனக்கு ஆலவாய் மன்னவன் அருளால்
போதகம் செய்த நூலினைப் புலவரே னோர்க்கும்
ஆதரம் செயக் கொளுத்தி இட்டு இருந்தனன் அமலன்
பாத பங்கயம் மூழ்கிய பத்திமைக் கீரன்.
30
உரை