வரை புணை படலம்
 
690.
கண் நுதல் உமைதவம் கண்டு நின்னையாம்
மண்ணவர் புகழ் வகை மணத்தும் என்றதும்
விண் எழு முனிவரின் வினவி விட்டதும்
எண்ணினன் மகிழ்ந்தனன் இமையத்து அண்ணலே.
1
   
691.
கணி தம் இல் உயிர் எலாம் கலந்து மற்றவை
உணர்வு தொறும் இருந்தவற்கு ஒரு தன் கன்னியை
மணம் முறை புரிதிறம் மதித்துத் தேவர் தம்
பணி புரிதச்சனைப் பரிவொடு உன்னினான்.
2
   
692.
உன்னிய போதினில் உம்பர் கம்மியன்
மன்னவனெதிர் உற வந்து கைதொழுது
என்னை கொல் கருதினை யாது செய் பணி
அன்னதை மொழிக என அறைதல் மேயினான்.
3
   
693.
என்னை ஆள் கண் நுதல் இறைவற்கு யான் பெறும்
அன்னை ஆம் உமைதனை அளிப்பன் இவ்வரைக்
கன்னிமா நகரெலாம் கவின் சிறந்திடப்
பொன்னின் நாடு ஆம் எனப் புனைதியால் என்றான்.
4
   
694.
அப்பொழு தத்தினில் அடுக்கன் மேலையோன்
செப்பிய வாசகம் செவிக் கொண்டு உள்ளம் ஏன்
மெய்ப் பெரு மகிழ்ச்சியை மேவி அந்நகர்
ஒப்பனை செய்திட உன்னினார் அரோ.
5
   
695.
நீடுறு தருநிரை நிமிரும் கால்களாய்ப்
பாடு உறு கழிகளாய்ப் பரம்பும் பல்பணை
மூடு உற அதன் மிசை முகில்கள் எங்கணும்
பீடு உறு பந்தர் போல் பிறங்கும் வெற்பின்மேல்.
6
   
696.
மலை உறழ் கோபுரம் மன்றம் சூளிகை
நிலை கெழு செய்யதேர் நிழற்று மண்டபம்
பலவுடன் நறுமலர்ப் பந்தர் அன்னவை
தொலை அறும் ஆவணம் தோறும் நல்கினான்.
7
   
697.
நீக்கம் இல் கதலிகை நெடிய கேதனம்
மேக்கு உயர் காவணம் இசைத்தந் துள்ளிடை
ஆக்குறு கம்பல மணி செய்து ஆயிடைத்
தூக்கினன் கவரியும் சுடர் கொள் மாலையும்.
8
   
698.
குரகத முகம்புரை குலைகள் தூங்கிய
மரகத ஒளி படு வாழை பூகநல்
நிரை கெழு தன்மையின் நிறுவிப் பூந்துணர்
விரைகெழு தோரணம் விசும்பின் நாற்றினான்.
9
   
699.
ஒண் நிதி இயக்கர் கோன் உறையுள் ஆனதும்
விண்ணவர் தொழுதிட வீற்று இருந்திடும்
அண்ணல் தன் கோயிலும் ஆக வீதிகள்
எண் அரும் திரு உற எழில் படுத்தினான்.
10
   
700.
ஒரு புறத்தினை இனி உமைக்கு நல்குவோன்
இருபுறத்தினும் வரும் எண்ணில் தேவரும்
தரு புறப் பொருள் எலாம் சாரச் சாலைகள்
திரி புறத் திரிபுறச் செய்து அமைத்தனன்.
11
   
701.
ஆயிரப் பத்தென அறையும் யோசனை
போயது ஓர் அளவையில் புரிசை ஒன்றினைக்
கோயிலின் ஒரு புடை குயிற்றிக் கோபுரம்
வாயில்கள் நான்கினும் மரபின் நல்கினான்.
12
   
702.
அங்கு அதன் நடுவுற அகன் பரப்பினின்
மங்கல மணம் செய் வதுவைச் சாலையைச்
செம் கனகத்தினால் திகழச் செய்தனன்
கங்கையஞ் சடையினான் கயிலைக் கோயில் போல்.
13
   
703.
சாலையின் நிலத்து இடை சந்த மான் மதம்
மேல் உறு நாவி நீர் விரவிப் பூசியே
கோலம் என் மலர்கள் தூஉய் குறுகும் வானவர்க்
கேல் உறு பல தவிசி இருப்பச் செய்தனன்.
14
   
704.
வானவில் மணி முகில் வனச மாமலர்
நீள் நிறம் விரிதரு நெய்தல் சண்பகம்
ஏனைய நிறங்களால் எண்ணில் வேதிகை
ஆனவை புரிந்தனன் அயனும் நாணவே.
15
   
705.
கண்ணடி பூந்தொடை கவரி பஃறுகின்
மண்ணிய செழுமணி மாலை தூங்குறப்
பண்ணுறு வித்தனன் பரமன் பால் வரும்
விண்ணவர் விழிஎலாம் விருந்து கொள்ளவே.
16
   
706.
தேவரும் முனிவரும் திரு அனார்களும்
பாவையின் உயிர் உறு பண்பின் ஆக்கியே
மேவரு கவரி தார் வீணை ஏந்தியே
ஏவலர் தொழின் முறை இயற்ற நல்கினான்.
17
   
707.
பெண் இயலார் எனப் பிறங்கும் பாவைகள்
தண்ணுமை முதலிய தாக்கித் தண்டியல்
பண்ணொடு களி நடம் பயிலுவித்தனன்
விண்ணவர் அரம்பையர் யாரும் வெஃகவே.
18
   
708.
நெருங்கிய கிளிமயில் நேமி தண்புறாப்
பொருங்கரி அரி பரி பொருநர் வான் உளோர்
ஒருங்குடன் மணிகளால் ஓவியப் பட
அருங்கடி இருக்கையுள் அமர நல்கினான்.
19
   
709.
குறை தவிர் நிலைமையால் குயிற்றும் சாலையுள்
நிறைதரு மிந்திர நீலத்தால் ஒரு
திறல் அரி அணையினைச் சிறப்பில் செய்தனன்
இறைவனும் இறைவியும் இனிது மேவவே.
20
   
710.
குண்டமும் வேதிகை வகையும் கோது இல்சீர்
மண்டலம் ஆனதும் வகுத்து வேள்வி செய்
பண்டம தானதும் படுத்திப் பண்ணவர்
எண் தொகை மங்கலம் இருத்தினார் அரோ.
21
   
711.
கண் தெறு கதிர்மதிக் காந்தம் காஞ்சனம்
ஒண் துகிர் நித்திலம் ஒளிரும் வச்சிரம்
முண்டக வெயின்மணி முதல் வெறுக்கையால்
மண்டபம் எண்ணில மருங்கின் நல்கினான்.
22
   
712.
காவி கண் மலர்தரு கயங்கள் ஓர் பல
ஓவறு முற்பல ஓடை யோர்பல
பூ இயல் வாரிசப் பொய்கை யோர்பல
வாவிகள் ஓர் பல மருங்கில் ஆக்கினான்.
23
   
713.
பாசடை மரகதம் பளிங்கு வச்சிரம்
காசறு நன்மணி கனகம் அன்னதால்
தேசுறு நளிமலர் செறிந்த பூம் தடம்
வாசவன் கண்டுள மருளத் தந்தனன்.
24
   
714.
கற்பகம் சந்து அகில் கதலி பூகமே
பொற்புறு வருக்கைமாப் புன்னை ஆதிய
பற்பல மணிகளால் படுத்தி அன்னவை
நற்பயன் வழங்கவும் நல்கினான் அரோ.
25
   
715.
இன்னவாறு அளப்பில இமையவர்க்கு எலாம்
முன்னுறு கம்மியன் முன்னிச் செய்தலும்
பொன் இயல் இமகிரிப் புரத்து மேவிய
மன்னவன் கண்டவை மகிழ்ச்சி எய்தினான்.
26
   
716.
சீதரன் அயன் முதல் தேவர் மாத்தொகை
மாதவ முனிவரர் மடந்தை மாரொடு
காதலின் உமை மணம் காண வந்திடத்
தூதரை எங்கணும் தூண்டினான் அரோ.
27
   
717.
ஒற்றர்தம் உரை தெரிந்து உம்பர் யாவரும்
குற்றம் இல் முனிவரும் குன்ற வில்லினால்
பற்று அலர் புரம் அடு பரமற் போற்றியே
மற்றவன் தன்னொடு வருதும் என்றனர்.
28
   
718.
வெற்றிகொள் வயப்புலி மிசை உயர்த்திடும்
கொற்றவை யாமளை குழீஇய காளிகள்
சுற்று உறும் எழு நதி இமயத் தொல்கிரி
உற்றனர் தொழுதனர் உமை முன் நண்ணினார்.
29
   
719.
செந்திரு நாமகள் சீர் பெறும் சசி
பந்தம் இல் தாபத பன்னியாய் உளார்
அந்தம் இல் அணங்கினர் யாரும் அவ்வரை
வந்தனர் அவர் அவர் மகிழ்நர் ஏவலால்.
30
   
720.
பங்கய மிசைவரு பாவையே முதல்
நங்கையர் யாவரும் நல் தவத்தினால்
அங்கம் நொந்து உறை தரும் அம்மை தாள் தொழா
மங்கல வதுவையின் வனப்புச் செய்தனர்.
31
   
721.
நெறிதரு தவத்து உரு நீக்கிக் காமருக்
குறை உளதாகிய உமைதன் மெய்யினைக்
குறை தவிர் நிலைமையில் கோலம் செய்தனர்
இறைவனை வழிபடும் இயல்பினார் என.
32
   
722.
மேதகு பொலஞ் சுடர் மேரு மந்தரம்
ஆதிய வாகிய அலகில் சுற்றமும்
ஓதரும் கடல்களும் உரக வேந்தரும்
மாதிர யானையும் பிறவும் வந்தவே.
33
   
723.
ஈங்கு இது காலை தன்னில் இமகிரி புரக்கு மன்னன்
பாங்குறு தமர் களோடும் பரிவொடும் சென்று வெள்ளி
ஓங்கலில் நந்தி உய்ப்ப உயிர்க்கு உயிரான அண்ணல்
பூங்கழல் வணங்கி நின்று ஆங்கு இனையன புகலல்
                                      உற்றான்.
34
   
724.
ஆதியின் உலக எல்லாம் அளித்திடும் அன்னை தன்னைக்
காதலின் வதுவை செய்யக் கருதினை கணித நூலோர்
ஓது பங்குனியின் திங்கள் உத்தரம் இன்றே ஆகும்
ஈதுநன் முகூர்த்தம் எந்தாய் இமையமேல் வருதி என்றான்.
35
   
725.
அல் உறழ் கண்டத்து எந்தை அரசனை நோக்கி இன்னே
எல்லை இல் கணங்கள் சூழ இமையமேல் வருதும்
                                       முன்னம்
செல்லுதி என்ற லோடும் திருவடி வணங்கிப் போற்றி
வல்லையின் மீண்டு போய்த்தன் வளநகர் இருக்கை
                                      புக்கான்.
36