திருநாட்டுப் படலம்
 
90.
அவ்வியல் பெற்றிடு மாற்றன் மள்ளர்கண்
மை வரும் கடல் உடை மங்கை தன் இடை
மெய் வளம் கொள்வதை வேண்டி அந்நிலச்
செவ்வி கண் ஆடியே இனைய செய்குவார்.
1
   
91.
சேட்டு இளம் திமில் உடைச் செம் கண் ஏற்றொடும்
கோட்டு உடைப் பகட்டு இனம் விரவிக் கோன்முறை
காட்டினர் நிரை பட உழுப காசினி
பூட்டு உறு பொலன் மணி ஆரம் போலவே.
2
   
92.
காற்றினும் மனத்தினும் கடுமை சான்றன
கோல் தொழில் வினைஞர் தம் குறிப்பில் செல்லுவ
ஏற்று இனம் சேறலும் இரிந்த சேல் இனம்
பாற்று இனம் மருள விண் படர்ந்து பாயும் ஆல்.
3
   
93.
சால் வளைதர உழும் வயலில் தங்கிய
வால் வளை இனம் வெரீ இ அலவன் மாப் பெடைச்
சூல் வளை புகுவது அங்கு அறிஞர் சூழ் விலைக்
கோல்வளை மகளிர் பால் கூட்டம் ஒத்ததே.
4
   
94.
உலத்தொடு முறழ் புயத்து உழவர் பொன்விளை
புலத்தினும் வியத்தகு வயலில் போக்கிய
வலத்திடைப் பிறழ் மணி வேள்வி ஆற்றிடும்
நிலத்து இடைப் பிறந்த மின் நிகர்க்கும் நீர்மைய.
5
   
95.
நாறு செய்குநர் சிலர் நார நீர் வயல்
ஊறு செய்குநர் சிலர் ஒத்த பான்மையில்
சேறு செய்குநர் சிலர் வித்திச் செல்லு நீர்க்
காறு செய்குநர் சிலர் அளப்பின் மள்ளரே.
6
   
96.
குச்சு எனப் பரிமிசைக் குலாய கொய் உளை
வைச்சு எனப் தளிர்த்து எழு நாற்றின் மா முடி
அச்சு எனப் பதித்தனர் கடைஞர் ஆவியா
நச்சுஇன மகளிரை நினைந்து நைந்து உளார்.
7
   
97.
வாக்கு உறு தேறலை வள்ள மீ மிசைத்
தேக்கினர் உழவர் தம் தெரிவை மாதரார்
நோக்கு உறும் ஆடியின் உனித்து நோக்கினர்
மேக்கு உறு காதலின் மிசை தன் மேயினார்.
8
   
98.
வாடுகின்றார் சிலர் மயங்கி நெஞ்சொடு
மூடுகின்றார் சிலர் உயிர்க்கின்றார் சிலர்
பாடுகின்றார் சிலர் பணிகின்றார் சிலர்
ஆடுகின்றார் சிலர் நறவம் ஆர்ந்துளார்.
9
   
99.
அந்தரப் புள்ளொடு மளி கடம் மொடும்
வந்து அடுத்து அவரொடு மயக்கும் தேறலை
இந்திரத் தெய்வம் இறைஞ்சி வாமம் ஆம்
தந்திரக் கிளைஞர் போல் தாமும் மேயினார்.
10
   
100.
விள் உறு நாணினர் விரகத் தீயினர்
உள்ளுறு உயிர்ப்பினர் உலையும் நெஞ்சினர்
தள் உறு தம் உணர் வின்றிச் சாம்பினார்
கள்ளினும் உளது கொல் கருத்து அழிப்பதே.
11
   
101.
பளிக்கு அறை அன்னதோர் படுகர்ப் பாங்கினும்
தளிர்ப்புறு செறுவினும் தவறு உற்று ஏகுவார்
தெளிப்பவர் இன்மையின் நெறியின் சென்றிலர்
களிப்பவர் தமக்கும் ஓர் கதி உண்டாகுமோ.
12
   
102.
இன்னன பற்பல இயற்றி ஈண்டினர்
உன்னரும் தொல்லையில் உணர்வு வந்துழிக்
கன்னநெடும் திரள் புயக் கணவர் ஏவலில்
துன்னினர் அவரொடும் துவன்றிச் சூழ்ந்து உளார்.
13
   
103.
மள்ளர் தம் வினைபுரி மழலைத் தீம் சொலார்
கள் உறு புது மணம் கமழும் வால் இதழ்
உள்ளுறு நறு விரை உயிர்த்து வீசிய
வெள்ளிய குமுத மென் மலரின் மேவுமே.
14
   
104.
நட்டது ஓர் குழுவினை நடாதது ஓர் குழு
ஒட்டலர் போல நின்று ஒறுத்தல் உன்னியே
அட்டனர் ஆம் என வடாத வான்களை
கட்டனர் வேற்றுமை உணரும் காட்சியார்.
15
   
105.
ஏயின செயல் எலாம் இயற்றி வேறு வேறு
ஆயிடை வேண்டுவ தமைய ஆற்றியே
மா இரும் புவி மிசை மகவைப் போற்றிடும்
தாய் என வளர்த்தனர் சாலி ஈட்டமே.
16
   
106.
மன் சுடர் கெழுமிய வயிர வான் கணை
மின் சுடர் தூணியின் மேல் கீழ் உறக்
தன் சுடர் பொலிதரக் செறித்த தன்மை போல்
பொன்சுடர் இளம் கதிர் புறத்துக் கான்றவே.
17
   
107.
பச்சு இளம் காம்பு உடைப் பணையின் மீ மிசை
வச்சிரத்து இயற்றும் ஓர் இலை கொள் வான்படை
உச்சிமேல் உற நிறீஇ ஒருங்கு செய்து எனக்
குச்சு உறு சாலி மென் கதிர் குலாவும் ஆல்.
18
   
108.
சுற்று உறு பஃறலை சுடிகை மாசுணம்
பெற்று உறு குழவிகள் பெயர்தல் இன்றியே
முற்றுறு நிவப்பொடு முறையின் நிற்றல் போல்
நெற்று உறு பசும் கதிர் நிமிர்தல் மிக்கவே.
19
   
109.
மை உறு கணிகையர் மகிழ்நர் வந்து உழிப்
பொய் உறும் அளியெனப் பயன் இல் புண்கதிர்
கை உறு உவகையால் பணியும் கற்பினோர்
மெய் உறு பரிவு என விளைந்து சாய்ந்தவே.
20
   
110.
மால் உறு பொன்னகர் மருவு மன்னர்க்குப்
பால் உறு தீம்பதம் பலவும் ஆர்த்தியே
மேல் உறு சாலியின் விளைவு நோக்கியே
கோலி நின்று அரிந்தனர் குழாம் கொண் மள்ளரே.
21
   
111.
அரிந்திடு சுமைகளால் அவனிப் பேர் உடல்
நெரிந்திடக் சேடனும் நெளிந்து நீங்கிடத்
தெரிந்திடும் போர்கள் சேண் அளவும் சேறலால்
விரிந்திடு கதிர் சுலா மேரு வாயவே.
22
   
112.
ஏற்றொடு பகட்டினம் இசைத்துப் போருரு
மாற்றினர் வலமுறை திரித்து வாழ்த்து ஒலி
சாற்றினர் பரன் ஒடு தமது தெய்வதம்
போற்றினர் மீ மிசை பொலிக என்று ஓதுவார்.
23
   
113.
தொங்கல் அம் பூ முடித் தொழுவர் போரினை
அங்கு உறப் படுத்து வை யகற்றி ஆக்கிய
பொங்கு அழிப் பதடிகள் புறத்து வீசியே
எங்கணும் நெற்குவை இயற்றுவார் அரோ.
24
   
114.
களப்படு கைவலோர் கால்களான் முகந்து
அளப்பு உறு நெல் குழாம் அவற்றுண் மன்னவற்கு
உளப்படு கடன் முறை உதவி மள்ளருக்கு
அளித்தனர் வேண்டியது அனைய நாட்டு உளோர்.
25
   
115.
சொல் குவை வழி படப் புகழில்தோன்றும் தம்
மின் குவை வேண்டுவதே வியெஞ்சிய
நெல் குவை குரம்பையின் நிரப்பு வித்தனர்
பொன் குவை அரிந்தனர் பொதிவித்து என்னவே.
26
   
116.
தலத்து இடை வேறு இடத்து ஒதுங்கும் தண்ணிய
குலத்து இடைப் பிறந்தவர் கூட்டமாம் என
நலத்து இடை வந்திடு முதிரை நல்வளம்
நிலத்து இடை ஒருசிறை விளையும் நீரவே.
27
   
117.
பிறப்பதும் வளர்வதும் பின்னர் மூப்பு வந்து
இறப்பதும் வைகலும் உலகில் ஏய்ந்து எனச்
சிறப்புடன் அடுவதும் பருவம் செய்வதும்
மறுப்பதும் தொகுப்பதும் உலப்பின்று ஆயவே.
28
   
118.
முழவு ஒலி விண்ணவர் முதல்வற்கு ஆக்கு உறும்
விழவு ஒலி கிணை ஒலி விரும்பும் மென் சிறார்
மழவு ஒலி கடைசியர் வள்ளைப் பாட்டு ஒலி
உழவு ஒலி அல்கலும் உலப்பு உறாதவே.
29
   
119.
கால் உற நிமிர்ந்திடும் காமர் சோலையும்
நீலமும் கமலமும் நிறைந்த பொய்கையும்
ஆலை அம் கழனியும் அநங்கற்கு ஆயுத
சாலைகள் இவை எனச் சாற்ற நின்றவே.
30
   
120.
நெறி இடை ஒழுகலா விழுதை நீரரை
மறலிதன் நகர் இடை வருத்தல் போலும் ஆல்
குறை படத் துணித்து அவண் குவை செய் கன்னலை
அறைபடு மாலைகள் இடையிட்டு ஆட்டலே.
31
   
121.
ஏறு காட்டிய திறல் இளைஞர் எந்திரம்
கூறு காட்டிய கழை அழுங்கக் கோறலும்
சாறு காட்டியது அரோ யாதும் தம் இடை
ஊறு காட்டினர்க்கு அலால் உலோபர் ஈவரோ.
32
   
122.
மட்டு உறு கழையினும் வலிதில் கொண்டபின்
இட்ட கொள் கலங்களில் இருந்த தீம்புனல்
தொட்டிடும் கடல் என தோன்றும் அன்னவை
அட்டதோர் புகை முகில் அளாவிற்று ஒக்குமே.
33
   
123.
கூடின தேன் இசை இளம்மென் கோகிலம்
பாடின மயில் சிறைப் பறை அடித்தன
வாடின வஞ்சிதம் தலை அசைத்திடா
நாடின பாதவம் புகழ்வ நாரையே.
34
   
124.
காசொடு நித்திலப் பொதியும் காட்டியே
பாசடை மாதுளை சினையில் பைம் குயில்
பேசிட நிற்பன பெறீஇயர் வம் என
வீசுதல் கருதியே விளித்தல் போன்றவே.
35
   
125.
சித்திரக் கதலி மா வருக்கைத் தீம் கனி
துய்த்திட வரும் பயன் உதவும் தோற்றத்தால்
உத்தம முதலிய குணத்தின் ஓங்கிய
முத் திறத்தவர் கொடை மொழிய நின்றவே.
36
   
126.
வீசு கால் பொர வசை விசும்பில் தாழைகள்
தேசு உலாம் பரிதி மெய் தீண்டும் செய்கைய
காசினி தன் கையால் கலைவெண் திங்கள் போல்
மாசு உறா வகை துடைத்திடுதல் மானுமே.
37
   
127.
வாச நீள் பொதும்பரின் மைந்தர் மாதர்கள்
காசு நூன் மேகலை பரியக் கைவளை
பூசல் இட்டு அலமரப் புணரும் செய்கை கண்
ஆசை மிக்கு அழுங்குவ பிரிந்த அன்றிலே.
38
   
128.
கான் உலா நந்தன வனமும் கார் என
வான் உலாம் தண்டலை மருங்கும் வைகலும்
வேனிலா அன்னவர் மகளிர் மேயினார்
ஊன் உலாங் குரம்பையுள் உயிர் உற்று என்னவே.
39
   
129.
அசும்பு உறும் அகன் புனல் அறாத சூழலின்
விசும்பு உற ஓச்சிய விரை மென்று ஆதினால்
பசும் பொனில் குயிற்றிய பதியில் தூபிகைத்
தசும்பு எலாம் வெள்ளியது ஆக்கும் தாழையே.
40
   
130.
உற்றிட அரிது அவண் உழவர் நீத்ததார்
சுற்றிடும் தாண் மிசை இடறும் சூல்வளை
தெற்றிடும் பூம் கொடி புடைக்கும் சேலினம்
எற்றிடும் தேம் பழம் இழுக்கும் தேன்களே.
41
   
131.
கான் நிமிர் கந்திகள் கான்ற பாளைமேல்
மீன் இனம் பாய்தலும் சிதறி வீழ் உறா
வானது ஓர் மருத வைப்பு அடையும் தன்மைய
வான் உறு தாரகை வழுக்கிற்று ஒக்குமால்.
42
   
132.
மாகுல வல்லியின் மஞ்ஞை ஆடல் போல்
கோகிலம் ஆர் தரும் குழாத்தின் ஊசல் மேல்
பாகுல இன் சொலார் பனிக்கும் மெல் இடைக்
காகுலம் பிறர் கொள மகிழ்வின் ஆடுவார்.
43
   
133.
ஊசல் உற்றவர் குழைக் குடைந்து இடுதலால் உவரை
வீசல் ஒப்பன வாடுதல் கிளிமொழி வெருவிப்
பேசல் ஒப்பன வீழ்ந்திலர் பிழைத்தது ஈது என்னா
ஏசல் ஒப்பன கோகிலப் பறவைகள் இசைத்தல்.
44
   
134.
கூர்ப்புக் கொண்ட கண் கொடிச்சியர் குளிர்புனம்
                                     காப்போர்
ஆர்ப்புக் கொண்டு கை விசைத்து எறி மணிக்கல் வந்து                                      அணையச்
சார்ப்புக் கொண்ட தம் சிறகரால் விலக்கிய தடத்துப்
பார்ப்புக் கொண்டு கொண்டு எழுவன தோல் அடிப்                                        பறவை.
45
   
135.
கடல் பருகிய முகில் பெய்யும் காட்சி போல்
அடல் பெரு மேதிகள் அனைத்தும் புக்கு உராய்த்
தடப் புனல் வறிது எனப் பருகித் தம்முலைக்
குடத்து இழி பாலினால் குறையைத் தீர்க்குமே.
46
   
136.
பாட்டியல் அளிமுரல் பதுமக் கோயிலில்
நாட்டிய நிமலன் முன் அந்தி நீர் இடை
மாட்டிய பல் பெரும் சுடரை மானுமால்
கோட்டு உயர் தடம் தொறும் குவளை பூத்தவே.
47
   
137.
கலன் இடைத் தருவதும் கானத்து உள்ளதும்
பொலன் உடைப் பொருப்பு இடை பொருளும் அல்லது
நலன் உடை நாட்டவர் நயத்தல் இன்றி அந்
நிலன் இடைப் பொருள் பகர் வழக்க நீத்ததே.
48
   
138.
யாழ்க்கையர் பொருநருக்கு இறைவர் ஏழ் இசை
வாழ்க்கையர் அளவையின் வகுத்த பாடலைக்
கேட்குநர் நன்று என மருப்புக் கிம்புரிப்
பூட்கைகள் உதவுவார் பொதுவில் தோறுமே.
49
   
139.
கஞ்சி தேய்ப்பு உண்டு அகில் கமழும் பூம்துகில்
வஞ்சி தேய்ப்பு உண்டன மருங்குலார் அடி
பஞ்சி தேய்ப்பு உண்டன பணியத் தாக்கலால்
குஞ்சி தேய்ப்பு உண்டன குமரர் கூட்டமே.
50
   
140.
அன்றில் அம் பெடைகளை அணுகி அன்னை கேள்
நன்று என வினையின் மேல் நடந்த நாயகர்
இன்று வந்திடுவர் இங்குஎம் பொருட்டினால்
ஒன்று நீ இரங்கல் என்று உரைக்கின்றார் சிலர்.
51
   
141.
ஆடியல் கரும் கணும் சிவப்பு உற்று அங்கமும்
வாடுவது ஆகியே மதன வேர் உறாக்
கூடிய மகளிரும் குமரர் தங்களை
ஊடிய மகளிரும் உலப்பு இன்று ஆயினார்.
52
   
142.
அகன் அமர் கணிகையர் அடிகள் சூடியே
முகன் உறு உவகையான் முயங்கி அன்னவர்
நகன் உறு குறி கொளீஇ நாளும் காமநூல்
தகைமை செய் காளையர் தொகுதி சான்றதே.
53
   
143.
வாளைகள் இகல் புரி வயலும் வாவியும்
பாளையொடு உற்பலம் பதுமம் நாறும் ஆல்
வேள் அயர் தடம்கணார் விரை மென் தாள் இணை
காளையர் குஞ்சியும் கரமும் நாறும் ஆல்.
54
   
144.
சேவகம் அணைவன கரிகள் சேனைகள்
காவகம் அணைவன கலைகள் புள்ளினம்
பூவகம் அணைவன பொறி வண்டு ஆயிடைப்
பாவகம் அணைவன பாடல் ஆடலே.
55
   
145.
ஆடக மா மதில் அம் பொன் கோபுரம்
நீடிய மண்டபம் நெறி கொள் ஆவணம்
பாடலொடு ஆடும் இடம் பிறவும் பாலிநன்
நாடு உள பதிதொறும் நண்ணி ஓங்குமே.
56
   
146.
தெண் திரை உலகினில் சீர் பெற்று ஓங்கிய
மண்டலம் எங்கணும் மதிக்க நின்றது ஓர்
தொண்டை நன்னாட்டு அணி சொல்லினாம் இனித்
தண் தமிழ் வள நகர்த் தன்மை கூறுவாம்.
57