இந்திரன் கரந்து உறைபடலம்
 
2888.
இப்படி அவுணர்கள் இனையர் ஏனையோர்
செப்பரு முனிவரைத் தேவர் தங்களை
ஒப்பு அறு நரர் தமை ஒறுப்ப மாயை தன்
வைப்புறு காதலன் அரசின் மன்னினான்.
1
   
2889.
ஆயிரத்து எட்டு எனும் அண்டம் யாவையும்
சேயுயர் இந்திர ஞாலத் தேர் மிசை
ஏய் எனும் அளவையில் ஏகி வைகலும்
நாயக முறையினை நடாத்தி நண்ணினான்.
2
   
2890.
ஒரு பகல் பாதலத்து ஊடு வைகிடும்
ஒரு பகல் மாதிரம் உலவிச் சேர்தரும்
ஒரு பகல் விண் பதம் தோறும் உற்றிடும்
ஒரு பகல் அயன் பதத்து உன்னி மன்னுமே.
3
   
2891.
தண் நறும் துளவினான் தனது தொல்பதம்
நண்ணிடும் ஒரு பகல் நாளும் இவ்வகை
எண் அரும் உலகு தோறும் ஏகி மாலையில்
துண் என மீள்வன் ஆல் சூர பன்மனே.
4
   
2892.
அவ்வகையால் அரசு ஆற்றும் எல்லையில்
எவ்வம் இல் சூர் முதல் இந்திரன் எனும்
தெவ்வினை வன்சிறை செய்து தேவியை
வவ்விய உன்னினன் வருவது ஓர்கிலான்.
5
   
2893.
உன்னிய தீயவன் ஒரு தானையின்
மன்னனை விளித்து நீ வாசவன் தனை
இன்னதோர் பொழுதினில் எய்திப் பற்றி என்
முன்னுற விடுக என முன்னம் ஏவியே.
6
   
2894.
நீடிய தன் பெரு நிலயம் காப்பவர்
கோடு உறு நிசிசரர் குலத்துள் தோன்றினார்
கேடகம் வாள் அயில் கெழுவு கையினார்
பாடவ மடந்தையர் பவங்கள் போன்று உளார்.
7
   
2895.
ஒன்பது கோடியர் தம்மை ஒல்லையில்
அன்புடன் விளித்து நீர் அமரர் தம் இறை
இன்பு உறு தேவியைப் பற்றி ஈம் என
வன்பொடு போக்கினன் மன்னர் மன்னனே.
8
   
2896.
போக்கலும் அவர் எலாம் பொன்னின் நாட்டின் மேல்
ஊக்கம் அது அகியே உருத்துச் சேறலும்
நோக்கிய தூதுவர் நொய்தில் போகியே
மாக்கிளர் இந்திரன் மருங்கு நண்ணினார்.
9
   
2897.
வந்தனர் அவுணரும் வயம் கொள் மாதரும்
அந்தம் இல் படையொடும் அடல் செய் நீரர் போல்
சிந்தனை ஆவதோ தெரிந்திலோம் என
இந்திரன் வினவுற இசைத்து நிற்கவே.
10
   
2898.
பொம் என அவர் தமைப் போக்கித் தீயினும்
வெம்மை கொள் நெஞ்சினார் வினைய முன்னியே
அம் மனை மனைவியோடு அகன்று மாயையான்
இம் என இப்புவி தன்னில் ஏகினான்.
11
   
2899.
ஏகிய எல்லையின் இகல் வெம் சூர் விடப்
போகிய மாதரும் பொருவில் வீரரும்
நாகர் தம் இறை அமர் நகரை நண்ணினார்
ஆகர முதலிய இடம் தொறும் ஆய்குவார்.
12
   
2900.
வினை வயின் சென்றிடும் வீரர் யாவரும்
துனை மகத்து இறைவனைத் துருவி காண்கிலர்
மனைவியைக் காண்கிலர் மாதர் யாவரும்
நினைவு அயர்த்து உள்ளுறு கவலை நீடினார்.
13
   
2901.
நாயகன் இவ்விடை நம்மைக் கூவியே
ஏயின செயலினை ஈறு செய்கிலம்
போயினன் சசியொடும் புலவர் கோன் எனா
ஆயவன் நகர் எலாம் ஆய் உற்றார் அரோ.
14
   
2902.
சுற்றினர் நகர் எலாம் துருவித் தேவரைப்
பற்றினர் விலங்கலின் பகைவன் காட்டு என
எற்றினர் புலோமசை யாண்டையாள் எனக்
குற்றினர் வாய்தொறும் குருதி பாயவே.
15
   
2903.
விண்ணவர் யாவரும் வேந்தும் தேவியும்
நண்ணியது உணர்கிலம் நாங்கள் எங்களைத்
துண் என வருத்தலிர் துயர்கின்றோம் எனாத்
தண் அளி வரு நெறி தளர்ந்து சாற்றவே.
16
   
2904.
விட்டனர் தேவரை விண்ணை நீங்கினர்
முட்டினர் மகேந்திர முதிய மாநகர்
கிட்டினர் வேந்தனைக் கிளர்ந்து வான் இடைப்
பட்டது புகன்றனர் பழி கொள் நெஞ்சினார்.
17
   
2905.
போயினர் இருவரும் புறத்தர் ஆய் என
ஆயவர் மொழியவே அவுணர் மன்னவன்
தீ என வெகுண்டனன் தேட ஓணாதது ஓர்
தூய் மணி இழந்திடும் அரவின் துன்பு உளான்.
18
   
2906.
ஒற்றரில் பலர் தமை ஒல்லை கூவியே
பொன் தொடி அணங்கொடு பொன்னின் நாட்டவர்
கொற்றவன் இருந்துழிக் குறுகி நாடியே
சொற்றிடுவீர் எனச் சூரன் தூண்டினான்.
19
   
2907.
தோடு அவிழ் தெரியலான் தூண்ட ஒற்றர்கள்
ஓடினர் வீற்று வீற்று உலகம் எங்கணும்
தேடினர் காண்கிலர் திரிகுற்றார் இனி
நீடிய பொன் நகர் நிகழ்ச்சி கூறுகேன்.
20
   
2908.
செல் எனும் ஊர்தி அண்ணல் தேவியும் தானும் நீங்கச்
சொல் அரும் ககனம் பூத்த சோமனும் உடுவும் போன
எல்லியம் பொழுது போன்றே யாதும் ஓர் சிறப்பும்
                                   இன்றாய்ப்
புல் எனல் ஆயது அன்றே பொருவில் பொன் நகரம்
                                    எல்லாம்.
21
   
2909.
அழிந்தன வளங்கள் எல்லாம் ஆகுலம் மயங்கிற்று இன்பம்
ஒழிந்தது வானோர் உள்ளம் ஒடுங்கியது உலகம் எங்கும்
எழுந்தது புலம்பல் ஓதை யாவர் தம் கண்ணும் தெண்ணீர்
பொழிந்தது சுவர்க்கம் ஆவி போனவர் போன்றது
                                      அன்றே.
22
   
2910.
இன்னனம் நிகழும் முன்னர் இந்திரன் இளவல் ஆகி
மன்னிய உபேந்திரன் தான் வானவர் உலகை நீங்கி
முன்னை வைகுண்டம் புக்கான் முனிவரர் கலிக்கா வஞ்சிக்
கன்னிகை நோற்று மேவும் காஞ்சியை அடைந்த வாபோல்.
23
   
2911.
சேண் பதம் தன்னை நீங்கும் சிறயதோர் தந்தை
                                  தன்னைக்
காண்பது கருதிப் போந்து கடவுளர்க் கிறைவன்
                                  மைந்தன்
தூண் புரை கின்ற செம் பொன் தோள் உடைச்
                          சயந்தன் என்போன்
மாண் பொடு சிறிது வைகல் வைகுண்டத்து
                          இருந்தான் அன்றே.
24
   
2912.
இருந்திடு சயந்தன் என்போன் இந்திரன் இறைவி யோடும்
கரந்துடன் போந்த வாறும் காமரு துறக்கம் தன்னில்
விரைந்து வந்து அவுணர் தேடி மீண்டிட
                              விண்ணுளோர்கள்
அரந்தையோடு உற்ற வாறும் அங்ஙனம் தேர்ந்தான்
                                      அம்மா.
25
   
2913.
தந்தை தன் மெலிவு காணில் தம் குடித் தலைமை
                                     எல்லாம்
மைந்தர்கள் பரித்துக் கோடல் வழக்கம் தாம் அறனும்
                                      அஃதே
எந்தையும் இல்லை யான் போய் என் நகர் காப்பன்
                                     என்னாப்
புந்தியில் உன்னி மைந்தன் பொன் நகர் தன்னில்
                                      வந்தான்.
26
   
2914.
பொன் நகர் புக்க மைந்தன் புலம்பு உறு சுரரைக் கண்டு
தன் உயிர் போலும் தந்தை தாய் தனைக் காணான் ஆகி
இன்னல் அம் கடலின் மூழ்கி ஏக்கமோடு இரக்கம் மிக்குப்
பின் ஒரு செயலும் இன்றிப் பித்தரே போல உற்றான்.
27
   
2915.
உற்றிடும் எல்லை தன்னில் உம்பர் கோன் மதலை உள்ளம்
தெற்று எனத் தெளிப்ப உன்னி நாரதன் என்னும் சீர் சால்
நல் தவ முனிவன் செல்ல நடுக்கமோடு எழுந்து தாழ்ந்து
மற்று ஒரு தவிசு நல்கி இருத்தியே மருங்கு நின்றான்.
28
   
2916.
நின்றிடு சயந்தன் சொல்வான் நித்தலும் வருத்தம் செய்யும்
வன் திறல் சூரற்கு அஞ்சி மற்று எனைப்பயந்த மேலோர்
சென்றனர் சென்ற எல்லை தெரிந்திலேன் எமக்குத் தீமை
என்று இனி அகலும் கொல்லோ எம்பிரான் இயம்புக
                                    என்றான்.
29
   
2917.
தருக்கினை இழந்து நின்ற சயந்தன் இத்தன்மை கூறப்
பொருக்கு என முனிவன் ஓர்ந்து பொங்கு பேர்
                           அருளால் நோக்கித்
திருக்கிளர்கின்றது ஆங்கு ஓர் செழுமணித் தவிசின்
                                      மீதில்
இருக்க என இருத்திப் பின்னர் இன்னன இசைக்கல்
                                    உற்றான்.
30
   
2918.
தீங்கு வந்து அடையு மாறும் நன்மை தான் சேரு மாறும்
தாங்கள் செய் வினையினாலே தத் தமக்கு ஆய அல்லால்
ஆங்கு அவை பிறரால் வாரா அமுதநஞ்சு இரண்டினுக்கும்
ஓங்கிய சுவையின் பேதம் உதவினார் சிலரும் உண்டோ.
31
   
2919.
இன்பம் அது அடைந்த காலை இனிது என மகிழ்ச்சி
                                     எய்தார்
துன்பம் அது உற்ற போதும் துண் எனத் துளங்கிச்
                                     சோரார்
இன்பமும் துன்பம் தானும் இவ் உடற்கு இயைந்த
                                     என்றே
முன்பு உறு தொடர்பை ஓர்வார் முழுவதும் உணர்ந்த
                                      நீரார்.
32
   
2920.
வறியவர் செல்வர் ஆவர் செல்வர் பின் வறியர் ஆவர்
சிறியவர் உயர்ந்தோர் ஆவர் உயர்ந்து உளோர் சிறியர்
                                       ஆவர்
முறை முறை நிகழும் ஈது முன்னை ஊழ் வினையே
                                     கண்டாய்
எறிகதிர் வழங்கும் ஞாலத்து இயற்கையும் இனையது
                                      அன்றே.
33
   
2921.
ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வும் எல்லாம்
நீக்கம் இல் உயிர் கட்கு என்றும் நிலை எனக்
                              கொள்ளல் பாற்றோ
மேக்குயர் கடவுள் திங்கள் வெண் நிலாக் கதிரின் கற்றை
போக்கொடு வரவு நாளும் முறை முறை பொருந்திற்று
                                       அன்றே.
34
   
2922.
ஆதலின் உமது தாழ்வும் அவுணர்தம் உயர்வும் நில்லா
ஈது மெய் என்று கோடி இந்நகர் தணந்து போன
தாதையும் பயந்த தாயும் தம் உருக் கரந்து போந்து
மேதினி வரைப்பின் ஊடு மேவினர் போலும் அன்றே.
35
   
2923.
மைந்த நீ தோற்று முன்னம் வானவர்க்கு அலக்கண்
                                     செய்த
தந்தியின் முகம் கொண்டு உற்ற தானவன் துஞ்சும்
                                  வண்ணம்
அந்த நாள் உனது தந்தை முயன்றனன் அதனைப் போல
இந்த வெம் சூரன் மாயம் இன்னமும் முயல்வன் கண்டாய்.
36
   
2924.
என்று இவை பலவும் கூறி இன் இனி வெம் சூர் தானும்
பொன்றிடும் உமது துன்பும் பொள் என அகன்று போகும்
நன்று இது துணிதி என்றே நாரத முனிவன் தேற்றிச்
சென்றனன் சயந்தன் அங்கண் இருந்தனன் தெட்பம் எய்தி.
37
   
2925.
வருந்திய அமரர் தம்மை மனப்படத் தேற்றி நாளும்
திருந்தலன் பணித்த ஏவல் செய்திடத் தூண்டி வான்மேல்
இருந்தனன் சயந்தன் என்போன் இருநிலத்து இடை
                                    முன் போன
புரந்தரன் செய்த தன்மை யான் இனிப் புகலுகின்றேன்.
38
   
2926.
மெய்த்தரு நீழல் வைகும் வெறுக்கையை வெறுத்துப்
                                     பாரில்
சித்திர மனைவியோடும் தெக்கிண தேயம் புக்குப்
பத்துடன் இரண்டு நாமம் படைத்த தொல் காழி நண்ணி
இத்தலம் இனிதே என்னா இருந்தனன் இமையோர்
                                      கோமான்.
39
   
2927.
அந்த நல் இருக்கை தன்னில் அயர் உயிர்த்து
                          இறைவியோடும்
இந்திரன் இருந்த பின்னர் என்று நாம் இறைவற்
                                போற்றிப்
புந்தி கொள் மகிழ்வால் பூசை புரிதும் என்று உன்னி
                                  ஆண்டு ஓர்
நந்தன வனத்தை வைப்பான் நாடியே இனைய செய்வான்.
40
   
2928.
சந்தம் அகில் பலவும் தேமாச் சரளமே திலகம் தேக்குக்
கொந்து அவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம்
நந்திய கதலி கன்னல் நாகு இளம் பூகம் வன்னி
முந்து உயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி.
41
   
2929.
சாதியே கோங்கு நாகம் சண்பகம் இதழி ஞாழல்
பாதிரி வழையே குந்தம் பாரிசாதம் செருந்தி
போதுறு நரந்தம் வில்வம் பொலிகர வீரம் செச்சை
கோது அறு மயிலை மௌவல் கொழுந்து செவ்வந்தி
                                     முல்லை.
42
   
2930.
இவை முதல் ஆகி உள்ள தருக்களும் புதலும் எல்லாம்
நவை அறம் தெரிந்து வைத்து ஓர் நந்தன வனத்தைச்
                                       செய்ய
அவை மிக மலர்ந்த அம்மா அம்மலர் கொண்டு நாளும்
சிவன் அடி அருச்சித்து அங்கண் தேவியோடு இறைவன்
                                       உற்றான்.
43
   
2931.
உற்றிடும் எல்லை தன்னில் உலகினில் அவுணர்க்கு
                                   எல்லாம்
கொற்றவன் விடுத்த ஒற்றர் குவலயம் துருவிச் செல்ல
அற்றது தெரிந்து வல்லே அமரர்கோன் துணைவி யோடு
மற்று அவண் வேணுவாகி மறைந்து நோற்று இருந்தான்
                                       மாதோ.
44
   
2932.
வேணுவின் உருப்போல் நின்று மொலிவொடு நோற்று
                                      நாளும்
தாணுவை வழிபட்டு அங்கண் சதமகன் சாரும் நாளில்
காணிலர் ஒற்றர் போனார் கருமுகில் அவுணர் தங்கள்
ஆணையில் பெய்யாது ஆக அவ்வனம் வாடிற்று அன்றே.
45
   
2933.
நீடிய காமர் பூங்கா நெருப்பு உறு தன்மைத்து என்ன
வாடின நீர் இன்றாகி மற்றது மகத்தின் கோமான்
நாடினன் கவன்று தொல் நாள் நான் முகத்தவனும் மாலும்
தேட அரும் பரனை உன்னி இரங்கினன் செயல் வேறு
                                     இல்லான்.
46
   
2934.
திருந்தலர் புரம் மூன்று அட்ட சேவகன் பரவலோடும்
பொருந்து அலர் பூங்கா வாடிப் போயின எனினும்
                                  பொன்றா
இரும் தலம் இதனில் ஆறு ஒன்று எய்தும் ஆல்
                           மகவான் இன்னே
வரும் தலை என்று ஓர் மாற்றம் வானிடை எழுந்தது
                                    அன்றே.
47
   
2935.
எழுவது ஓர் செம் சொல் கேளா எம்பிரான் அருள்
                               ஈது என்னாத்
தொழுதனன் போற்றி மேனி துண் எனப் பொடிப்பச்
                                     சிந்தை
முழுவதும் மகிழ்ச்சி பொங்க மொய்ம்பொடே
                          இருந்தான் அங்கண்
அழகிய நதி ஒன்று உற்ற வரன் முறை அறையல்
                                  உற்றேன்.
48