நகர் செய் படலம்
 
2746.
என அரி புகலக் கேளா இன்னதோ நிகழ்ச்சி என்றான்
அனை அதன் பின்னர் ஆண்டை அமரர் கம்மியனை
                                      நோக்கி
வனை கழல் சூர பன்மன் மற்றி யாம் உரைத்தற்கு ஒத்த
புனை திரு நகரம் வல்லே புரிமதி புலவ என்றான்.
1
   
2747.
என்றலும் கடவுள் தச்சன் இறைஞ்சியே நுமக்குச் செய்யும்
வென்றி கொள் மூதூருக்கு வியல் இடம் உரைத்தி என்ன
நன்று எனப் புகரோன் தானே நகர்களுக்கு எல்லை கூர
அன்று அவை வினவித் தென்பால் அளக்கரை
                            அடைந்தான் அன்றே.
2
   
2748.
ஆசு அறு கடலின் ஊடே அயுதம் ஓர் எட்டாய் உள்ள
யோசனை எல்லை முன்னோன் உறு நகராகக் கோலிக்
காசினி வரைகள் தம்மால் கதும் எனத் தூர்த்து மிக்க
பாசறை கொண்டே ஒப்ப அணித்தலம் படுத்துப் பின்றை.
3
   
2749.
காய் உறு கதிர்கள் காஞ்சிக் கம்பை மா நீழல் வைகும்
நாயகி நரகம் என்ன நாள் தொரும் சூழும் ஆற்றால்
சேய் உயர் விசும்பில் போகச் செம்பொனால் மதிலைச்
                                       செய்து
வாயில்கள் நான்கு அமைத்து ஞாயிலும் வகுத்து நல்கி.
4
   
2750.
நாற் பெரு வாயில் ஊடு மேருவே நண்ணிற்று என்ன
மால் பெரும் கோபுரங்கள் மணி வெயில் எறிப்ப நல்கி
நூல் படும் ஒழுக்கம் நாடி நூறு யோசனை ஒன்று ஆகப்
பால் படு மாட வீதி பற்பல அமைத்து மன்னோ.
5
   
2751.
முப்புரம் ஒருங்கு உற்று என்ன மும் மதில் அவற்றுள்
                                       நல்கி
ஒப்பு அரும் திருவின் வீதி உலப்பில புரிந்து சோமன்
வைப்பு எனச் செம் பொன் மாடம் வரம்பு இல வகுத்து
                                        மாதர்
மெய்ப்படும் ஆடல் கூரும் வியல் இடம் பலவும் செய்து.
6
   
2752.
மாளிகை தோறும் தெற்றி மண்டபம் அணிசேர் முன்றில்
கோளரி தயங்கு பொற்பில் கோபுரம் குன்றம் அம்பொன்
சூளிகை அரங்க மன்றம் சுடரும் மேல் தலங்கள் தூய
சாளரம் சோலை வாவி தனித் தனியாகத் தந்து.
7
   
2753.
ஆயதன் நடு உற அயுத எல்லையில்
பாயதோர் நெடு மதில் பயில நல்கியே
மாயவள் திருமகன் வைக ஆங்கு ஒரு
கோயிலை எழில் பெறக் குயிற்றினான் அரோ.
8
   
2754.
வாரணம் விரவு தேர் மக்கள் போந்திடும்
தோரண வாயில்கள் தொடர்ந்த தெற்றிகள்
சீர் அணி தபனியச் சிகர கோபுரம்
காரணி மணிவரை கவின் கொள் சூளிகை.
9
   
2755.
ஆனைகள் பயில் இடம் அயங்கள் சேர் இடம்
சேனைகள் உறைவிடம் தேர்கள் வைகிடம்
தானவர் தலைவர்கள் சாரும் தொல் இடம்
ஏனைய அரக்கர்கள் இனிது சேர் இடம்.
10
   
2756.
நாடரும் விசும்பு உறை நாரி மார் எலாம்
ஆடலை இயற்றிடும் அரங்க மண்டபம்
பாடலின் முறை பயில் பைம் பொன் மண்டபம்
மாடக யாழ் முரல் வயிர மண்டபம்.
11
   
2757.
மயில் புற வோதிமம் வன்ன மென் கிளி
குயில் முதல் ஆகிய குலவு மண்டபம்
இயல் உறு யூக மான் இரலை செச்சைகள்
பயில் உறு வாரணம் பரவும் மண்டபம்.
12
   
2758.
சந்ததம் மறை ஒலி தழங்கு மண்டபம்
முந்திய வேள்விகள் முயலும் மண்டபம்
மந்திர இயல்பினோர் மருவு மண்டபம்
இந்திரன் முதலினோர் இருக்கும் மண்டபம்.
13
   
2759.
திருமிகு நிருதர் கோன் தேவர் போற்றிட
அரசியல் புரியும் அத்தாணி மண்டபம்
இரு நிதி உள எலாம் ஈண்டும் மண்டபம்
பரன் அருள் படைக்கலம் பயிலும் மண்டபம்.
14
   
2760.
அருந்து உறும் அமிர்து உறழ் அடிசில் மண்டபம்
நரந்தையே பாளிதம் நறைகொள் சாந்து அகில்
பெருந்துவர்க் காயடை பிறவும் சாலவும்
இருந்திடு கின்றபேர் எழில் கொள் மண்டபம்.
15
   
2761.
மான் அனையார் பலர் மருவு மண்டபம்
ஆனது ஓர் ஊசல் ஆட்டு அயரும் மண்டபம்
பால் நிலா உமிழ் தரு பளிங்கின் மண்டபம்
வான் உயர் சந்திர காந்த மண்டபம்.
16
   
2762.
மா மணி ஒளிர் தரு வசந்த மண்டபம்
காமரு பவளம் ஆர் கவின் கொள் மண்டபம்
ஏமரு மரகதத்து இயன்ற மண்டபம்
தாமரை உயிர்த்திடு தரள மண்டபம்.
17
   
2763.
கோ இயல் மரபினோர் கொள்கைக்கு ஏற்றன
யாவையும் நல்கியே இதனுக்கு உள் உற
மாவுறு சூரபன் மாவும் தன் குலத்
தேவியும் உறைய ஓர் உறையுள் செய்தரோ.
18
   
2764.
இங்கு இது சூழ் தர எண் இலாதன
மங்கல நிறை தரு மாட வீதிகள்
அங்கு அவன் துணைவியர் ஆகி வந்திடும்
நங்கையர் மேவர நலத்தின் நல்கியே.
19
   
2765.
காவியும் குமுதமும் கமலமும் செறி
வாவிகள் ஓடைகள் பொய்கை வான்தொடு
பூ இயல் தண்டலை பொலன் செய் குன்றுடன்
யாவையும் முறை பட இயற்றினார் அரோ.
20
   
2766.
அள்ளல் அம் திரைக் கடல் அகழி ஆகவே
உள் உறு நகர் இடை உறையும் கோயிலில்
தள்ளரும் பொன் சுடர் தழைத்த பொற்பினால்
வெள்ளியது ஆனது மேலைப் பொன் நகர்.
21
   
2767.
இன்னவையும் ஏனவையும் எண்ணி மனத்தால் அருளித்
தன் நிகர் இல் அவுணர் பிரான் சயத்தொடு பெரும்
                                     தலைமை
மன்ன வருதலின் வீர மகேந்திரமே யாம் என்றே
அந் நகருக்கு ஓர் நாமம் அணி பெறுத்தி அளித்தனனே.
22
   
2768.
ஏம புரம் இமைய புரம் இலங்கைபுரம் நீலபுரம்
சோமபுரம் எனப் புகலும் சுவேத புரம் அவுணர் புரம்
வாம புரம் பதுமபுரம் மகேந்திரமா புரம் என்னும்
காமர் புரத்து எண் திசைக்கும் காட்சி பெற உதவினன்
                                        ஆல்.
23
   
2769.
மாண்டகுசீர் கெழு வீர மகேந்திரம் இவ்வாறு உதவி
ஆண்டது போல் அகன் பரப்பில் ஆசுரம் என்று ஒரு
                                       நகரம்
நீண்ட வட கடல் நடுவண் நிருதர் புகழ்ந்திடும் ஆற்றால்
காண்தகைய சீய முகக் காவலற்கு நல்கினனே.
24
   
2770.
மற்று உள வெம் புணரி தொறும் வயின் வயின் சேர்தீவு
                                       தொறும்
கொற்றம் மிகும் சூரபன்மன் குலவு பெரும் தானை
                                      யெலாம்
சுற்றம் உடன் மேவுதற்குத் தொல் நகரம் பல அமைத்துக்
கற்று உணரும் சிறுவரொடும் கம்மியன் மீண்டு ஏகினனே.
25
   
2771.
நீடு மேரு நெடுவரைத் தென் புடை
நாடு சீர் கெழு நாலந் தீவினில்
கூடுகின்ற பொன் கூடம் தனக்கு ஒரு
மாடு போந்தனன் மாமயன் தாதையே.
26
   
2772.
பகருகின்ற அப் பாற்படும் எல்லையில்
தகுவர் போற்றிடும் தாரகற்கு ஆகவே
மகிழ்வின் நீரொடு மாயா புரம் எனா
நகரம் ஒன்றை அணிபெற நல்கினான்.
27
   
2773.
வினையர் தம்மொடு விச்சுவ கன்மனும்
இனைய ஊர்கள் இயற்றி அம் மாயையின்
தனயனுக்கு இவை சாற்றலும் நன்று எனா
அனிகமோடு அங்கு அடைந்தனன் என்பவே.
28