அசுரேந்திரன் மகேந்திரஞ் செல் படலம்
 
1564.
எந்தை குமரன் எறிந்த தனி வேல் படையால்
தந்தி முகம் உடைய தாரகன் தான் பட்டதனை
முந்து சிலதூதர் மொழிய அவன்தேவி
அந்தம் இலாக் கற்பில் சவுரி அலக்கண் உற்றாள்.
1
   
1565.
வாழ்ந்த துணைவியர்கள் மற்று உள்ளோர் எல்லோரும்
சூழ்ந்து பதைத்து இரங்கத் துன்பத்துடன் ஏகி
ஆழ்ந்த கடல் படியும் அம் மென் மயில் என்ன
வீழ்ந்து கணவன் மிசையே புலம்புறுவாள்.
2
   
1566.
சங்கு உற்றிடு செம் கைத் தண்டுளவோன் தன்பதமாம்
அங்கு உற்றனை அன்று அயன் பதம் செல்வாய் அன்று
கங்கைச் சடையான் கயிலையில் சென்றாய் அல்லால்
எங்குற்றனை அவ் விறைவன் அருள் பெற்றாயே.
3
   
1567.
உந்து தனி ஆழி உனக்கு அணியாத் தந்தோனும்
இந்திரனும் ஏனை இமையவர்கள் எல்லோரும்
அந்தகனார் தாமும் அனைவர்களும் இன்று அன்றோ
சிந்தை தனில் உள்ள கவலை எலாம் தீர்ந்தனரே.
4
   
1568.
பொன் நகரோர் யாரும் புலம்பு உற்றிட அவுணர்
மன்னவரோடு என்பால் வரும் பவனி காணாதேன்
துன்னு பறவை இனம் சூழத் துயிலும் உனை
இன்ன பரிசேயோ காண்பேனால் எம் பெருமான்.
5
   
1569.
புல்லாது இருந்தனை யான் புல்லுவது கண்டும் அது
பல்லோரும் காணில் பழி என்று ஒழிந்தாய் ஏல்
மல்லாரும் தோளாய் மயக்கு உற்றேற்க்கு ஓர் உரையும்
சொல்லாய் வறிதே துயின்றாய் துனி உண்டோ.
6
   
1570.
மையோடு உறழும் மணி மிடற்றோன் தந்தவரம்
மெய்யாம் எனவே வியந்து இருந்தேன் இந்நாளும்
பொய்யாய் விளைந்ததுவோ பொன்றினையால்                               என்துணைவா
ஐயோ இதற்கோ அரும் தவம் முன் செய்தாயோ.
7
   
1571.
தன்னோடு இணை இன்றித் தானே தலையான
முன்னோன் அருள் புரிந்த முன்னோன் இளவல்வரின்
என்னொ அவனோடு எதிர்ந்தாய் இறந்தனையே
அன்னோ விதிவலியை யாரே கடந்தாரே.
8
   
1572.
சந்தார் தடம் புயத்துத் தானவர்கள் தன் சூழ
அந்தார் கமழும் அரியணைமேல் வைகிய நீ
சிந்தா குலத்தில் செரு நிலத்தில் துஞ்சினையால்
எந்தாய் புகலாய் இதுவும் சில நாளோ.
9
   
1573.
வென்றி மழு வேந்தும் விமலன் உனக்கு அளித்த
துன்றும் வரத்து இயலை உன்னினை ஆல் சூழ்ச்சியினை
ஒன்றும் உணராது உயிரும் தொலைந்தனையே
என்று தமியேன் இனி உன்னைக் காண்பதுவே.
10
   
1574.
வன்னி விழி உடையான் மைந்தன் அமர் புரிய
முன்னை வலிதோற்று முடிந்தாய் எனக் கேட்டு
பின்னும் இருந்தேன் என்னில் பேரன் புடையோர் யார்
என் இனி யான் செய்கேன் எனவே இரங்குற்றாள்.
11
   
1575.
மற்றைத் துணைவியரும் வந்தீண்டி மன்னவனைச்
சுற்றிப் புலம்பித் துயர் உற்றிடும் வேலை
அற்றத் தினன் ஆகி ஆசுரத்தின் பாற்போன
கொற்றப் புதல்வன் வினவிக் குறுகினன் ஆல்.
12
   
1576.
தண்டா விறல் சேரும் தன் தாதை வீந்ததனைக்
கண்டான் உயிர்த்தான் கலுழ்ந்தான் கரம் குலைத்தான்
அண்டாத சோகத்து அழுங்கினான் வெய்ய கனல்
உண்டான் என வீழ்ந்து அயர்ந்தான் உணர்ந்தனனே.
13
   
1577.
என்றும் உறா இன்ன லிடைப் பட்டவன் எழுந்து
சென்று தன தன்னை திருத் தாளிடை வீழா
உன் தலைவன் யாண்டை யான் ஓதாய் அன்னே என்று
நின்று புலம்பி நினைந்து இனைய செய்கின்றான்.
14
   
1578.
அன்னை முதலோரை அகல்வித்து ஒரு சாரில்
துன்னுதிர் என்று ஏவித் தொலையாத தானவரில்
தன்னுழையோர் தம்மால் தழல் இந் தனமுதலாம்
மன்னு கருவி பலவும் வருவித்தான்.
15
   
1579.
வந்த பொழுதுதனில் வன்களத்தில் துஞ்சுகின்ற
தந்தை தனை முன்போல் தகவு பெற ஒப்பித்தோர்
எந்திரத் தேர் மீது ஏற்றி ஈமத்து இடை உய்த்துச்
சந்தனப் பூம் பள்ளி மிசையே தருவித்தான்.
16
   
1580.
ஈமக் கடன்கள் இயற்றித் தன் தாதை தனைத்
தாமக் கனலால் தகனம் புரிந்திடலும்
காமுற்றனன் என் கணவன் உடன் செல்வதற்குத்
தீ முன் தருதி என அன்னை சென்று உரைத்தாள்.
17
   
1581.
நற்றாய் மொழிந்ததனைக் கேட்டு நடு நடுங்கிப்
பொன்தாள் பணிந்து என்னைப் போற்றி இருத்தி எனச்
சொற்றான் அது மறுத்துத் தோகை சுளித்து உரைப்ப
அற்று ஆக என்றான் அசுரேந்திரன் என்பான்.
18
   
1582.
ஏனையதோர் தாயர்களும் யாமும் கணவனுடன்
வானகம் போய் எய்த வழங்கு என்றிட இசையா
ஆனபடியே அழல் அமைக்க அன்னையராம்
மான் அனையார் எல்லோரும் வான் கனலின் உள்புக்கார்.
19
   
1583.
புக்கது ஒரு காலை புலம்பியே அந் நகரை
அக்கணமே நீங்கி அசுரேந்திரன் என்போன்
தக்க கிளைஞர் சிலர் தற்சூழவே யேகி
மைக் கடலுள் வைகும் மகேந்திர மூதூர் உற்றான்.
20
   
1584.
உளந்தளர் எய்தித் தொல்லை ஒளிமுகன் இழந்து மேனி
தளர்ந்தனன் வறியன் போன்று தாரக முதல்வன் தந்த
இளம் தனிமைந்தன் வல்லே ஏகலும் அனைய நீர்மை
வளம் திகழ் தொல்லை வீர மகேந்திரத்து அவுணர்
                                     கண்டார்.
21
   
1585.
உரம் கிளர் அவுணர் காணூஉ ஒய்யெனத் துளங்கி
                                  யேங்கிக்
கரங்களை விதிர்த்துக் கண்ணீர் கானெறி படர்ந்து
                                  செல்லப்
பெருங் கடல் உடைந்ததே போல் பேதுறவு எய்தி
                                   ஆற்ற
இரங்கி இக் குமரன் உற்றது என் கொல் என்று
                         இசைக்கல் உற்றார்.
22
   
1586.
வஞ்சமும் கொலையும் செய்யான் மற்று இவன் இதற்குத்
                                       தாதை
வெஞ்சினம் கொடு போகென்று விடுத்தனன் போலும்
                                    என்பார்
தஞ்சமது ஆகி உள்ள தாரகன் கொடுமை நோக்கி
அஞ்சியே அவனை நீங்கி அடைந்தனன் கொல்லோ
                                    என்பார்.
23
   
1587.
சீர் ஒடு துறக்கம் நீத்துத் தேவர் கோன் உருவ மாற்றிப்
பார் இடை உழந்தான் என்பார் மற்று அவன் பரனை
                                   வேண்டிப்
பேர் இகல் மாயம் வன்மை பெற்று வந்து அடுபோர்
                                    செய்யத்
தாரகன் இறந்தான் கொல்லோ தளர்ந்திவன் வந்தான்
                                    என்பார்.
24
   
1588.
மாண்கிளர் தாரகப் பேர் மன்னவன் பகைஞர் ஆற்றும்
ஏண் கிளர் சமரில் வீந்தான் என்பதற்கு ஏது உண்டால்
சேண் கிளர் நிவப்பால் எங்கும் தெரிகிரவுஞ்ச வெற்பில்
காண்கிலம் அவுணர் தம்மைப் பூழியே காண்டும் என்பார்.
25
   
1589.
பை அரவணையில் துஞ்சும் பகவனது ஆழி தன்னை
ஐய பொன் அணியதாக அணிந்திடும் அவுணனோடு
மொய் அமர் புரிவார் யாரே முரணொடு வெம்போர்
                                  சில்லோர்
செய்யினும் அவரால் அன்னோன் முடிகிலன் திண்ணம்
                                      என்பார்.
26
   
1590.
அங்கையை ஒருவன் வாளால் அறுத்திடப் புலம்பி
                                 நம்கோன்
தங்கை வந்து அமரர் தம்மைச் சயந்தனைச் சிறை
                              செய்வித்தாள்
இங்கிவன் தானும் துன்புற்று ஏகுவான் இன்றும் அற்றே
புங்கவர் தமக்கே இன்னல் புரிகுவன் போலும் என்பார்.
27
   
1591.
மணிகிளர் எழிலி வண்ணன் மற்று அவனொடு போர்
                                    ஆற்றான்
அணி உலகு அளித்த செம்மல் அமர்த் தொழில் சிறிதும்
                                       தேறான்
தணி அறு செயிர் மீக் கொண்ட தாரகனொடு போர்
                                      செய்யின்
இணை அகல் ஈசன் அன்றி யாவரே வல்லர் என்பார்.
28
   
1592.
இமையவர் கருடர் நாகர் இயக்கர் கந்தருவர் ஏனோர்
நமர் இடு பணிகள் ஆற்றி நாடொறும் திரிந்தார் அற்றால்
சமர் எதிர் இழைப்பார் இன்றித் தளர்ந்தனம் இந்நாள்
                                        காறும்
அமர் இனி உளது போலும் ஐயம் அது இல்லை என்பார்.
29
   
1593.
சேய் இவன் அலக்கண் எய்திச் செல்லுறு பரிசாலங்கண்
ஆயது ஓர் தீங்கு போலும் ஐயம் இன்றி இதனை நாடி
நாயகன் விடுக்கு முன்னம் நம் பெரும் தானையோடு
மாயமா புரிகா றேகி அறிந்தனம் வருதும் என்பார்.
30
   
1594.
எனைப்பல இனைய வாற்றால் யாவரும் அவுணர் ஈண்டி
மனப் படு பைதலோடும் வயின் வயின் உரையா நிற்ப
நினைப்பரும் திருமிக்கு உள்ள நெடு மகேந்திரத்தில்
                                     சென்று
வனைப் பெரும் கழல்கால் சூர மன்னவன் கோயில்
                                 போந்தான்.
31
   
1595.
போந்து தாரகன் தன் மைந்தன் பொள்
                           எனப்படர்தலோடும்
வாய்ந்த பேர் அவைய மன்றில் வரம்பு இலா அவுணர்
                                      போற்ற
ஏந்து எழில் அரிகள் தாங்கும் எரிமணித் தவிசின் மீக்
                                        கண்
வேந்தர்கள் வேந்தன் சூரன் மேவி வீற்று இருந்தான்
                                     மாதோ.
32
   
1596.
வீற்று இருந்து அரசு போற்றும் வேந்தனை எய்தி
                                    அன்னான்
கால் துணை முன்னர் வீழ்ந்து கரங்களால் அவற்றைப்
                                        பற்றி
ஆற்றவும் அரற்றல் செய்ய அவுணர் கோன் அது கண்டு
                                           ஐய
சாற்றுதி புகுந்த தன்மை தளர்ந்தனை புலம்பல் என்றான்.
33
   
1597.
என்றலும் மைந்தன் சொல்வான் இந்திரன் புணர்ப்பால்
                                        ஈசன்
வன்திறல் குமரன் பூத வயப்படை தன்னோடு ஏகி
உன் தனது இளவள் தன்னை ஒண் கிரவுஞ்சம் என்னும்
குன்றொடும் வேலால் செற்று குறுகினன் புவியில் என்றான்.
34
   
1598.
வெய்ய சூர் அதனைக் கேளா விழுமிது என்று உருமின்
                                        நக்குச்
சையமாம் அவுணனோடு தாரக வலியோன் தன்னை
மை உறழ் கண்டத்து அண்ணல் மைந்தனோடு அடுதல்
                                     செய்வான்
பொய் இது வெருவல் மைந்த உண்மையே புகறி என்றான்.
35
   
1599.
தாதை கேள் சரதம் ஈது தாரகத் தந்தை தன்னை
மேதகு கிரவுஞ்சத்தை வேல் கொடு பரமன் மைந்தன்
காதினன் சென்றான் ஈமக் கடன் முறை எந்தைக்கு
                                    ஆற்றி
மா துயர் கொண்டு நின்பால் வந்தனன் என்றான்
                                   மைந்தன்.
36
   
1600.
தோள் துணைவனாம் இளவல் துஞ்சினன் எனும்
                                  சொல்
கேட்டலும் உளத்து இடை கிளர்ந்தது சினத்தீ
நாட்டம் எரி கால்வ புகை நண்ணுவன் துண்டம்
ஈட்டு பொறி சிந்துவன யாக்கையுள் உரோமம்.
37
   
1601.
நெறித்த புருவத் துணைகள் நெற்றி மிசை சென்ற
கறித்தன எயிற்றின் இரை கவ்வி அதரத்தைச்
செறித்தன துடித்தன தெழித்த இதழ் செவ்வாய்
குறித்தது மனம் ககன கூடமும் முடிக்க.
38
   
1602.
இவ்வகை சினத்து எரி எழுந்து மிசை கொள்ள
அவ் எரியின் ஆற்றலை அவித்த அது போழ்தில்
வெவ் வினை கொள் தாரகன் மிசைத் தொடரும்
                                 அன்பால்
தெவ்வர் புகழ் சூரன் இடை சேர்ந்த துயர் ஆழி.
39
   
1603.
துப்பு நிகர் கண் புனல் சொரிந்த நதியே போல்
மெய்ப்புறம் வியர்த்த முகம் வெள்ளம் அவை ஈண்டி
அப்புணரி ஆன துயர் ஆழியது வென்றே
செப்பும் பொருள் உண்மையது தேற்றியது போலும்.
40
   
1604.
பருவரல் எனும் புணரி ஊடு படி உற்றே
அரிஅணை மிசைத் தவறி அம் புவியில் வீழா
உரும் என அரற்றினன் உணர்ந்து அதனை அஞ்சி
நரலை யொடு பாரகம் நடுங்கியதை அன்றே.
41
   
1605.
கூற்றுள நடுங்கிய குலைந்தது செழும் தீக்
காற்று வெரு உற்றது கதிர்க் கடவுள் சோமன்
ஏற்ற மிகு கோள் உடு விரிந்த புவி முற்றும்
ஆற்றிய பணிக்கு இறையும் அஞ்சியது அலைந்தே.
42
   
1606.
பாங்கருறு தானவர்கள் பாசறையின் மூழ்கி
ஏங்கினர் விழுந்தனர் இரங்கினர் தளர்ந்தார்
ஆங்கு அனைய போழ்து தனில் அந்நகரம் எல்லாம்
ஓங்கு துயர் கொண்டுகலுழ் ஓசை மலிந்தன்றே.
43
   
1607.
ஆன பொழுதத் தினில் அழுங்கல் உறு சூரன்
போனது ஒரு சீற்ற அழல் புந்தி இடை மூள
மான மொடு நாண மடம் வல்லையில் எழுந்தே
தான் உடைய ஏவலர் தமக்கு இவை உரைப்பான்.
44
   
1608.
மன் இளவல் ஆர் உயிரை மாற்றி வருகந்தன்
தன் இகல் கடந்து சயம் எய்திவரல் வேண்டும்
என் இரதம் வெம் படை இடும் கவசம் யாவும்
உன்னு கணம் ஒன்றின் முனம் உய்த்திடுதிர் என்றான்.
45
   
1609.
இறை இவை புகன்றிடலும் ஏவலர்கள் யாரும்
முறை இல் அவை உய்த்திடுதல் முன்னினர்கள் போனார்
அறை கழல் உடைத் தகுவர் அன்ன செயல் நாடிக்
குறைவுஇல் அனிகங்கள் ஒடு கொம் என அணைந்தார்.
46
   
1610.
ஆய செயல் காண்டலும் அமைச்சரில் அமோகன்
மாயை தரு சூரன் அடி வந்தனை புரிந்தே
ஏயது ஒரு மாற்றம் அது இசைப்பல் அது கேண்மோ
தீய சினம் எய்திடல் எனா இனைய செப்பும்.
47
   
1611.
நஞ்சு உறை படைகள் கற்று நவை யுறாது ஒன்னலாரை
வஞ்சினத்து எறியும் வீரர் வள நகர் அதனை மாற்றோர்
இஞ்சியைச் சூழ்ந்து போருக்கு எய்தினும் எண்ணி அன்றி
வெம் சினத்தினை மேல் கொண்டு விரைந்து அமர்
                               இயற்றச் செல்லார்.
48
   
1612.
குலத்தினை வினவி உள்ளக் கோளினை வினவி வந்த
நிலத்தினை வினவித் தொல்லோர் நெறியினை வினவிக்
                                     கொண்ட
சலத்தினை வினவிப் போர் செய்தானையை வினவி
                                   அன்னோர்
வலத்தினை வினவி அல்லால் மற்று ஒன்று மனங்கொள்
                                       வாரோ.
49
   
1613.
வரத்தினில் வலியினாரோ மாயையில் வலியினாரோ
கரத்தினில் படைக் கலத்தின் கல்வியில் வலியினாரோ
உரத்தினில் வலியினாரோ உணர்ச்சி சேர் ஊக்கம் ஆன
சிரத்தினில் வலியினாரோ என்று இவை தேர்வர் அன்றே.
50
   
1614.
ஒற்றரைத் தூண்டி அன்னோர் உறுவலி உணர்வர் ஏனும்
மற்றும் ஓர் ஒற்றின் அல்லால் அன்னது மனத்துள்
                                     கொள்ளார்
சுற்று உறும் அனிகம் அன்றி ஒரு புடை துவன்றிச் சூழும்
பெற்றியும் உளதோ என்னாவே ஒரீஇத் தேர்வர் பின்னும்.
51
   
1615.
வினையது விளைவை என்றும் மெல்லிய என்கை
                                     வெஃகார்
அனிகமும் அனையர் தன்மை அதனையும் சிறுமைத்து
                                         ஆக
நினைகிலர் தமக்கு மாற்றார் நேர்ந்தவர் ஆகின்
                                      மேலோர்
முனை உறு புலத்தில் ஆற்றும் மும்மையும் முன்னிச்
                                      செய்வார்.
52
   
1616.
மூ இயல் மரபினாலும் முற்று உறாது ஒழிந்த காலைக்
கோ இயல் மரபுக்கு ஏற்பக் கொடும் சினம் திருகிக்
                               கொட்பு உற்றே
ஏ இயல் படைஞர் ஓடும் படையொடும் எதிர்ந்து சுற்றி
மேலவர் பான்மை உன்னி வெற்றி கொண்டு அணைவர்
                                      அன்றே.
53
   
1617.
நேர்ந்திட வலி யிலோரும் ஞாட்பு இடை நேர்திர்
                                     என்னாச்
சேர்ந்திடும் போழ்தும் வேந்தர் செருவினைக் குறித்துச்
                                       சென்று
சார்ந்திடல் பழியது அன்றோ வெல்லினும் தானை
                                      தூண்டிப்
பேர்ந்திடச் செய்வர் அஃதே பெறல் அரும் புகழ் அது
                                       அன்றே.
54
   
1618.
ஈதரோ உலகில் உள்ள இறைவர் தம் இயற்கை ஆகும்
ஆதலால் நின் ஒப்பாரில் அழிவு இலா அகிலம்
                                    ஆள்வாய்
ஏதம் ஒன்று உடையாய் வானோர் யாரையும் ஏவல்
                                   கொண்டாய்
போதனும் நெடு மாலோனும் வைகலும் புகழ உற்றாய்.
55
   
1619.
இன்னதோர் மிடல் பெற்றுள்ள இறைவ நீ அளியனாகும்
பொன்னகரவன் சொல் கேட்டுப் பூதமே படையா ஈசன்
நென்னலின் உதவும் பிள்ளை நேர்ந்திடின் அவனை
                                      வெல்ல
உன்னினை போதி என்னின் உனக்கு அது வசையது
                                     அன்றோ.
56
   
1620.
மாற்றலர் வன்மை யோராய் மற்று அவர் படைஞர்
                                      தங்கள்
ஆற்றலை உணராய் நின்றன் அரும் பெரும் தலைமை
                                    உன்னாய்
போற்றிடும் அமைச்சரோடும் புரிவன சூழாய் வாளா
சீற்றம் அங்கு அது மேல் கொண்டு செல்லலும் திறலின்
                                      பாற்றோ.
57
   
1621.
வீரமும் வலியும் மிக்கோர் ஆயினும் விதி வந்து எய்தில்
பாரிடை வலியிலோரும் படுத்திடப் படுவர் நின் போல்
பேர் உடல் அழியா ஆற்றல் பெறாமையால் இறுவாய்
                                       எய்தத்
தாரகன் மழலை தேறாச் சிறுவனும் தடியப் பட்டான்.
58
   
1622.
கல கல மிழற்றும் தண்டைக் கழல் அடிச் சிறுவன்
                                  கைம்மாத்
தலை உடை இளவல் தன்னைத் தடிந்த அற்புதத்து
                                  ஆன்றால்
வலியரும் ஒரு காலத்தில் வன்மையை இழப்பர் ஆற்ற
மெலியரும் ஒரு காலத்தில் வீரராய்த் திகழ்வர் அன்றே.
59
   
1623.
யாரும் நேர் அன்றி வைகும் இறைவ நீ சிறுவன்
                                   தன்மேல்
போரினை முன்னி ஏகேல் புகழ்மை அது அன்றால்
                                  அன்னான்
சீரொடு மதுகை யாவும் தேர்ந்து பின் அவனில் தீர்ந்த
வீரரைப் படையொடு ஏவி வெற்றி கொண்டு அமர்தி
                                    என்றான்.
60
   
1624.
அறி தரும் அமைச்சர் தம் முள் அமோகன் இத்தன்மை
                                        தேற்ற
உறுதி ஈதென்று சூரன் உள் உறு சினத்தை நீத்து
விறல் கெழும் அரிமான் ஏற்று விழுத்தகு தவிசின் ஏறிச்
செறி தரும் உழைஞர் தம் முள் சிலவரை நோக்கிச்
                                    சொல்வான்.
61
   
1625.
பகனொடு மயூரன் சேனன் பரிதி அம் புள்ளின் பேரோன்
சுகன் இவர் முதலாய் உள்ள தூதரைத் தருதிர் என்னப்
புகழ் புனை சூரபன்மன் பொன்னடி இறைஞ்சி ஏத்தித்
தகுவர்கள் தலைவர் மற்றச் சாரணர் தம்மை உய்த்தார்.
62
   
1626.
சாரணர் இனையார் போந்து தாள் முறை பணிந்து நிற்பச்
சூரன் அங்கு அவரை நோக்கித் துண் என நீவிர் ஏகிப்
பாரிடை வந்த கந்தன் பான்மையும் படைவெம் பூதர்
சேர் உறு தொகையும் யாவும் தேர்ந்து இவண் வருதிர்
                                     என்றான்.
63
   
1627.
ஒற்றுவர் உணர்ந்த அந்நீர்மை உச்சிமேல் கொண்டு
                                  தம்கோன்
பொன் தடம் கழல்கள் தாழ்ந்து புடவியை நோக்கிச்
                                   சென்றார்
மற்று அவர் போய பின்னர் மாறு இலாச் சூர பன்மன்
வெற்றி கொள் அவுணர் போற்ற வீற்று இருந்து அரசு
                                   செய்தான்.
64
   
1628.
ஏதம் இல் சூரபன்மன் இளவல்தன் முடிவு நேடி
மா துயர் கொண்டு தேறி வைகிய தன்மை சொற்றாம்
ஆதி அம் கடவுள் மைந்தன் அமரர் தம் கிரியை
                                     நீங்கிப்
பூதல மீது வந்த நெறியினைப் புகலல் உற்றாம்.
65