வரம் பெறு படலம்
 
2427.
கண்ட கறை மிடற்றுக் கண்ணுதலோன் சுந்தரனை
விண்டு முதலோர் வியப்பவே வெண்ணெயில் ஆட்
கொண்ட ஒரு பனவக் கோலம் தனைத் தரித்துத்
தண்டும் ஒரு கை தனில் ஊன்றி வந்தனனே.
1
   
2428.
அங்கண் மகவேதி அணித்தாகவே குறுகிச்
சிங்க முகனைச் சிவபெருமான் கண் உற்றே
இங்கு மிக நீர் எவரும் இரங்கு கின்றீர்
நுங்கள் பரிசு நுவலும் என மொழிந்தான்.
2
   
2429.
எந்தை பெருமான் இயம்ப அது நாடித்
தந்தை அனையார் தமியேம் துயர் கண்டு
வந்து வினவுகின்றார் மற்று இங்கு இவர் அருள் சேர்
சிந்தையினர் என்று சீயமுகன் உன்னினனே.
3
   
2430.
உன்னி அமலன் உகள மலர்ப் பதம் மேல்
சென்னி பலவும் செறியப் பணிந்து எழுந்து எம்
இன்னல் வருவாயும் எமது வரன் முறையும்
பன்னி இடுவன் எனவே பகர்கின்றான்.
4
   
2431.
தந்தை ஆவான் காசிபனே தாயும் மாயை தான் என்பான்
மைந்தர் யாங்கள் ஒருமூவர் மக்கள் பின்னும் பலர்                                     உண்டால்
எம் தம் அன்னை பணி தன்னால் யாங்கள் ஈசன்                                     தனக்காக
இந்த வனத்தில் மூவரும் இவ் வேள்வி தன்னை                                     இயற்றினமே.
5
   
2432.
அங்கு அப்பரிசே யாண்டுபல அகல மகத்தை ஆற்றிடவும்
கங்கைச் சடையோன் முன் நின்று கருணை சிறிதும்                                 செய்திலன் ஆல்
எங்கட்கு எல்லாம் முன்னவன் ஆம் இகல் வெம் சூரன்                                 அது நாடி
மங்குல் செறியும் வானில் போய் வாளால் தசை                                 ஈர்ந்திட்டனனே.
6
   
2433.
மின் போல் இலங்கும் வாளால் தன் மெய்யின் தசைகள்                                 ஈர்ந்து உளத்தில்
துன்போர் இறையும் இல்லாத சூரன் மகத் தீ மிசை இடலும்
முன் போல் தன் ஊன் வளர்ந்திடவே பின்னும் அஃதே                               முயன்று அதன் பின்
தன் போல் ஒளிர்வச் சிரகம்பத் தலை வீழ்ந்து உருவித்                               தழல் புக்கான்.
7
   
2434.
புக்கு முன்னோன் ஈறு ஆகிப் போந்த காலை யாங்கண்டு
மிக்க மனத்தில் துயர் கொண்டு வெருவிப் புலம்பி எமது                                     உயிரும்
ஒக்க விடவே நினைந்தேம் ஆல் உம்மைக் கண்டோர்                              இறை தாழ்த்தோம்
தக்கது இது நம் வரன் முறையும் தமியேம் துயரம் என                                   மொழிந்தான்.
8
   
2435.
மொழிந்த காலை அங்கண் நின்ற முக்கண் இறை நும்                              முன்னோன் போல்
ஒழிந்து நீரும் மாயாதே உமது சூரன் தனை இன்னே
அழிந்த தீ உள் நின்று எழுவித்து அருள் செய்கின்றாம்                              அது காண்டிர்
கழிந்த சோகம் விடுதிர் எனாக் கங்கை தன்னை                              நினைந்தனனே.
9
   
2436.
முன்னாள் அம்மை அங்குலியின் முளைத்த கங்கை தனில்                                   எம்கோன்
மின்னார் சடையில் கரந்தனவே அன்றி மகவான்                               விரிஞ்சன் மால்
என்னா நின்ற மும்மையின் ஓர் இருக்கை தோறும்                               அளித்து அவற்றுள்
பொன் நாட்டு இருந்த நதி தன்னைப் புந்தி மீதில்                               உன்னினனே.
10
   
2437.
மாயோன் தன்பால் முன் கொண்ட வலிசேர் தண்டம்                                   ஏந்திவரும்
தூயோன் உன்ன அக்கங்கை துண் என்று உணர்ந்து                           துளங்கி விண்ணோர்
ஆயோர் எவரும் வெருக் கொள்ள அளப்பு இல் முகம்                       கொண்டு ஆர்த்து எழுந்து
சேயோர் எல்லாம் அணித்து ஆகத் திசையோர் அஞ்சச்                                சென்றதுவே.
11
   
2438.
மேல் ஆகிய விண் உலகு அனைத்தும் விரைவில் கடந்து                                  மேதினியின்
பாலாய் எங்கள் பிரான் பதங்கள் பணிந்து பணியால் படர்                                  செம் தீ
ஏலா நின்ற நடுக் குண்டத்து இடையே புகலும் எறிகடல்                                  வாய்
ஆலாலம் வந்து உதித்தது என அவுணர் கோமான்                              ஆர்த்து எழுந்தான்.
12
   
2439.
தொன்மை போல வேதியினில் சூரபன்மாத் தோன்றலும்                                        அத்
தன்மை கண்ட அரிமுகனும் தாரகப் பேர் வீரனும் ஆய்
இன்மை கொண்டோர் பெரும் வளம் பெற்று என்ன மகிழ்                              உற்று எல்லை இலா
வன்மை எய்திக் கடிது ஓடி மன்னன் பதமேல்                                  வணங்கினரே.
13
   
2440.
தம் கோன் தன்னைப் பின்னோர்கள் தாழும் செயலைத்                                   தானவர்கண்டு
எங்கோன் வந்தான் வந்தான் என்று எவரும் கேட்ப                                 எடுத்து இயம்பிப்
பொங்கு ஓதம் சேர் கடல் மதியப் புத்தேள் வரவு கண்டது                                      என
அம் கோதையினால் வாழிய என்றவனைப் போற்றி                                ஆர்த்தனரே.
14
   
2441.
எண் மேல் கொண்ட நிருதர் குழாம் ஏத்த எரி நின்று எழு                                          சூரன்
மண் மேல் கொண்ட திறம் காணூஉ வானோர் தொகையும்                                       மகபதியும்
விண் மேல் கொண்ட புயல் கண்ட வியன் கோகிலம்                               போல் வெருவித்தம்
முன் மேல் கொண்ட செல்லல் ஒடும் ஓடித் தம் ஊர்                                     உற்றனரே.
15
   
2442.
அரந்தை தனை இகந்த இரு துணைவர்களும் பாங்கர் உற                                  அவுணர் சேனை
பரந்து பல வாழ்த்து எடுப்பச் சூரபன்மன் திகழ் வேலை                                  படியும் வானும்
நிரந்த புனல் கங்கை தனை வருவித்து மறையவன் போல்                                  நின்ற எம்மான்
கரந்து தனை உணர்கின்ற உருவினோடு தோன்றினன்                               ஆல் ககனம் மீதே.
16
   
2443.
நாரி பாகமும் இமையா முக்கண்ணும் திருப்புயங்கள்                                  நான்கும் ஆகி
மூரி மால் விடை மேல் கொண்ட எம் பெருமான்                        மேவுதலும் உன்னி நோக்கிப்
பாரின் மீ மிசை வீழ்ந்து பணிந்து எழுந்து பலமுறையும்
                                 பரவிப் போற்றிச்
சூரன் ஆராத பெரு மகிழ் சிறந்து துணைவரொடும்
                                தொழுது நின்றான்.
17
   
2444.
நின்று புகழ் சூரபன்மன் முகம் நோக்கி நமை உன்னி                                  நெடிது காலம்
வன் திறன் மாமகம் ஆற்றி எய்த்தனை ஆல் வேண்டுவது                           என் வகுத்தி என்னப்
பொன் திகழும் மலர்க் கமலப் பொகுட்டு உறைவோன்                          முதலிய புத்தேளிர் யாரும்
இன்று எமது தலைமை எலாம் போயிற்றால் என இரங்க
                             இதனைச் சொல்வான்.
18
   
2445.
கொன்னாரும் புவிப்பாலாய்ப் பல புவனம் கொண்ட                        அண்டக் குழுவுக்கு எல்லாம்
மன் ஆகி உறல் வேண்டும் அவை காக்கும் தனி ஆழி                        வரலும் வேண்டும்
உன்னா முன் அவை அனைத்தும் செல்லுவதற்கு                     ஊர்திகளும் உதவல் வேண்டும்
எந் நாளும் அழியாமல் இருக்கின்ற மேனியும் எற்கு ஈதல்                              வேண்டும்.
19
   
2446.
அலை ஆழி மிசைத் துயில் கூர் பண்ணவனே                     முதலோர்கள் அமர் செய்தாலும்
உலையாது கடந்திடு பேர் ஆற்றலொடும் பல படையும்
                               உதவல் வேண்டும்
தொலையாமே எஞ்ஞான்றும் இருந்திடலும் வேண்டும்                         எனச் சூரன் வேண்டக்
கலையார் வெண் மதி மிலைச்சும் செம் சடிலத் தனிக்                         கடவுள் கருணை செய்வான்.
20
   
2447.
மண் தனக்கு ஆயிரம் கோடி அண்டங்களுள் உளவாகும்                                  மற்று அவற்றுள்
அண்டம் ஓர் ஆயிரத்து எட்டு நூற்று எட்டு ஆள்க என                                  அருளால் நல்கி
எண் தொகை பெற்றிடு கின்ற அவ் அண்டப் பரப்பு                           எங்கும் ஏகும் வண்ணம்
திண் திறல் பெற்றிடுகின்ற இந்திர ஞாலம் அது என்னும்                                  தேரும் நல்கி.
21
   
2448.
எண்ணு பல புவனங்கள் கொண்ட அண்டத் தொகை                          தன்னை என்றும் போற்றக்
கண்ணனது நேமியினும் வலிபெறும் ஓர் அடல் ஆழி
                                 கடிதின் நல்கி
அண்ணல் உறு சின வேற்றுக் கோளரி ஊர்தியும் நல்கி
                                 அகிலத்து உள்ள
விண்ணவர்கள் யாவருக்கும் அன்று முதல் முதல்வனாம்
                                 மேன்மை நல்கி.
22
   
2449.
மேல் திகழும் வானவரைத் தானவரை ஏனவரை வெற்றி                                  கொள்ளும்
ஆற்றலொடு பெருந்திறலும் பாசு பத மாப்படையே ஆதி
                                 ஆகித்
தோற்றம் உறு கின்ற தெய்வப்படை அனைத்தும் எந்
                          நாளும் தொலைந்திடாமல்
ஏற்றம் மிகும் வச்சிரம் ஆகிய மணி மேனியும் உதவி
                                 இதற்குப் பின்னர்.
23
   
2450.
ஆறு சேர் கங்கை தனை விண் உலகு தனில் ஏவி                                  அக்கங்கைக்கும்
கூறுசேர் பெருவேள்விச் செம் தழற்கும் தோற்றம் எய்திக்
                                 குலவும் வண்ணம்
வீறு சேர் பெரும் கடல் போல் ஒரு பதினாயிரம் கோடி
                                 வெள்ளம் ஆகும்
தாறு பாய் கரி திண் தேர் வயப்புரவி அவுணர் எனும்
                                 தானை நல்கி.
24
   
2451.
துன்னுறு பெரும் புகழ்ச் சூரபன்மனுக்கு
இன்னதோர் அருள் புரிந்திட்ட எல்லையில்
அன்னவற்கு இளைஞர் வந்து அடி பணிந்து எழத்
தன் நிகர் இல்லதோர் தலைவன் கூறுவான்.
25
   
              வேறு
 
2452.
சூரன் என்பவன் தோள் இணை போலவே
வீரம் எய்தி விளங்கி நூற்று எட்டு உகம்
சீரின் மேவுதிர் தேவர்கள் யாரையும்
போரில் வென்று புறம்தரக் காண்டிரால்.
26
   
2453.
தேவர் யாவரும் சென்று தொழப்படும்
மூவர் ஆகி மொழிந்திடும் நுங்களைத்
தாவிலாத நம் சத்தி ஒன்றே அலால்
ஏவர் வெல்பவர் என்று விளம்பி மேல்.
27
   
2454.
ஈறு உறாத விரதமும் தன் பெயர்
கூறு தெய்வப் படையும் கொடுத்திடா
வேறு வேறு மிக அருள் செய்து மேல்
ஆறு சேர் சடை ஆண் தகை ஏகினான்.
28