அண்ட கோசப் படலம்
 
2506.
தீயதோர் இனைய மாற்றம் செப்பலும் இது நன்று எந்தை
ஏயின பணியில் நிற்பன் இறையவன் எனக்குத் தந்த
ஆயிரத்து எட்டு என்று ஓதும் அண்டங்கள் நிலைமை
                                       யாவும்
நீ உரை என்ன ஆசான் நிருபனுக்கு உரைக்கல் உற்றான்.
1
   
2507.
மேல் உள பொருளும் தத்தம் விளைவது நிற்க இப்பால்
மூலம் ஆம் பகுதி தன்னின் முளைத்திடும் புந்தி புந்தி
ஏல் உறும் அகந்தை ஒன்றின் எய்தும் ஐம் புலனும்
                                    ஆங்கே
வாலிய ககனம் தொட்டு மா நிலம் காறும் வந்த.
2
   
2508.
அப்பெரும் புவிக்குத் தான் ஓர் ஆயிர கோடி அண்டம்
ஒப்பு இல என்ன உண்டால் ஒன்றினுக்கு ஒன்று மேலாச்
செப்பு உறு நிலைமைத்து அன்று தெரிந்திடில் பரந்து
                                     வைகும்
வைப்பு எனல் ஆகும் அன்ன மற்று அவை அம்
                              பொன் வண்ணம்.
3
   
2509.
அங்கண் மா ஞாலத்து அண்டம் ஆயிரம் கோடி தன்னில்
இங்கு நீ பெற்ற அண்டம் ஆயிரத்து எட்டின் உள்ளும்
துங்கம் ஆம் அண்டம் ஒன்றின் இயற்கையைச்
                              சொல்லுகின்றேன்
செம் கை சேர் நெல்லி என்னச் சிந்தையில் காண்டி
                                     அன்றே.
4
   
2510.
கதிர் எழு துகள் எண் மூன்று கசாக் கிரகம் தான் ஆகும்
இது தொகை இரு நான்கு உற்றது இலீக்கை அவ்
                               இலீக்கை எட்டால்
உதி தரும் யூகை அன்ன யூகை எட்டி யவை என்ப
அதின் இரு நான்கு கொண்டது அங்குலத்து அளவை
                                        ஆமே.
5
   
2511.
அங்குலம் அறு நான்கு எய்தின் அது கரம் கரம் ஓர்
                                     நான்கு
தங்குதல் தனு என்று அகும் தனு இரண்டு அது ஓர்
                                    தண்டம்
இங்கு உறு தண்டம் ஆன இராயிரம் குரோசத்து
                                    எல்லை
பங்கம் இல் குரோசம் நான்கு ஓர் யோசனைப் பாலது
                                      ஆமே.
6
   
2512.
அந்த யோசனையின் எல்லை ஐம்பதிற்று இரண்டு கோடி
வந்தது இவ் அண்டத்திற்கும் மா இரும் பரவை வைப்பும்
முந்திய நிவப்பும் ஆகும் மொழிந்திடும் அண்டங் கட்கும்
இந்த வாறு அளவைத்து என்றே எண்ணுதி இலை
                               கொள் வேலோய்.
7
   
2513.
ஒண் புவனிக்குக் கீழாம் யோசனை ஐம்பான் கோடி
திண் புவி தனக்கு மேலாய் சேர்தரும் அளவும் அஃதே
மண் புகழ் மேருவுக்கு மாதிரம் அவை ஓர் எட்டும்
எண் படும் ஐம்பான் கோடி கடாகத்தின் எல்லை யோடும்.
8
   
2514.
அண்டமார் கடம் ஓர் கோடி அதற்கு மீதினில் ஓர் கோடி
திண் திறல் காலச் செந்தீ உருத்திரர் செம் பொன் கோயில்
ஒண் தழல் கற்றை உள்ளது ஒருபது கோடி மீக்கண்
கொண்டு எழு தூம எல்லை குணிக்கின் ஐங் கோடி ஆமே.
9
   
2515.
அரித்தவி சுயர்ச்சி ஆங்கு ஓர் ஆயிரம் அளவைத்து
                                     ஆகும்
பரத்தலும் அதற்கு இரட்டி படர்தரு காலச் செம் தீ
உருத்திரர் அழலின் மேனி யோசனை அயுதம் ஆகும்
திருத்தகு பலகை வாள் வில் செம் சரம் ஏந்திச் சேர்வார்.
10
   
2516.
ஓங்கிய காலச் செம்தீ உருத்திரர் தம்மைப் போல்வார்
ஆங்கு ஒரு பதின்மர் சூழ்வர் அன்னவர் ஏவல் ஆற்றிப்
பாங்கு உற ஒருபான் கோடிப் பரிசன மேவும் அன்னோர்
பூம் கழல் வழுத்தி ஆதி கமடம் அப் புவனம் வைகும்.
11
   
2517.
அன்னதோர் புவனம் மீக்கண் அடுக்கு உறு நிலைய
                                     வாகித்
துன் உறு நால் ஏழ் கோடி தொகைப்படு நிரயத்து
                                    எல்லை
உன்னதம் ஆன கோடி ஒன்று ஒழி முப்பான் மேலும்
பன்னிரண்டு இலக்கம் அண்டத்து அளவு உறும் பரப்பு
                                     மன்னோ.
12
   
2518.
உற்றிடு நிரய மீதில் ஒன்று இலா இலக்கம் நூறு
பெற்றிடும் உயர்வு தன்னில் பிறங்கும் ஓர் புவனம்
                                 கீழ் மண்
பற்றிய இரும்பு நாப்பண் பச்சிமம் பசும் பொன் சோதி
மற்று அதன் மேல் பாகத்தில் வதிவர் கூர்மாண்டர்
                                    என்போர்.
13
   
2519.
காழக முகத்தர் கூர் வாய்க் கணிச்சி அம் படைசேர்
                                     கையர்
ஊழி அம் கனலை அன்ன உருவினர் திரியும் கண்ணர்
மாழை அம் பீட மீக்கண் வைகு கூர் மாண்டர் தம்பால்
சூழ் உருத்திரர் ஆய் உள்ளோர் தொகுதியை அளக்க
                                    ஒணாதால்.
14
   
2520.
அப்புவனத்து மீதே அந்தரம் இலக்கம் ஒன்பான்
செப்புவர் அதனுக்கு உம்பர் சிறந்த பாதலங்கள் என்ப
ஒப்பு அறு பிலம் ஒன்றற்கே ஒன் பஃது இலக்கம் ஆக
இப்படி அறுபான் மூன்றாம் இலக்கம் ஏழ் பிலத்தின்
                                      எல்லை.
15
   
2521.
பரத்தினில் உறுங்கன் இட்ட பாதலம் எட்டு இலக்கம்
அரத்தினுக்கு அகற்சி வெவ்வேறு ஆயுதம் ஆம்
                             அவை முப்பாகம்
உரத்தகும் அவுணர் கீழ்பால் ஒள் எயிற்று உரகர்
                                   நாப்பண்
திருத்தகும் அரக்கர் மேல் பால் சிறந்து வீற்று இருந்து
                                   வாழ்வோர்.
16
   
2522.
இதன் மிசை இலக்கம் ஒன் பான் ஆடகர் இருக்கை
                                    ஆகும்
இதன் மிசை வெளி ஓர் கோடி இலக்கமும் இருபது
                                  உண்டால்
இதன் மிசைக் களிறு பாந்தள் எட்டுடன் சேடன் ஏந்தும்
இதன் மிசைப் புவியின் ஈட்டம் எண்பஃது இலக்கம்
                                    ஆமே.
17
   
2523.
ஈடு உறு பிலங்கட்கு எல்லாம் இறைவராய்ப் பாதுகாப்போர்
ஆடகர் தாமே நாகர் அவுணர் வாள் அரக்கர் அன்னார்
தாள் தொழு சனங்கள் அண்ட கடம் முதல் தரை ஈறு
                                       ஆகக்
கோடி ஓர் ஐம்பான் ஆகும் குணித்தனை கோடி அன்றே.
18
   
2524.
பல வகைப் பிலங்கட் கெல்லாம் பரம் அதாய் உற்ற
                                  தொல்பார்
உலகினுள் விரிவும் அங்கண் உள்ளவும் உரைப்பன்
                                    கேட்டி
குலவிய சம்பு சாகம் குசை கிரவுஞ்சம் கோது இல்
இலவு கோமேதகம் புட்கரம் இவை ஏழு தீவே.
19
   
2525.
பரவும் இவ் உலகில் உப்புப் பால் தயிர் நெய்யே கன்னல்
இரதம் ஆம் அது நீர் ஆகும் எழுகடல் ஏழு தீவும்
வரன் முறை விரவிச் சூழும் மற்று அதற்கு அப்பால்
                                   சொன்னத்
தரை அது சூழ்ந்து நிற்கும் சக்கர வாளச் சையம்.
20
   
2526.
அன்னதற்கு அப்பால் வேலைக்கு அரசனாம் புறத்தில்
                                       ஆழி
பின்னது தனக்கும் அப்பால் பேர் இருள் சேர்ந்த ஞாலம்
மன்னவ காண்டி அப்பால் வலி கெழும் அண்டத்தோடு
துன்னும் இப்பொருள்கள் யாவும் சூழ்ந்து கொண்டு
                              இருக்கும் அன்றே.
21
   
2527.
எல்லைத் தீர் முன்னைத் தீவு ஓர் இலக்கம் அம் கடலும்
                                        அற்றே
அல்லன தீவும் நேமி அதற்கு அதற்கு இரட்டி ஆகச்
சொல்லினர் ஆங்ஙன் கண்ட தொகை இருகோடி அன்றி
நல்லதோர் ஐம்பான் மேலும் நான்கு எனும் இலக்கம்
                                        ஆமே.
22
   
2528.
ஐ இரு கோடி சொன்னத் தணி தலம் அது சூழ் நேமிச்
சையம் ஓர் அயுதம் ஆகும் சார் தரு புறத்தின் நேமி
எய்திய கோடி மேலும் இருபதோடு இலக்கம் ஏழாம்
மை இருள் சேர்ந்த பாரின் எல்லை மேல் வகுப்பன்
                                   மன்னோ.
23
   
2529.
ஆர் இருள் உலகம் முப்பான் அஞ்சு எனும் கோடி
                                    மேலும்
ஓர் ஒரு பத்து ஒன்பான் நூறு உற்ற நான்கு அயுதம்
                                     ஆகும்
பேர் இருள் சூழ்ந்த அண்டப் பித்திகைக் கனம் ஓர்
                                      கோடி
பார் இடை அகலம் தேரில் பாதி ஓர் ஐம்பான் கோடி.
24
   
2530.
நடை தரு தொன்நூல் ஆற்றான் நாம் புகல் கணிதம்
                                    தன்னை
உடையதோர் திசையே இவ்வாறு ஒழிந்த மாதிரத்தும்
                                   வைக்கின்
வடகொடு தென்றி கீழ்மேல் மற்றும் உள கோணம்
                                    முற்றும்
நொடிதரில் கோடி கோடி நூறு யோசனையது ஆமே.
25
   
2531.
முள் உடை மூலம் ஆன முண்டகத் தவின் மேய
வள்ளல் தன் வலது மொய்ம்பான் வந்த சாயம்பு மைந்தன்
அள் இலை வேல் கை நம்பி அன்பு உடை விரதன்
                                        ஞாலம்
உள்ளது ஓர் எல்லை முற்றும் ஒரு தனிக் குடையுள்
                                     வைத்தான்.
26
   
2532.
அங்கு அவன் தனது மைந்தர் அங்கி தீரன் மேல் ஆதி
துங்கம் ஆம் வபுட்டினோடு சோதிட்டுத் துதிமான்
                                     தொல்சீர்
தங்கும் அவ் வியனே மிக்க சவனன் ஆம் எழுவர் தாமும்
பங்கு கொண்டு ஏழுதீவும் பாது காத்து அரசு செய்தார்.
27
   
2533.
சீரிய சம்புத் தீபம் புரந்த அங்கிதீரன் என்போன்
                தான் அருளும் சிறுவர் ஆயோர்
பாரதன் கிம்புருடன் அரிகேது மாலன் பத்திரா சுவானன்
                         இளா விருதன் என்போன்
ஏர் உடைய இரமியன் நல் ஏமப் பேரோன் இயல்
       குருவாம் ஒன்பதின்மர் இவர்கள் பேரால்
ஓர் ஒருவர்க்கு ஒவ்வொன்றா நாவல் தீவை ஒன்பது
           ண்டம் அது ஆக்கி உதவினான் ஆல்.
28
   
2534.
விண் உயர் சம்புத் தீவின் நடுநின்ற மேருவரை செம்
                     கமலப் பொருட்டுப் போல
நண்ணும் அதற்கு யோசனை உன்னதம் எண் பத்து
    நான்கு உள ஆயிரம் ஆகும் ஞாலம் ஆழ்ந்த
தெண் இரண்டு ஆயிரம் சென்னி அகலம் முப்பான்
   இராயிரம் ஆம் பராரை எல்லை அதனில் பாதி
வண்ணம் மிகு மேகலை மூன்று அதனுள் உச்சி
   வாய்த்திடும் மேகலையினில் பல்சிகரம் மல்கும்.
29
   
2535.
மேரு வரை அதற்கு நடுப் பிரமன் மூதூர் மிக்க
         மனோவதி அதற்கு மேலைத் திக்கின்
நாரணன் வாழ் வைகுண்டம் வட கீழ் பாலின் நாதன்
         அமர் சோதிட்கம் திசைகள் எட்டும்
சீர் இயல் இந்திரன் முதலாம் எண்மர் தேயம் தெற்கு
         முதல் வடக்கு அளவும் மருங்கு தன்னில்
நேரியது ஓர் தேசம் அது செவ்வே போகும் நெடும்
         பூழை ஒன்று உளது நினைக மாதோ.
30
   
2536.
அந்த வரைக் கீழ்த் திசை மந்தரமாம் வெண்மை
   அதன் தெற்குக் கந்தமாதனம் பொன் மேல் பால்
சுந்தரமாம் விபுலம் நீலம் வடக்குச் சுபார்சுவம்
   மாதுளைப் போது கடம்பு சம்பு
நந்தியது ஓர் போதி ஆல் குணபால் ஆதி நால்
   திசையில் வரை மீது நிற்கும் நாவல்
முந்தும் இரண்டாயிரம் யோசனையாம் ஏனை
   முத்தருவும் இதில் பாதி மொழியும் எல்லை.
31
   
2537.
அத்தகைய கீழ்த்திசையில் அருணம் மேல் பால்
   அசிதோதம் தென் திசை மானதமே அல்லா
உத்தரத்தின் மா மடுநீர் நிலையாய் மேவும் உய்யானம்
   சயித்திரதம் குணக்கு வைகும்
வைத்த பெரு நந்தனம் தக்கிணத்தில் ஓங்கும்
   வைப்பிரசம் குடக்கு அமரும் வடாது பாங்கின்
மெத்து திரு தாக்கியம் உற்றிடும் இவ்வாறு மேரு
   வரைச் சாரல் இடை விரவும் அன்றே.
32
   
2538.
கடிகமழும் நாவல் ஒன்று தென்பால் நின்ற காரணத்தால்
                     பாரதன் தன் கண்டம் முற்றும்
இடன் உடைய நாவலந்தீவு எனப் பேர் பெற்றது இத்
              தருவின் தீம் கனி நீராறு ஆய் மேருத்
தடவரையைப் புடை சூழ்ந்து வடபால் சென்று சாம்பு
      நதப் பெயர் பெறும் அச்சல் இலம் துய்த்தோர்
உடல் முழுதும் பொன் மயமாய் அயுத மேலும் ஒரு
       மூவாயிரம் ஆண்டு அங்கு உறுவர் அன்றே.
33
   
2539.
நாற்றிசையில் வரைப் பரப்பு மேல் கீழ் தானும்
     நவின்றிடின் மேருவில் பாதி அதற்குக் கீழ்பால்
மாற்று அரிய மாலிய வான் மேல் பால் கந்த மாதனம்
                   தென் திசை நிசதம் ஏம கூடம்
ஏற்ற இமம் வடபால் நீலம் சுவேதம் இயல் சிருங்கம்
                  எட்டு வரை இவை ஆம் நீலம்
மேல் திகழ் பொன் மணி கனகம் பனியே நீலம்
        வெண்மை மதி காந்தம் இவை மேனி தாமே.
34
   
2540.
நிசதமொடு பொன் கூடம் இமையம் கீழ்மேல் நெடும்
           கடலைத் தலைக் கூடி நிமிரும் சோமன்
திசை உள பூதரம் மூன்றும் அனைய எட்டுத் திண்
         கிரியும் ஈராயிரம்யோசனைவான் செல்லும்
வசையில் கந்த மாதனமாலியவான் என்னும் மால்
          வரைகள் தமது அகலம் அயுதம் மற்றை
அசலம் இரு மூன்றும் ஈராயிரம் இத்தீவுள் அமரும் நவ
                 கண்ட எல்லை அறைவன் மாதோ.
35
   
2541.
கோது இல் வட கடல் முதலாச் சிருங்கங் காறும் குரு
           வருடம் சிருங்கம் முதல் சுவேத மட்டும்
நீதி இரணிய வருடம் சுவேத நீல நெடும் கிரியின்
                  நடுவண் இரமியம் ஆம் மேருப்
பூதரம் சூழ் வருடம் இளாவிருதம் ஆகும் பொலிந்த
              கந்த மாதனம் மேல் புணரி நாப்பண்
கேது மால் வருடம் மாலிய வான் தொட்டுக் கீழ்
           கடலின் இறுவாய் பத்திரம் அது ஆமே.
36
   
2542.
அம்புவியின் நிசதம் முதல் ஏமம் காறும் அரிவருடம்
                    ஏமமுதல் இமைய நாப்பண்
கிம்புருடம் தென் கடற்கும் இமையம் என்னும் கிரிக்கு
              நடுப் பாரதம் ஆம் கேது மாலோடு
இம்பர் புகழ் பத்திரம் முப்பத்து நாலாயிரம் நின்ற
                ஒன்பதின் ஆயிரம் ஆம் எல்லை
உம்பர் தமது உலகு அனைய பரதம் என்னும் ஒன்று
        ஒழிந்த கண்டம் எட்டும் உற்று உளோர்க்கே.
37
   
2543.
ஆங்கு உரு நாட்டு உறைபவர் ஓர் பொழுதின்
     யாய்பால் ஆடூவு மகடூவும் ஆகத் தோன்றித்
தாங்கள் விழைவில் புணர்வர் அவர்க்குத் தெய்வத்
     தருமலர்கள் உதவும் உணாக் கனியும் காயும்
ஓங்கு பச்சை நிறம் ஆயுள் அயுத மேலும் ஒரு
            மூவாயிரம் அதற்குள் வடபாகத்தில்
பாங்கு அமர்வர் முனிவரர் சாரணரே சித்தர் பதின்
            மூவாயிரம் ஆயுள் படிகம் வண்ணம்.
38
   
2544.
பரவு பத்திர ஆசுவத்தோர் கனி காய் துய்ப்போர் பதின்
               மூவாயிரம் ஆயுள் படைத்த சேயோர்
இரணியத்தோர் பல நுகர்வோர் மதிநேர் மெய்யர்
         இராயிரம் ஐஞ்ஞூற்றயுதம் ஆண்டு பெற்றோர்
பொருவரிய இரமியத்தின் உள்ளோர் ஆலின்
      புன்கனிகள் மிசைகுவர் பூம் குவளை போல்வார்
வருடம் அவர்க்கு ஒரு பதினாயிரமே அன்றி மற்றும்
          இரண்டாயிரம் ஆச் சொற்ற தொல் நூல்.
39
   
2545.
விராவும் இளா விருதத்தோர் வெளிய மெய்யர்
       மிசைவது தீம் கரும்பிரதம் அயுத மேலும்
இராயிரமாம் யுகம் கேது மாலம் தன்னில் இருப்பவர்
         பைம் குவளை நிறம் இனிதின் உண்டல்
பராரை உள கண்டகியின் கனியே ஆயுள் பத்து உள
             ஆயிரம் அரி கண்டத்து வாழ்வோர்
ஒர் ஆயிரமோடு ஒன்பதினாயிரம் அது எல்லை உணவு
               கனி காய் மதியம் ஒளியது அன்றே.
40
   
2546.
போற்றிய கிம்புருடத்தோர் இறலித் தீய புன்கனியே
               மிசைவர் நிறம் பொன்மை ஆயுள்
சாற்றியிடும் ஓர் அயுதம் ஏம கூடத் தடவரைத் தென்
                 பால் இமைய வடபால் தன்னில்
ஏற்றம் மிகும் கயிலை நிற்கும் அதற்கு மீதே இமையா
               முக்கண் பகவன் உமையாளோடும்
வீற்று இருப்பன் ஊழி தனில் அண்டங் காறு மேலொடு
               கீழ் சென்றிடும் அவ் வெற்பு மாதோ.
41
   
2547.
இந்த இரு நாற்கண்டத்து உறையும் நீரார் இன்னல்
         பிணி நரை திரை மூப்பு இறையும் சேரார்
முந்தை யுகம் போல் ஏனை மூன்றினுள்ளும் மொய்ம்பு
              நிறை அறிவு உடலம் முயற்சி ஆயுள்
அந்தம் இல் சீர் முதல் எல்லாம் ஒரு தன்மைத்தா
          அடைகுவர் முன் பாரதத்தில் அவதரித்து
வந்துபுரி வினைப்பயனை நுகர்வர் என்பர் வான முகில்
                  சென்று புனல் வழங்காது அங்ஙன்.
42
   
2548.
பாரதத்து உள்ளார் அவனி கிளைத்து மற்றும் பல்
         தொழிலும் புரிந்து மறம் பாவம் ஈட்டிப்
பேர் அருள் பௌதிகம் எழுவாய் ஆன மூன்றின் பெறு
    பயன் கொண்டு உய்வர் என்பர் பெருமை ஆற்றல்
சீர் அறிவு நிறை ஆயுள் உருவம் உண்டி செய்கை
              யுகங்களுக்கு இயந்த திறனே சேர்வர்
தோரை முதல் பல பைம் கூழ் விளையுள் ஆக்கம் தூய
                கனி காய் கந்தம் பிறவும் துய்ப்பார்.
43
   
2549.
நால் இரு கண்டத்தோரும் விண் உளோரும்
           நரகினரும் அவ்விடத்தில் நண்ணி வைகி
மேலை இருவினை ஆற்றி அவற்றிற்கு ஏற்ற வியன்
         பயன்கள் துய்ப்பர் என விளம்பும் ஆற்றால்
சீலம் மிகு பாரதம் ஆம் கண்டம் ஒன்றே தீ வினை நல்
               வினை ஆகும் செயற்கைக்கு எல்லாம்
மூலம் ஒரு குறை பெறினே வந்து தேவர் முனிவர்களும்
                   தவம் பூசை முயல்வர் அங்கண்.
44
   
2550.
கவி புகழும் பரதனும் இந்திரனாம் பேரோன் கசேருகன்
                     தாமிர பன்னன் கபத்தி நாகன்
சவுமியனே கந்தருவன் வருணன் என்னும் தனயருடன்
                    குமரி எனும் வனிதை தன்னை
உவகை தனில் உதவி அவர் தம்தம் பேரால் ஒன்றற்கு
                   ஓராயிரம் யோசனையது ஆகப்
புவி புகழ் பாரதத்தை நவ கண்டம் ஆக்கிப்
    பொற்பினுடன் அனையவர்க்குப் புரிந்தான் அன்றே.
45
   
2551.
கங்கை கவுதமி யமுனை கவுரி வாணி காவிரி நன்மதை
                           பாலி கம்பை பம்பை
துங்கபத்திரை குசை கோமதி பாஞ்சாலி சூரி சிகி பாப
                              கரை தூத பாபை
சங்க வாகினி சிகை பாரத்துவாசி சார்வரி சந்திர பாகை
                                  சரயு வேணி
பிங்கலை குண்டலை முகரி பொருநை வெஃகாப்
   பெண்ணை முதல் ஆறு அனந்தம் பெருகி நண்ணும்.
46
   
2552.
மன்னு மகேந்திர மலயம் சையம் சத்தி மா நிருடம்
                      பாரியாத்திரமே விந்தம்
என்னும் மலை ஓர் ஏழும் காஞ்சி ஆதி எழு நகரும்
               தானம் ஓர் ஆயிரம் மேல் எட்டும்
பன்னும் அரு மறை முதலோர் மேய தேயம் பல் பலவும்
                     சுருதி முறை பயில்வும் மேவி
மெய்ந் நெறி சேர்வது குமரி கண்டம் ஏனை
          மிலேச்சரிடம் ஓர் எட்டும் வியப்பு இலாவே.
47
   
2553.
இங்கு இவை சம்புத்தீவின் இடனே தண்பால் இரும்
             கடல்சூழ் சாகத்தின் எல்லை தன்னில்
தங்கிய கோமேதாதி அவற்கு மைந்தர் சாந்தவயன்
                    சிசிரன் கோதயன் ஆனந்தன்
துங்கமிகு சிவனொடு கேமகன் சிறந்த துருவன் இவர்
                    பேரால் ஏழ் வருடம் ஆக்கி
அங்கு அவருக்கு அருள் புரிந்தான் கடவுள் வாயு
        ஆரியர் விந்தகர் குகரர் ஆண்டு வாழ்வார்.
48
   
2554.
சோமகமே சுமனம் சந்திரமே முந்தும் துந்துபி வப்
              பிராசன நாரதி அம் தொல் சீர்க்
கோ மதம் ஆம் எழுகிரியும் சிவை விபாபை குளிர்
              அமிர்தை சுகிர்தை மநுதத்தை சித்தி
மாமை தரு கிரமை எனும் ஆறு அங்கு ஏழும் மருவி
            இடும் ததிக் கடல் தான் வளைய நின்ற
ஏமம் உறு குசத் தீவில் வபுட்டு என்னும் இறையவற்கும்
                   சிறுவர்களாய் எழுவர் உண்டால்.
49
   
2555.
சுப்பிரதன் உரோகிதனே தீரன் மூகன் சுவேதகன்
              சித்தியன் வயித்திதன் என்று ஓதும்
இப்புதல்வர் பேரால் ஏழ் வருடம் ஆக்கி ஈந்தனன்
              உன்னதம் குமுதம் குமாரம் மேகம்
வைப்புறு சந்தகம் மகிடமே துரோணம் மலை ஏழும்
              சோனை வெள்ளி மதியே தோமை
ஒப்பறு நேத்திரை விமோசனை விருத்தி ஓர் ஏழு நதி
                     உளவால் உலவை புத்தேள்.
50
   
2556.
தர்ப்பகரே கபிலர் சாரணர் நீலத்தர் தண்டர் விதண்ட
                  வாகாரண்டைச் சனங்கள் ஆவர்
அப்புற நெய்ப் புணரி கிரவுஞ்ச தீபம் அதற்கு மன்னன்
                 சோதிட்டாம் அவன் தன் மைந்தர்
மெய்ப்படு சாரணன் கபிலன் கிருதி கீர்த்தி வேணுமான்
                   இலம்பகன் உற்பிதனே என்னச்
செப்பும் எழு பேரால் ஏழ் வருடம் ஆக்கிச் சிறப்புடனே
                   அவர் அரசு செய்தற்கு ஈந்தான்.
51
   
2557.
மன்னு குசேயம் அரிவத் துருமம் புட்பா வருத்தம்
                இமம் துதிமானே மந்தரம் தான்
என்னும் மலை ஏழு சிவை விதூத பாபை இமை புனிதை
                      பூரணையோடு அகில பாபை
செல் நெறி சேர் தம்பை எனும் நதி ஓர் ஏழு சேர்ந்து
                 உளது தபதர் சடாவகர் மந்தேகர்
பன்னுபுகழ் அனேகர் அவர் சனங்கள் ஆவார்
         பங்கயனே அங்கு உடைய பகவன் அம்மா.
52
   
2558.
மற்ற அதனுக்கு அப்பாலை அளக்கர் கன்னல்
     வளைந்துடைய தீபம் சான் மலியாம் அங்கண்
கொற்றவனாம் துதிமானன் அவன் தன் மைந்தர் குசலன்
               வெய்யன் தேவன் முனி அந்த காரன்
அற்றம் இலா மனோரதன் துந்துபியாம் அன்னோர்க்கு
           அளித்தனன் ஏழ் கூறாக்கி அசலம் ஏழும்
சொல் திமிரம் சுரபி வாமனம் விருத்தம் துந்துபி
                 சம்மியத் தடம் புண்டரீகம் நிற்கும்.
53
   
2559.
போது குமுதம் கவரி ஆதி யாமை புண்டரிகை
               மனோபமை சந்தியை என்று ஓதும்
சீத நதி ஏழு செல்லும் புட்க லாதர் சிறந்திடு புட்கரர்
                       தனியர் சிசிரர் என்போர்
ஏதம் இலாது உறை சனங்கள் கடவுள் ஈசன் இதற்கும்
         அப்பால் மதுக் கடல் சூழ்ந்து இருந்த தீபம்
மேதகு கோமேதகம் அவ் வியனே தொன்னாள்
     வேந்தன் அவற்கு எழுமைந்தர் மேனாள் வந்தார்.
54
   
2560.
தூய விமோ கனன் மோகன் சகலன் சோமன் சுகுமாரன்
                   குமாரன் மரீசகனாம் மைந்தர்க்கு
ஆயதை ஏழ் கூறு புரிந்து அளித்தான் சிங்கம் அத்தம்
                 உதயம் சலகம் கிரவுஞ்சம் ஆம்பி
கேயம் இரமியம் கிரி ஏழ் அயாதி தேனுக்கிளர் கபத்தி
                          சுகுமாரி குமாரி இக்கு
மாயை நதி ஏழு உள மந்தகர் ஆமங்கர் மாகதர்
              மானசர் மாக்கள் மதி முன் தெய்வம்.
55
   
2561.
புடையின் அது தூய புனல் கடல் ஆம் தீபம் புட்கர
             மன்னன் சவனன் புதல்வர் ஆனோர்
அடல் கெழுவு தாதகி மாபீதனன் என்போர்க்கு அதனை
                இரு கூறு படுத்து அளித்தான் என்ப
இடப மகேந்திரம் வருணம் வராக நீலம் இந்திர
                  மந்திரியம் எனும் ஏழு வெற்புக்
குடிலை சிவை உமை தரணி சுமனை சிங்கை குமரி
              எனும் எழு நதியும் கொண்டு மேவும்.
56
   
2562.
மேனிலாவிய நகரர் நாகர் என்போர் மேவி அமர்
                 பரிசனம் வெய்யவனே புத்தேள்
ஆனது ஓர் புட்கரத்தின் முடிவில் ஐம்பது ஆயிரம்
               யோசனை தன்னில் அசலம் ஒன்று
மான சோத்தரம் எனவே சகடக்கால் போல் வட்டணை
              பெற்றிடும் அதன்கண் மகவானுக்கும்
ஏனையோர் எழுவருக்கும் குணபால் ஆதி எண்
            திசையினும் பதங்கள் எய்தும் அன்றே.
57
   
2563.
பொங்கு திரைப் புணரிகளின் முடிவு தோறும் புடை
      உறவே வளைந்து ஒவ்வோர் பொருப்பு நிற்கும்
இங்கு உளதோர் சாகமுதல் தீபம் முற்றும் இருக்குநர்க்கு
                 நரை திரை மூப்பு இன்னல் இல்லை
அங்கு அவர்கள் கலியினும் கிம்புருடர் தன்மை
       அடைவர் பதினாயிரம் மாண்டமர்வர் அப்பால்
தங்கியது தபனியப் பார் அதனைச் சூழ் போய்த் தடம்
         பெரு நேமிப் பொருப்பு சார் உற்று அன்றே.
58
   
2564.
நேமி வரை அதற்கு இப்பால் சுடரே அப்பால் நிசிப்
              படலம் செய்ய மணி நிறனே மன்னர்
காமருசீர் இயக்கர் இராக்கதரே வெம்பேய்க் கணங்கள்
               அமர்ந்திடுவர் திசைக் கடவுளோரும்
தாம் உடைய மாதிரத்தின் மேருவின் கண் தங்குதல்
        போல் வைகுவர் அங்கு அதனுக்கு அப்பால்
ஏமம் உறு புறக்கடல் அங்கு அதனுக்கு அப்பால்
      இருளாகும் அதற்கு அப்பால் எய்தும் அண்டம்.
59
   
2565.
ஊழின் நெறியால் தத்தம் உயிரைத் தாமே ஒழிவு
         செய்தோரும் தெருளும் உணர்விலோரும்
ஆழிவரைப் புறம் சூழ்வர் அப்பால் அகும் ஆர் இருள்
                   சேர் எல்லை தனில் அநாதிஈசர்
வாழும் ஒரு பெரும் கயிலை உண்டு அவ் வண்ட
      மருங்கு அதனில் கண நிரைகள் வதிந்து மல்கும்
சூழ் உறு சம்புத் தீபம் முதலா அண்டச் சுவர் காறும்
                   புவி என்பர் தொல்லை யோரே.
60
   
2566.
இப்புவின் மேல் கணத்தின் உலகம் ஆகும் இதன்
            மிசைக் குய்யக லோகம் இதற்கு மீது
வைப்புடைய ஈர் ஐங்கால் வயங்கு தேயம் மற்று அதன்
                மேல் எழுபுயலும் வழங்கும் எல்லை
முப்பதினாயிரம் கோடி முகில் ஒவ் வொன்றை முறை
             சூழ் உற்றிடும் அதற்கு முன்னர் ஆகச்
செப்பரிய கிம்புருடர் கருடர் ஆனோர் சித்தர்கள்
              விஞ்சையர் இயக்கர் செறியும் மூதூர்.
61
   
2567.
இங்கு இதன் மேல் சுரநதி செல் இடனே அப்பால்
        இரவிபதம் தரணிக்கு ஓர் இலக்கம் ஆகும்
அங்கு அதனின் முப்பான் முக்கோடி தேவர்
       அருக்கனுடன் வழிக் கொள்வர் அதற்கு மீதே
திங்கள் உலகு ஓர் இலக்கம் உம்பர் தன்னில் செறிதரு
                தாரகை உலகம் இலக்கம் சேணில்
பொங்கு ஒளி சேர் புதன் உலகம் ஈர் இலக்கம் அப்பால்
       புகர் உலகம் ஈரிலக்கம் பொருந்திற்று அன்றே.
62
   
2568.
அந்தரம் மேல் சேய் உலகு ஈர் இலக்கம் மேலே
         அரசன் உலகு ஈரிலக்கம் அதற்கு மீதே
மந்தன் உலகம் ஈர் இலக்கம் அதன் மேல் ஓர் ஏழ் மா
         முனிவர் உலகு இலக்கம் ஆகும் அப்பால்
நந்துருவன் உலகு இலக்கம் புவர் லோகத்தின் நலத்
      தகைய தொகை பதினைந்து இலக்கம் ஆகும்
இந்த உலகத்து மிசை உடைய தேயம் எழுவகையா
               மருத்து இனமும் கெழுவும் எல்லை.
63
   
2569.
தொகலோடு சேர்தரும் இப் பதத்தின் மீதில்
    சுவர்லோகம் எண்பத்து ஐஞ்சிலக்கம் ஆங்கே
புகலோடு வானவரும் பிறரும் போற்றப் புரந்தரன்
          வீற்று இருந்து அரசு புரிவன் அப்பால்
மகலோகம் இருகோடி மார்க்கண்டு ஆதி மாமுனிவர்
                பலர் செறிவர் மற்று அதன் மேல்
இகலோகம் பரவு சனலோகம் எல்லை எண்கோடி பிதிர்
                       தேவர் இருப்பர் அங்கண்.
64
   
2570.
தவலோகம் உன்னதம் ஈராறு கோடி சனகர் முதலா
                      உடைய வனகர் சேர்வர்
அவண் மேல் சத்திய உலகம் ஈர் எண் கோடி அயன்
           இன்பத் தலம் உலகம் அளிக்கும் தானம்
நவைதீரும் பிரமபதம் மூன்று கோடி நாரணன் வாழ்
                     பேர் உலகம் ஓர் முக்கோடி
சிவலோகம் நாற்கோடி அதற்கும் மீதே திகழ் அண்ட
                     கோளகையும் கோடி ஆமே.
65
   
2571.
வேதமொடு தந்திரமும் அவற்றின் சார்பு மிருதிகளும்
                        பிறநூலும் வேறு வேறா
ஓதிடும் அண்டத்து இயற்கை மலைவோ என்றால்
   உண்மை தெரிந்திடில் படைப்பும் உலப்பில் பேதம்
ஆதலினால் அவ் அவற்றின் திரிபு நாடி அறிந்த
        உனக்கு ஈண்டு உண்மை அதுவே சொற்றாம்
ஏதம் இல் இவ் வண்டத்தில் புவனம் நூற்று எட்டு
   இறை அருள் சேர் உருத்திரர் தம் இருக்கை ஆமே.
66
   
2572.
இந்த அண்டத்தின் இயற்கைய முன் உனக்கு இறைவன்
தந்த அண்டங்கள் ஆயிரத்து எட்டும் இத்தகைமை
மைந்த நீ சென்று காணுதி என வகுத்து உரைப்ப
அந்தம் இல்லது ஓர் மகிழ்ச்சியின் உணர்ந்தனன்
                                    அவுணன்.
67