திருக்கல்யாணப் படலம்
 
755.
நால் தடம்புயக் கண்ணுதல் நந்தியம் பெருமான்
போற்றி முன் செல அமரரும் முனிவரும் புகழ
வேற்ற தும்புரு நாரதர் விஞ்சையர் யாரும்
பாற்றி யக்கமும் நீழலும் ஆம் எனப் பாட.
1
   
756.
சொன் மறைத் தொகை ஆகம முதலிய துதிப்பப்
பொன்மை பெற்றதன் கோ நகர் நீங்கியே பொன்தாள்
வன்மை பெற்ற குண்டோதரன் மொய்ம் பிடை வைத்துச்
சின்மயத் தனி மால் விடை ஏறினன் சிவனே.
2
   
757.
விடையின் மீமிசைத் தோன்றியே எம்பிரான் விளங்கப்
புடையின் வந்தவர் அல்லது திரு நகர்ப் புறத்துக்
கடையின் நின்றவர் யாவரும் கண்டு கண்களியா
அடையவே பணிந்து ஏத்தினர் அளக்கரின் ஆர்த்தார்.
3
   
758.
நந்தி மேல் கொண்டு நந்தி மே வுறுதலும் நந்தித்
தந்தி மாமுகத்து அவுணர் கோன் அலமரத் தடிந்தோன்
ஐந்து நூற்று எழுகோடி பூதப் படை அணுக
வந்து வந்தனை செய்து முன் போயினன் மாதோ.
4
   
759.
கதிரும் சோமனும் கவிகையும் சீகரம் காலும்
உததி அண்ணல் சாந்து ஆற்றியும் உம்பர்தம் கோமான்
புதிய கால் செயும் வட்டமும் எடுத்தனர் புடை போய்
முதிரும் ஆர்வமோடு அப்பணி புரிந்தனர் முறையால்.
5
   
760.
பேரி கொக்கரை சல்லிகை கரடிகை பீலி
சாரி கைத்துடி தண்ணுமை குடமுழாத் தடாரி
போரியல் படு காகளம் வயிர் முதல் புகலும்
சீரி யத்தொகை இயம்பினர் பார் இடத் திறலோர்.
6
   
761.
அத்தன் ஏவலால் உருத்திரர் குழுவும் மால் அயனும்
மெய்த் தவம் புரி முனிவரும் ஏனை விண்ணவரும்
மொய்த்த தேரொடு மான மாப்புள் இவை முதலாந்
தம் தம் ஊர்திமேல் கொண்டனர் செய் பணி தவாதோர்.
7
   
762.
தாழ்ந்து தன்பணி புரியுமத் தலைவரும் தவத்தால்
காழ்ந்த நெஞ்சுடைப் பூதரும் ஏனைய கணமும்
சூழ்ந்து சென்றிடக் கயிலையை அகன்று தொல் உலகம்
வாழ்ந்திடும் படி ஏகினன் இமையமால் வரைமேல்.
8
   
763.
வார்ப் பெரும் பணை ஆதிய வரம்பு இல் பல் இயத்தின்
ஆர்ப்பும் எங்கணும் வெள்ளிடை இன்றியே அகல்வான்
தூர்ப்பின் ஈண்டிய தானையின் ஓதையும் சுரர்கள்
ஆர்ப்பும் வாழ்த்து ஒலி அரவமும் புணரி உண்டு
                                      எழுமால்.
9
   
764.
அனைய தன்மையில் ஆதியம் பண்ணவன்
பனி கொள் வெற்பில் படர அம் மன்னவன்
இனிய கேள் ஒடு எதிர் கொடு தாழ்ந்து தன்
புனித மா நகரில் கொடு போயினான்.
10
   
765.
போத லோடும் புனிதன் வரத்தினைக்
காதலால் கண்டு கண் களிப்பு ஆகியே
ஆதம் எய்தி நின்று அஞ்சலித்து ஏத்தியே
வீதி யாவும் விழா அயர்ந் திட்டவே.
11
   
766.
மிண்டி நின்றிடும் வீதியின் மாதரார்
அண்டர் நாயகன் அற்புதப் பேர் உருக்
கண்டு தாழ்ந்து கரை தவிர் காதலாம்
தெண் திரைப் படிந்தார் செயல் வேறு இலார்.
12
   
767.
நிறைத்த பூண்களும் நேர்ந்த பொன் ஆடையும்
நறைத்த சாந்தமும் நாண் மலர்க் கண்ணியும்
பிறைத் திருச்சடைப் பிஞ்ஞகன் பேர் எழில்
மறைத்தன என்று மனம் தளர்வார் சிலர்.
13
   
768.
உய்யு மாறு என் உவர் தமைக் காண்டலும்
வெய்ய காமக் கனல் சுடவே உறும்
தையலார்கள் தனு உறு நீறு கொல்
ஐயர் ஆகத் தணிந்தது என்பார் சிலர்.
14
   
769.
எழாலை அன்ன சொல் ஏந்திழை மாதரார்
குழாம் அகன்று குழகனைச் சேர்தலும்
கழாலுகின்ற பல் காழ் உடை மேகலை
விழாது இறைஞ்சினர் மெல் இயலார் சிலர்.
15
   
770.
அல்லி சேர் தரும் அம்புயம் மீ மிசை
வல்லி அன்னவர் வான் துகில் சோர் உறா
மெல்ல வீழ்தலும் மின்னிடையார்க்கு எலாம்
இல்லையோ புனை என்று உரைப்பார் சிலர்.
16
   
771.
வாசம் வீழ்தலும் வந்து வந்து இல்லிடைத்
தூசு உடுத்திலம் என்று ஒர் துகில் புனைந்து
ஆசையோடு சென்று அன்னதும் வீட்டியே
ஊசல் போன்றனர் ஒண் தொடிமார் சிலர்.
17
   
772.
மாண்ட சாயல் மடந்தையர் ஏதனை
வேண்டி மால் கொடு வீடு உறும் வேலையில்
ஈண்டு போற்றுக எனவும் ஒண்ணாததோ
ஆண்ட கைக்கு இயல் ஆகும் என்பார் சிலர்.
18
   
773.
கரும்பு நேர் மொழிக் காரிகை மாதரார்
விரும்பி வேண்டவும் ஏவலர் போலுமால்
அரும் பொன் மேனி எம் அண்ணலுக்கு உள்ளமும்
இரும்பு கொல் என்று இயம்பிடுவார் சிலர்.
19
   
774.
நெருக்கு பூண்முலை நேரிழை யார்க்கும் மால்
பெருக்கினார் அவர் பேதுறலர் ஓர்கிலார்
உரைப்பது என் கொல் உயிர்க்கு உயிராகியே
இருக்கும் இங்கு இவர் என்று உரைப் பார் சிலர்.
20
   
775.
திருகுவார் சடைச் செய்யனை நோக்கி நின்று
உருகுவார் சிலர் உள்ளுற வெம்பியே
கருகுவார் சிலர் காதலி மா ரொடும்
பெருகு காதலைப் பேசுகின்றார் சிலர்.
21
   
776.
வேறு உளார் மெய் விளர்ப்பினை நோக்கியே
ஈறு இலாரை இவர் அணைந்தார் கொலோ
நீறு மெய்யின் நிலவியது என்று அவர்ச்
சீறியே இகல் செய்திடுவார் சிலர்.
22
   
777.
கட்டு செஞ் சடைக் கான்மிசை ஊர்தர
விட்ட வெண்மதி மெல் இயலார் தமைச்
சுட்டது அம்ம சுமப்பது என் நீர் எனாக்
கிட்டி நின்று கிளத்திடுவார் சிலர்.
23
   
778.
கஞ்சம் மேல் அயன் ஆதிக் கடவுளர்
தஞ்சம் என்று சரண் புக உண்டது ஓர்
நஞ்சின் வெய்ய கொல் நங்கையர் கொங்கை மேல்
துஞ்சு கின்ற துயிலது என்பார் சிலர்.
24
   
779.
பின்னர் உள்ள பொருந்தொழில் ஆற்றுவான்
துன்னுவீர் எனில் தொல் குழு ஆடவர்
நன் நலத்தொடு நண்ணமின் னாரையே
இன்னல் செய்வது என் என்று உரைப்பார் சிலர்.
25
   
780.
சாற்றி இங்கு இனி ஆவது என் தையல் மீர்
ஏற்றின் மேவினர் எம்மை மணந்திட
மாற்றிலாத மலைமகள் போல யாம்
நோற்றிலேம் என நொந்து உயிர்ப்பார் சிலர்.
26
   
781.
தேவர் உய்யத் திருமணம் செய்திட
மேவு கின்றவர் மெல்லியல் மங்கையர்
ஆவி கொள்ள அமைந்தனர் இத்திறம்
ஏவர் செய்வர் என உரைப்பார் சிலர்.
27
   
782.
மையல் வேழம் வயப்புலி போல் வரும்
வெய்யர் தம்மை மெலிவிப்பது அன்றியே
நெய்ய மான் புரை நோக்கியர்க்கும் துயர்
செய்யுமோ எனச் செப்புகின்றார் சிலர்.
28
   
783.
நங்கள் கொற்றவன் நல்தவத்தால் பெறு
மங்கை பாலின் மணப் பொருட்டு ஏகினர்
இங்கு எமக்கு இனிமை இத்திறம் செய்கலார்
சங்கரர்க்குத் தகாது இது என்பார் சிலர்.
29
   
784.
பேதை நீர் அவர் பேர் இளம் பெண்மையோர்
ஆதி அந்தத்து அணங்கினர் இன்னணம்
வீதி தோறும் விரவியத் தார் உக
மாதராரினும் மாதர் பெற்றார் அரோ.
30
   
785.
பண்டை வேதன் பதத்தினும் பேர் எழில்
கொண்டு நின்றவக் கோ நகர் வீதியின்
அண்டம் வெஃக அணி படுத்திட்டு அவை
கண்டு போந்தனன் கண்ணுதல் அண்ணலே.
31
   
786.
செய்ய தான செழும் கமல ஆசனத்து
தையல் காமுறத் தக்கன வீதிகள்
பைய நீங்கிப் பராபரை ஆகிய
ஐயை கோயில் அணித்து என நண்ணினான்.
32
   
787.
வேந்தன் ஏவலின் வேதங்கள் இன்று காறு
ஆய்ந்து நாடற்கு அரிய எம் அண்ணல் முன்
பூம் தடம் புனல் பூரித்த பல் குடம்
ஏந்தி வந்தனர் மாதவர் எண்ணிலார்.
33
   
788.
இருவகைப் படும் எண் வகை மங்கலப்
பொருண்மை முற்றவும் பூவையர் பல பல
வரிசையில் கொடு வந்து எதிர் எய்தினார்
அரியற்கு அரிது ஆகிய அண்ணல் முன்.
34
   
789.
அறுகு நிம்பம் அடிசில் அரிசனம்
சிறுகும் ஐயவி செம்பஞ்சின் வித்து இவை
குறுகு தண்புனல் கொள்கலம் ஏந்தியே
மறு கில் வந்தனர் மங்கையர் எண்ணிலார்.
35
   
790.
நெருக்கு பூண்முலை நேரிழையார் அவர்
பொருக்கு எனா எதிர் போந்து உயிர் யாவினும்
இருக்கும் ஆதி இறைவனை ஏத்தியே
தருக்கொடே நின்று தம் தொழில் ஆற்றினார்.
36
   
791.
எங்கள் நாதன் எதிர் உற எண் இலா
மங்கை மார் சுடர் மன்னிய தட்டைகள்
செம் கையில் கொடு சென்று வலன் வளைஇ
அம்கண் மும்முறை அன்பொடு சுற்றினார்.
37
   
792.
ஆன காலை அருமணச் சாலை முன்
ஞான நாயகன் நட்பொடு நண்ணியே
வான் உலாய மழ விடை நீங்கினான்
யான மீதின் இன்றி யாரும் இழிந்திட.
38
   
793.
விடையிழிந்து உழி மேனை விண் நாட்டவர்
மட மின்னாரொடு வந்து பராபரன்
அடிகண் மீதினில் ஆன் பொழி பால் கொடு
கடிதின் ஆட்டினள் கை தொழுது ஏகினாள்.
39
   
794.
நாதன் அவ்வழி நந்திகள் உய்த்திடும்
பாதுகைக் கண் பதமலர் சேர்த்தியே
போதன் மாதவன் பொற்கரம் தந்திடக்
கோது இல் மா மணக் கோயில் உள் எய்தினான்.
40
   
795.
பல்லியம் இயம்ப வானோர் பரவ விஞ்சையர்கள் பாட
ஒல் எனக் கணங்கள் ஆர்ப்ப உருத்திரர் யாரும் சூழ
மெல் எனச் செல்லும் அண்ணல் விரிஞ்சனும் மாலும்
                                   வேண்ட
மல்லல் அம் கோயில் உள்ள வனப்பு எலாம் நோக்கல்
                                   உற்றான்.
41
   
796.
உலா உறு சுரும்பு மூசா ஒண் மலர்ச் சோலை வாவி
நிலா உறழ் புனல்சேர் ஓடை நெடுந்தடம் நிறம் வேறு
                                   ஆகிக்
குலாவு மண்டபங்கள் இன்ன கொண்டியல் வனப்புக்
                                   காட்டிச்
சிலாதனன் மதலை கூறச் சென்று சென்று இறைவன்
                                   கண்டான்.
42
   
797.
கண்டலும் தம் போல் தங்கள் காமர் விண் நகரம் தானும்
மண்டல வரைப்பின் வந்து வைகியதாம் கொல் என்னா
அண்டர்கள் வாவி கேணி அகன்புனல் குடைந்தும் காமர்
தண்டலை ஆடல் செய்தும் தலைத் தலை திரி தந்துற்றார்.
43
   
798.
நந்தி அம் தேவு காட்ட நல் வனப்பு அனைத்தும்
                                      நோக்கிக்
கந்த மென் போது வேய்ந்த கடி மணச் சாலை தன்னில்
இந்திர நீலத்து இட்ட எழில் நலத் தவிசின் உம்பர்
வந்து வீற்று இருந்தான் எல்லா மறை கட்கும் மறையாய்
                                      நின்றான்.
44
   
799.
வீற்று இருந்து அருளும் எல்லை வீரபத்திரன் தீப்
                                    பேரோன்
ஆற்றல் கொள் கூர்மாண்டேசன் ஆடகன் ஐயன் ஏனோர்
போற்றிசெய் அயனே மாலே புரந்தரன் முனிவர் தேவர்
ஏற்றிடு தவிசு தோறும் இருந்தனர் இறைவற் சூழ.
45
   
800.
அமையப் படும் அப் பொழுதத்தினில் ஆதி அண்ணல்
விமலத் திருமாமணம் காணுற மேலை அண்டச்
சுமை உற்றிடும் எப்புவனத்தரும் தொக்க நீரால்
இமையச் சயிலம் துளங்கு உற்றது இடுக்கண் எய்தி.
46
   
801.
பொன் பால் இமையம் துளங்கு உற்றுழிப் போற்று சேடன்
தன்பால் அவனி எனலாம் துலைத் தட்டு இரண்டின்
வன் பாலது ஆன வடபால் அது தாழ மற்றைத்
தென் பாலது ஆற்ற உயர்ந்திட்டது தேவர் உட்க.
47
   
802.
ஓங்கு உற்றது தென் புவி ஆதலும் உம்பர் எல்லாம்
ஏங்கு உற்றனர் மண் உலகோர்கள் இடுக்கண் உற்றுத்
தீங்கு உற்றனவோ எமக்கு என்று தியக்கம் உற்றார்
பாங்கு உற்றிடும் தொன் முனிவோரும் பரியல் உற்றார்.
48
   
803.
இன்னோர் எவரும் சிவனே என்று இரங்கல் லோடும்
முன்னோனும் அன்ன செயல் கண்டு முறுவல் எய்தி
அன்னோர் குறை நீத்திட நந்தியை நோக்கி ஆழி
தன் ஓர் கரத்தில் செறித்தானைத் தருதி என்றான்.
49
   
804.
என்றான் அது காலையில் நந்தி இறைஞ்சி யேகிக்
குன்றாத கும்ப முனிவன் தனைக் கூவ அங்கண்
சென்றான் அவனைக் கொடுபோய்ச்சிவன் முன்னர் உய்ப்ப
மன்றார் கழல்கள் பணிந்தான் மலயத்து வள்ளல்.
50
   
805.
தாழும் தவத்தோன் தனைக் கண் நுதல் சாமி நோக்கித்
தாழும் குறியோய் இவண் யாவரும் சார்தலாலே
தாழும் புவி தக்கிணம் உத்தரம் சால ஓங்கத்
தாழும் சுவர்க்க நிலனும் நனி தாழும் அன்றே.
51
   
806.
தெருமந்து உழலும் தரை மன்னுயிர் செய்த தொல்லைக்
கருமம் தனை விட்டு அயர்வு எய்திக் கலங்குகின்ற
பெரு மந்தரமே முதல் ஆய பிறங்கல் யாவும்
அருமந்த மேரு வரையும் தவறாகும் அம்மா.
52
   
807.
ஆனான் முனிகேள் ஒரு நீ இவ் வசலம் நீங்கித்
தேன் ஆர் மருத வளம் மேய தென்னாடு நண்ணி
வான் ஆர் பொதிய மலை மேவுதி வையம் எல்லாம்
மேல் நாள் எனவே நிகர் ஆகி விளங்கும் என்றான்.
53
   
808.
பிறை ஒன்று வேணிப் பரன் இங்கு இது பேசலோடும்
அறை ஒன்று தீம் சொல் தமிழ் மா முனி அச்சம் எய்திக்
குறை ஒன்று யான் செய்து உளனோ கொடியேனை
                                        ஈண்டே
உறை என்றிலை சேண் இடைச் செல்ல உரைத்தி எந்தாய்.
54
   
809.
என்னக் குறிய முனிவன் தனை எந்தை நோக்கி
உன்னைப் பொருவும் முனிவோர் உலகத்தில் உண்டோ
அன்னத் தவனும் உனை நேர்கிலன் ஆதலால் நீ
முன்னிற் றெவையும் தவறு இன்றி முடித்தி மன்னோ.
55
   
810.
வேறு உற்றிடு தொன்முனிவோர்களின் விண் உளோரின்
ஈறு உற்றிடுமோ இது செய்கை எவர்க்கும் மேலாம்
பேறு உற்ற நின்னால் முடிவு ஆகும் பெயருக என்று
கூறுற்றிடலும் முனி ஈது குறித்து உரைப்பான்.
56
   
811.
வான் செய்த மேனி நெடு மான் மகவேள்வி மன்னன்
தேன் செய்த கஞ்சத் தயனில் கவிச் செய்கை தீயேன்
தான் செய்திடவே பணித்திட்டனை தன்மை ஈதேல்
நான் செய்ததுவே தவம் போலும் நலத்தது எந்தாய்.
57
   
812.
ஈங்கு இப்பணியை அளித்தாய் எனில் எந்தை உன்றன்
பாங்கு உற்ற புத்தேள் மணக் காட்சி பணிந்திடாமல்
நீங்கற்கு அரிதாம் கவல் கின்றது என் நெஞ்சம் என்ன
ஓங்கல் கயிலைத் தனி நாயகன் ஓதல் உற்றான்.
58
   
813.
சிந்தையது அமுங்கல் இன்றித் தென் மலைச் சேறி
                                       அங்கண்
வந்து நம் வதுவைக் காட்சி வழங்குதும் மகிழ்ந்து காண்டி
நம் தமை உன்னி ஆங்கே நாள் சில இருத்தி பின்னர்
முந்தையில் எமது பாங்கர் வருதியால் முனிவ என்றான்.
59
   
814.
என்று இவை அமலன் செப்ப இசை தரு புலத்தன் ஆகி
மன்று அமர் கழல்கள் தம்மைப் பன் முறை வணக்கம்
                                         செய்து
நின்று கைதொழுது போற்றி நெடிது உயிர்த்து அரிதின்
                                         நீங்கித்
தென் திசை எல்லை நோக்கிச் சிறு முனி கடிது போனான்.
60
   
815.
கிற்புறு மாயை வல்ல கிரவுஞ்ச வரையும் விந்த
வெற்பதும் வன்மை சிந்த வில்வலனோடு வாதாவி
கற்பனை அகன்று மாயக் காவிரி நீத்தத்தோடு
முற்பகல் படர்ந்தது என்ன முனிவரன் தென் பால்
                                  போனான்.
61
   
816.
மறைபுகல் வேள்வி ஆற்றும் மாவலி வலிகொள் காட்சிக்கு
உறியவன் துணையாய் மற்றோர் குறளும் உண்டு ஆம்
                                   கொல்என்னா
நெறி எதிர் அவுணர் தம் உள் ஒருசிலர் நில்லாது ஓடச்
சிறு முனி வானம் நீந்திச் சிமையமா மலயம் புக்கான்.
62
   
817.
முண்டகன் வலி கொண்டு உற்ற மூ எயில் அழிப்பான்                                       முன்னி
அண்டரும் புவனம் முற்றும் ஆகிய கொடிஞ்சி மான்தேர்
பண்டு ஒரு பதத்தால் ஊன்றிப் பாதலத்து இட்ட
                                    அண்ணல்
கொண்ட தொல் உருவம் உன்னி குறு முனி அங்கண்
                                     உற்றான்.
63
   
818.
பொதியம் அது என்னும் வெற்பில் புனித மா முனிவன்                                       வைகத்
துதி உறு வடபால் தென்பால் புவனியோர் துலைபோல்
                                        ஒப்ப
அது பொழுது உயிர்கள் ஆனோர் அணங்கு ஒரீஇ
                                 அரனை ஏத்தி
மதி மகிழ்ந்து அமர்ந்தார் தொல்லை வதுவையின் செய்கை
                                    சொல்வாம்.
64
   
819.
கதும் என மலயம் தன்னில் கட முனி சேறல் ஓடு
முதுமை கொள் இமையம் புக்க முனிவரும் சுரரும்
                                   தேர்ந்து
மதி மலி சடை எம் அண்ணல் வரம்பு இல் பேர்
                        அருளும் அன்னோன்
பத முறை வழி பட்டோர் தம் பான்மையும் பரவல்
                                    உற்றார்.
65
   
820.
அங்கு அது பொழுது தன்னில் அரசனது இசைவால்
                                      எங்கள்
சங்கரிஐயை காப்பச் சசி என்பாள் அடைப்பை ஏந்தக்
கங்கைகள் கவரி வீசக் காளிகள் கவிகை பற்றப்
பங்கய மான்கை பற்றிப் பாரதி பரவ வந்தாள்.
66
   
821.
வந்திடும் உலகை ஈன்றாள் வதுவையஞ் சாலை நண்ணி
அந்தம் ஓடு ஆதி இல்லான் அடிகளை வணங்க
                                   முன்னோன்
முந்து உறு தவிசின் தன்பாற் முற்றிழை இருத்தி என்ன
இந்திரை முதலோர் யாரும் ஏத்திட இருந்தாள் அன்றே.
67
   
822.
இருந்திடும் எல்லை தன்னில் ஏலவார் குழலி என்னும்
கரும் தடம் கண்ணினாளைக் கண் நுதல் பராபற்கு
விரைந்து அருள் செய்ய உன்னி வேந்தனது இசைவான்
                                       மேனை
பெரும் தடம் புனலும் சந்து மலர்களும் பிறவும் தந்தாள்.
68
   
823.
தருதலும் இமையத்து அண்ணல் தாழ்ந்தனன் இருந்து
                                       தேவி
சிரக நீர் விடுப்ப ஆதி திருவடி விளக்கிச் சாந்தம்
விரை மலர் புனைந்து நின்ற வியன் கடன் பலவும் செய்து
பெரு வரு மகிழ்ச்சியோடு பூசனை புரிந்தான் மாதோ.
69
   
824.
பூசனை புரிந்த பின்னர்ப் புவனம் ஈன்றாடன் கையைப்
பாசம் அது அகன்ற தொல்சீர்ப் பரஞ்சுடர் கரத்துள்
                                   வைத்து
நேச மோடு அளித்தேன் என்னா நெடு மறை மனுக்கள்
                                   கூறி
வாச நல் உதகம் உய்த்தான் மருகன் என்று அவனை
                                   உன்னி.
70
   
825.
எங்கு உள பொருளும் கோளும் ஈதலும் தானே ஆகும்
சங்கரன் உலகம் எல்லாம் தந்திடும் கன்னி தன்னை
மங்கல முறையால் கொண்டான் மலைமகன் கொடுப்ப
                                   என்றால்
அங்கு அவன் அருளின் நீர்மை யார் அறிந்து உரைக்கற்
                                   பாலார்.
71
   
826.
ஆனதோர் அமையம் தன்னில் ஆடினர் அமரர் மாதர்
கானம் அது இசைத்தார் சித்தர் கந்தருவத்த ரானோ
ஏனைய இருவர் தாமும் ஏழ் இசைக் கீதம் செய்தார்
வானவர் முனிவர் யாரும் மறைகளை அறையல் உற்றார்.
72
   
827.
அல்லி அம் கமலந் தன்னில் அரிவையும் புண்டரீக
வல்லியும் மற்று உளோரும் மங்கலம் பாடல் உற்றார்
சல்லரி திமிலை காளம் தண்ணுமை சங்கம் ஆதிப்
பல்லியம் இயம்பிச் சூழ்ந்து பார் இடத் தொகையோர்
                                   ஆர்த்தார்.
73
   
828.
அது பொழுது இமையத்து அண்ணல் ஆ பொழிந்து இட்ட                                    தீம்பால்
கதலி மா பலவின் தீய கனிவகை நெய் தேன் ஆதி
மதுரம் ஆம் சுவையின் வர்க்கம் வரம்பில வீற்று வீற்று
நிதி கொள் பாசனத்தில் இட்டு நிருமலன் முன்னர்
                                   உய்த்தான்.
74
   
829.
மறை நெறி இனைய எல்லாம் மலை மகன் உய்த்து மற்று                                           எம்
இறை இவை நுகர்தல் வேண்டும் எனத் தொழ இனிதே
                                      என்னாக்
கறை மிடற்று அணிந்த மேலோன் கரத்தினால்
                       அவற்றைத் தொட்டு ஆங்கு
உறு பெரும் கருணை செய்தே உவந்தனம் கோடி
                                      என்றான்.
75
   
830.
தொன்மை கொள் அருளின் நீரால் துய்த்தனவாகத்
                                       தொட்ட
நின் மல உணவை மன்னன் நேய மோடு அங்கண் மாற்றி
இன் மலர் கந்தம் தீர்த்தம் இவற்றொடு ஒரு சார் உய்ப்ப
நன் மகிழ் வோடு வேதா நாயகற்கு உரைக்கல் உற்றான்.
76
   
831.
படம் கிளர் சேடன் தாங்கும் பார் விசும்பு உறையும் நீரார்
அடங்கலும் மணம் செய் போதத்து அவ் அவர்க்கு
                                  அடுத்தது ஆற்றி
நடந்திடும் ஒழுக்கம் எந்தை நடத்திடல் வேண்டும் மன்றற்
சடங்கு இனி உளது முற்றத் தண்ணளி புரிதி என்றான்.
77
   
832.
என்னலும் முறுவல் செய்தே இறை அருள்புரிய வேதன்
வன்னியும் அதற்கு வேண்டும் பொருள்களும் மரபில்
                                    தந்து
பொன்னொடு புகரும் ஏனை முனிவரும் புடையில் சூழத்
தன்நிகர் இல்லா மன்றற் சடங்கு எலாம் இயற்றல்
                                    செய்தான்.
78
   
833.
அந்தணர் கரணம் எல்லாம் ஆற்றியே முடிந்த பின்னர்த்
தந்தையும் தாயும் ஆகி உலகெலாம் தந்தோர் தம்மை
முந்துற அயனும் பின்னர் முகுந்தனும் அதற்குப் பின்னர்
இந்திரன் முனிவர் வானோர் யாவரும் இறைஞ்சல் உற்றார்.
79
   
834.
அரனுடன் உமையாள் தன்னை ஆங்கு அவர்                                    பணிதலோடும்
உருகெழு நிலை உட்கொண்ட உருத்திரத் தலைவர்
                                   ஆனோர்
பரிசனர் கணங்கள் யாரும் பணிந்தனர் அதன் பின்
                                   ஆகக்
கிரி உறை இறைவன் மைந்தன் கேள் ஒடு வணக்கம்
                                   செய்தான்.
80
   
835.
தமது முன் பணிகின்றோர்கள் தமக்கு எலாம் ஈசன்தானும்
உமையும் நல் அருளைச் செய்ய ஓர்ந்து இது பதம் என்று
                                        உன்னி
இமகிரி புரந்த அண்ணல் ஈண்டு உறை நீரர்க் கெல்லாம்
அமலனது உணவு மற்றும் அளிப்பன் என்று அகத்து
                                  உட்கொண்டான்.
81
   
836.
ஆய்ந்திடு மறைகள் போற்றும் ஆதிதன் தீர்த்தம் போது
சாந்தமொடு அவிகள் தம்மைச் சதுர் முகன் முதல்
                                   வானோர்க்கும்
வாய்ந்திடு முனிவர் யார்க்கும் மற்றுளார் தமக்கும்
                                   மன்னன்
ஈந்திட அவற்றை அன்னோர் யாவரும் அணிந்துட்
                                   கொண்டார்.
82
   
837.
ஆலமா மிடற்றோற்கு ஆன அமலம் ஆம் பொருளை                                       ஏற்றுச்
சீல மோடு அணிந்துட் கொண்டு சிந்தையுள் மகிழ்ந்து
                                      நந்தம்
மூலமாம் வினைகட்கு இன்றே முடி பொருங்குற்றது
                                      என்றார்
மேலவர் அன்று பெற்ற வியப்பினை விளம்பல் ஆமோ.
83
   
838.
அனையதோர் காலை தன்னில் அமலமாம் பொருள்கள்                                      தம்மைப்
பனிவரை இறைவன் தானும் பன்னியும் தமர் உளாரும்
எனை வரும் அருந்தி மேல் கொண்டு எல்லையில்
                               இன்பம் உற்றார்
வினை வலி ஒருவி மேலாம் வீடு பேறு அடைந்துளார்
                                       போல்.
84
   
839.
தன் உறு கணவன் துஞ்சத் தாபத நிலையள் ஆகி
இன்னலை அடைந்து அங்கு உற்ற இரதி அவ் எல்லை
                                   வந்து
மன் உயிர் முழுதும் ஈன்ற மங்கையை மணந்த வள்ளல்
பொன்னடி வணங்கித் தீயேன் புன்கணைத் தவிர்த்தி
                                   என்றாள்.
85
   
840.
சீர் உறு கணவன் இல்லாள் செப்பிய மாற்றம் கேளா
ஆர் உயிர் முழுதும் நின்றே அனைத்தையும் உணர்ந்து
                                       கூட்டும்
பேர் அருள் உடைய நாதன் பேது உறல் மடந்தை
                                       என்னா
மாரன் வந்து உதிக்கும் வண்ணம் மனத்திடை
                            நினைந்தான் அன்றே.
86
   
841.
நினை தரும் எல்லை தன்னில் நெடிய மான் முதலா
                                        உள்ள
அனைவரும் மருட்கை எய்த அழுங்கிய இரதி நோக்கி
மன மகிழ் சிறந்து கார் காண் மஞ்ஞையில் களிப்ப
                                       அங்கட்
குனி சிலை கொண்ட மாரன் கொம் எனத்
                                 தோன்றினானே.
87
   
842.
முன் பொடு தோன்று மாரன் முதல்வி யோடு இருந்த                                    நாதன்
பொன்புனை கமலத்தாள் முன் போந்தனன் தாழ்ந்து
                                   போற்றி
என் பிழை பொறுத்தி என்ன யாம் உனை முனியின்
                                   அன்றோ
பின்பு அது தணிவது உள்ளம் பேதுறல் மைந்த என்றான்.
88
   
843.
எரி புனை நமது நோக்கால் இறந்த நின் உடலம் நீறாய்
விரை வொடு போயிற்று அன்றே வேண்டினள் இரதி
                                    யன்னாட்கு
உருவமாய் இருத்தி ஏனை உம்பரோடு இம்பர்க்கு
                                    எல்லாம்
அருவினை ஆகி உன்றன் அரசியல் புரிதி என்றான்.
89
   
844.
செய்வினை முறையால் ஈசன் சித்தசற்கு இனைய கூறி
அவ் அவன் அரசும் சீரும் ஆணையும் வலியும் நல்கி
மை விழி இரதியோடு மன்னு தொல் புரத்துச் செல்ல
மெய் விடை உதவ அன்னோர் விரைந்து உடன் தொழுது
                                      போனார்.
90
   
845.
இரதியும் மதனும் ஏக இந்திர நீலத்து இட்ட
அரி அணை இருந்த நாதன் அம்மையோடு இழிந்து
                                    தன்னேர்
திரு உரு உடைய மேலோர் தேவர் மா முனிவர்
                                    ஆனோர்
பரவினர் செல்லப் பூதர் பல்லியம் தெழிப்பச் சென்றான்.
91
   
846.
மன் உயிர்க்கு உயிராய் நின்றோன் மால் விடை ஏறி                                    மாதைத்
தன்னொரு பாங்கிற் கொண்டு தழீஇக் கொடு நடத்தி
                                   வானோர்
தொல் நிலை அமைந்து செல்லத் துவன்றியே கணங்கள்
                                   சுற்றப்
பொன் இயல் இமையம் தீர்ந்து வெள்ளி அம் பொருப்பில்
                                   வந்தான்.
92
   
847.
அன்னதோர் காலை மாலை அயனை வெற் பரசை
                                    வேள்வி
மன்னனை அமரர் தம்மை முனிவரை மாதரார்கள்
என்னவர் தமையும் தத்தம் இடம் தொறும் ஏகும்
                                    வண்ணம்
முன்னுற விடுத்தான் என்ப மூலமும் முடிவும் இல்லோன்.
93
   
848.
அடுகனல் அவன்கூர் மாண்டன் ஆடகன் ஐயன் சிம்புள்
வடிவினன் ஆதி யான வரம்பு இலா உருத்திரர்க்கும்
கடகரி முகத்தினாற்கும் கணங்களில் தலைமை யோர்க்கும்
விடையினை உதவி ஐயன் வியன் பெரும் கோயில்
                                       புக்கான்.
94
   
849.
ஏறு எனும் கடவுள் மீதில் இம்மென இழிந்து தன்னோர்
கூறு உடை முதல்வியோடும் கோநகர் நடுவண் எய்தி
ஆறு அணி சடை எம் அண்ணல் அரி அணைப்பீட
                                        மீதில்
வீறொடு தொன்மையே போல் வீற்று இருந்து
                                 அருளினானே.
95
   
850.
அன்பினர்க்கு எளிவந்துள்ள ஆதி அம் பரமன் மாது
தன்புடை ஆகச் சீயத் தவிசின் வீற்று இருத்த லோடும்
துன்பு அகன்று இருபால் ஆகித் துவன்றிய உயிர்கள்
                                      எல்லாம்
இன்பொடு போகம் ஆற்றி இனிது அமர் உற்ற வன்றே.
96