திக்கு விசயப் படலம்
 
2573.
குணங்கள் பல பல உணர்த்திய குரவன் தன் கழல்கள்
வணங்கி வாள் அரி முகனொடு விடை கொண்டு வயமான்
அணங்கு வைகிய திறல் உடைச் சூரர்கோன் அவுணர்
இணங்கு தானையங் கடல் இடைப் புக்கனன் இமைப்பில்.
1
   
2574.
சேனையின் தலை புகுதலும் தாரகன் சென்று
கோனை வந்தனை செய்து தன் முன்னவற் குறுகி
ஆன பான்மையின் வணங்கி முன் நின்றிட ஆசான்
போன எல்லையில் புகன்றன பரிசு எலாம் புகன்றான்.
2
   
2575.
ஆவது ஆகிய பரிசு எலாம் கேட்டு உணர்ந்து அவனும்
தாவு இலாத தன் மனம் கொடு நன்று இது தலைவ
மேவலார்களை யாம் இனி வென்றிட விரைவில்
போவதே கடன் என்றனன் அன்னது ஓர் பொழுதின்.
3
   
2576.
அந்திவார் சடைக் கண்நுதல் கடவுள் தன் அருளான்
மைந்தர் மூவரும் பெற்ற தொல் வரங்களும் வலியும்
சிந்தை உள் உற நாடியே அளியொடும் சேணில்
வந்து தோன்றினள் தொல்லை நாள் நோற்றிடும் மாயை.
4
   
2577.
தோன்றும் எல்லையின் முந்துறக் கண்டு வெம் சூரன்
ஆன்ற தம்பியர் தம்மொடும் அசமுகி யோடும்
ஊன்றும் அன்பொடு பணிதலும் அன்னை தன் உள்ளம்
ஈன்ற ஞான்றினும் உவந்தனள் ஆசிகள் இசைத்தாள்.
5
   
2578.
ஆசி கூறியே வேள்வியில் செய்கையும் அதனுக்கு
ஈசன் நல்கிய வரங்களும் கேட்டனன் ஈண்டு
நேசமோடு உமைக் காணிய வந்தனன் நீவிர்
வாசவன் முதலோர் தமை வெல்லுதிர் வலியால்.
6
   
2579.
வென்ற பின்னர் எவ் வுலகமும் புரந்து மேதினியில்
என்றும் வாழுதிர் மாயைகள் வேண்டிடின் என்னை
ஒன்றும் அன்புடன் உன்னுதிர் உன்னிய பொழுதே
சென்று வெஃகிய தன்மைகள் செய்தியான் முடிப்பேன்.
7
   
2580.
ஈது அலால் உமைப் பிரியலன் பன்முறை யானே
காதலோடும் உமைக் காணிய செல்குவன் கலந்து
பேத நீர் அற இருத்திரால் ஈண்டு எனப் பேசி
மாதும் ஏகினள் மைந்தர்கள் மூவரும் வணங்க.
8
   
2581.
தோடு உலா விழிப் பொன் தொடி ஏகலும் சூரன்
கோடி தேருடன் தானவர் தங்களைக் கூவி
நீடு நம் பெரும் தானைகள் நிதி பதிக்கு ஏகப்
பாடல் மா முரசு அறைமினோ கடிது எனப் பணித்தான்.
9
   
2582.
அரசன் ஏவலும் அவுணர்கள் அன்னவாறு அறைந்து
முரசம் எற்றினர் கேட்டலும் அத்திசை முன்னி
உரை செய் நான்முகன் உறங்கு உழிப் புவி கொள
                                  ஒருங்கே
திரை செய் வான் கடல் சென்றெனச் சென்றது சேனை.
10
   
2583.
பத்து நூறுடன் ஆயிரம் ஆதியாய்ப் பலவாம்
கொத்து நீடிய சென்னியர் கொடுமை சேர் குணத்தோர்
மெத்து பல் படை ஏந்திய கரத்தினர் விறலோர்
கத்து வார் கடல் ஆர்ப்பினர் அவுணர் தம் கணத்தோர்.
11
   
2584.
விண்ணில் பாய்வன இரவிதேர் பாய்வன வேலைக்
கண்ணில் பாய்வன திசைகளில் பாய்வன கனல்மேல்
பண்ணில் பாய்வன வரைகளில் பாய்வன பரவை
மண்ணில் பாய்வன புரவிகள் அளப்பில மாதோ.
12
   
2585.
பாறு சென்றிடக் கொடி இனம் சென்றிடப் பலபேய்
வேறு சென்றிடப் பார் இடம் சென்றிட விண்மேல்
மாறு சென்றிடப் பிளிறு ஒலி சென்றிட மதநீர்
ஆறு சென்றிடச் சென்றன யானையின் அனிகம்.
13
   
2586.
மேருச் சையமும் கயிலையும் அல்லது வேறு
நேரற் கொத்திடும் கிரிமிசை செல்வன நீலக்
காரில் செல்வன விண்மிசைச் செல்வன கடல் சூழ்
பாரில் செல்வன செல்வன ஆழியம் பல் தேர்.
14
   
2587.
மூன்று கோடி யோசனை அதாய் நாற்றிசை முற்றும்
ஆன்ற எல்லையின் அவ் வகைத்து ஆகிய அனிகம்
ஏன்று சென்றன சென்றதோர் அளவையின் இனன்போல்
தோன்று பொன் சுடர் அளகையை அடைந்தன தூசி.
15
   
2588.
பூதம் ஐந்தினும் மிகவலி உடையது பொலன்சேர்
ஆதவன் தனித் தேரினும் சிறப்பு உற்றது அவனில்
சோதி பெற்றது பேர் உணர் உள்ளது தொல்சீர்
மாதிரங்களை அகற்சியான் மறைப்பது மன்னோ.
16
   
2589.
என்றுமே அழிவு இல்லது மேருவோடு இகலும்
குன்று போலுவது அகிலமும் இமைப்பினில் குறுகிச்
சென்று மீள்வது குறிப்பினில் செல்வது சிதையா
ஒன்று கோடியவாம் பரி பூண்டுளது ஒருங்கே.
17
   
2590.
அழிவு இலாப் பல சாரதி உள்ளதுதங் களப்பில்
விழுமிது ஆகிய படை எலாம் கொண்டது மேவார்
ஒழிய அன்னவர் தேர் மிசைச் செல்லுவது உருமேல்
எழிலி அச்சுறப் பன்மணி கறங்குவது என்றும்.
18
   
2591.
பாரை நேர் தரு பரப்பினது உலகு எலாம் படைத்த
நாரி பாதியன் அளித்து அருள் இந்திர ஞாலத்
தேரின் மால் வரை மிசையுறும் வயப்புலி செலல் போல்
சூரன் ஏறியே போந்தனன் அவுணர்கள் தொழவே.
19
   
2592.
ஆண்டு அவ் எல்லையில் ஆயிரம் ஆயிரம் யாளி
தாண்டு வெம்பரி ஆயிரம் ஆயிரம் தடம் தோள்
நீண்ட பாரிடம் ஆயிரம் ஆயிரம் நிரலே
பூண்ட தேர் மிசை ஏறியே அரிமுகன் போந்தான்.
20
   
2593.
காலும் உள்ளமும் பின் உற முன் உறு கவனக்
கோல மாப் பதினாயிரம் பூண்டது ஓர் கொடிஞ்சிக்
சாலம் ஆர் தரு வையம் மேல் புகுந்து தாரகனும்
ஆலம் என்பது சென்றென நடந்தனன் அற்றே.
21
   
2594.
அன்ன தாரக வீரனும் அரி முகத்தவனும்
மன்னன் ஓர் இரு பாங்கரும் ஆயினர் வந்தார்
துன்னு தான அத் தானையம் தலைவர்கள் தொலையாப்
பொன்னின் மாமணித் தேரொடும் ஏகினர் புடையில்.
22
   
2595.
விரவு கின்றதோர் ஏனையர் சேனையின் வீரர்
கரி எனும் கடல் மீதினும் கலினம் ஆர் கவனப்
பரி எனும் கடல் மீதினும் முதல்வனைப் பரவி
இரு மருங்கினும் போயினர் கூற்றனும் இரங்க.
23
   
2596.
அடல் செறிந்திடும் ஒன்பதிற்று இருவகை ஆகும்
படைகள் ஏந்தியே அளவு இலா அவுணர்கள் பரவிக்
கடல் கிளர்ந்து அவண் சூழ்வன போன்று காவலர் தம்
புடையில் வந்தனர் அசனியும் அச்சுறப் புகல்வார்.
24
   
2597.
இன்ன தன்மையினால் படைதர சூழ்தர இதன்பால்
துன்னு தேர் என உள்ளவும் துரகம் உள்ளனவும்
பல் நெடும் கரி உள்ளவும் அவுணர்கள் பலரும்
மன்னி வந்திட நடுவுற ஏகினன் மன்னன்.
25
   
2598.
வயங்கள் ஆர்த்திடும் தானவர் ஓதையும் மான்தேர்
அயங்கள் ஆர்த்திடும் ஓதையும் அன்னவை அணித்தாய்க்
கயங்கள் ஆர்த்திடும் ஓதையும் கண்டையின் கலிப்பும்
இயங்கள் ஆர்த்திடும் ஓதையும் மிக்கன எங்கும்.
26
   
2599.
அரி எனும் திறல் அவுணர்கள் அங்கையில் ஏந்தும்
உரிய வெம் படை முழுவதும் ஒன்றோடு ஒன்று உரிஞ்ச
எரி பிறந்தன செறிந்தன எம்பிரான் முனிந்த
புரம் எனும் படி ஆகிய வரைகளும் புவியும்.
27
   
2600.
நிரந்த தானவர் எழுந்திடப் பூழிகள் நிலமேல்
பரந்து வானகம் புகுதலும் அனை அது பாரா
விரிந்து போவதை நீங்கியே அவை தனை எய்தக்
கரந்து வைகினன் ஆழி அம் தேர் உடைக் கதிரோன்.
28
   
2601.
பூ நடுங்கின பணிக்குலம் நடுங்கின புரை தீர்
வான் நடுங்கின மாதிரம் நடுங்கின வரைகள்
தாம் நடுங்கின புணரிகள் நடுங்கின தறுகண்
தீ நடுங்கின நிருதர் கோன் பெரும் படை செல்ல.
29
   
2602.
இனைய தன்மையில் சேனைகள் தம்மொடும் இறைவன்
தனதன் மாநகர் வளைந்தனன் அன்னதோர் தன்மை
வினவி ஓடியே தூதுவர் இயக்கர் கோன் மேவும்
கனக மாமணிக் கோநகர் சென்றனர் கடிதின்.
30
   
2603.
சென்றிடும் ஒற்றர் தம் கோன் சேவடிக் கமலம் தாழ்ந்து
வன் திறல் சூரபன்மன் மாநகர் வளைந்து கொண்டான்
இன்று இனி அழியும் போலும் ஈண்டு நீ இருத்தல் சால
நன்று அல அனிகத்தோடு நடத்தியால் அமருக்கு என்றார்.
31
   
2604.
தூதுவர் உரைத்தல் கேளாத் துன்பு கூர் துளக்கம் எய்தி
ஏதம் இல் அவுணர் தம்மை யாம் வெலற்கு அரிது
                                      முக்கண்
ஆதி தன் வரம் கொண்டு உள்ளார் அவர்ப் புகழ்ந்து
                                ஆசி செய்வான்
போதுதல் கடனே என்னாப் பொருக்கு என எழுந்து
                                    போனான்.
32
   
2605.
போயினன் அளகை அண்ணல் புட்பகம் மீது சென்று
தூயதோர் இயக்கரோடும் சூரனைத் தொழுது போற்றி
ஏயின ஆசி கூறி யான் நுமக்கு அடியன் என்ன
நீ இனி இருத்தி என்றே விடுத்தனன் நிருதர் போற்ற.
33
   
2606.
அன்னது கண்டுழி அவுணர் மாப்படை
மின்னவிர் முகிலினம் வெருவ ஆர்த்தன
துன் உறும் இனையவரோடும் சூரன் ஆம்
மன்னவன் அவ்வழி மகிழ்ச்சி எய்தினான்.
34
   
2607.
அது பொழுது அவுணர்கள் அளகை ஊடுபோய்
நிதிகளும் மணிகளும் நீடு மானமும்
சிதைவு அறு படைகளும் தேரும் மாக்களும்
கதிகெழு களிறுடன் கவர்ந்து மேவினார்.
35
   
2608.
மைம் மலி தானவர் வலிந்து வவ்வலால்
பொய்ம்மையில் பெருவளம் யாவும் போக்கிய
செம்மையில் அந்நகர் திருவும் நீங்கிய
கைம்மை தன் வடிவு எனும் காட்சித்து ஆயதே.
36
   
2609.
ஆறலை கள்வரின் அவுணர் யாவரும்
சூறை கொண்ட அந் நகர் தொலைத்துப் போதலும்
ஊறுகொள் நிதிபதி உள்ளம் நாணியே
வீறு அகல் அளகையின் மீண்டும் ஏகினான்.
37
   
2610.
ஆண்டு உறு தனதனை அடித் தொண்டு ஆற்றுவான்
மாண்டனன் இவன் என மனத்தில் உன்னியே
ஈண்டிய தானையொடு இமைப்பு இல் பாகரைத்
தூண்டுதிர் தேர் எனச் சூரன் போயினான்.
38
   
2611.
அளகையை நீங்கியே ஆசைக்கு ஈறதாய்
உளநகர் எய்தினன் ஒளிரு நீலமார்
களன் உரு எய்திய கடவுள் வைகிய
வளநகர் ஈது என மன்னன் உன்னினான்.
39
   
2612.
அந்தமா நகரை விட்டு அவுணர் கோமகன்
முந்து தன் படையொடு முனிந்து கீழ்த்திசை
இந்திரன் நகர்புக இதனை நாடியே
வெம் துயர் அமரர் கோன் விண்ணில் போயினான்.
40
   
2613.
போய் அதை நாடி அப்புரத்தை முற்றவும்
காயெரி கைக் கொளக் கடிதின் நல்கியே
ஆயிடை அனிகமோடு அகன்று வெய்ய செம்
தீ உறு நகர் இடைச் சேறல் மேயினான்.
41
   
2614.
சேறலும் நாடியத் தீயின் பேரினான்
ஈறு அகல் வெம் சினம் எய்தி ஆயிரம்
நூறு எனும் கோடியர் நொய்தில் சூழ்தர
மாறிகல் புரிந்திட வந்து நேர்ந்தனன்.
42
   
2615.
நேர்தலும் அங்கி தன் நீடு தானையும்
சார்தரும் அவுணர் தம் படையும் தாமுறாப்
போர் தலை மயக்கு உறப் பொருத எல்லையில்
சூர் தரு கனல் படை தொலைந்து போயதே.
43
   
2616.
தன் படை உடைதலும் தழலின் பண்ணவன்
துன் படை மனத்தனாய்த் தொல்லை ஊழி நாள்
இன் படை உலகு எலாம் ஈறு செய்திடும்
வன் படை பேர் உரு வல்லை தாங்கினான்.
44
   
2617.
சிறந்திடும் அவுணர் கோன் சேனை மாக்கடல்
வறந்திட இப்பகல் மாய்ப்பன் யான் எனா
நிறைந்திடும் அவுணமா நீத்தம் எங்கணும்
செறிந்தனன் வளைந்தனன் சிதைத்தல் மேயினான்.
45
   
2618.
கடல் கெழு சேனையைக் கலந்து பாவகன்
சட சட முதிர் ஒலி தழங்கப் புக்கு உலாய்
அடல் உறும் எல்லையில் அது கண்டு ஆழிவாய்
விடம் என உருத்தனன் வீரன் தாரகன்.
46
   
2619.
உருத்திடு தாரகன் ஒரு தன் தேர் ஒடு
மருத்தினும் விசை உற வந்து தானையை
எரித்திடும் அங்கியை எதிர்ந்து செம் கையில்
தரித்திடும் கார்முகம் தன்னை வாங்கினான்.
47
   
2620.
வானவர் தமையும் இவ் வன்னி தன்னையும்
ஏனையர் தம்மையும் முடிப்பன் இன்று எனாத்
தேன் இவர் இதழியந் தேவன் மாப்படை
ஆனதை எடுத்தனன் அருச்சித்து ஏத்தியே.
48
   
2621.
எடுத்திடும் எல்லையில் எரிகண்டு இங்கு இது
தொடுத்திடின் உலகு எலாம் தொலைக்கும் என்னையும்
முடித்திடும் நான்முகன் முதலி னோரையும்
படுத்திடும் இன்று எனப் பையுள் எய்தினான்.
49
   
2622.
சுடும் கனல் கடவுளும் சுருக்கித் தன் உரு
ஒடுங்கினன் ஆகுலம் உற்றுச் சிந்தையும்
நடுங்கினன் தாரகன் முன்னர் நண்ணினான்
கடும் கதி அதனொடும் கரங்கள் கூப்பியே.
50
   
2623.
தோற்றுவித்து உலகெலாம் தொலைக்கும் எம்பிரான்
மாற்று அரும் படைக்கலம் மற்று என் மேல் விடப்
போற்றினை எடுத்தி எப் புவனத்து உள்ளவர்
ஆற்றலும் உயிர்களும் அதன் முன் நிற்குமோ.
51
   
2624.
கழி தரு சினம் கொளல் கடவுள் மாப்படை
விழுமியது அன்னதை விடுத்துளாய் எனின்
அழிதரும் உலகு எலாம் அதுவும் அன்றியே
பழிபெறும் அன்னதோர் படையின் வேந்துமே.
52
   
2625.
பொறுத்தி என் பிழை எனப் போற்றி நிற்றலும்
கறுத்திடு மிடறு உடைக் கடவுள் மாப்படை
செறுத்தவன் மீமிசைச் செல்ல விட்டிலன்
மறுத்தனன் சினத்தினை மகிழ்ச்சி எய்தினான்.
53
   
2626.
எற்றிடும் எற்றிடும் இவனை வல்லையில்
செற்றிடும் செற்றிடும் தீயன் சாலவும்
குற்றிடும் குற்றிடும் என்று கூறியே
சுற்றினர் அவுணர்கள் தீயைச் சூழவே.
54
   
2627.
தானவர் யாரையும் விலக்கித் தாரகன்
நீ நமது ஏவலின் நிற்றி நின் உயிர்
போனதை உதவினம் போதி போதி நின்
மாநகர் இடை என வல்லை கூறினான்.
55
   
2628.
விடுத்தனன் அங்கியை விடுக்கு முன்னரே
அடுத்திடு தானவர் அவன் தன் ஊர் புகா
மடுத்திடு வளன் எலாம் வாரி வாரி மீன்
படுத்திடு கொலைஞர் தம் பரிசின் மீண்டனர்.
56
   
2629.
மீண்டனர் அவுணர் அங்கி வெள்கியே தன் ஊர் புக்கான்
ஆண்டு அவண் அகன்று போனான் தாரகன் அவ்வாறு
                                      எல்லாம்
காண்டலும் சூரன் என்போன் கலின மான் தேரைப் பாக
தூண்டுதி நடுவன் மேவும் தொல்லை மா நகரத்து
                                      என்றான்.
57
   
2630.
கடவுதி தேரை என்னக் கைதொழுது ஐய நொய்தின்
அடுதொழில் அவன் பால் உய்ப்பன் அன்னது காண்டி
                                    என்னாப்
படர் தரும் வலவரோடும் பலிங்கன் என்று உரைக்கும்
                                    மேலோன்
சுடர்மலி கதிரும் நாணத் துண் எனத் தூண்டி
                                   ஆர்த்தான்.
58
   
2631.
ஆர்த்தன படரும் சேனை அதிர்ந்தன முரசம் எங்கும்
போர்த்தன கரி தேர் வாசி புகுந்தன பூழி வேலை
தூர்த்தன துவசம் விண்ணைத் தொடர்ந்தன தூசி என்னும்
தார்த் தொகை முன்னம் ஏகித் தண்டன் ஊர் உடைந்த
                                      அன்றே.
59
   
2632.
அடைதலும் நடுவன் தன்பால் ஆங்கு ஒர் தூது எய்தி
                                      நம்தம்
கடி நகர் கலந்த அந்தக் காசிப முனிவன் மைந்தர்
கொடிய வெம் சேனை என்னக் கூற்று எனும் கடவுள்
                                      கேளா
இடி உறும் அரவம் என்ன ஏங்கினன் இரங்கு கின்றான்.
60
   
2633.
முன் உறு தனதனும் முளரித் தேவனும்
மன்னனை எதிர் கொளா வழுத்திப் போயினார்
அன்னது புரிவதே அழகு இதாம் என
உன்னினன் நடுவனும் உணர்வின் உம்பரான்.
61
   
2634.
தேற்றமொடு எழுந்து தன் மகிடம் சேர்ந்தனன்
ஏற்றம் இல் படைஞரும் ஈண்ட ஏகியே
கூற்றுவன் இமைப்பினில் குறுகிச் சூரனைப்
போற்றினன் தொழுதனன் புகலும் ஆசியான்.
62
   
2635.
திருத்தகு மறலிதன் செய்கை நோக்கியே
அருத்தியின் மகிழ் உறும் அவுணன் நம்பணி
பரித்தனை ஈண்டு நின் பரிசனத் தொடும்
இருத்தி என்று அனையனை ஏவிப் போயினான்.
63
   
2636.
இறுதியை இயற்றுவான் இருக்கை என்பது ஓர்
மறிகடல் அதன் இடை வளம் கொள் வாரியைத்
திறல் உறும் அவுணர் தம் சேனை சென்றரோ
முறை முறை கவர்ந்தன முகிலின் தன்மை போல்.
64
   
2637.
கூற்றுவன் பெருவலி குறைந்த வண்ணமும்
போற்றினன் போயதும் புந்தி உன்னியே
ஆற்றவும் மகிழ் உறீஇ அனிக மோடு தென்
மேல் திசை நிருதி மேல் விரைவின் ஏகினான்.
65
   
2638.
நிருதியும் இஃது எலாம் நேடியாம் இவர்ப்
பொருவதும் அரியதால் போர் இயற்றினும்
வருதிறல் இல்லையால் வசையதே எனாக்
கருதினன் அவரொடு கலத்தற்கு உன்னினான்.
66
   
2639.
உன்னினன் தானையோடு ஒருங்கு மேவியே
மன்னவன் எதிர் புகா வழுத்தி மற்றவன்
தன் அடி வணங்கி உன் தமரி யான் எனாப்
பன்னினன் தாரகன் பாங்கர் ஏகினான்.
67
   
2640.
அருகு உற வருதலும் அவுணர் கோமகன்
நிருதியின் நகரினை நீங்கி ஏகலும்
வருணனும் மருத்துவும் வாரி தன்னினும்
இருள் செறி உலகினும் இமைப்பில் போயினார்.
68
   
2641.
போதலும் அவர் அவர் புரத்தைச் சூறை கொண்டு
ஏதம் அது இயற்று வித்து எழுவகைத்து எனும்
பாதல உலகினில் படர்ந்து தானவர்
ஆதியர் போற்றிட அருள் செய்து ஏகினான்.
69
   
2642.
உற்றனன் நாகர் கோன் உலகில் அன்னவன்
செற்றமொடே செருச் செய்யத் தானையால்
வெற்றிகொண்டே அவன் வியந்து போற்றிட
மற்று அவன் இருக்கை ஓர் வைகல் வைகினான்.
70
   
2643.
அத்தலை உரகர் கோன் அமரர் தந்திட
வைத்திடும் அமுதினை வலிதின் வாங்கியே
மெய்த்தகு தம்பிய ரோடு மேன்மையால்
துய்த்தனன் அகன்றனன் சூர பன்மனே.
71
   
2644.
ஏனைய பிலந்தொறும் ஏகி அவ்வயின்
மேனது ஓர் விருந்தினை வியப்பின் நாடியே
மானவர் படையொடும் வல்லை மீண்டனன்
போனது ஓர் நிலை தொறும் புகழை நாட்டினான்.
72
   
2645.
பூ உலகு இடையே போந்து புணரி ஒன்று அகன்று
                                  மற்றைத்
தீவினை ஒருவிச் சூரன் சேனைமா நீத்தம் சூழ
மாவொடு புவனி போற்ற வரியரா அணையின் நேமிக்
காவலன் துயில் கூர் பாலின் கடல் இடைக் கடிது
                                    புக்கான்.
73
   
2646.
புக்கது ஓர் வேலை அன்னான் போர்ப்படை அவுணர்
                                      யாரும்
மைக் கடல் மேனி மாயோன் மன்னினன் ஈண்டை
                                    என்னா
அக்கடல் அதனைத் தொல்நாள் அமரர்கள் கடைந்ததே
                                       போல்
மிக்கதோர் ஆர்ப்பினோடும் விரைவுடன் கலக்கல்
                                     உற்றார்.
74
   
2647.
ஆர்த்திடு முழக்கம் கேளா அம்புயத் திருவும் பாரும்
வேர்த்து உடல் பதைப்ப அஞ்சி வெருக்கொடு கரிய
                                    மேனித்
தீர்த்தனது அகலத்து ஊடு சேர்ந்தனர் தழுவ அன்னோன்
பார்த்தனன் அஞ்சல் என்று பகர்ந்தனன் துயிலை நீங்கி.
75
   
2648.
இம் எனப் பணியின் மீதும் எழுந்தனன் இறுதி செய்யும்
வெம்மை கொள் கடவுள் தீயும் வெருவர உருத்துச் சீறி
நம்மையும் பொரவும் தீயோர் நண்ணினர் போலும்
                                    அன்னார்
தம் வலி காண்டும் என்னாத் தடக்கைகள் புடைத்து
                                     நக்கான்.
76
   
2649.
சிந்தையில் உன்னும் முன்னம் திறல் மிகும் உவணர்
                                   கோமான்
வந்தனன் அவன் பொன் தோள் மேல் மடங்கல் ஏறு
                              என்னப் புக்குச்
சந்திரன் அனைய சங்கம் சக்கரம் கதை வாள் சாபம்
ஐந்து எனும் படையும் ஏந்தி அவுணர் தம் படை முன்
                                    சென்றான்.
77
   
2650.
கோட்டினன் சார்ங்கம் என்னும் குனிசிலையினை நாண்
                                       ஓதை
காட்டினன் அவுணர் உள்ளம் கலக்கினன் கொண்ட
                                     செற்றம்
வீட்டினன் தானை யாவும் விலக்கினன் பகழி மேல்
                                      மேல்
பூட்டினன் சோனைக் கொண் மூவாம் எனப் பொழிதல்
                                     உற்றான்.
78
   
2651.
பொழிந்திடு கின்ற காலைப் போர்க்கு எழும் அவுணர்
                                      தானை
அழிந்தன தேரும் மாவும் ஆடல் அம் கரிகள் தாமும்
ஒழிந்தன விறலும் போரின் ஊக்கமும் படையும் எல்லாம்
கழிந்தன சூறை உற்ற கார் எனல் ஆய அன்றே.
79
   
2652.
சூழ்ந்திடும் அவுணர் சென்னி துணிந்தன தோளும் தாளும்
வீழ்ந்தன கரங்கள் சிந்தி விரவின குருதி நீத்தம்
ஆழ்ந்திடு புணரி எல்லாம் ஆயின அவனி தானும்
தாழ்ந்தன பிணத்தின் குன்றம் தகைந்தன தபனன் தேரை.
80
   
2653.
ஒடிந்தன இரதம் ஆழி உருண்டன கவனப் பாய்மா
மடிந்தன களிறு நொந்து மாண்டன வயவர் பல்லோர்
முடிந்தனர் குருதி நீத்தம் மூடின அதனுள் மூழ்கிப்
படிந்தன அலகை ஈட்டம் பாரிடம் பரந்த அன்றே.
81
   
2654.
சுடர் கெழு நேமி அண்ணல் துயில் உறு பாலின் வேலை
இடை ஒரு சிறிதும் இன்றி எங்கணும் எருவை ஆகி
அடைவது கடவுள் ஆடும் ஆர் அழல் அதனை உண்ணக்
கடையுகம் விரவு கின்ற காட்சியைப் போன்றது அம்மா.
82
   
2655.
விண் உலாம் படிவ மாயோன் மேதகும் உவணத்தோடு
மண் உலாம் கடலாம் என்ன அவுணரை வளைந்து சுற்றி
எண் இலா உருவம் காட்டி யாவரும் போகா வண்ணம்
அண்ணல் வாம் பகழி சிந்தி அமர் செய்தான் அமரர்
                                      ஆர்ப்ப.
83
   
2656.
அடுசமர் புரியும் எல்லை ஆங்கு அவை உருத்து நோக்கி
உடைவதோர் அனிகம் தன்னை ஒன்றும் நீர் அஞ்சல்
                                       என்னா
வடவரை அனைய ஆற்றல் மாபெரும் தனு ஒன்று ஏந்தி
இடி உறழ் கடி மான் தேர் மேல் தாரகன் இமைப்பின்
                                      வந்தான்.
84
   
2657.
வான் நிலம் அளவு செய்த மலர்ப் பதத்து அண்ணல்
                                    முன்னம்
தான் எதிர் புகுந்து வெய்யோன் தன் பெரும் தனுவை
                                     வாங்கி
மேல் நகு சரங்கள் கண்ணன் மிசை உற வேலை மீதில்
சோனை விண் பொழிவது என்னத் துண் எனத் தூவி
                                   ஆர்த்தான்.
85
   
2658.
ஆர்த்திடும் அளவை தன்னில் அச்சுதன் அயில் வேல்
                                     என்னக்
கூர்த்திடும் உலப்பில் வாளி கொடிய தாரகன் தன்
                                      மேனி
தூர்த்தனன் தேரும் பாகும் தொலைத்தலும் சோர்வு
                                    இலாதான்
பேர்த்து ஒரு தடம் தேர் உற்றுப் பெரும் சிலை
                             வாங்கினான் ஆல்.
86
   
2659.
உற்றிடும் அவுணன் மால் மேல் ஒராயிரம் பகழி ஓச்சி
அற்றம் இல் கருடன் மீதும் ஆயிரம் விசிகம் உய்ப்ப
மற்றவை அவன் பால் தீய மாசுணம் பலவும் தங்கள்
பற்றலன் தன்னை வவ்வும் பரிசு எனச் செறிந்த அன்றே.
87
   
2660.
ஆயிடை உவணர் கோமான் அலக்கண் உற்று அதனை
                                      நோக்கி
மாயவன் உலப்பு இலாத வடிவினை எய்தி அந்தக்
தீயவன் சூழ்ந்து வெம் போர் செய்துழி அவனும் தங்கள்
தாயருள் மனுவை உன்னித் தானும் அந் நிலையன்
                                      ஆனான்.
88
   
2661.
தாரக வசுரன் தானும் தணப்பில் பல் உருவம் கொள்ளா
ஈர் இரு வைகல் காறும் இந்திரை கேள்வனோடு
பேர் அமர் புரிந்த எல்லைப் பிதாமகன் இதனை நோக்கி
யார் இவன் எதிர் நிற்பார் என்று அதிசய நீரன் ஆனான்.
89
   
2662.
எல்லை அங்கு அதனின் மாயோன் எறுழ் வலி
                              அவுணன் ஏறும்
சில்லியம் தேரும் மாவும் திறன் மிகு வலவன் தானும்
வில்லொடு துணிந்து வீழ விசிகம் ஓர் கோடி உய்த்தான்
ஒல்லையின் அதனை நாடி உம்பர் கோன் உவகை
                                      பூத்தான்.
90
   
2663.
திண் திறல் பரியும் தேரும் சிலையொடு வலவன் தானும்
துண்டம் அது அடைதலோடும் சூரனுக்கு இளைய
                                    தோன்றல்
தண்டம் ஒன்று எடுத்துக் கீழ் போய்த் தலை பனித்து
                                    அமரரஞ்ச
அண்டமும் குலுங்க ஆர்த்து அங்கு அரிதனை எதிர்ந்து
                                     சென்றான்.
91
   
2664.
எதிர்வரும் அவுணன் தன்மேல் எண்ணிலாப் பகழி மாரி
விதியினை அளித்த மாயன் வீசலும் அவற்றை எல்லாம்
கதை கொடு விலக்கிச் சிந்திக் கனன்று முன் கடிதில்
                                      செல்ல
அது தனை நோக்கி மாலும் ஆழியம் படையை
                                   உய்த்தான்.
92
   
2665.
ஓர் இமை ஒடுங்கும் முன்னர் உலகு எலாம்
                        தொலைக்கும் தன்மைப்
போர் அயில் நேமி தானும் புராரி தன் வரத்தால்
                                     சென்று
தாரக வசுரன் கண்டம் தன்னை வந்து அணுகிச்
                                  செம்பொன்
ஆரம் அது ஆயிற்று அம்மா தவத்தினும் ஆக்கம்
                                   உண்டோ.
93
   
2666.
பணி உறு கடவுள் நேமிப் படையும் ஆங்கு அவுணன்
                                   கண்டத்து
அணியதாய் இருத்தலோடும் அரன் அருள் வரத்தை
                                    உன்னித்
தணிவு இல் அற்புதத்தன் ஆகித் தாரகன் வலியன்
                                    என்னா
மணி கிளர் மேனி மாயோன் மற்று இது புகலல்
                                   உற்றான்.
94
   
2667.
அயனொடு ததீசி என்னும் அரும் தவத்தோனும்
                               வெம்போர்
முயல் உறும் அவுணர் யாரும் மொழிந்திடின் உனக்கு
                               ஒப்பு அல்லார்
செயல் உரை இன்றி உண்டால் சிறுவிதி மகத்தைச்
                                     செற்ற
வய மிகு கழல் கால் வீரன் மற்று உனக்கு இணையாம்
                                     என்றான்.
95
   
2668.
வன்திறல் கடவுள் ஆழி மணிப் பணி ஆயிற்று என்றால்
வென்றியும் உனதே அன்றோ வேறு இனிப் போரும்
                                     உண்டோ
உன் திறம் இதுவே என்னின் உனக்கு முன்னவராய்
                                     அங்கண்
நின்றவர் பெருமை தன்னை யாவர் கொல் நிகழ்த்தற்
                                      பாலார்.
96
   
2669.
சங்கரன் மகிழும் ஆற்றால் தழல் மகம் பல் நாள் ஆற்றி
உங்களின் வலி பெற்று உள்ளார் அவுணரில் ஒருவர்
                                        இல்லை
இங்கு உமை வெல்வார் யாரே எமக்கு நீர் தமரே என்னா
மங்கல மரபின் ஆசி வரம்பில புகன்று போனான்.
97
   
2670.
பார்த்தனர் அனையது எல்லாம் பாய் இருள் கான்ற மேனி
நீர்த்திரை அனைய செம்கை நிருதராம் புணரியாய் ஓர்
ஆர்த்தனர் அமரர் யாரும் அகன்றனர் அஞ்சி அங்கம்
வேர்த்தனர் விளிவோர் என்ன மெலிந்தனர் விழுமத்து
                                      உள்ளார்.
98
   
2671.
மாதவன் அகன்ற காலை மற்றும் ஓர் வையத்து ஏறித்
தாது அவிழ் தொடையல் வாகைத் தாரகன் தம் முன்
                                   நேராய்ப்
போதலும் அவனும் மீண்டு புகுந்தவாறு உணர்ந்து புல்லி
ஆதர மகிழ்ச்சி எய்தி அனிகமோடு அகன்றான் அப்பால்.
99
   
2672.
ஆழி அம் கிரியின் காறும் அகலிட வரைப்பு முற்றச்
சூழ் உற நாடிப் போந்து தொல் இரு விசும்பின் ஏகித்
தாழ் உறு நிலையில் செல்லும் தபனனே முதலோர் யாரும்
வாழி என்று ஆசி கூற வான் உயர் துறக்கம் புக்கான்.
100
   
2673.
இந்தவாறு அவுணர் கோன் துறக்கத்து ஏகலும்
முந்திய ஒற்றரில் சிலவர் ஓடியே
வந்தனன் சூரன் ஆம் வலியன் தான் எனா
அந்தர நாயகன் அறியக் கூறவே.
101
   
2674.
அஞ்சினன் உயிர்த்தனன் அலந்து தேம்பினன்
துஞ்சினனே என உணர்வு சோர்ந்துளான்
எஞ்சல் இல் வன்மை அது இகந்து தன்னுடை
நெஞ்சினில் இனையன நினைத்தல் மேயினான்.
102
   
2675.
அவ் வயின் போந்திடும் அவுணன் தன் எதிர்
செவ்விதில் சென்று யான் செருவில் நேர்வனேல்
இவ் உயிர்க்கு இறுதி ஆம் இருப்பனேல் இடர்ப்
பவ்வம் உற்று இறந்திடாப் பழியில் மூழ்குவேன்.
103
   
2676.
புன் செயலாய் இவட் புகுந்திடும் செயல்
என் செயலால் வரும் இயற்கை அல்லது
பின் செயல் ஒன்று இலை பிறர் செய்கின்றதும்
தன் செயல் என்பரால் சார்பின் மேலையோர்.
104
   
2677.
திரு உறுகின்று உழி மகிழ்ந்தும் தீர் உழிப்
பருவரல் எய்தியும் பாசம் தன் இடை
அரிது உணர் கேள்வியர் அழுங்கு வார் கொலோ
வருவது வரும் அது மறுக்கல் ஆகுமோ.
105
   
2678.
ஆதலின் அமர் இழைத்து ஆவி நீங்கலன்
பேதுறு கின்றிலன் பீழை உற்று உளோர்
ஓதரு மகிழ்ச்சியும் உறுவர் ஆங்கு அது
தீது செய் அவுணர் தம் திறத்துக் காண்பன் ஆல்.
106
   
2679.
நாண் ஒடும் ஒன்னலர் நகையும் கொள்ளலன்
தூணம் அது உறழ் புயச் சூர பன்மனைக்
காணுவன் என்னினும் கறுவு சிந்தையான்
ஏண் உறு தளை இடும் எனை என்று எண்ணினான்.
107
   
2680.
இம் முறை வாசவன் எண்ணியே எழீஇக்
கொம் என மனையுடன் குயில் உருக் கொடே
விம்முறு பீழையன் விண்ணில் போயினான்
தெம் முனை அவுணர்கள் தேடிக் காண்கிலார்.
108
   
2681.
ஒன்னலர் நாடுவது உணர்ந்து வானவர்
மன்னவன் ஆக்கமும் மாயும் போலும் ஆல்
என் இனிச் செய்வது என்று இரக்கம் எய்தியே
பொன்னகர் எங்கணும் பொலிவு மாய்ந்ததே.
109
   
2682.
பிடித்தனர் அமரரை அவுணர் பேதுற
அடித்தனர் குற்றினர் அனையர் தானையால்
தடித்திடும் தோள்களைத் தமது கைகளால்
ஒடித்தனர் ஆம் என ஒல்லை வீக்கினார்.
110
   
2683.
தண் அளி யாவும் இன்றாய தானவர்
விண்ணவர் தங்களை விழுமம் செய்திடா
அண்ணல் அம் திரு உறும் அரசன் முன் உறத்
துண் என உய்த்தலும் தொழுது போற்றுவார்.
111
   
2684.
அவுணரில் உதித்தனை ஆற்று நோன்பு உறீஇச்
சிவன் அருள் பெற்றனை திசையினோர் முதல்
எவரையும் வென்றனை என்னின் இங்கு எமை
நவை படச் செய்வதே நன்று போலும் ஆல்.
112
   
2685.
மறலியும் இருக்குமோ மற்றை மாதிரத்து
இறைவரும் இமையவர் யாரும் உய்வரோ
இறுதி இன்று ஆகுமே உலகம் ஈங்கு ஒரு
சிறிது நீ வெம் சினம் சிந்தை செய்யினே.
113
   
2686.
இற்றை இப்பகல் முதல் என்றும் எங்களுக்கு
உற்றது ஓர் கடவுள் ஓம்பும் வேந்து நீ
பற்று உள தமரும் நீ பலரும் யாம் இனி
மற்று உனது ஏவலை மரபில் செய்தும் ஆல்.
114
   
2687.
என்று இவை புகன்று போற்றும் இமையவர் தம்மை
                                   நோக்கி
நன்று நும் செய்கை என்னா நகை செய்து யாப்பு நீக்கி
மன்ற நம் பணி மேல் கொண்டு வைகுதிர் இனி நீர்
                                     என்னா
அன்று அவர் தம்மை விட்டான் அழல் மகத்து ஆவி
                                    விட்டான்.
115
   
2688.
வாசவன் வளத்தை எல்லாம் அவுணர்கள் வவ்விச்
                                   செல்லப்
பேசரு மகிழ்ச்சி கொண்டு பின் அவர் பாங்கு ஏகக்
காசிபன் அளித்த மேன்மைக் காதலன் அனிகம் சூழ
ஓசை கொள் மறைகள் ஆர்க்கும் உயர் மகலோகம்
                                    புக்கான்.
116
   
2689.
கற்று உணர் கேள்வியான் மார்க்கண்டேயன் ஆதி
                                     வானோர்
உற்றிடும் பதமாம் தொல் பேர் உலகமே முதல மூன்றும்
மற்று அவர் பரவ நீங்கி மலர் அயன் பதத்தில் போகத்
தெற்று என அதனைத் தேர்ந்து திசை முகன் துணுக்கம்
                                      உற்றான்.
117
   
2690.
வசை இல் நோன்பு உடை வால் அறிவு உள்ளோர்
இசை கொள் வேதம் இயம்பினர் சூழ
நசையின் நீர் ஒடு நான்முக வேதா
அசுரர் கோனை அடைந்தனன் அன்றே.
118
   
2691.
ஆழி மால் கடல் அன்னது ஒர் சேனை
சூழவே வரும் சூரனை எய்தி
வாழி வாழிய வைகலும் என்னாக்
கேழில் ஆசி கிளத்திய பின்னர்.
119
   
2692.
மன்ன நீ இவண் வந்திட மேல் நாள்
என்ன நோன்பை இயற்றினனே யான்
அன்னவாறு உணரேன் சிவன் அல்லால்
உன்னி நாடி உணர்ந்துளர் யாரே.
120
   
2693.
கற்றை வார் சடையான் கழல் பேணி
அற்றம் நீங்கி அரும் தவம் ஆற்றி
மற்று இவ்வாறு வளத்தியல் யாவும்
பெற்று உளாய் பெருவன்மை பிடித்தாய்.
121
   
2694.
பொன்னை மேவு பொலன் கெழு மார்பன்
தன்னை வானவர் தங்களை எல்லாம்
இன்ன நாள் இளையோற்கு கொடு வென்றாய்
உன்னை நேர் உளரோ உலகத்தில்.
122
   
2695.
காதலான் மிகு காசிபன் மைந்தன்
ஆதலால் அவுணர்க்கு இறை நின் மூ
தாதையான் சரதம் இது நின் சீர்
ஏதும் என் புகழ் யான் பிறன் அன்றே.
123
   
2696.
என்று பன் முகமன்கள் இசைத்தே
நின்று தம்பியர் தங்களை நேர்ந்து
பொன்றிடாத பொலம் சிலை திண் தேர்
ஒன்று தன் படையும் முத உற்றான்.
124
   
2697.
வெருவ அச் சுரர் வீற்று உறு பான்மை
இருவருக்கும் அளித்தலும் யாரும்
பரவு கொற்றவன் அன்னது பாராப்
பெரு மகிழ்ச்சி கொள் பெற்றியன் ஆனான்.
125
   
2698.
அருத்தி எய்தி அயன் தனை அங்கண்
இருத்தி மாயை முன் ஈந்து அருள் மைந்தன்
மருத்துழாய் முடி மன்னவன் வைகும்
திருத்தகும் முலகத்து இடை சென்றான்.
126
   
2699.
அந்த வேலையில் ஆண்டு உறும் மாலோன்
வந்து சூரபன் மாவினை எய்தி
நந்தல் இல்லது ஒர் நாளொடு வாழ்க என்று
அந்தம் இல் பல ஆசி புகன்றான்.
127
   
2700.
ஆசி கூறினன் ஆற்றவும் இன்சொல்
பேசவே பெரு மாமகிழ்வு எய்தி
மாசு இல் அவ் உலகு எங்கணும் வல்லே
பாசனத் தொடு பார்த்தனன் அன்றே.
128
   
2701.
பார்த்தபின் பணியின் மிசை வைகும்
தீர்த்தன் ஆண்டு திகழ்ந்து உற நல்கிக்
கார்த்தில் அங்கு உறு கந்தர முக்கண்
மூர்த்தி வைகிய மூது உலகு உற்றான்.
129
   
2702.
அரி அயன் முதலா உள்ள அமரர்கள் யார்க்கும் தத்தம்
உரிய தோராணை எல்லாம் உலப்புறாது உதவி வைகும்
பரமனது உலகம் நண்ணிப் பரிசனம் யாவும் நீங்கிச்
சுரர் புகழ் சூரபன்மன் துணைவர்களோடு போனான்.
130
   
2703.
போந்தனன் அமலன் கோயில் புறம் கடை வாயில் நின்றே
ஆய்ந்திடு நந்தி எந்தை அருள் முறை உய்ப்பச் சென்று
காந்தளை அனைய செம்கைக் கவுரியோடு உறையும்
                                      முக்கண்
ஏந்தல் முன் அணுகி ஆர்வத்து இறைஞ்சியே ஏத்தி
                                      நின்றான்.
131
   
2704.
கண்ட நஞ்சு உடைய அண்ணல் கருணை செய்து இனி
                                    நீ யேனை
அண்டமும் சென்று நாடி ஆணையால் அகிலம் யாவும்
எண் திசை புகழும் ஆற்றால் இறை புரிந்து இருத்தி
                                      என்னப்
புண்டரீகத் தாள் போற்றி விடை கொண்டு புறத்து
                                     வந்தான்.
132
   
2705.
புறம் தனில் வந்து சூரன் பொம் எனத் தானை எய்திச்
சிறந்திடுகின்ற அண்ட கோளகை சேர்தலோடு
மறம் தரு ஞமலி மேலோர் உருத்திரர் வரம்பிலோர்கள்
உறைந்தனர் அனையர் எல்லாம் உமா பதி அருள் உட்
                                   கொண்டார்.
133
   
2706.
பாங்கு உறும் அண்டம் செல்லும் பான்மையில் வாயில்
                                      காட்டி
ஆங்கு அவர் விடுப்ப மற்றை அண்டத்துச் சூரபன்மன்
ஓங்கிய தானையோடும் ஒல்லையில் போகி யாண்டும்
ஈங்கு இது போல நாடி யாரையும் வென்று போனான்.
134
   
2707.
ஏனை அண்டங்கள் எல்லாம் எம்பிரான் கணமா
                                    உள்ளோர்
ஆனவர் அருளில் போகி அகிலமும் நாடி அங்கண்
வானவர் தம்மை வென்று வளம் எலாம் கவர்ந்து தன்பால்
தானவர் பலரை அங்கண் தன் அரசு அளிப்ப உய்த்தான்.
135
   
2708.
இத்திறம் வீற்று வீற்றா எல்லையில் அண்டம் தோறும்
மெய்த் தமர் ஆகி உள்ள அவுணரை வேந்தர் ஆக
வைத்தனன் துணைவரோடு மீண்டனன் மற்று இவ்
                                   அண்டப்
பித்திகை அதன் உள் சென்று பெறல் அரும் துறக்கம்
                                     உற்றான்.
136