தேவரை ஏவல் கொள்படலம்
 
2809.
அரசு செய்தலும் அந்தர நாதனும்
சுரரும் ஏனை முனிவரும் தொக்குறீஇ
வரை செய் மாட மகேந்திர மாபுரத்து
ஒருவன் ஏவலின் முன்னம் ஒழுகுவார்.
1
   
2810.
கொலைவல் சிங்க முகன் பதி குஞ்சரத்
தலைவன் மாப் பதி சார்ந்தவர் தம்பதி
பலவும் ஏகிப் பணித்தன ஆற்றியே
உலைவர் வைகலும் ஊசலின் நீர்மையார்.
2
   
2811.
ஊனம் உற்றோர் போல் இவ்வாறு உலைகின்ற
                  காலத்தில் ஒரு நாள் சூரன்
வானகத்துத் தலைவனையும் அமரரையும் வருக
                    எனாத் வலித்துக் கூவித்
தானவர்க்குத் தம்பியர் நீர் அவர் பணி நும் பணி
                    அன்றோ தரங்க வேலை
மீன் அனைத்தும் சூறை கொண்டு வைகலும்
          உய்த்திடுதிர் என விளம்பினான் ஆல்.
3
   
2812.
உரைக்குமொழி அது கேளா அனையர் எலாம் உள்
                     நடுங்கி உயங்கி வெள்கித்
திரைக் கடலின் மீன் தனக்குத் தருக என்றான் இதற்கு
                     இனி நாம் செய்வது ஏதோ
விரைக் கமலத் தனிக் கடவுள் இப்படியும் நம் தலையில்
                           விதித்தான் என்னா
இரக்கம் ஒடு மறுத்தல் அஞ்சி அத்திறமே புரிதும் என
                           இறைஞ்சிப் போனார்.
4
   
2813.
போகின்ற நெறியின் கண் இமையவரும் புரந்தரனும்
                             பொருமி ஏங்கி
ஆகின்றது எமக்கே ஓர் பழி அன்றோ அனையது
                      வந்து அணுகா முன்னர்ச்
சாகின்றதே மிகவும் இனிதாகும் எமக்கு அதுவும்
                              சாராது அந்தோ
வேகின்ற சிந்தையினேஞ் செய்வது எவன் எனப்
                         புலம்பி வேலை புக்கார்.
5
   
2814.
அவ்வேலை இமையவர் கோன் வருணன் எனும்
                  கடவுளை நின்று அழையா இந்த
மை வேலை தனக்கு இறைவன் நீ அன்றோ நின்னினும்
                          ஓர் வலியார் உண்டோ
கை வேலைப் பணி இயற்றித் திமிங்கிலமே முதலாய
                             கணிப்பின் மீன்கள்
இவ்வேலை ஏற்றுதியேல் இடர் வேலைக் கரையில்
                         எமை எடுத்தி என்றான்.
6
   
2815.
வெள்ளை வாரணக் கடவுள் உரை செய்த மொழி
                      கேட்டு விண் உளோர்க்கு
வள்ளல் நீ இரங்குதியோ அத் தொழில் யான் புரிவன்
                            என வருணன் கூறி
அள்ளல் வேலை உள் புகுந்து தனது பெரும்
                    கரதலத்தால் அலைத்து வாரி
உள்ளமீன் குலங்கள் எல்லாம் தடங்கரையில் வரையே
                       போல் உய்த்தல் உற்றான்.
7
   
2816.
தடக் கடலின் வேலை தனில் வருணர் பிரான்
                  ஒல்லை தனில் தந்த மீனத்து
அடுக்கல் முழுவதும் நோக்கிக் கடவுளரை விளித்து
                        இவற்றை ஆற்றலாலே
எடுப்பதும் நும் தொழில் என்றே இந்திரன் தான்
               விளம்புதலும் இமையோர் எல்லாம்
நடுக்கமுடன் உளம் பதைப்ப விழி பனிப்பக் கரங்
                   குலைத்து நாணுக் கொண்டார்.
8
   
2817.
சின்னை திமிங்கில கில மீன் ஆதிய மீன்
               அடுக்கலினைத் தென்பால் வைகும்
மன்னன் உயிர் தனை வாங்கச் செங்கதிரோன் பெரும்
                       புனலின் வடிவை வாட்டப்
பன்னகர் ஆகிய திறத்தால் பிணித்திடும் அச்சுமை
                    அதனைப் பகட்டின் வேந்தன்
இன்னல் உறு வானவர் பால் எடுத்த அவர் கொண்டு
                           ஏகி இரங்கு கின்றார்.
9
   
2818.
பன்னும் புகழ்ச் சூரபன்மன் எனும் தீயவனான்
முன்னும் துயர்க் கடலின் மூழ்கி முரண் அழிந்தேம்
துன்னும் பழியாம் தொழில் இதுவும் செய்தனம் ஆல்
இன்னும் படுவ தொழில் ஏதோ உணரேம் ஏ.
10
   
2819.
பேர்கின்ற நீலப் பிறங்கல் அனையான் பணியால்
ஆர்கின்றது இன்று ஓர் அலரே அஃது உயிரை
ஈர்கின்றது அந்தோ விதியே எமக்கு இதுவும்
தீர்கின்ற காலம் உளதோ நீ செப்பாயே.
11
   
2820.
பூ உலகம் தன்னில் பொருந்து கின்ற மானுடரும்
பாவம் என நூலில் பகருகின்ற இத் தொழிலை
ஏவர் புரிகின்றார் எமக்கோ வந்து எய்தும் அதோ
தேவ கதியின் நிரயம் சிறப்புடைத்தே.
12
   
2821.
தக்கது உணராத தானவர்கள் தங்களினும்
மக்களினும் தாழ்வாம் வலைஞர் தொழில் செய்தனம் ஆல்
இக்ககன வாழ்வை விரும்பியே யாம் செய்த
மிக்க தவமும் வினையாய் விளைந்ததுவே.
13
   
2822.
வேத நெறியை விலக்கினேம் மிக்கு உள்ள
போத நெறியாம் அதற்குப் புறம்பு ஆனேம்
தீது உடைய வெம் சூரன் சீற்றத்தால் செப்புகின்ற
வேத நெறி செய்வேமேல் எம்மினும் உயர்ந்தார் எவரே.
14
   
2823.
தேன் உலவும் தாருத் திரு நிழல் கீழ் இன்பம் உறும்
வானவர்கள் என்றே மதிக்கும் தகைமையினோம்
ஈனம் ஒடு மீன் சுமந்தே எல்லோர்களும் நகைக்கத்
தானவர் முன் செல்வதிலும் சாதல் மிக நன்று நன்றே .
15
   
2824.
என்னு மொழிகள் இயம்பிப் புலம்புற்றுத்
துன்னு நிருதர் புகழ் சூரன் திருநகரின்
மன்னு திசையாளர் ஒடும் வந்தனர் ஆல் அவ்வளவில்
அன்ன செயல் கண்டே அவுணர் உரை செய்குவார்.
16
   
2825.
மாதோயம் தன்னை வயிறலைத்து மற்று இவர்தாம்
ஈதோ சில மீன் தருகின்றனர் என்பார்
மீது ஓடிய பரிதி வெய்யோன் முன் உண்ட வெறும்
கோதோ எமக்குக் கொணர்கின்றார் என்று உரைப்பார்.
17
   
2826.
தாம் கடற்குள் மீனம் தலைக் கொண்டு மேவுகின்றார்
ஈங்கு இவர்க்கு நாணம் இலையோ சிறிது என்பார்
தீங்கு இழைக்கின் யாரேனும் செய்யாததேது என்பார்
மூங்கை ஒத்து உளாரோ மொழியார் இவர் என்பார்.
18
   
2827.
முந்து உற்ற தொல்லை முழுநீரின் வேலை தொறும்
பந்தத் துடன் வாழ் பரதவரே செய்கின்ற
இந்தத் தொழிலும் இவர்க்கு வருமோ என்பார்
சிந்திப்பது என்னோ விதியின் செயல் என்பார்.
19
   
2828.
வேத நெறிமுறைமை விட்டார் வினை செய்யும்
பேதை நெறியே பிடித்தார் இவர் என்பார்
கோது படா நம்தம் குலத்தை மிக நலிந்தார்
ஏதுபடார் இன்னம் இமையோர் என உரைப்பார்.
20
   
2829.
மண்ணோர்களும் இகழும் வன்பழி தன்பால் வரவும்
விண்ணோர்க்கு இறைவன் விரைவின் உயிர் விட்டிலன்
                                        ஆல்
கண்ணோ பெரிது கருத்தோ சிறிது என்பார்
பெண்ணோ அலிதானோ பேடோ என உரைப்பார்.
21
   
2830.
இந்த வாறு பலரும் இயம்பிடப்
புந்தி நொந்து புலம்பு புத்தேளிர்கள்
தந்தி ஊரும் தலைவனை முன் கொடு
வந்து தீயவன் வாய்தல் உற்றார் அரோ.
22
   
2831.
பரிதி வேந்தன் பணிமுறை நாடியே
வருதிர் ஈண்டு என்று வாயிலர் கூறிடப்
பொரு திரைக் கடல் மீன் கொடு போய்ச்சுரர்
ஒரு தனிப் பெரும் கோயில் உள் உய்த்தனர்.
23
   
2832.
எளித்தல் எய்தும் இமையவர் உய்த்த மீன்
துளித்த தேன் தொடைச் சூர் முதல் காண் உறீஇக்
களித்து வந்து கடவுளர் வைகலும்
அளித்திர் என்ன அழகுஇது என்று ஏகினார்.
24
   
2833.
என்றும் ஆங்கு அவர் இச்செயல் ஆற்றியே
பொன்றினாரின் புலந்து புலம்பு உறீஇத்
துன்று கின்ற துயர்க் கடல் மூழ்கியே
ஒன்றும் வேத ஒழுக்கம் அற்றார் அரோ.
25