அசுரர் யாகப் படலம்
 
2311.
அன்னை தன் ஏவலால் அழல் மகம் செய
உன்னினன் ஆகியே ஒல்லை ஏகிய
முன்னவன் இளைஞர் தம் முகத்தை நோக்கியே
இன்னது கேண்ம் என இசைத்தல் மேயினான்.
1
   
2312.
அடல் கெழு பெருமகம் அதனை ஆற்றவே
வட திசை செல் உழி மல்கு தானையின்
கடை யொடு நெற்றியில் காவல் ஆகியே
படருதிர் ஆல் எனச் சூரன் பன்னினான்.
2
   
2313.
இனிது என அடி தொழுது இளவல் தாரகன்
அனிகமது ஈற்றினில் அடைவல் என்றனன்
முனிதரு கோளரி முகத்து மொய்ம்பினான்
தனி அகல் நெற்றியில் சார்வல் என்றனன்.
3
   
2314.
பின்னர் இருவரும் பேசி இத்திறம்
முன்னவன் விடைகொடு முறையில் போயினார்
அன்னவர் பணியினால் ஆர்ப்பு உற்றே எழீஇச்
செல் நெறி படர்ந்தன சேனை வெள்ளமே.
4
   
2315.
தானவர் அனிக வெள்ளம் தரை மிசைப் பெயர்த லோடும்
மானில மடந்தை ஆற்றாள் வருந்தினள் பணிகளோடு
கோனும் அங்கு அயரா நின்றான் குல வரை கரிகள் மேரு
ஆனவும் சலித்த ஆதிக மடமும் அழுங்கிற்று அன்றே.
5
   
2316.
மண்டு உறு பூழி ஈட்டம் மலர் அயன் உலகம் தாவி
விண் தலம் மீது போதல் மேதினி அசுர வெள்ளம்
எண் தரு நிலைமைத்து அன்றால் யான் பொறுக்
                           கல்லேன் என்னாக்
கொண்டல் வண்ணத்தோன் ஓடு கூறுவான் சேறல்
                                   போலும்.
6
   
2317.
காழ் உறும் அவுணர் தானைக்கனை கழல் துழனி முன்னர்
ஆழி அம் கடலும் நேரா ஆர்த்திடும் கொல்லோ என்னா
ஊழ் உறு சினம் கொண்டு என்ன உலப்பு இலா
                                அவுணர் தாளில்
பூழியது எழுந்து சென்று புணரிவாய் பொத்திற்று அன்றே.
7
   
2318.
மரந்துகள் பட்ட மேருவரை யெனச் சிறந்த மெய்ப்பூ
தரந் துகள் பட்ட யாதும் தனது எனத் தாங்கு சேடன்
உரந் துகள் பட்ட நேரும் உயிர் துகள் பட்ட
                                  தொல் நாள்
புரந் துகள் பட்டதே போல் புவி துகள் பட்டது அன்றே.
8
   
2319.
ஆடலின் அவுண வெள்ளத்து அரவமும் அனையர்
                                    செல்ல
நீடிய பூழி தானும் நெறிப்பட வருதலோடும்
நாடிய அமரர் அஞ்சி நடுக்குறா நமது வேதா
வீடினன் கொல்லோ நீத்தம் விண் உறும் போலும்
                                  என்றார்.
9
   
2320.
மாசு அகல் திருவின் மிக்க மாயவள் முன்னம் தந்த
தேசு உறும் அவுண வெள்ளம் திசை எலாம் அயுதம்
                                    என்னும்
யோசனை எல்லை ஆக உம்பரின் இடத்து மற்றைக்
காசினி இடத்தும் ஆகிக் கலந்துடன் தழுவிச் சென்ற.
10
   
2321.
அஞ்சினன் அமரர் வேந்தன் அயர்ந்தனன் அங்கிப்
                                   புத்தேள்
எஞ்சினன் வன்மை கூற்றன் இனைந்தனன் நிருதி
                                 எய்த்தான்
தஞ்சம் இல் வருணன் வாயுத் தளர்ந்தனன் தனதன்
                                சோர்ந்தான்
நெஞ்சு அழிந்தனன் ஈசானன் நிருதர் பேர் அரவம் சூழ.
11
   
2322.
வள்ளுறும் எயிற்றுச் செம் கண் வலி கெழும் அவுணர்
                                      தானை
வெள்ளம் அது ஏகப் பூழி விரிந்து எழீஇ யாண்டும்
                                    போகிப்
பொள் என மெய்யே தீண்டிப் புறத் தொழில் அழித்த
                                    வானோர்
உள் உணர்வு அழித்தது அன்றே அனையர்கள்
                              ஆர்க்கும் ஓதை.
12
   
2323.
பேரும் இவ் அவுணர் தானைப் பெருக்கினது
                         அணியின் முன்னர்
ஆர் அழல் வெருவு சீற்றத்து அரிமுகன் செல்லக் கூழை
தாரக விறலோன் செல்லத் தலை அளி புரிந்து நாப்பட்
சூரன் என்று உரைக்கும் வெய்யோன் துண் என
                               ஏகினான் ஆல்.
13
   
2324.
ஆன பொழுதத்து அவர்க் காணிய நினைந்து
தானவர்கள் போற்றும் தனிக் குரவன் தண் டரள
மான மிசை ஊர்ந்து வந்து அணுகி வல் அவுணர்
சேனை எனச் செல்லும் திரைக் கடலைக் கண்ணுற்றான்.
14
   
2325.
கண் நின்ற வீரர் கடுப்பும் பெருமிடலும்
உண்ணின்ற காழ்ப்பும் உரனும் கொடும் திறலும்
எண்ணம் கொள் வேர்வும் இகலும் தெரிவுற்றுத்
துண் என்ன நெஞ்சம் புகரும் துளக்கு உற்றான்.
15
   
2326.
கண்டேன் இவர் தம் கடும் திறலின் ஆட்சி தனைப்
பண்டே அவுணர் அளப்பிலரைப் பார்த்து உணர்வேன்
தண் தேன் இதழியான் தன் அருளின் வண்ணமோ
உண்டே இவருக்கு ஒருவர் நிகர் உற்றாரே.
16
   
2327.
வானோர் இறை உடனும் மால் உடனும் மற்று உள்ள
ஏனோர் உடனும் இகல் ஆடி வென்றிடுகை
தான் ஓர் பொருளோ தமை எதிர்ந்த மாற்றலர் தம்
ஊனோடு உயிரை ஒருங்கு உண்ணும் தீயவர்க்கே.
17
   
2328.
இன்னோர்தம் வன்மைக்கு இறுதி இலவேனும்
முன்னோர் தமைப் போல் முயலும் தவ வலியும்
பின்னோர் வரமும் பெரும் படையும் கொண்டு இலர் ஆல்
அன்னோ இவர்க்கும் குறை உண்மை ஆகியதே.
18
   
2329.
தண்டத்து இறையைக் கடந்த தனி ஆற்றல்
கொண்டு உற்றவர்க்கே குறை கண்டிலம் ஏனை
அண்டத்தவர்க்கும் அனைவர்க்கும் ஒவ்வோர் குறை
உண்டு அத் தகைமை எவரும் உணர்குவர் ஆல்.
19
   
2330.
ஆதலின் இன்னோர் பால் அடை உற்றிடும் வறுமை
போது சில நேன்பு புரியின் அகன்றிடும் ஆல்
ஈது நிலைத்து அன்றே இழிந்தோர் உயர்ந்திடுவர்
காதி புதல்வன் இதற்குக் கரி அன்றோ.
20
   
2331.
என்னப் பலவும் இசைத்து நின்று தானவர்கள்
மன்னர்க்கு மன்னாக வாழ்வு எய்து சூரபன்மன்
முன் உற்றிடவும் முகமன் மொழிந்திடவும்
உன் உற்றனன் ஆல் உணர்வு சேர் காப்பியனே.
21
   
2332.
தீயின் திறம் உருக்கும் சீற்றத்து அவுணன் எதிர்
போய் அங்கு உறவும் புகன்றிடவும் தான் அரிதால்
ஏயும் தகுவர் உடன் என் உழையில் சார்வதற்கு ஓர்
மாயம் கொள் விஞ்சை புரிவேன் என மதித்தான்.
22
   
2333.
மண்ணில் உயிரை வசிகரிக்கும் மந்திரம் ஒன்று
எண்ணி விதி முறையே நோக்கி எதிர் சென்று
நண்ணிய வெம் சேனை நரலை நடுவண் புக்கான்
அண்ணல் அவுணற்கு அணித்தாய் அடைகுற்றான்.
23
   
2334.
கள்ளம் மிகும் அவுணர் சிந்தை எனும் காழ் இரும்பாய்
உள்ளம் உருகி உரை கெழு மாயத்தீயின்
எள்ள வரும் கறையும் ஏகி நயந்திட்டனவால்
வெள்ளி மிகப் புணர்க்கின் மேலை உரு நின்றிடுமோ.
24
   
2335.
சூழிக் கடலில் துவன்றும் அவுணப் படைஞர்
காழ் அற்ற புந்தியொடு கைதொழலும் கேசரிக்கும்
பூழைக் கரன் தனக்கும் முன்னைப் புரவலன் முன்
கேழ் உற்ற வாசி குரவன் கிளத்திடுவான்.
25
   
2336.
வாலாதி மான் தேர் மகபதிக்கும் ஏனையர்க்கும்
மேல் ஆதி தானவர்கள் வெய்ய துயர் நோய் அகற்ற
ஏலாதியே கடுகம் என்று உரைக்கும் இன் மருந்து
போல் ஆதி என்ன அவுணன் புகன்றிடுவான்.
26
   
2337.
காரை ஊர்கின்ற கடவுளர் கோன் வைகல் உறும்
ஊரையோ மேலை உலகுதனில் உள்ளாயோ
பாரையோ கண் செவிகள் பாதலத்தையோ எந்தாய்
யாரை நீ தேற்றேன் இவண் உற்றவாறு என்னோ.
27
   
2338.
உன் பால் என் நெஞ்சம் உருகும் அஃதன்றி
என்பு ஆனதும் உருகா நிற்கும் எனை அறியாது
அன்பாகி நின்ற அரும் தவத்தை ஆற்ற வனம்
தன் பால் அணுகு தற்குத் தாளும் எழு கின்றிலவே.
28
   
2339.
நல் நேயம் பூண்டு நடந்தாய் உயிர் எல்லாம்
அன்னே என வந்து அளிக்கும் தகையாயோ
இன்னே உனை எதிர்ந்தேன் யாக்கை மிக வருந்தி
முன்னே தமியேன் புரிந்த தவம் மொய்ம்பன்றோ.
29
   
2340.
என்றலும் கவிஞன் கேளா இரு விசும்பு ஆற்றில்
                                செல்வேன்
உன் தனி மரபிற்கு எல்லாம் ஒரு பெரும் குரவன்
                                 ஆனேன்
நன்றி கொள் புகரோன் என்னும் நாமம் உற்று
                       உடையேன் நின்பால்
சென்றனன் உறுதி ஒன்று தெளித்திடல் வேண்டி
                                என்றான்.
30
   
2341.
அவுணர்கள் முதலாய் உள்ளோன் ஆங்கது வினவி ஆற்ற
உவகையன் ஆகி எந்தாய் உய்ந்தனன் இவண் யான்
                                     என்னாக்
கவிஞனை அணுகி நின்று கை தொழுஉப் பரவலோடும்
சிவன் அருள் நெறியால் அன்னோன் இத்திறம் செப்பல்
                                       உற்றான்.
31
   
2342.
நூல் தொடர் கேள்வி சான்றோய் நோற்று நீ இருக்கும்
                                      எல்லை
ஊறு செய்கிற்பர் ஒன்னார் உனை அவை குறுகா
                                    வண்ணம்
கூறுதும் திறன் ஒன்று என்னாக் கூற்றுவற் கடந்த
                                   மேலோன்
மாறின் மந்திரம் அது ஒன்று மரபுளி வழாமல் ஈந்தான்.
32
   
2343.
மொய் கெழு கூற்றை வென்ற முதல்வன் மந்திரத்தை நல்கி
வைகலும் இதனை உன்னி மனத்தொடு புலன் ஒன்று
                                    ஆக்கிப்
பொய் கொலை களவு காமம் புன்மைகள் உறாமே
                                    போற்றிச்
செய்குதி தவத்தை என்னாச் செவி அறிவுறுத்தல்
                                      செய்தான்.
33
   
2344.
அப்பரிசு அனைத்தும் தேரா அவனடி வணங்கி எந்தாய்
இப்பணி புரிவன் என்ன எல்லை தீர் ஆசி கூறி
மெய்ப்புகர் மீண்டு சென்றான் மேதகும் அவுணர் சூழ
ஒப்பரும் மாயை செம்மல் வட புலத்து ஒல்லை போனான்.
34
   
2345.
வழிமுறை பயக்க நோற்கும் வட புலம் தன்னில் ஏகிப்
பழுமர வனத்தில் ஆங்கு ஓர் பாங்கரில் குறுகிச் சூரன்
அழல் கெழு மகத்தை ஆற்ற அயுத யோசனை
                                  உள்வைத்துச்
செழு மதில் அது சூழ் பான்மை செய்திடச் சிந்தை
                                     செய்தான்.
35
   
2346.
அடல் கெழு தானை ஆகும் அவுணர்தம் குழுவைக்
                                     கூவிப்
படிதனில் அடுக்கல் யாவும் பறித்தனர் கொணருவித்து
வட வரை நிவப்பில் சூழ வாரியாப் புரிவித்து ஆங்கே
நடு நெடு வாயில் போக்கி ஞாயிலும் இயற்று வித்தான்.
36
   
2347.
நூல் படு செவ்வி நாடி நொய்தென அங்கண் செய்த
மால் பெரு மதிலைச் சூழ வரம்பு அறு தானை தன்னை
ஏற்புடை அரணம் ஆக இயற்று வித்து யாரும் செல்ல
நால் பெரும் திசையின் ஊடு நலன் உற வாய்தல்
                                    செய்தான்.
37
   
2348.
பூமியும் வானும் ஒன்றப் பொருப்பினால் புரியப் பட்டு
நாம் இயம்புரிதா நின்ற நாமநீள் காப்பும் அப்பால்
ஏமுறும் அவுண வெள்ளத்து எடுத்திடும் எயிலும் சேர்ந்து
நேமியம் கிரியும் சூழ்ந்த நிசியும் நேர்ந்து இருந்த அன்றே.
38
   
2349.
ஞாயிலின் வேலிமான நகங்களால் அடுக்கல் செய்த
பாய் இரு நொச்சி தன்னில் படை குலாம் புரிசை தன்னில்
வாயில்கள் தோறும் போற்ற மந்திர முறையால் கூவி
நேய மொடு அடு போர் மாதை நிறுவினன் நிகர்
                                      இலாதான்.
39
   
2350.
ஆள் அரி முகத்தன் முன்னோன் அடுக்கலால்
                           படையால் செய்த
நீள் இகல் வாரிமுன்னர் நெறிகொள் மந்திரத்தால்
                                    கூவிக்
கூளிகள் தொகையும் மோட்டுக் குணங்கரின்
                           தொகையும் சீற்றக்
காளிகள் தொகையும் சூழ் போய்க் காப்பு உற நிறுவி
                                    விட்டான்.
40
   
2351.
கயிரவம் அனைய செம்கண் காளிகள் முதலோர் தம்மைச்
செயிர் அற நிறுவிப் பின்னர்ச் சீர் கொள் மந்திரத்தால்
                                         பன்னி
அயிர் அற நெடிது போற்றி அவுணர் கோன் அங்கண்
                                          வந்த
வயிரவ கணத்தை வேள்வி காத்திட வணங்கி வைத்தான்.
41
   
2352.
தள் அரிதாகிய காப்பு இவை செய்திடு தனிவீரன்
உள் உற ஆயிரம் ஆயிரம் யோசனை உறு நீளம்
கொள்வது ஒர் ஆழமும் ஆயிட ஓர் ஓம குண்டந்தான்
நள் இடையே புரிவித்தனன் மாமகம் நலமாக.
42
   
2353.
ஆதித்தன் அக் கனல் வேள்வி இயற்றிட அடு சூரன்
வேதிதனைப் புரிவித்திடும் காலையில் வியன் ஞாலம்
பாதகர் எம்மை வருத்தினர் என்று பதைப்பு உற்றுப்
பேது உறவெய்தி இரங்கி ஒடுங்கினள் பெயர்வு இல்லாள்.
43
   
2354.
ஆழம் அது ஆயிரம் யோசனை ஆவ அவண் அகழ்
                                      செய்கை
ஊழ் உற நாடிய சேடனும் ஆய் இடை உறைவோரும்
கீழ் உறுவார் இவண் எய்துவர் தானவர் கிளை என்னாத்
தாழ் உற ஏகினர் முன் உறு தொல் நிலை தனை நீங்கி.
44
   
2355.
ஆழ்ந்திட அம்மக வேதி இயற்றலும் அது போழ்தில்
தாழ்ந்திடு நீத்தம் எழுந்திட நாடிய தனிவேந்தன்
சூழ்ந்தனர் நுங்களை உண்குவர் மீது எழல் துணிபு
                                    அன்றே
போழ்ந்தனை பாதலமேக என அவ்வழி போகிற்றால்.
45
   
2356.
போதலும் அப்புனல் அவ்வழி கீழிடை போகின்ற
பாதலம் ஈறு எனும் ஏழ் நிலையோர் அது பாராநின்று
ஈது இவண் வந்து உளது என் என அற்புத இயல்
                                     எய்தாப்
பேது உறுகின்றனர் தீங்கு இது என்று பிடித்தாராய்.
46
   
2357.
சீறு அரி மா முகன் முன்னவன் ஆகிய திறன் மேலோன்
மாறு அகல் குண்டம் அது இவ்வகை நாப்பண்
                                    வகுப்பித்தே
நூறுடன் எட்டது சூழ்தர ஆக்குபு நுவல் வேதி
வேறும் ஒர் ஆயிரம் எட்டவை சுற்ற விதிப்பித்தான்.
47
   
2358.
மூவகை வேதியும் ஆனபின் வேள்வியை முயல்வானாய்
ஆவது ஒர் பல் பொருள் வேண்டி நினைந்தனன் அருள்
                                       யாயைப்
பாவனை பண்ணலும் அங்கு அது கண்டனள் பரிவு
                                    எய்தித்
தேவர்கள் தேவனது இன் அருளால் இவை சேர்விப்பாள்.
48
   
2359.
சீயம் வயப்புலி யாளியொடு எண்கு திறல் கைம்மாப்
பாய் பரி செச்சைகள் ஆதிய ஆகிய பன்மாவின்
தூய புழுக்கலின் ஊன் அவி நேமி தொகுப்பித்தாள்
ஆய உடல் குருதிக் கடல் தன்னையும் அமர்வித்தாள்.
49
   
2360.
பழிதரும் எண்ணெய் எனும் கடல் ஓர் இடை பயில்
                                   வித்தாள்
இழுது எனும் வாரிதி தானும் ஒர் சாரில் இருப்பித்தாள்
தொழு தகு பால் தயிர் நேமியும் ஓர் இடை
                                தொகுவித்தாள்
வழி தரு மட்டு எனும் வேலையும் ஓர் இடை
                                  வருவித்தாள்.
50
   
2361.
ஐயவி கார் உறு தீம் கறியே முதல் அழல் காலும்
வெய்யன பல்வளன் யாவையும் ஓர் புடை மிகுவித்தாள்
நெய் உறும் உண்டியின் மால் வரை ஓர்புடை
                                 நிறைவித்தாள்
மையறு தொல்பசு யாவையும் ஓர் புடை வருவித்தாள்.
51
   
2362.
அரும் பெறல் நாயகம் ஆகிய வேதியின் அகல் நாப்பண்
வரும் பரிசால் நிறு வுற்றிட மேல் உயர் வடிவாகிப்
பெரும் புவி உண்டு உமிழ் கண்ண பிரான் துயில்
                                    பெற்றித்தாய்
உரம் பெறு வச்சிர கம்பம் அது ஒன்றினை உய்த்திட்டாள்.
52
   
2363.
தெரிதரு செந்நெலின் வால் அரி ஓர் புடை செறிவித்தாள்
அரிசனம் நீவிய தண்டுலம் ஓர் புடை அமைவித்தாள்
மருமலர் மான் மதம் ஆதிய ஓர் புடை வருவித்தாள்
சுருவையும் நீடு தருப்பையும் ஓர் புடை தொகுவித்தாள்.
53
   
2364.
ஆலம் உயிர்க்கும் வரம்பு இல தாருவின் அணிகொம்பர்
வாலிதின் மெய்ச் சமிதைக் குலமாம் என வரையே போல்
சால மிகுத்தனள் ஓர் புடை வேள்வி தனக்கு என்று ஓர்
பாலின் நிரைத்தனள் கொள் கலம் ஆகிய படி எல்லாம்.
54
   
2365.
பொன்னின் அகம் தொறும் வெள்ளி முளைத்திடு
                              பொருளே போல்
செம் நெலின் உற்றிடும் தீம் பொரி ஓர் புடை
                                  செறிவித்தே
துன்னிய வெண் முதிரைக் குலம் ஓர் புடை தூர்த்திட்டாள்
பின்னரும் வேண்டுவ யாவையும் நல்கினள் பெருமாயை.
55
   
2366.
மூவகை ஆயிரம் யோசனை எல்லையின் முரண்
                                 வேள்விக்கு
ஆவன நல்கினள் போதலும் யாய் செயலது நோக்கி
ஓவிது யாரின் முடிந்திடும் வேண்டுவ உய்த்தாளே
ஏவரும் எண்ண இவ்வேள்வி இயற்றுவன் இனி என்றான்.
56
   
2367.
ஊன் புகு பல்வகை ஆவியும் ஈண்டிய உலகு எல்லாம்
தான் புகு தன் விறல் காட்டிய நாட்டிய தாணுப் போல்
மேல் புகு சூரன் நடுத்திகழ் வேதியின் மிகு நாப்பண்
வான் புகு வச்சிரக் கம்பம் நிறீஇயினன் வலிதன்னால்.
57
   
2368.
வச்சிர கம்பம் நிறீஇயின பின்னர் மகம் போற்றும்
நொச்சியின் நால் திசை வாயில் தொறும் தொறும்
                          நொய்தில் போய்
அச்சு உறு வீர மடந்தையை உன்னி அருச்சித்துச்
செச்சைகள் ஆதிய ஊன்பலி நல்குபு செல்கின்றான்.
58
   
2369.
செல்லும் சூரன் நொச்சியின் நாப்பட் செறிகின்ற
கல்லென் வெம் சொல் பூதர் தொகைக்கும் கணம் என்றே
சொல்லும் பேயின் பல்குழுவுக்கும் சோர்வு இன்றி
ஒல்லும் பான்மை ஊன்பலி யாவையும் உதவுற்றான்.
59
   
2370.
சீற்றத் துப்பில் காளிகளுக்கும் தென்பாலில்
கூற்றைக் காயும் வயிரவர் தங்கள் குழுவுக்கும்
ஏற்றத் தோடும் அர்ச்சனை செய்தே இனிதாகப்
போற்றிப் போற்றி ஊன்பலி வேண்டுந புரிகுற்றான்.
60
   
2371.
சூழாம் எட்டே ஆயிர வேதி தொறு நாப்பட்
காழார் நஞ்சின் இந்தனம் இட்டுக் கனல் மூட்டித்
தாழாமே தன் தம்பிய ரோடும் தகு சூரன்
ஊழால் நாடு உற்று ஊனவி வர்க்கம் உற நேர்ந்தான்.
61
   
2372.
நேரும் தோறும் எந்தை தன் நாம நெறி செப்பிச்
சேரும் அன்பால் அன்ன அவன்பால் செல உய்த்துச்
சூரன் பின்னர் இம்மகம் ஆற்றும் தொழில் வல்லோன்
ஆர் என்று உன்னித் தாரகனைப் பார்த்து அறைகின்றான்.
62
   
2373.
ஏற்றம் சேர் இவ் வேதிகள் தோறும் இறை தாழாது
ஊற்றம் கொண்டே ஏகினை வேள்வி உலவாமல்
ஆற்றும் தன்மை வல்லவன் நீயே அது வல்லே
போற்று இங்கு என்னாக் கூறி நிறுத்திப் போகு உற்றான்.
63
   
2374.
அப்பால் ஏகி நூறுடன் எட்டாம் அகல் வேதி
துப்பால் எய்தி முன்னவையே போல் தொடர் வேள்வி
தப்பாது ஆற்றிச் சீய முகத்தோன் தனை நோக்கி
இப்பால் உற்றிம் மாமகம் ஆற்றாய் இனிது என்றான்.
64
   
2375.
தெரிய இன்னணம் செப்பி அவுணர் கோன்
அரியின் மா முகத்தானை அவண் நிறீஇப்
பெரிது நள்ளுறு பெற்றியில் செய்ததன்
உரிய வேதியின் ஒல்லையின் மேவினான்.
65
   
2376.
வேதி எய்தி விதி உளி அர்ச்சனை
யாதும் ஓர் குறை இன்றி இயற்றியே
மாது ஒர் பங்கு உடை வள்ளலை உன்னியோர்
ஏதில் வேள்வி இயற்றுதல் மேயினான்.
66
   
2377.
நஞ்சு பில்கு நவை உடைத் தாருவின்
விஞ்சு சாகை வியன் துணி யாவையும்
புஞ்ச மோடு பொருக்கு என வேதியில்
துஞ்சிடும் வகை சூரனும் தூவினான்.
67
   
2378.
ஆலம் ஆகி அமர் தருவின் ஞெலி
கோலின் ஆக்கிய கொந்தழல் இட்டு முன்
ஏலம் ஊட்டி இழுது எனும் மா மழை
சீல மந்திரத்தோடு சிதறினான்.
68
   
2379.
அன்ன அதன் பினர் அம் பொன் குழிசிகள்
துன்னு கின்ற துணி படும் ஊன் தொகை
வன்னியின் கண் மரபின் நின்று உய்த்தனன்
செந்நிறக் குருதிக் கடல் சிந்தியே.
69
   
2380.
செய்யது ஓர் மகச் செம் தழல் மீமிசைத்
துய்ய ஓதனம் சொல் முறை தூர்த்தனன்
நெய்யும் எண்ணெயும் நீடிய சோரியும்
வெய்ய பாலும் ததியும் விடுத்து மேல்.
70
   
2381.
மேன சாலியின் வெண் பொரியின் குவை
ஆன நல்கி அழிதரும் ஈற்றினில்
வான் உலாய மறி கடலாம் எனத்
தேனும் ஆலியும் தீ மிசைச் சிந்தியே.
71
   
2382.
தோரை ஐவனம் சூழ் தடத்து உற்ற நீ
வாரம் எனல் இறும் கொடு மற்றவும்
மூரி எள்ளு முதிரையின் வர்க்கமும்
சேர உய்த்தனன் நெய்க்கடல் சிந்தினான்.
72
   
2383.
கொடிய ஐயவி கூர் கறி ஆதியாப்
படியில் வெய்ய பல பொருள் யாவையும்
நெடிதும் ஓச்சினன் நேயம் அது ஆகிய
கடலை வன்னி கவிழ்த்தனன் என்பவே.
73
   
2384.
இன்ன பல்வகை யாவும் இயல்பினால்
பொன் உலாம் சடைப் புண்ணியன் தன்னையே
முன்னி வேள்வி முயன்றனன் ஞாலம் மேல்
துன்னு சீர்த்தியன் சூரபன் மா என்பான்.
74
   
2385.
சூரனாம் அவன் அவ்வழிப் பெரும் வளம் சுட்டி
வீரவேள்வியை வேட்டலும் செம் தழல் விரைவின்
ஆரும் அச்சம் உற எழுந்து மீச் சென்றன அடுதீப்
பாரை நுங்கி வான் உலகு எலாம் உண எழும் பரிசின்.
75
   
2386.
வானம் புக்கு அது மாதிரம் புக்கு அது மலரோன்
தானம் புக்கது எவ் உலகமும் புக்கது தரைக் கீழ்
ஏனம் புக்கு முன் நாடரும் கழலினால் இயற்றும்
கானம் புக்கது ஓர் வேள்வியின் எழும் கொழும் கனலே.
76
   
2387.
பானுவின் பாதம் சுட்டது பனி மதி பதமும்
மீன் எனும் படி நின்றவர் பதங்களும் மேலோர்
போன மேக்கு உயர் பதங்களும் சுட்டது புலவோர்
கோன் உறும் பதம் சுட்டது வேள்வியின் கொடும் தீ.
77
   
2388.
செற்று வாசவன் பதந்தனைச் சுட்ட பின் சேண்போய்
மற்றை மேலவர் பதம் எலாம் சுட்டது மருங்கில்
சுற்று பாலர் தம் புரங்களும் சுட்டது சூரன்
அற்றம் இல் வகை ஆற்றிய வேள்வி உள் அனலே.
78
   
2389.
காலம் எண் இல தவம் புரி காசிப முனிவன்
பாலன் ஈண்டையில் வலியினோர் மகம் அது பயில
ஏல நீடு தீ உலகு எலாம் உருக்கியது என்னில்
மேலவன் செய்யும் பரிசு எலாம் யாவரே விதிப்பார்.
79
   
2390.
கார் மறைத்தன கதிர் மதி மறைத்தன கரியோன்
ஊர் மறைத்தன அயன் பதம் மறைத்தன உலவா
நீர் மறைத்தன நெருப்பையும் மறைத்தன நீடும்
பார் மறைத்தன இடை இடை எழும் புகைப் படலை.
80
   
2391.
சொற்ற வேதி இவ் இயற்கையால் எரிந்தது சூரன்
பிற்றை யோர்கள் தம் எட்டு நூறு ஆயிர பேதம்
உற்ற வேதிகள் யாவையும் எரிந்தன ஒருங்கே
முற்றும் வன்னிகள் இறுதி நாள் உலகின் மொய்த்து
                                    எனவே.
81
   
2392.
வேள்வி இத்திறம் சூர் புரி தன்மையை விரைவில்
கேள்வியால் உணர் இந்திரன் அச் செயல் கேடு
சூழ நாடினன் முடிப்பரும் தன்மையில் துளங்கி
ஆழ்வது ஓர் துயர்க் கடல் இடை அழுந்தினன்
                              அயர்ந்தே.
82
   
2393.
சூன் முகக் கொண்டல் மேனியும் முனிவரர் தொகையும்
நான் முகத்தனும் சூரபன் மன் செயல் நாடிப்
பான்மை மற்று இது யாவரே புரிவர் இப் பதகன்
மேன்மை பெற்றிட முயன்றனன் கொல் என வெருண்டார்.
83
   
2394.
இந்த வண்ணத்தின் ஒரு பதினாயிரம் யாண்டு
முந்து சூர் தனது இளைஞரோடு அருமகம் முயல
அந்தி வார் சடைக் கண்ணுதல் நின் மலன் அவன் பால்
வந்திலான் அது தேர்ந்தனன் நிருதர் கோன் மாதோ.
84
   
2395.
கண் நுதல் பரன் அருள் செயாத் தன்மையை கருத்தில்
எண்ணி இச் செயற்கு உறுவனோ சிவன் என இசையாப்
பண்ணும் அத் தொழில் பின்னவர் தங்கள் பால் பணித்து
விண்ணகத்தின் மீச் சென்றனன் கடவுளர் வெருவ.
85
   
2396.
வானகத்து இடை நிற்புறு சூரபன்மா ஆம்
தானவர்க்கு இறை வாள் கொடே ஈர்ந்து தன் மெய்யின்
ஊன் அனைத்தையும் அங்கி மேல் அவி என ஓச்சிச்
சோனை ஒத்த தன் குருதியை இழுது எனச் சொரிந்தான்.
86
   
2397.
சோரி நெய்யவா ஊன்களே அவியவாச் சூரன்
வீர மா மகம் புரி உழித் தனது மெய்ம் மிசை ஊன்
ஈர ஈரவே முன்னையின் வளர்தலும் இது கண்டு
ஆரும் அச்சு உறத் தெழித்தனன் விம்மிதம் ஆனான்.
87
   
2398.
சிந்தையில் பெரு மகிழ்ச்சியன் ஆகி இச் செய்கை
எந்தை அற்புறு நிலையதோ என மனத்து எண்ணா
மந்தரப் புய நிருதர் கோன் பின்னும் அம்மரபால்
அந்தரத்து இடைத் தசைப் பெரு வேள்வியை அயர்ந்தான்.
88
   
2399.
ஆண்டு ஒர் ஆயிரம் இம்மகம் அந்தரத்து இயற்ற
நீண்ட மாலுடன் நான்முகன் தேட அரும் நிமலன்
ஆண்டும் வந்திலன் சூரன் அத்தன்மை கண்டு அழுங்கி
மாண்டு போவதே இனிக் கடன் என மனம் வலித்தான்.
89
   
2400.
உன்னி இத்திறம் சூரபன்மா எனும் ஒருவன்
வன்னி சுற்றிய ஆதி குண்டத்து இடை வதிந்து
செம் நிறத்ததாய் ஆணையால் அங்கியில் சிதையாக்
கொன்னுனைத் தலை வச்சிர கம்பம் மேல் குதித்தான்.
90
   
2401.
கடிதின் உச்சிநின்று உருவியே வச்சிர கம்பத்து
அடிதனில் சென்று சூரபன்மன்மா எனும் அவுணன்
படிவம் உற்று நுண் துகள் உற உளம் பதை பதைத்து
முடிய மற்றது கண்டனன் மடங்கல் மா முகத்தோன்.
91
   
2402.
கண்ட காலையின் உளம் பதை பதைத்தது கண்கள்
மண்டு சோரிநீர் கான்றன கரங்களும் வாயும்
குண்ட வேள்வியில் தொழில் மறந்து இட்டன குறிப்போர்
உண்டு போலும் என்று ஐயுற ஒதுங்கியது உயிரே.
92
   
2403.
துயர்ப் பெரும் கடல் நடு உற ஆழ்ந்து தொல் உணர்ச்சி
அயர்த்து மால் வரை யாம் எனம் அறிந்தனன் அறிவு
பெயர்த்தும் வந்து உழிப் பதை பதைத்து அலமந்து                                      பெரிதும்
உயிர்த்து வாய் திறந்து அன்னவன் புலம்புதல் உற்றான்.
93
   
2404.
மாயை தரும் புதல்வா மா தவம் செய் காசிபற்கு
நேயம் உருகா நிருதர் குலத்து இறைவா
காயம் உடன் நின்னை யான் காணேனால் எங்கு                                   ஒளித்தாய்
தீய மகம் பல நாள் செய்து பெற்ற பேறு இதுவோ.
94
   
2405.
தாயும் தலை அளிக்கும் தந்தையும் நீ தானவரை
ஆயும் தலைவனும் நீ ஆவியும் நீ என்று இருந்தோய்
நீ அங்கு அதனை நினையாது இறந்தனையே
மாயும் சிறியோர்க்கு மற்று இங்கு ஓர் பற்று உண்டோ.
95
   
2406.
வீரனே தானவர்க் குள் மிக்கோனே மிக்க புகழ்ச்
சூரனே நின்போல் தொடங்கி இந்த வேள்விதனை
ஆர் அனேகம் வைகல் ஆற்றினார் ஆற்றிய நீ
ஈர நேயம் கொள்ளாது எம்மை அகன்று ஏகினையே.
96
   
2407.
நின் கண் அருள் இல்லா நீர்மை உணராய் பல் நாள்
புன் கண் உறுவாய் புரம் மூன்று முன் எரித்த
வன் கணரைக் குறித்தே மாமகம் செய்தாய் அதற்கோ
உன் கண் உளதாம் உயிர் அதனையும் கொண்டனரே.
97
   
2408.
உன்போலுயிர் விட்டு உயர் மகம் செய்தோரும் அரன்
தன் போல் அருளாத் தகைமையரும் ஆங்கு அவை                                        கண்டு
என் போல் உயிர் கொண்டு இருந்தோரும் இல் இவருள்
அன்பு ஓடிய மனத்து வன் கண்ணர் ஆர் ஐயா.
98
   
2409.
ஈசன் அருளால் எரி வேள்வியை ஓம்பிப்
பேச அரிய வன்மை தனைப் பெற்று நமது உயிரும்
ஆசு இல் வளனும் அகற்றுவர் என்றே அயர்ந்த
வாசவனும் இன்றோ மனக் கவலை தீர்ந்ததுவே.
99
   
2410.
எல்லாரும் போற்ற எரி வேள்வியை ஓம்பிப்
பல்லாயிரம் நாள் பழகி எமக்கும் இது
சொல்லாது இறந்தாய் துணைவராய் நம் உடனே
செல்லார் இவர் என்று சிந்தை தனில் கொண்டனையோ.
100
   
2411.
ஈண்டாரும் காண எரியின் இடைத் தம்பம் மிசை
வீண்டாய் உயிர் போய் விளிந்தாய் மிகும் வன்கண்
பூண்டாய் நின் மெய்யும் ஒளித்தாய் புலம்பும் யாம்
மாண்டாலும் உன்றன் மதி வதனம் காண்போமோ.
101
   
2412.
என்று இன்னன சொற்று இரங்கி அரிமுகத்தோன்
முன் தன்னை நல்கி முலை அளிக்கும் தாய் காணாக்
கன்று என்னத் வீழ்ந்து அழுங்கக் கண்டு அதனைத்                                     தாரகனும்
குன்று என்னத் தன் கை குலைத்து அரற்றி வீழ்ந்தனனே.
102
   
2413.
வீழ்ந்தான் உயிர்த்தான் அவ் வேள்விக் களம் முற்றும்
சூழ்ந்தான் புரண்டான் துளைக்கையினால் நிலத்தைப்
போழ்ந்தான் எனவே புடைத்தான் துயர்க் கடலுள்
ஆழ்ந்தான் விண் அஞ்ச அரற்றினான் தாரகனே.
103
   
2414.
சிங்க முகனும் திறல் கெழுவு தாரகனும்
தம் கண் முதல்வன் தவறு உற்றது நோக்கி
அங்கண் அரற்ற அது கண்ட தானவர்கள்
பொங்கும் கடல் போல் பொருமிப் புலம்பினரே.
104
   
2415.
தாரகனும் சீயத் தனி வீரனும் அவுணர்
ஆரும் நெடிதே அரற்றும் ஒலி கேளாச்
சீரில் வியன் உலகில் தேவர் கோன் தன் ஒற்றால்
சூரன் மகத்தீயில் துஞ்சும் செயல் உணர்ந்தான்.
105
   
2416.
தண்டார் அகலச் சதமகத்தோன் தானவர் கோன்
விண்டான் எனவே விளம்பும் மொழி கேளா
அண்டா மகிழ்ச்சி எனும் ஆர் கலியில் பேர் அமுதம்
உண்டான் எனவே தன் உள்ளம் குளிர்ந்தனனே.
106
   
2417.
சிந்தை குளிர்ந்து செறியும் உரோமம் சிலிர்த்து
முந்து துயரம் முழுதும் தொலைத்து எழுந்து
வந்து புடை சூழும் வானோருடன் கடவுள்
தந்தி மிசை எய்தித் தனது உலகம் நீங்கினனே.
107
   
2418.
பொன் உலகம் நீங்கிப் புரைதீர் மதிக் கடவுள்
தன் உலகம் நீங்கிப் தபனன் பதம் கடந்து
துன்னும் அவுணர் துயரும் செயல் காண்பான்
மின் உலவு மேக வியன் பதத்தில் வந்தனனே.
108
   
2419.
விண் நாடர் தங்களுடன் வேள்விக்கு இறை விசும்பின்
நண்ணா மகிழா நகையாத் தன் நல் தவத்தை
எண்ணா வியவா இரங்கும் அவுணர் தமைக்
கண்ணார நோக்கிக் களிப்புற்று நின்றனனே.
109
   
2420.
நின்றதொரு காலை நிருதர் உடன் அரற்றித்
துன்று துயர் மூழ்கிச் சோர்கின்ற சீயமுகன்
நன்று என் உயிர் போக நான் இருப்பதே இங்ஙன்
என்று கடிது மனத்து எண்ணி எழுந்தனனே.
110
   
2421.
அன்ன திறல் அவுணன் ஆயிரம் என்று உள்ள அகன்
சென்னி பலவும் தனது செம்கை வாளால் ஈர்ந்து
முன்னம் முதல்வன் முயன்ற பெருவேள்வி
வன்னி அதனுள் மறம் பேசி இட்டனனே.
111
   
2422.
ஈர்ந்து தலைகள் எரியில் இடும் முன்னர்ச்
சேர்ந்த அனையான் சிரங்கள் அவை முழுதும்
பேர்ந்தும் அரிந்து பிறங்கு தழலின் இடை
நேர்ந்து தனி நின்றான் நிருதர்க்கு இறையோனே.
112
   
2423.
முன்னோன் எழுந்து முயலும் செயல் நோக்கிப்
பின்னோன் தனது பெரும் சிரமும் தான் கொய்து
மன்னோன் மகம் இயற்றும் வான் தழலின் உள் இட்டான்
அன்னோ எனவே அவுணர் குழு இரங்க.
113
   
2424.
சென்னி தனை அரிந்து செம் தழலின் நாப்பண் இடு
முன்னம் அது போல் வேறே முளைத்து எழலும்
பின்னும் அனையான் அப் பெற்றி தனையே புரிய
அன்ன படிகண்ட அவுணர் தமில் சிலரே.
114
   
2425.
தங்கள் சிரமும் தனிவாளினால் துணியா
அங்கி மிசை இட்டும் அதன் கண் உற வீழ்ந்தும்
அங்கி உயிர் அதனை மாற்றிடலும் சூரன் போல்
சிங்க முகனும் எரிசெல்லத் துணிந்தனனே.
115
   
2426.
மோனத்தின் வேள்வி முயன்றது ஒரு முன்னவன் போல்
வானத்து எழுவான் வலித்து மனம் கொண்டிடலும்
கானக் கடுக்கை கலை மதி சேர் செய்ய சடை
ஞானப் பொடி புனையும் நாதன் அது கண்டனனே.
116