பார்ப்பதிப் படலம்
 
375.
அன்னுழி உமையவள் அகத்து உளோர் செயல்
உன்னினள் துணுக்கம் உற்று ஒல்லை தான் எழீஇத்
தன் நிகர் இல்லவன் தாள் இறைஞ்சியே
முன் உற நின்று இவை மொழிதல் மேயினாள்.
1
   
376.
கற்பனை முதலிய கடந்த கண் நுதல்
தற்பர நினை இகழ் தக்கன் தன்னிடைப்
பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாது எனச்
சொல்படு நாம்மும் சுமந்து ளேனியான்.
2
   
377.
ஆங்கது ஓர் பெயரையும் அவன் கண் எய்தியே
ஓங்கி நான் வளர்ந்த இவுடலம் தன்னையும்
தாங்கினன் மேல் அவை தரித்தற்கு அஞ்சினேன்
நீங்குவன் அவ் வகை பணித்தி நீ என்றாள்.
3
   
378.
மன் உயிராகிய மரபு முற்றவும்
முன் உற அருளிய முதல்வி அன்பினால்
இன்னணம் இயம்பலும் இதனைத் தேர்ந்திடாத்
தன் நிகர் இல்லதோர் தலைவன் கூறுவான்.
4
   
379.
பத்திமை எம் வயில் பழுத்த பண்பினால்
சத்தியே நின் நிகர் சகத்தில் இல்லை நீ
இத்திறம் முயலுதல் எல்லை தீர்ந்த நின்
புத்திரர் வீடு உறு பொருட்டுப் போலும் ஆல்.
5
   
380.
நல் திறமே இது நங்கை சிந்தனை
முற்றிய வேண்டு மேல் மொழிதும் மேருவின்
சுற்றம் அது ஆகிய இமையத் தொல் வரைக்
கொற்றவன் புரிவனால் கொடிய மாதவம்.
6
   
381.
ஏதவன் பெறத்தவம் இயற்றும் என்றியேன்
மாதுனை மகண்மையா மரபில் போற்றியே
காதலொடு எமக்கு அருள் கருத்தது ஆகுமால்
ஆதலில் குழவியாய் அவன் கண் எய்து நீ.
7
   
382.
தளர்ந்து உடல் மெலிவுறத் தவம் செய் வெற்பினான்
இளம் சிறு குழவியாய் எய்தி மற்று அவன்
உளம் களி கூர ஆண்டு ஓரைந்து இன்துணை
வளர்ந்தனை புரிதிமேல் மாசு இல் மாதவம்.
8
   
383.
அணங்கு நீ நோற்றுழி அகிலத்து உள்ளது ஓர்
கணங்களும் தலைவரும் கணிப்பில் தேவரும்
இணங்கினர் சூழ் தரவு எய்தி நின்னையாம்
மணம் புரிந்தே கொடு வருது மீண்டு எனா.
9
   
384.
கடல் விடம் உண்டிடு கடவுள் இத்திறம்
நடைமுறை அருளலும் நன்று எனா மகிழ்ந்து
அடி இணை வணங்கி நின்று அன்பின் போற்றியே
விடையது பெற்றனள் விமலை யேகினாள்.
10
   
385.
அல்லலும் உவகையும் அன்பு எம்பிரான்
எல்லையில் அருளுமாய் ஈண்டி முன் செல
மெல்லியல் உமையவள் வெள்ளி வெற்பொரீஇ
வல்லையின் இமையமால் வரையில் போயினாள்.
11
   
386.
வள்ளியன் கடகரி வடிவின் வீழ்தரு
துள்ளி அம் பனி மழைச் சோனை சூழ்தலால்
எள்ளரும் தன்மை சேர் இமைய மால் வரை
வெள்ளியம் கிரியென விளங்கு கின்றதே.
12
   
387.
எண் தகு இமயமும் இமயம் மேல் உறு
கொண்டலும் ஒன்றியே குலவு காட்சிய
தெண் திரை மிசை எழு நஞ்சும் தீயநஞ்சு
உண்டிடு மணி மிடற்று இறையும் ஒக்கும் ஆல்.
13
   
388.
நீல் உறு மழைமுகில் நிலவு மின்னொடு
மேல் உற விளங்கிய இமைய வெற்பது
மால்வன் திருவொடு மருவிக் கண் துயில்
பால் உறு பன்னகப் பாயல் போன்றதே.
14
   
389.
கரும்புயல் ஆர்த்து உறு காட்சித்து ஆகியே
இரும்பனி இடை அறா இமையப் பொன் வரை
சுரும்பினம் இசையொடு துவன்றிச் சுற்றிட
அரும்பு அவிழாத வெண் கமலம் அன்னதே.
15
   
390.
நீடிய மண்மகள் நிதியின் குப்பையைப்
பாடு உறு தண் ணிலாப் படாம் அது ஒன்றினான்
மூடினள் வைத்திடு முறை அதே எனக்
கோடு உயர் பனிகொள் பொன் குன்றம் நின்றதே.
16
   
391.
பொன் நெடும் கிரிஎன வீண்டும் புங்கவர்
துன்னினர் சூழ்வர் என்று உன்னித் தொன் மனு
அன்னதை மறைத்தனன் இரதத்து ஆவியால்
என்னவும் நின்றதால் இமையப் பொன்வரை.
17
   
392.
குடகடல் குணகடல் கூடு உறாவகை
இடை ஒரு வாலி தாம் ஏனம் எய்தியே
தடை புரி சிறப்பு என இமையத் தாழ்வரை
நெடு நில அளவையும் நிமிர்ந்து போயதே.
18
   
393.
விண்ணவர் ததிக் கடல் கடைந்த வெண்ணெய் உள்
அண்ணல் அம் பாற் கடல் அமுதம் வைத்து எனக்
கண்ணகன் பெரும் பனி கவை இய வெற்பின்மேல்
உள் நிறை புனல் தடம் ஒன்று வைகிற்றே.
19
   
394.
அன்னது ஓர் தடத்து இடை அசலம் அன்னவன்
மன்னிய கௌரி தன் மகண்மை ஆகவும்
தன்னிகர் இலா வரன் தனக்கு நல்கவும்
முன் உற வரும் தவம் முயன்று வைகினான்.
20
   
395.
மெய்த்தவம் இயற்றிய வெற்பன் காணிய
அத்தட மலரும் ஓர் அரவிந்தத்தின் மேல்
பைத்தது ஓர் குழவியின் படிவத்து உற்றனள்
எத் திறத்து உயிரையும் ஈன்ற தொன்மையாள்.
21
   
396.
ஆங்கு அவள் கண்டு வெற்பன் அடியனேன்
                          பொருட்டால் அம்மை
நீங்கினள் போலும் முக்கண் நிருமலன் தன்னை என்னா
ஏங்கினன் தனது நோன்புக்கு இரங்கினன் இவைகள்
                                        ஈசன்
ஓங்கு பேர் அருளே என்னா உவகை அம் கடலுட்
                                     பட்டான்.
22
   
397.
கண் உறு போத வாரி கான்றிட உரோம ராசி
உள் நிகழ் அன்பு மிக்குப் புறந்தனில் ஒழுகிற்று என்ன
வண்ணன் மெய் பொடிப்பத் துள்ளி அடியனேன்
                            உய்ந்தேன் என்னாத்
துண் எனப் பாடி ஆடி அமலையைத் தொழுது நின்றான்.
23
   
398.
பங்கயத் தவிசின் வைகும் பராபரை தனைத்த னாது
செம்கையில் எடுத்து வல்லே சென்னி மேல் தாங்கி
                                        யேகித்
துங்க நல் இமையத்து அண்ணல் தொன்முறை இருக்கை
                                        புக்கு
மங்கல மேனை என்னும் மனைவி கைக் கொடுத்தான்
                                        மாதோ.
24
   
399.
கொடுத்தலும் தொழுது வாங்கிக் கொற்றவ இவணின்                                     பாங்கர்
அடுத்தது அங்கு எவனோ என்ன அரசனும் நிகழ்ந்த
                                    எல்லாம்
எடுத்து உரை செய்யக் கேளா ஈசனது அருளோ என்னா
வடுத் தவிர் கற்பின் மேனை மனம் உற மகிழ்ச்சி
                                    கொண்டாள்.
25
   
400.
சுரந்தன கொங்கை பாலும் துண் என ஒழுகிற்று எங்கும்
பரந்தன பொடிப்பின் போர்வைபரை தனது அருளே
                                       உள்ளம்
நிரந்தன கவலை யாவும் நீங்கின பவம் முன் உள்ள
கரந்தன இமையத்து அண்ணல் காதலி தனக்கு மாதோ.
26
   
401.
பரிபுரம் தண்டை அம்பொன் பாடகம் பாத சாலம்
விரவிய தொடியே சங்கு வியன் மணிச் சுட்டி ஆரம்
அரிகெழு மதாணி பொன்தோடு அங்கதம் பிறவும் சாத்தி
வரை உறழ் தனப் பால் ஆர்த்தி வரம் பெறு காப்பு
                                    நேர்ந்தாள்.
27
   
402.
வனைதரு பவளம் காலா வயிரமே மருங்கில் கோலாப்
புனை இரும் பலகை நீலாப் புரிந்த பொன் தொட்டின்
                                 மேலா
அனையவள் தன்னை உய்த்தும் அம்கையில் கொண்டும்
                                 தம் கோன்
மனம் மகிழ் திறனால் போற்றி மதி என வளர்க்கல்
                                 உற்றாள்.
28
   
403.
மன் உயிர் புவனம் ஏனை மற்று உள பொருளுக்கு
                                    எல்லாம்
அன்னையாய் உதவி நாளும் அவற்றினை வளர்த்து
                                    நிற்பாள்
தன்னையும் வளர்பார் உண்டோ வளர்ந்தது சழக்கே
                                    அந்தக்
கன்னிதன் அருளின் நீர்மை காட்டினள் போலும்
                                    அன்றே.
29
   
404.
இந்தவாறு இனையர் பாலா எம் பெருமாட்டி வைகி
ஐந்தி யாண்டு அகன்ற பின்றை அயன் முதல் தேவர்
                                    யார்க்கும்
தந்தையார் அருளை உன்னித் தவம் இனிப் புரிவன்
                                    என்னாச்
சிந்தியா இமையத்து ஓங்கல் செம்மலுக்கு உரைக்கல்
                                    உற்றாள்.
30
   
405.
நாற் பெரும் தடந்தோள் அண்ணல் நலத்தக வரைந்து                                 கொள்வான்
நோற்பன் ஆலினைய வெற்பின் உவலரும் ஒருசார்
                                வைப்பின்
ஏற்பது ஓர் கன்னி மாரோடு எனை விடுத்து அருண்மோ
                                என்னாப்
பார்ப்பதி இயம்பலோடும் பனி வரை அரசன் சொல்வான்.
31
   
406.
அன்னை கேள் எம்மின் நீங்கி அருந்தவம் ஆற்றற்கு
                                     ஒத்த
இன்னது ஓர் பருவம் அன்று ஆல் ஆண்டு ஓர் ஐந்தே
                                     சென்ற
நின் உடல் பொறாதால் ஈண்டு இந் நிலைமையத் தவிர்தி
                                     என்னக்
கன்னிகை நகைத்துக் கேண்மோ இஃது எனக் கழறல்
                                     உற்றாள்.
32
   
407.
ஈசனே காப்பன் அல்லால் யாரையும் பிறரால் தம்மால்
ஆசு அறப் போற்றல் ஆகாதது துணிவாகும் ஈண்டுப்
பேசிய திறனும் அன்னோன் பேர் அருள் மறாதி அன்ன
நேசமோடு இயைந்திட்டு அன்னை நினைந்த நோன்பு
                               இயற்றுக என்றான்.
33
   
408.
மன்னனும் இயைந்து பின்னர் மால் வரை ஒரு சார்
                                     தன்னில்
அன்ன மென் நடையினாளுக்கு அருந்தவச் சாலை
                                     ஆற்றித்
தன் உறு கிளைஞர் தம் பால் தவத்தினால் வந்த
                                     பான்மைக்
கன்னியர் பலரைக் கூவிக் கௌரிபால் ஆகச் செய்தான்.
34
   
409.
நீல் உறு மண் தோய் மேனி நிமலை அங்கு இமையத்து                                     உச்சி
மேல் உறும் அரசன் தேவி விடையினால் மடவார்
                                    பல்லோர்
பால் உறு பணியில் சூழப் பரமனை உன்னி அந்தச்
சாலையை அடைந்து மிக்க தவத்தினை இழைக்கல்
                                    உற்றாள்.
35
   
410.
தங்கிய வைகல் தோறும் தாதையும் தாவில் கற்பின்
மங்கையும் போற்றி யேக மாது நோற்று இருந்தாள்
                                     இப்பால்
அங்கு அவள் பிரிந்த பின்றை அரும் பெரும் கயிலை
                                     மேய
வெங்கடம் பெருமான் செய்த பரிசினை இயம்பல்
                                     உற்றேன்.
36