சயந்தன் புலம்புறும் படலம்
 
4049.
பரஞ் சுடர் நெடும் கணை படுத்த பாயலில்
வரும் சசி அனையதோர் வாள் நுதல் சசி
தரும் சிறு குமரனாம் சயந்தன் அவ்விடை
அரும் சிறை இருந்தனன் அமரர் தம்மொடும்.
1
   
4050.
வாலிதாம் அமரர் சூழ் வைப்பில் இந்திரன்
கோலம் ஆகிய தனிக் குமரன் வைகுதல்
மேலை நாள் அமுது எழும் வேலை தன்னிடை
நீலமா முகில் உறை நீர்மை போலுமே.
2
   
4051.
மழை புரை அவுணர் சூழ் வைப்பில் வால் ஒளி
தழுவிய அமரருள் சயந்தன் மேயினான்
கழிதரு பணிபல கவரச் சோர் தரும்
முழுமதி அதன் இடை முயல் உற்று என்னவே.
3
   
4052.
வென்றி வில் இயற்றிய விஞ்சை நீர்மையால்
கன்றிய கரம் எனக் காவல் சாலையில்
பொன் திகழ் வல்லிகள் பூண்டு பற்பகல்
தன் துணைத் தாள்களில் தழும்பு சேர்ந்துளான்.
4
   
4053.
இயற்படு மானமும் இகலும் நாணமும்
அயல்பட வெம்பழி அனல் அம் சுற்றிட
உயிர்ப்பு எனும் ஓதை நின்று உயிர் அலைத்திடத்
துயர்ப் பெரும் பரவை ஊடு அழுந்திச் சோருவான்.
5
   
4054.
அண்டரும் சிறையினால் வீடும் அல்லதேல்
எண்டரு முகம்பல இடருள் மூழ்கலின்
மண்டு தொல் பழி அற வலிது துஞ்சுமால்
உண்ட நல் அமுதினால் அவை ஒழிந்துளான்.
6
   
4055.
தணிப்பரும் வெம்சினத் தகுவர் மன்னவன்
பணிப்படு சிறைக்களம் பட்டுத் தம் உடல்
துணிப்புறு வோர் எனத் துயர் கொண்டோர் கணம்
கணிப்பரு முகங்களாக் கழித்து வைகுவான்.
7
   
4056.
தேவியல் மரகதம் தெளித்துத் தீட்டிய
ஓவிய உருவ மா சுண்ட தன்மையான்
ஆவி அம் புனல் அறாது அமரும் காவியம்
பூவியல் மென் தொடை புலர்ந்த தேயான்.
8
   
4057.
வியன் உகம் நூறுடன் மிக்க எட்டினுள்
இயல் உறு சிறுவரை எனினும் துஞ்சுமேல்
மயல் சிறிது அகலுமால் மரபின் வைகலும்
துயில்கிலன் ஆதலால் அறாத துன்பினான்.
9
   
4058.
நெஞ்சு அழி துன்பிடை நீட வைகலில்
துஞ்சலன் வலிது உயிர் துறப்பு மாற்றலன்
எஞ்சும் ஓர் இறைவரை இமையும் கூட்டலன்
விஞ்சிய தவம் துயர் விளைக்குமாம் கொலோ.
10
   
4059.
இலங்கிய மரகதத்து இயன்று பொன் குலாய்
நலம் கிளர் தன் வனப்பு இழந்து நாள் தொறும்
சலம் கெழும் அவுணர்கள் தமைக் கண்டு அஞ்சியே
கலங்கினன் உய்வகை யாதும் காண்கிலான்.
11
   
4060.
சுந்தர மரகதத் தனது தொல் உரு
வெம் துயர் உழத்தலின் வெய்து உயிர்ப்பு என
வந்து எழு புகை பட மறைந்து கண் புனல்
சிந்திட உடனுடன் நிகழத் தோன்றும் ஆல்.
12
   
4061.
முழுது உறு தன் துயர் முன்னி முன்னியே
இழுதையர் அவுணரும் இரங்க ஏங்கு உறா
அழுதிடும் காப்பினோர் அச்சம் செய்தலும்
பழுது கொல் என்று வாய் பொத்தும் பாணியால்.
13
   
4062.
இந்திரன் சசியொடும் இருந்த சூழல் போய்த்
தந்தனர் பற்றினர் தமர் எனச் சிலர்
முந்து உறு காவலோர் மொழிந்த பொய் உரை
அந்தம் அது அடையும் முன் அயர்ந்து வீழுமே.
14
   
4063.
ஐந்தரு நீழலை நினைக்கும் ஆய் மலர்
தந்த மென் பள்ளியை உன்னும் தான் எனப்
புந்திகொள் மங்கையர் புணர்ப்பை உட் கொளும்
இந்திரப் பெருவளம் எண்ணிச் சோருமே.
15
   
4064.
தன் இணை இல்லதோர் தருவின் நீழலுள்
நல் நலம் துய்த்தி யாம் நாளும் இன்புறும்
பொன் நகர் பூழியாய்ப் போம் கொலோ எனா
உன்னிடும் தொன்மை போல் உறுவது என்றெனும்.
16
   
4065.
ஈண்டையில் அவுணர் கோன் ஏவத் தானைகள்
சேண் தொடர் துறக்கம் மேல் செல்ல நாடியே
காண்தகு தம் உருக் கரந்து போயினார்
யாண்டையரோ எமை ஈன்றுளார் எனும்.
17
   
4066.
ஏயின துறக்க நாடு இழிந்து தொல்லை நாள்
தாயொடு பயந்துள தந்தை பாரகம்
போயினன் எனச் சிலர் புகலக் கேட்டனன்
ஆயிடைப் புகுந்தன அறிகிலேன் எனும்.
18
4066.
ஏயின துறக்க நாடு இழிந்து தொல்லை நாள்
தாயொடு பயந்துள தந்தை பாரகம்
போயினன் எனச் சிலர் புகலக் கேட்டனன்
ஆயிடைப் புகுந்தன அறிகிலேன் எனும்.
18
   
4067.
அண்டகள் ஒரு சிலர் அயர்வு கூற உட்
கொண்டனர் ஏகினர் குறுகி எந்தையைக்
கண்டனரே கொலோ கரந்துளார் கொலோ
விண்டனரே கொலோ விளைவு எனோ எனும்.
19
   
4068.
சீகரம் மிக்க சூர் செயிர்த்துச் செய்திடும்
ஆகுலம் முழுவதும் அறைய அம்மை ஓர்
பாகமது உடைய நம் பரமன் மால் வரைக்கு
ஏகினனே கொலோ எந்தை என்றிடும்.
20
   
4069.
பொருந்தலர் கண் உறாப் பொருட்டுத் தம் உருக்
கரந்தனரோ வழீஇக் குரவர் கள்வர் பால்
பொருந்தினரே கொலோ புவனம் எங்குமாய்த்
திரிந்தனரே கொலோ தெளிகிலேன் எனும்.
21
   
4070.
மாண் கிளர் சூர பன் மாவின் ஏவலால்
ஏண் கிளர் அவுணர்கள் யாயைத் தந்தையை
நாண் கொடு பிணித்து இவண் நல்கப் போயினார்
காண்கிலரே கொலோ கரந்த வாறு எனும்.
22
   
4071.
அன்புடை அம்மனை அத்தன் ஈங்கு இவர்
வன்புடை அவுணர்கள் வரவு காண்பரேல்
துன்புடை மனத்தராய் துளங்கி ஏங்கியே
என்படுவார் கொலோ அறிகிலேன் எனும்.
23
   
4072.
பொன் நகர் கரிந்ததும் புதல்வன் ஆகும் என்று
அன்னை இம் முது நகர்த் தந்து தானவர்
துன்னரும் சிறை இடு துயரும் கேட்ட பின்
என் நினைந்து இரங்குமோ ஈன்ற தாய் எனும்.
24
   
4073.
பல் நெடு மாயைகள் பயின்ற தானவர்
அன்னையொடு அத்தனை ஆய்ந்து பற்றி என்
முன்னுறக் காண்தகு முறையின் உய்ப்பினும்
என் உயிர் பின்னரும் இருக்கும் கொல் எனும்.
25
   
4074.
ஆற்ற அரும் செல்ல உள் அழுந்தும் பான்மையான்
மேல் திகழ் பரம் சுடர் விமலர் போற்றியே
நோற்றனர் முத்தியின் நுழைகு உற்றார் கொலோ
பேற்றினர் இருந்த சொல் பிறந்தது இல் எனும்.
26
   
4075.
தீம் கதிர்ப் பகையொடு செரு முயன்ற நாள்
தாங்கி என் கொண்டு உழித் தம் தம் இயற்றிட
ஆங்கனம் வீழ்ந்ததால் அதற்கு மேற்பட
யாங்கு சென்றது கொலோ யானை என்றிடும்.
27
   
4076.
பிறப்பு உறு வைகலைத் தொட்டுப் பின்னரே
இறப்பு உறு நாள் வரை யாவர்க்கு ஆயினும்
உறப்படு துய்ப்பு எலாம் ஊழின் ஊற்றமால்
வெறுப்பது என் அவுணரை வினையினேன் எனும்.
28
   
4077.
தாவறு தொல் நகர் விளியத் தந்தை தாய்
ஆவியொடு இரிந்திட அளியன் ஓர் மகன்
வீவரும் சிறைப்பட மேலை நாள் புரி
தீவினை ஆவதோ தெளிகிலேன் எனும்.
29
   
4078.
துப்பு உறழ் சடையினான் சூரற்கு ஈறு இலா
அப்பெரு வரத்தினை அளித்தலால் அவன்
மெய்ப் பட விளிகிலன் வீடும் செய்கிலன்
எப்பொழுது இச்சிறை தீரும் என்றிடும்.
30
   
4079.
மட்டறு வெறுக்கையும் நகரும் வாழ்க்கையும்
விட்டனர் கடந்தனர் மேலையோர் என
உள் தெளித்து அகன்றிலன் உவர் பிணித்திடப்
பட்டனனே கொலோ பாவியேன் எனும்.
31
   
4080.
மாற்றலன் இவ்வுயிர் வசை உறாவகை
போற்றலன் குரவர் பால் புகுந்த புன்கணைத்
தேற்றலன் தமியனும் தெளிகிலன் சிறை
ஆற்றலன் ஆற்றல் அனைய கோ எனும்.
32
   
4081.
துறந்ததோ பேர் அறம் தொலையும் தீம்பவம்
சிறந்ததோ மாதவப் பயனும் தேய்ந்ததோ
குறைந்ததோ நல் நெறி கூடிற்றோ கலி
இறந்ததோ மறை சிவன் இல்லையோ எனும்.
33
   
4082.
கூடலர் வருத்தலில் குரவர் தங்களைத்
தேடினர் விரைவுடன் சென்ற தேவர் போல்
ஓடினர் புகாவகை ஒழிந்து உளோரையும்
வீடரும் சிறை இடை வீட்டினேன் எனும்.
34
   
4083.
அந்தியின் மறைமொழி அயர்த்து வைகினன்
சந்தி இல் வினைகளும் தழலும் ஓம்பலன்
எந்தையை வழிபடும் இயல்பு நீங்கினன்
முந்தையின் உணர்ச்சியும் முடிந்துளேன் எனும்.
35
   
4084.
மெய் உயிர் அகன்றிட விளிகிலேன் எனின்
எய் உறும் அலக்கண் நீத்து இனிது மேவலன்
வை உறு நெடும் புரி வடிவம் வெந்து எனப்
பொய் உடல் சுமந்தனன் புலம்பு உற்றேன் எனும்.
36
   
4085.
சொல்லுவது என் பிற தொல்லை வைகலின்
மெல்லென ஆற்றிய வினையின் பான்மையால்
அல் உறழ் மிடற்றின் எம் அடிகளே எமக்கு
எல்லை இல் இத்துயர் இயற்றினான் எனும்.
37
   
4086.
ஆவியும் உலகமும் அனைத்தும் ஆகியும்
ஓவியும் கருணையின் உருக் கொண்டு ஆடல் செய்
தேவர்கள் தேவனாம் சிவன் மற்று அல்லதை
ஏவர் என் குறை உணர்ந்து இரங்குவார் எனும்.
38
   
4087.
பெறல் அரும் திரு எலாம் பிழைத்துச் சூர் உயிர்
அறுவதும் அவுணர்கள் அவிந்து மாய்வதும்
சிறை இது கழிவதும் தீர்கிலா வசை
இறுவதும் ஒரு பகல் எய்துமோ எனும்.
39
   
4088.
நூறு தொடர் கேள்வியோர் நுணங்கு சிந்தைசேர்
கூறு உடை மதி முடிக் குழகன் தன் அருள்
பேறு உடையேன் எனில் பெரும் துயர்க்கடல்
ஏறுவன் வினையின் ஏற்கு இல்லை கொல் எனும்.
40
   
4089.
இத்திறம் அளப்பில எண்ணி எண்ணியே
மெய்த் துயர் உழந்து வெய் துயிர்த்து விம்மியே
அத்தலை சுற்றிய அமரர் யாவரும்
தத்தம் இல் இரங்கு உறச் சயந்தன் வைகினான்.
41
   
4090.
கண்டகன் உதாவகன் கராளன் மாபலன்
சண்டகன் இசங்கனே சங்கன் ஆதியா
எண் தகும் அவுணர்கள் எண்ணிலோர் குழீஇக்
கொண்டனர் சிறைக்களம் குறுகி ஓம்பினார்.
42
   
4091.
ஆயதோர் காப்பினோர் அறுமுகத் தனி
நாயகன் தூதுவன் நணுகும் அப்பகல்
ஏய் உறு சயந்தனை இமைப்பிலார் ஒடு
காய் எரியாம் எனக் கனன்று சுற்றினார்.
43
   
4092.
மன்னா நம்கோன் தன் பணி நில்லா மகவு ஏந்தும்
மின்னாடானும் யாண்டு உறுகின்றார் விரைவாகிச்
சொன்னால் உய்வீர் அல்லதும் ஆவி தொலைவிப்போம்
முன் நாளே போல் எண்ணலிர் உண்மை மொழிக                                   என்றார்.
44
   
4093.
என்னும் காலைக் கேட்ட சயந்தன் எம் ஆயும்
மன்னும் வான் நின்று ஓடின கண்டாம் மற்று அன்னோர்
பின் அங்கு உற்ற தன்மையும் ஓராம் பிணி நோயுள்
துன்னும் தீயேம் யாவதும் உரைத்தும் சூழ்ந்து என்றான்.
45
   
4094.
விண் தோய் மன்னன் முன் ஒரு நாள் மெல்லியல்                                   தன்னைக்
கொண்டே போனான் இன்னுழி என்று குறிக் கொள்ளேம்
கண்டோம் அல்லம் கேட்டிலம் உள்ளம் கழி வெய்தப்
புண் தோய்கின்றோம் என் சொல்வது என்றார்                                   புலவோர்கள்.
46
   
4095.
சொற்றார் இவ்வாறு அன்னது போழ்தில் துணிவு எய்தி
உற்றார் போலும் இங்கு இவர் எல்லாம் உளம் ஒன்றி
எற்றால் உண்மை ஓதுவர் இன்னோர் என எண்ணாச்
செற்றார் ஆகும் காவலர் துன்பம் செய்கின்றார்.
47
   
4096.
வென்னம் சென்னக் காய் எரி என்ன மிகுதீஞ் சொல்
முன்னம் சொற்றே வைவர் தெழிப்பர் முரண் ஒடும்
கன்னம் செல்லத் தோமரம் உய்ப்பர் கடைகிற்பார்
சின்னம் செய்வார் போல் உடன் முற்றும் சேதிப்பார்.
48
   
4097.
கண்டம் துண்டம் செய்திடும் அங்கம் கடி தொன்றிப்
பிண்டம் தன்னில் கூட வெகுண்டே பேர் ஆற்றல்
கொண்ட அம் கையால் வாள்கொடு மார்பம் குடைகிற்பார்
தண்டம் தன்னான் மோதுவர் அன்னோர் தலைகீற.
49
   
4098.
இத் தன்மைத்தாக் காவலர் யாரும் எண் இல்லா
மெய்த் துன்பத்தைச் செய்திட மைந்தன் விண்ணோர்தம்
கொத்தும் தானும் ஆற்றலன் ஆகிக் குலைவு எய்தி
நித்தன் தன்னை உன்னி அரற்றா நிற்கின்றான்.
50
   
4099.
சீற்றத்துப் போர் பல் படை கொண்டே செறு போழ்து
மாற்றத் துன்பம் பட்டதல் ஆன் மெய் அழிவாகி
ஈற்றுத் தன்மை சேர்ந்திலன் விண்ணோர் இறை மைந்தன்
கூற்றில் பட்டுச் செல்லல் உழக்கும் கொடியோர் போல்.
51
   
4100.
நெஞ்சினில் வால் அறிவு எய்தினர் ஐம்புல நெறி நின்றும்
எஞ்சிய மேல் வினை பெற்று இலதே என இறும் வண்ணம்
தம் செயல் வெய்யோர் செய்யவும் மைந்தன் தமரோடும்
துஞ்சிலன் ஊறும் பெற்றிலன் உற்றான் துயர் ஒன்றே.
52
   
4101.
மாடே சூழ்வார் தம்மொடு மைந்தன் சிறை புக்கான்
காடே போனான் இந்திரன் ஏனோர் கவல் உற்றார்
பாடே விண்ணோர் தம் பதம் முக் கண் பரன் நல்கும்
வீடே அல்லால் துன்பறும் ஆக்கம் வேறு உண்டோ.
53
   
4102.
அந்தா வாளந் தோமரம் எஃகம் அடுதண்டம்
முந்தா வுற்ற பல்படையாவும் முரிவெய்தச்
செந்தார் மார்பிற் காவலர் கையும் திறலெஞ்ச
நொந்தார் இன்னா செய்வது நீத்தார் நுவல்கின்றார்.
54
   
4103.
வீவார் பின்னாள் அல்லது வேறார் வினையத்தால்
சாவார் எஞ்சார் பேர் அமிர் துண்டார் தவம் மிக்கார்
நோவார் நாம் இங்கு ஆற்றிய பாலான் நோய் நொந்தும்
ஆவா யாதும் சொற்றிலர் என்று அற்புதம் உற்றார்.
55
   
4104.
இன்னோர் யாரும் மைந்தனை வானோர் இனமோடு
மெய்ந் நோவாகும் பாங்கின் அலைத்த வினையாலே
கைந் நோவு எய்தி வன்மையும் நீங்கிக் கவல் உற்றார்
முன்னோர் தம்பால் செய்தது உடன் சூழ் முறையே போல்.
56
   
4105.
அத்தகைய காவல் அவுணர் அவர்க்கு அணித்தாய்
மொய்த்து ஒரு சார் ஈண்டி முறை நீங்கலர் காப்ப
எய்த்த அமரர் உடன் இந்திரன் சேய் பண்ண அருள்
உத்தமனாம் கண்ணுதலை உன்னிப் புலம்புறு வான்.
57
   
4106.
வந்திப்பவர் பவங்கள் மாற்றுவோய் எத்தேவர்
சிந்தைக்கும் எட்டாச் சிவனே செழும் சுடரே
இந்தப் பிறவி இடர் உழப்பச் செய்தனையோ
வந்தித்த நின் புணர்ப்பை யாரே கடந்தாரே.
58
   
4107.
கைந் நாகத்துக்கும் கயவாய்க்கும் நாரைக்கும்
பைந் நாகத்துக்கும் படரும் சிலந்திக்கும்
பின் ஆகிய உயிர்க்கும் பேர் அருள் முன் செய்தனை                                            ஆல்
என் நாயகனே எமக்கு ஏன் அருளாயே.
59
   
4108.
கங்கை முடித்தாய் கறை மிடற்றாய் கண் நுதலாய்
திங்கள் புனைந்தாய் சிவனே சிவனே என்று
இங்கு நினது அடியேம் எல்லேங்களும் அரற்றல்
நங்கள் உயிர்க்கு உயிராம் நாயக நீ கேட்டிலையோ.
60
   
4109.
பாசம் கொண்டு ஆவி பலவும் பிணிப்போனும்
நேசம் கொண்டு ஆங்கு அதனை நீக்கி அருள்                                      செய்வோனும்
ஈசன் சிவன் என்று இயம்பும் மறை நீ இழைத்த
ஆசு ஒன்றும் இத் தீமை ஆர் தவிக்க வல்லாரே.
61
   
4110.
நாராயணனும் அந்த நான்முகனும் நாட அரிய
பேர் ஆதியான பெருமான் உயிர்க்கு எல்லாம்
ஆராயின் நீ அன்றி யாரே துணை ஆவார்
வாராய் தமியேன் உயிர் அளிக்க வாராயே.
62
   
4111.
சீற்றம் விளைத்து முனம் தேவர் தொகை அலைப்பான்
கூற்றம் எனவே குறுகுற்ற அந்தகனும்
ஆற்றல் இழப்ப அகல் மார்பில் முத்தலை வேல்
ஏற்றியவன் நீ அன்றோ எமக்கு ஏன் இரங்கலையே.
63
   
4112.
ஏங்கி அமரர் இரிந்து ஓடவே துரந்த
ஓங்கு குரண்டத்து உருக் கொண்ட தானவனைத்
தீங்கு பெறத் தடிந்து சின்னமா ஓர் சிறையை
வாங்கி அணிந்த அருள் இங்கு என்பால் வைத்திலையே.
64
   
4113.
ஞாலத்தினை அளித்த நான்முகனும் நின்று அவற்றைப்
பாலித்தவனும் பிறரும் பணிந்து இரங்க
ஓலக் கடலுள் உலகம் தொலைப்ப வந்த
ஆலத்தை உண்ட அருள் என்பால் அயர்த்தனையோ.
65
   
4114.
மோடி தரவந்த முக்கண் உடைக் காளி
ஓடி உலகு உயிர்கள் உண்ணும்படி எழலும்
நாடி அவள் வெருவி நாணிச் செருக்கு அகல
ஆடி அருள் செய்த அருள் இங்கு அணுகாதோ.
66
   
4115.
பொற்றைக் கயிலைப் புகல் புக்க தேவர் தமைச்
செற்றத்துடன் அடவே சென்ற சலந்தரனை
ஒற்றைத் திகிரிப் படையால் உடல் பிளந்தே
அற்றைப் பகல் அவரை அஞ்சல் என்றாய் நீ அன்றோ.
67
   
4116.
நந்துற்ற கங்கை நதி செறியும் காசிதனில்
தந்திக் கொடியோன் தவத்தோர் தமைத் துரந்து
வந்து உற்றிடச் சினவி வன் தோலினை உரித்த
அந்தக் கருணைக்கு அளியரேம் பற்று இலமோ.
68
   
4117.
ஈர் அஞ்சு சென்னி இருபான் புயம் கொண்டு ஓர்
ஓரம் சரக்கர் உலகு அலைப்ப அன்னவரை
வீரம் செய்து அட்ட விமல எமை அவுணர்
கோரம் செய்கின்ற கொடும் தொழில் உட் கொள்ளாயோ.
69
   
4118.
பண்டை மகவான் பரிசு உணராத் தக்கனைப் போல்
அண்டர் பிரான் நின்னை அறியாதோர் வேள்வி செயத்
துண்டம் அது செய்து சுரரை அவன் தோள் முரித்தாய்
தண்டம் அதனை இன்று தானவர் பால் காட்டாயோ.
70
   
4119.
சிந்தப் புரம் கொடிய தீ அவுணர் மூவகைத்தாம்
அந்தப் புரங்கள் அடல் செய்தாய் எம் பெருமான்
சந்தப் புரம் கொண்ட தானவரோடு ஒன்றாகும்
இந்தப் புரமும் எரிக்கு தவ ஒண்ணாதோ.
71
   
4120.
அன்பான் அவருக்கு அருளுதியால் பத்தி நெறி
என்பால் இலையால் இறையும் எவன் அளித்தி
நன்பால் மதி மிலைச்சு நாயகனே நல்லருள் கூர்
உன்பால் மிக நொந்தே ஓதியது என் பேதைமையே.
72
   
4121.
ஆனாலும் தீயேன் அழுங்க அருள் கொடு நீ
தானாக நண்ணித் தலை அளி செய்து ஆண்டாயேல்
ஆனாத இத்துயரம் ஆறுமே ஆறியக்கால்
மேல் நாள் என யான் துறக்க வளன் வேண்டிலனே.
73
   
4122.
வென்றி அரக்கரால் மேதகைய தானவரால்
அன்றி முனிவரால் அண்டரால் ஏனையரால்
ஒன்று செய ஒன்றாய் உறு துயரத்து ஆழ்ந்தது அன்றி
என்று மகிழ்வாய் இடர் அற்று இருந்தனமே.
74
   
4123.
கீற்று மதியும் கிளர் வெம் பொறி அரவும்
ஆற்றின் ஒடு மிலைந்த ஆதியே நின் அருளால்
ஏற்ற மிகும் அலக்கண் ஏகின் இழிந்த வளம்
போற்றுகிலன் நோற்றல் புரிவேன் புரிவேனே.
75
   
4124.
தண் தேன் துளிக்கும் தரு நிழல் கீழ் வாழ்க்கை வெஃகிக்
கொண்டேன் பெரும் துயரம் வான் பதமும் கோது என்றே
கண்டேன் பிறர் தம் பதத் தொலைவும் கண்டனன் ஆல்
தொண்டேன் சிவனே நில் தொல் பதமே வேண்டுவனே.
76
   
4125.
அல்லல் பிறவி அலமலம் விண் நாடு உறைந்து
தொல்லைத் திருநுகரும் துன்பும் அலம் அலமால்
தில்லைத் திரு நடம் செய் தேவே இனித் தமியேற்கு
ஒல்லைத் துயர் தீர்த்து உனது பதம் தந்து அருளே.
77
   
4126.
ஒன்றாய் இரு திறமாய் ஓர் ஐந்தாய் ஐஅய்ந்தாய்
அன்று ஆதியின் மீட்டும் ஐந்தாய் அளப்பு இலவாய்
நின்றாய் சிவனே இந் நீர்மை எலாம் தீங்கு அகற்றி
நன்று ஆவிகட்கு நலம்புரிதற்கே அன்றோ.
78
   
4127.
பொன் பொலியும் கொன்றைப் புரிசடையாய் இவ்வழி சேர்
துன்பம் அகற்றித் துறக்கத்துள் தாழாது
பின்பு நனி நோற்றுப் பெறற்கு அரிதாம் நின் அடிக்கீழ்
இன்பம் ஒரு தலையாய் எய்த அருளாய் எனக்கே.
79
   
4128.
என்று பல பல இரங்கியே விடம் செறிந்து என்னச்
சென்று சென்று இடர் மூடு உறா உணர்வு எலாம் சிதைப்ப
ஒன்றும் ஓர்கிலன் மயங்கினன் உயிர் கரந்து உலையப்
பொன்றினார்களின் மறிந்தனன் இந்திரன் புதல்வன்.
80
   
4129.
ஆங்கு அவன் தனைப் போலவே அமரரும் அழுங்கி
ஏங்கி ஆருயிர் பதைத்திட வீழ்ந்து உணர் விழந்தார்
தூங்கு வீழுறு பழுமரம் சாய்தலும் தொடர்ந்து
பாங்கர் சுற்றிய வல்லிகள் தியங்கி வீழ் பரிசின்.
81