ஆற்றுப் படலம்
 
51.
செக்கர் அம் சடை முடிச் சிவனுக்கு அன்பராய்த்
தக்கவர் அறிஞர் கடவத்தர் செல்வராய்த்
தொக்கவர் யாரும் வாழ் தொண்டை நாட்டினின்
மிக்கதோர் அணி இயல் அது விளம்புகேன்.
1
   
52.
சுந்தர மாயவன் துயிலும் ஆழி போல்
இந்திரன் ஊர் முகிலி யாவும் ஏகியே
அந்தம் இல் கடல் புனல் அருந்தி ஆர்த்து எழீஇ
வந்தன உவரியின் வண்ணம் என்னவே.
2
   
53.
பார்த்தெனது உலகு அடும் பரிதி யென் ஒடும்
போர்த் தொழில் புரிக எனப் பொங்கும் சீற்றத்தால்
வேர்த்து எனப் பனித்து வெள் எயிறு விள்ள நக்கு
ஆர்த்து எனவே தடித்து அசனி கான்றவே.
3
   
54.
சுந்தர வயிரவத் தோன்றன் மீ மிசைக்
கந்து அடு களிற்று உரி கவை இய காட்சி போல்
முந்து உறு சூல் முகில் முழுதும் முற்று உற
நந்தி அம் பெருவரை மீது நண்ணிய.
4
   
55.
வாரை கான்ற நித்திலம் என வாலிகண் மயங்கச்
சீரை கான்றிடு தந்திரி நரம்பு எனச் செறிந்த
தாரை கான்ற வோர் இரு துவின் எல்லையும் தண்பால்
வீரை கான்றிடு தன்மையதாம் என மேகம்.
5
   
56.
பூட்டு கார்முகம் தன்னொடும் தோன்றிய புயல்வாய்
ஊட்டு தண் புன நந்தி அம் கிரிமிசை உகுத்தல்
வேட்டுவக் குலத் திண்ணனார் மஞ்சனம் விமலற்
காட்டுகின்றது ஓர் தனிச் செயல் போன்று உளது அன்றே.
6
   
57.
கல் என் பேர் இசைப் புனல் மழை பொழிதலால் கானத்து
ஒல்லும் பேர் அழல் யாவையும் இமைப்பினில் ஒளித்த
வெல்லும் தீம் சலம் மருவு மிக்காருக்கு வியன்பார்
செல்லும் காலையில் அம் கண் வீற்று இருப்பரோ தீயோர்.
7
   
58.
தேக்கு தெண் திரைப் புணரி நீர் வெம்மையைச் சிந்தி
ஆக்கி வால் ஒளி உலகில் விட்டு ஏகலால் அடைந்தோர்
நீக்கம் அரும்வினை மாற்றி நல் நெறியிடைச் செலுத்திப்
போக்கின் மேயின தேசிகர்ப் பொருவின புயல்கள்.
8
   
59.
கழிந்த பற்று உடை வசிட்டன திருக்கையாக் கவிஞர்
மொழிந்த நந்தி அம் பெருவரை மொய்த்த சூல் முகில்கள்
பொழிந்த சீதநீர் பொற்பு உறு சாடியில் பொங்கி
வழிந்த பால் எனத் திசைதொறும் இழிந்தன மன்னோ.
9
   
60.
சீலமே தகு பகீரதன் வேண்டலும் சிவன்தன்
கோலவார் சடைக் கங்கை அம் புனலினைக் குன்றின்
மேலை நாள் விட வந்தென நந்தி வீழ் விரி நீர்
பாலி ஆறு எனும் பெயர் கொடு நடந்தது படிமேல்.
10
   
61.
வாலிது ஆகிய குணத்தினன் வசிட்டன் என்று உரைக்கும்
சீலமா முனி படைத்தது ஓர் தேனுவின் தீம் பால்
சால நீடியே தொல்லை நாள் படர்ந்திடு தன்மைப்
பாலி மா நதிப் பெருமையான் பகர்வதற்கு எளிதோ.
11
   
62.
எய்யும் வெம் சிலைப் புளிஞரை எயிற்றியர் தொகையைக்
கையரிக் கொடு வாரியே சிறுகுடி கலக்கித்
துய்ய சந்து அகில் பறித்து உடன் போந்தது தொல் நாள்
வெய்ய சூர்ப்படைவான் சிறை கவர்ந்து மீண்டது போல்.
12
   
63.
காக பந்தரில் கருமுகில் காளிமங் கஞலும்
மாக நீள் கரி யாவையும் குழுவொடும் வாரிப்
போகன் மேயின மேல்திசைப் புணரி உண்டு அமையா
மேக ராசிகள் குண கடல் மீது செல்வன போல்.
13
   
64.
குவட்டு மால் கரிக் குருகுதேர் அரிப்புலிக் குவை உண்டு
உவட்டி உவந்திடு திரைப் புனல் மதூக நல் உழிஞ்சில்
கவட்டின் ஓமை சாய்த்து ஆறலை கள்வர் ஊர் கலக்கித்
தெவிட்டி வந்தது பாலை உட்கொண்டிடு செருக்கால்.
14
   
65.
காலை வெம் பகல் கதிரவன் குடதிசைக் கரக்கும்
மாலை யாமம் வைகறை எலாம் செம்தழல்வடிவாய்
வேலையும் பருகிய எழும் வெம்மை போய் விளிந்து
பாலை காண்கிலா வாரியின் பெருமையார் பகர்வார்.
15
   
66.
குல்லை மாலதி கொன்றை காயா மலர்க் குருந்து
முல்லை சாடியே யான் நிரை முழுவதும் மலைத்து
மெல்ல மற்றவை நீந்தலும் கரைக் கண் விட்டு உளதால்
தொல்லை மா நதியான் வழித் தோன்றிய தொடர்பால்.
16
   
67.
சுளை உடைப் பல வாசினி பூகமாம் துடவை
உளை மலர்ச்சினை மருதமோடு ஒழிந்தன பிறவும்
களைதல் உற்று மாட்டு எறிந்தது கண் அகன் குடிஞை
அளவின் மிக்கு உறு பாணி பெற்று அதற்கு அவை                                      பெரிதோ.
17
   
68.
இலை விரித்து வெண் சோறு கால் கைதையும் எழுதும்
கலை விரித்திடும் பெண்ணையும் களைந்திடும் களை போய்
அலை விரித்திடும் கடல் புக ஒழுகுமாறு அனந்தன்
தலை விரித்து உழி உடன் எளித்து அன்னது ஓர்                                  தகைத்தால்.
18
   
69.
கொங்கு உலா மலர்க் கொன்றை கூவிளை குரவு உழிஞை
பொங்கு மாசுணம் தாதகி பாடலம் புன்னை
துங்கம் ஆர் திருத் தலை மிசைக் கொண்டு உறும்                                 தொடர்பால்
எங்கள் நாயகன் தன்னையும் ஒத்தது அவ் விரு நீர்.
19
   
70.
கொலை கொள்வேன் மறவீரர் தம் இருக்கையில் குறுகாச்
சிலையும் வாளொடு தண்டமும் திகிரி வான் படையும்
நிலவு சங்கமும் கொண்டு சென்று அடல் புரி நீரால்
உலகம் ஏழையும் முற்பகல் அயின்று மால் ஒக்கும்.
20
   
71.
தேன் குலாவிய மலர் மிசைப் பொலிதரு செயலால்
நான்கவாம் முகம் தொறு மறை இசையொடு நணுகிக்
கான் குலாவிய கலைமரை மான் திகழ் கவினால்
வான் குலாம் உலகு அளிப்பவன் நிகர்க் குமால்வாரி.
21
   
72.
மீது போந்திரி சங்கை விண்ணிடையின் மீன் ஓடும்
போதலாய் உற வீசலால் சலமிகும் புலனால்
தீதின் மாக்களைச் செறுத்தலால் அளித்திடும் செயலால்
காதி காதலன் நிகர்க்கும் மால் கன்னிமா நீத்தம்.
22
   
73.
தெழித்த மால் கரி இனம் கடம் எயிற்றினால் சிதையக்
கிழித்த பேர் இறால் சொரிந்த தேன் கிரிஉள எல்லாம்
கொழித்து வந்து உற அணை தரும் பாலியின் கொள்கை
சுழித்த நீர்க் கங்கை யமுனையைக் கலந்து எனத்
                                      தோன்றும்.
23
   
74.
சங்கம் ஆர்த்திட திரைஎழ நதிஉறும் தகைமை
அங்கம் வெம்பினை பனிக்கதிர் அல்லை நீ அழலோய்
இங்கு வாது இளைத்து ஏகுதி எனக் கரம் எடுத்தே
பொங்கும் வாய்விடா இரவியை விளிப்பது போலும்.
24
   
75.
வேதமே முதல் யாவையும் உணர்கினும் மேலாம்
ஆதி வானவன் கறை மிடற்று இறை என அறியாப்
பேதை மாக்கட முணர்வென அலைந்து பேர்கின்ற
சீத நீர் எலாம் தெளிதல் இன்று ஆயது சிறிதும்.
25
   
76.
செம் பொன் மால் வரை அல்லன கிரிகளும் திசையும்
உம்பர் வானமும் தரணியும் துளங்க வந்து உறலால்
எம்பிரான் முனம் வருக என நதிகளோடு எழுந்த
கம்பை மாநதி ஒத்தது கரை ஒரு பாலி.
26
   
77.
உதிருகின்ற சிற்றுண்டி கொண்டு ஒலிபுனல் சடைமேல்
மதுரை நாயகன் மண் சுமந்து இட்டமா நதியின்
முதிரு முத்தமிழ் விரகன் தேடு என மொய்ம் மீன்
எதிர் புகுந்திடப் போவது பாலி ஆம் ஆறு.
27
   
78.
மாசு அறத் துளங்கு துப்பு மரகதத்து இடை வந்து என்னப்
பாசடை நடுவண் பூத்த பங்கயத் தடாகம் யாவும்
தேசு உடைத் தரங்க நீத்தச் செலவினால் சிதைந்த
                                     மன்னோ
பேசிடில் சிறுமை எல்லாம் பெருமையால் அடங்கும்
                                      அன்றே.
28
   
79.
வளவயன் மருத வைப்பின் வாவி அம் கமலம் யாவும்
கிளையொடும் பறித்து வாரிக் கேழு உறப் பொலிந்த                                      தோற்றம்
விளை தரு பகையில் தோலா வெவ் அறழ் சிறுமை
                                     நோக்கிக்
களைதலைப் புரிந்து பற்றிப் பெயர்ந்து எனக் காட்டிற்று                                      அன்றே.
29
   
80.
திரை கடல் நீத்தம் கொள் மூ இனத்தொடு சேண்போய்                                       நோக்கித்
தரை இடை இழிந்து சென்று தன் பொருள் கொடு போந்து                                       என்னப்
பரதவர் அளவர் வாரிப்படுத்த மீனுப்பின் குப்பை
இருபுடை அலைத்து வௌவியேகிய தெறிநீர்ப் பாலி.
30
   
81.
பாரிடை இனைய பண்பில் படர்ந்திடு பாலி அந்தத்து
ஆருயிர் அனைத்தும் தந்த மருவினைக்கு அமைத்த நீரால்
சேர் உறு கதிகள் என்ன மரபினில் திறமே என்னத்
தாருவின் கிளைகள் என்னத் தனித்தனி பிரிந்தது அன்றே.
31
   
82.
கால் கிளர்கின்ற நீத்தம் கவிரிதழ்க் கலசக் கொங்கைச்
சேல்கிளர் கரிய உண்கண் திருநுதல் மிழற்று தீம் சொல்
மேல்கிளர் பரவை அல்குல் மெல்லியல் அறல் மென்
                                        கூந்தல்
மால் கிளர் கணிகை மாதர் மனம் எனப் போயிற்றாம்
                                          ஆல்.
32
   
83.
பாம்பளை புகுவதே போல் பாய்தரு பரவைத் தெண்ணீர்
தூம்பு இடை அணுகும் ஆற்றால் சொன் முறை தடைசெய்                                          வோரில்
தாம்புடை பெயரா வண்ணம் தலைத் தலை தள்ளு மள்ளர்
ஏம்பல் ஓடார்க்கு மோதை உலகெலாம் இறுக்கும் மாதோ.
33
   
84.
பணை ஒலி இரலை ஓதை பம்பையின் முழக்கம் அம்
                                           கண்
கிணை ஒலி மள்ளர் ஆர்ப்புக் கேழ்கிளர் தரங்க நன்னீர்
அணை ஒலி அவற்றை வானத்தார்ப் பொலிக் கவனி
                                         தானும்
இணை ஒலி காட்டிற்றோ என்று எண்ணுவார் விண்                                       உளோரும்.
34
   
85.
இயல்புகும் களி நல் யானை இனம் தெரிந்து எய்து
                                        மாபோல்
கயல் புகுந்து உலவும் சின்னீர்த் தடம்புகும் காமர் காவின்
அயல் புகும் கோட்டகத்தின் அகம்புகும் ஆர்வத்து ஓடி
வயல் புகும் களிப்பு நீங்கா மாக்களின் மயங்கு மாதோ.
35
   
86.
எங்கணும் நிறைந்து வேறோர் இடம் பிறிதின்மை யாகச்
சங்கமாய் ஈண்டு மள்ளர் தாங்கு பல்லியமும் ஆர்ப்பப்
பொங்கிய நகரம் தோறும் புறம் எலாம் வளைந்த நீத்தம்
அம் கண் மாஞாலம் சூழும் அளக்கரை நிகர்த்த தாமே.
36
   
87.
மாறடு மள்ளர் உய்ப்ப மருதத்தின் நிறைந்து விஞ்சி
ஏறிய நார மீட்டும் இரும் கடன் நோக்கிச் சென்ற
வேறு கொள் புலனை வென்றோர் மேலை நல்                                 நெறியுய்த்தாலும்
தேறிய உணர் விலாத ஓர் செல்வுழிச் செல்வர் அன்றே.
37
   
88.
வாள் எனச் சிலையது என்ன வால்வளையென்னத்
                                        தெய்வக்
கோள் எனப் பணிகள் என்னக் குலமணி குயிற்றிச் செய்த
மீளி வெம் சரங்கள் என்ன வேல் என மிடைந்து சுற்று
நாள் எனப் பிறழும் மீன் கண் அடவின நார மெங்கும்.
38
   
89.
மாண்டகு பொய்கை தோறும் வயல்தொறும் மற்றும்
                                       எல்லாம்
வேண்டிய அளவைத்து அன்றி மிகுபுனல் விலக்குகின்ற
ஆண்டகை மள்ளர் தம்பால் அமைந்திடும் காலை எஞ்சி
ஈண்டிய வெறுக்கை வீசும் இடைப்படு வள்ளல் ஒத்தார்.
39