கடவுள் வாழ்த்து
 
 
சிவபெருமான்
 
6.
திரு வந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெரு வந்தனை செய்து அறிதற்கு அரும் பெற்றி எய்தி
அரு வந்தனையும் உருவத்தையும் அன்றி நின்றான்
ஒருவன் தனது பதம் தன்னை உளத்துள் வைப்பாம்.
6
   
7.
ஊன் ஆகி ஊன் உள் உயிராய் உயிர் தோறும் ஆகி
வான் ஆதி ஆன பொருளாய் மதி ஆகி வெய்யோன்
தான் ஆகி ஆண் பெண் உருவாகிச் சராசரங்கள்
ஆனான் சிவன் மற்று அவன் நீள் கழற்கு அன்பு
                                 செய்வாம்.
7
   
                    வேறு  
8.
பிறப்பதும் இறப்பதும் பெயரும் செய்கையும்
மறப்பதும் நினைப்பதும் வடிவம் யாவையும்
துறப்பதும் இன்மையும் பிறவும் சூழ் கலாச்
சிறப்புடை அரன் அடி சென்னி சேர்த்துவாம்.
8
   
9.
பூ மலர் மிசை வரு புனிதன் ஆதியோர்
தாம் உணர்வு அரியது ஓர் தலைமை எய்தியே
மா மறை முதற்கு ஒரு வடிவம் ஆகியோன்
கா மரு செய்ய பூம் கழல்கள் போற்றுவாம்.
9
   
10.
பங்கயன் முகுந்தன் ஆம் பரம் என்று உன்னியே
தங்களில் இருவரும் சமர் செய்து உற்று உழி
அங்கு அவர் வெருவர அங்கியாய் எழும்
புங்கவன் மலர் அடி போற்றி செய்குவாம்.
10
   
11.
காண்பவன் முதலிய திறமும் காட்டுவான்
மாண்பு உடை யோனுமாய் வலிகொள் வான் தொடர்
பூண்பதின் றாய் நயம் புணர்க்கும் புங்கவன்
சேண் பொலி திரு நடச் செயலை ஏத்துவாம்.
11
   
             சிவசத்தி  
12.
செறிதரும் உயிர் தொறும் திகழ்ந்து மன்னிய
மறு அறும் அரன் இடம் மரபின் மேவியே
அறுவகை நெறிகளும் பிறவும் ஆக்கிய
இறைவி தன் மலர் அடி இறைஞ்சி ஏத்துவாம்.
12
   
                விநாயகக் கடவுள்  
13.
மண் உலகத்தினில் பிறவி மாசு அற
எண்ணிய பொருள் எலாம் எளிதின் முற்று உறக்
கண்ணுதல் உடையது ஓர் களிற்று மா முகப்
பண்ணவன் மலர் அடி பணிந்து போற்றுவாம்.
13
   
          வைரவக்கடவுள்  
14.
பரமனை மதித்திடாப் பங்கய ஆசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டம் முன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
14
   
15.
வெம் சினப் பரி அழன் மீது போர்த்திடும்
அஞ்சனப் புகை என வாலமாம் எனச்
செம்சுடர்ப் படிவ மேல் செறித்த மா மணிக்
கஞ்சுகக் கடவுள் பொன் கழல்கள் ஏத்துவாம்.
15
   
 
வீரபத்திரக் கடவுள்
 
 
16.
அடைந்து அவி உண்டு இடும் அமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மா மகம் ஒடியத் தக்கனைத்
தடிந்திடும் சேவகன் சரணம் போற்றுவாம்.
16
   
 
சுப்பிரமணியக் கடவுள்
 
 
17.
இருப்பர் அங்கு உறைத்திடும் எஃகம் வேல் உடைப்
பொருப்பர் அங்கு உணர்வு உறப் புதல்வி தன்மிசை
இருப்பர் அங்கு அமர் இடை விளங்கக் காட்டிய
திருப்பரம் குன்று அமர் சேயைப் போற்றுவாம்.
17
   
18.
சூர் அலை வாயிடைத் தொலைத்து மார்பு கீண்டு
ஈரலை வாய் இடும் எஃகம் ஏந்தியே
வேர் அலைவாய் தரு வெள்ளி வெற்பு ஒரீஇச்
சீர் அலைவாய் வரு சேயைப் போற்றுவாம்.
18
   
19.
காவினன் குடில் உறு காமர் பொன் நகர்
மேவினன் குடிவர் விளியச் சூர் முதல்
பூவினன் குடிலை அம் பொருட்கு மால் உற
ஆவினன் குடி வரும் அமலர் போற்றுவாம்.
19
   
20.
நீரகத்தே தனை நினையும் அன்பினோர்
பேர் அகத்து அலமரும் பிறவி நீத்திடும்
தாரகத்து உருவமாம் தலைமை எய்திய
ஏரகத்து அறுமுகன் அடிகள் ஏத்துவாம்.
20
   
21.
ஒன்றும் தொறு ஆடலை ஒருவி ஆவிமெய்
துன்று தொறு ஆடலை தொடங்கி ஐவகை
மன்று தொறு ஆடிய வள்ளல் காமுறக்
குன்று தொறு ஆடிய குமரன் போற்றுவாம்.
21
   
22.
எழ முதிரைப் புனத்து இறைவி முன்பு தன்
கிழ முதிர் இள நலம் கிடைப்ப முன்னவன்
மழ முதிர் களிறு என வருதல் வேண்டிய
பழ முதிர் சோலை அம் பகவன் போற்றுவாம்.
22
   
23.
ஈறு சேர் பொழுதினும் இறுதி இன்றியே
மாறு இலாது இருந்திடும் வளம் கொள் காஞ்சியில்
கூறு சீர் புனை தரு குமரக் கோட்டம் வாழ்
ஆறு மா முகப் பிரான் அடிகள் போற்றுவாம்.
23
   
        திருநந்திதேவர்
 
24.
ஐ இரு புராண நூல் அலமற்கு ஓதியும்
செய்ய பன் மறைகளும் தெரிந்து மாயை யான்
மெய் அறு சூள் புகல் வியாதன் ஈட்டிய
கை அடு நந்திதன் கழல்கள் போற்றுவாம்.
24
   
          திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள்  
25.
பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல்
குண்டரை வென்று முன் கூடல் வைகியே
வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும்
தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம்.
25
   
                திருநாவுக்கரசு சுவாமிகள்
 
26.
பொய் உரை நூல் சில புகலும் தீ யமண்
கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு
வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு
துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம்.
26
   
            சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
27.
வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண்
உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால்
இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று
அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம்.
27
   
              மாணிக்க வாசக சுவாமிகள்  
28.
கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச்
சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால்
வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம்.
28
   
                திருத் தொண்டர்கள்
 
29.
அண்டரும் நான்முகத்து அயனும் யாவரும்
கண்டிட அரியது ஓர் காட்சிக் கண்ணவாய்
எண் தகு சிவன் அடி எய்தி வாழ் திருத்
தொண்டர் தம் பதமலர் தொழுது போற்றுவாம்.
29
   
                     சரசுவதி  
30.
தா வறும் உலகு எலாம் தந்த நான் முகத்
தேவு தன் துணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
நாவு தொறும் இருந்திடும் நலம் கொள் வாணிதன்
பூ அடி முடி மிசை புனைந்து போற்றுவாம்.
30