தவங் காண் படலம்
 
637.
தீது அறு முனிமைந்தர் செல்லலும் அது போழ்தின்
மாதவ நெறி நிற்கும் மலைமகள் தனி அன்பும்
காதலும் எனை ஓர்க்கும் காட்டுதல் அருள் ஆகிச்
சோதனைப் புரிவாரின் துண் என எழல் உற்றான்.
1
   
638.
செறி துவர் உடையாளன் சிகையினன் அணி நீற்றின்
குறியினன் ஒளிர் நூலன் குண்டிகை அசை கையன்
உறை பனி கதிர் போற்றும் ஓலையன் உயர் கோலன்
மறை பயில் முதியோர் போல் வடிவு இது கொடு
                                   போனான்.
2
   
639.
போயினன் இமையத்தில் புவனமொடு உயிர் நல்கும்
தாய் தளர் வொடு நோற்கும் சாலையின் இடைச் சாரத்
தூயவர் இவர் என்றே தோகையர் கடை காப்போர்
ஆயவர் பலர் வந்தே அடிதொழுது உரை செய்வார்.
3
   
640.
தளர் நடை முதியீர் இத்தட வரை இடை சேறல்
எளிது அல அடிகேள் வந்து எய்தியது எவன் என்ன
வள மலை அரசன் தன் மகள் புரி தவநாடற்கு
உளம் உடன் இவண் வந்தேன் உவகையின் உடன்
                                  என்றான்.
4
   
641.
என்றலும் இனிது என்றே இமையவள் இடை சில்லோர்
சென்றனர் கிழவோன் தன் செயலினை அறைகாலை
ஒன்றிய முதியோர் ஏல் உய்க்குதிர் இவண் என்ன
நின்றதொர் பெரியோனை நேரிழை முனம் உய்த்தார்.
5
   
642.
உய்த்தலும் இவர் எந்தைக்கு உறுபரிவினர் என்றே
பத்திமை படு பாலால் பார்ப்பதி தொழலோடும்
மெய்த்துணை யென நின்ற விசயை ஒர் தவிசி இட்டு
நித்தனை உறைவித்தாள் நிமலையும் அயல் நின்றாள்.
6
   
643.
அப்பொழுது உமை தன்னை ஆதரவொடு பாராச்
செப்புதல் அரிதாம் உன் திரு நலன் அழிவு எய்த
மெய்ப்படு தசை ஒல்க மிகுதவம் முயல்கின்றாய்
எப்பொருள் விழைவுற்றாய் எண்ணியது உரை என்றான்.
7
   
644.
முடிவிலான் இவை உரைத்தலும் விசயையை முகம்                                     நோக்கிக்
கொடியின் ஒல்கிய நுசுப்பு உடை உமையவள்
                                    குறிப்பாலே
கடிதின் ஈங்கு இவர்க்கு எதிர் மொழி ஈக எனக்
                                    கண்காட்ட
அடியனேற்கு இது பணித்தனள் என அறிந்து அவள்
                                    சொல்வாள்.
8
   
645.
மன் உயிர்க்கு உயிராகிய கண் நுதல் மணம் செய்து
தன் இடத்தினில் இருத்தினன் கொள்வதே தன் உன்னிக்
கன்னி மெய்த்தவம் இயற்றினள் என்று காதலி கூற
முன்னவர்க்கு முன் ஆனவன் நகைத்து இவை
                                 மொழிகின்றான்.
9
   
646.
புவி அளித்து அருள் முதல்வரும் நாடரும் புனிதன் தான்
இவள் தவத்தினுக்கு எய்துமோ எய்தினும் இனையாளை
அவன் விருப்பொடு வரையுமோ உமை அவள் அறியாமே
தவம் இயற்றினள் எளியனோ சங்கரன் தனக்கு அம்மா.
10
   
647.
அல்லல் பெற்றிட நோற்றிடு பகுதியால் ஆம்பால் ஒன்று
இல்லை இத்துணைப் பெறல் அரும் பொருள் இவட்கு
                                  எளிதாமோ
பல் பகல் தன தெழில் நலம் வறிது பட்டன அன்றோ
ஒல்லை இத்தவம் விடுவதே கடன் இனி உமைக்கு
                                  என்றான்.
11
   
648.
இந்த வாசகம் கேட்டலும் எம்பிராற்கு இவர் அன்பர்
அம் தண் மா முது குரவர் என்று உன்னினன்
                                   அறியேனால்
வந்து வெம்மொழி கூறுதல் எனச் சின மனம் கொண்டு
நொந்து உயிர்த்து நாண் நீக்கியே பொறாது உமை
                                  நுவல்கின்றாள்.
12
   
649.
முடிவிலாது உறை பகவன் என் வேட்கையை முடியாது
விடுவன் என்னினும் தவத்தினை விடுவனோ மிக இன்னம்
கடிய நோன்பினை அளப்பு இல செய்து உயிர் கழிப்பேன்
                                           நான்
நெடிது மூத்தலின் மயங்கினை பித்தனோ நீ என்றாள்.
13
   
650.
ஈட்டும் ஆர் உயிர்த் தொகை எலாம் அளித்தவள்
                                   இவை கூற
மீட்டும் ஓர் புணர்ப்பு உன்னியே மாது நீ வெஃகுற்ற
நாட்டம் மூன்று உடைப் பிஞ்ஞகன் வளத்தியல் நன்று
                                  ஆய்ந்து
கேட்டிலாய் கொலாம் உணர்த்துவன் அஃது எனக்
                                கிளக்கின்றான்.
14
   
651.
ஆடை தோல் விடை ஏறுவது அணிகலம் அர என்பு
கேடு இல் வெண் தலை மாலிகை கேழலின் மருப்பு
                                      இன்ன
ஓடு கொள்கலம் ஊண் பலி வெய்ய நஞ்சு உலப்பு
                                    உற்றோர்
காடு அதே நடம் புரி இடம் கண்ணுதல் கடவுட்கே.
15
   
652.
வேய்ந்து கொள்வது வெள் அருக்கு கறுகுநீர் வியன்                                   கொன்றை
பாந்தள் நொச்சியே மத்தம் என்று இனையன பல
                                  உண்டால்
சாந்தம் வெண் பொடி சூலம் மான் மழுத் துடி தழல்
                                  அம்கை
ஏந்து கின்றது பார் இடம் சூழ் படை இறை யோற்கே.
16
   
653.
அன்னை தாதை கேள் வடிவொடு குணங்களில்                                  அனையானுக்கு
இன்னவாகிய பல வளன் உண்டு அவை எவையும் தாம்
நின்ன வாகவோ தவம் புரிந்து எய்த்தனை நெடும்
                                  தொல்சீர்
மன்னன் மா மகட்கு இயைவதே இத்துணை வழக்கு
                                  என்றான்.
17
   
654.
புரங்கண் மூன்றினையும் அட்ட புங்கவன் இனைய கூற
வரம் கண் மேதகைய வெற்பின் மடமயில் கேட்டலோடும்
கரங்களால் செவிகள் பொத்திக் கண் நுதல் நாமம்
                                    போற்றி
இரங்கி வெம் சினத்தள் ஆகி இடர் உழந்து இனைய
                                    சொல்வாள்.
18
   
655.
கேட்டியால் அந்தணாள் கேடிலா எம்பிரான்தன்
மாட்டு ஒரு சிறிதும் அன்பு மனத்திடை நிகழ்ந்தது
                                   இல்லை
காட்டு உறு புள்ளின் சூழல் கவருவான் புதன் மேல்
                                   கொண்ட
வேட்டுவன் இயல் போல் மேலோன்வேட நீ கொண்ட
                                   தன்மை.
19
   
656.
நேசம் இலாது தக்கன் நிமலனை இழித்து நின்போல்
பேசிய திறனும் அன்னான் பெற்றதும் கேட்டிலாயோ
ஈசனை இங்ஙன் என் முன் இகழ்ந்தனை இந்நாள் காறும்
ஆசறு மறைகள் ஏதும் ஆய்ந்திலை போலும் அன்றே.
20
   
657.
முறைபடு சுருதி எல்லாம் மொழியினும் அதுவே சார்வா
உறுகிலர் ஆகிப் பொல்லா ஒழுக்கமே கொண்டு முக்கண்
இறைவனை இகழ்ந்து முத்தி எய்திடாது உழல முன்னாள்
மறையவர் பெற்ற சாபம் நின்னையும் மயக்குறாதோ.
21
   
658.
தாதையாய்த் தம்மை நல்கித் தம் தொழிற்கு உரியன்
                                         ஆகி
ஆதியாய்த் தங்கட்கு இன்றி அமைஉறாச் சிவனை நீங்கி
ஏதிலார் பக்கம் ஆகி இல் ஒழுக்கு இறந்தார் போலும்
வேதியர் முறையே செய்தாய் வெறுப்பது என் நின்னை
                                       யானே.
22
   
659.
ஆயினும் மறையோர் தம்மின் அருமறை முறையே வேடம்
தூயன தாங்கி எம் கோன் தொண்டு செய் வோரும்
                                     உண்டால்
நீ அவர் தன்மைத் தாயும் நித்தனை இகழ்ந்தாய் என்னில்
தீயவர் உனைப் போல் இல்லை அவுணர் தம் திறத்து    
                                  மாதோ.
23
   
660.
வேண்டுதல் வேண்டிடாமை இல்லதோர் விமலன் தன்மை
ஈண்டு நீ இகழ்ந்த எல்லாம் யாரையும் அளிக்கும் அன்பு
பூண்டிடு குறி காண் அற்றால் புகழ்ச்சியாம் அன்றி
                                    முக்கண்
ஆண்டகை இயற்கை எல்லாம் ஆர் கொலோ அறிய
                                     கிற்பார்.
24
   
661.
போதனே முதலாய் உள்ள புங்கவர் வழி பட்டு ஏத்த
வேதமில் இறைமை ஆற்றல் யாவையும் புரிந்த நாதன்
காதலும் வெறுப்பும் இன்றிக் கருணை செய்
                              நிலைமையேகாண்
பேதை நீ இகழ்ச்சியே போல் பேசிய தன்மை எல்லாம்.
25
   
662.
இம்முறை மறைகள் ஆதி இசைத்தன இனைய எல்லாம்
செம்மை கொள் உணர்வின் ஆன்றோர் தெளிகுவர்
                              இறையை எள்ளும்
வெம்மை கொள் குணத்தாய் நிற்கு விளம்ப ஒணா
                               விளம்பில் பாவம்
பொய்ம் மறை வேடத் தோடும் போதி நீ புறத்தில்
                                      என்றாள்.
26
   
663.
அறத்தினைப் புரிவாள் இவ்வாறு அறைதலும் அணங்கே                                      ஈங்கு உன்
திறத்தினில் ஆர்வம் செய்து சென்ற என் செயல் கேளாது
புறத்திடைப் போதி என்று புரைவதோ புகுந்த பான்மை
மறைச் சடங்கு இயற்றி நின்னை வரைந்திடற்கு ஆகும்
                                     என்றான்.
27
   
664.
வஞ்சக முதல்வன் சொற்ற வாசகம் இறைவி கேளா
அம் செவி பொத்தி ஆற்றாது அழுங்கி பதைப்ப விம்மி
எஞ்சலின் முதியோன் போகான் ஏகுவன் யானே என்னாப்
பஞ்சு அடி சேப்ப ஆண்டு ஓர் பாங்கரில் படர்தல்
                                       உற்றாள்.
28
   
665.
படர்ந்தனள் போதலோடும் பனிபடும் இமையம் வைகும்
மடந்தைதன் இயற்கை நோக்கி வரம்பு இலா அருள் மீது
                                           ஊர
அடைந்த தொல் பவனக் கோலம் அகன்று விடைமேல்
                                       கொண்டு
தொடர்ந்து பல் கணங்கள் போற்றத் தோன்றினன்
                            தொலைவு இலாதோன்.
29
   
666.
தொலைவு அறு பகவன் வான் மீத் தோன்றலும் துளங்கி                                       நாணி
மலை மகள் கண்டு பல்கால் வணங்கி அஞ்சலியால்
                                      போற்றி
அலகிலா உணர்வால் எட்டாவாதி நின் மாயை தேறேன்
புலன் இலாச் சிறியேன் நின்னை இகழ்ந்தவா பொறுத்தி
                                      என்றாள்.
30
   
667.
நல் தவ மடந்தை கேண்மோ நம்மிடத்து அன்பால் நீ
                                        முன்
சொற்றன யாவும் ஈண்டே துதித்தன போலக் கொண்டாம்
குற்றம் உண்டாயின் அன்றே பொறுப்பது கொடிய
                                     நோன்பால்
மற்று இனி வருந்தல் நாளை மணம் செய வருதும்
                                     என்றான்.
31
   
668.
சிறந்த நின் வதுவை முற்றச் செல்லுதும் என்று
                                   தொல்லோன்
மறைந்தனன் போதலோடும் மலை மகள் உள்ளம்
                                   தன்னில்
நிறைந்திடும் மகிழ்ச்சி கொண்டு நித்தனை நினைந்து
                                   போற்றி
உறைந்தனள் இதனை வேந்தற்கு உரைத்திடச் சிலவர்
                                   போனார்.
32
   
669.
அண்ணல் வந்து அருளிச் செய்கை அரசனுக்கு உரைத்த                                       லோடும்
உள் நிகழ் அயர்ச்சி நீங்கி ஒல்லை தன் இல்லினோடு
நண்ணினன் உமையைக் கொண்டு நலம் கொள் தன்
                              நகரத்து உய்த்தான்
கண் நுதல் இறைவன் அம் கண் செய்தன கழறல்
                                      உற்றேன்.
33