விந்தம் பிலம் புகு படலம்
 
3006.
அன்னதோர் அவணர் கோமான் அன்று தொட்டு
                               அசலம் ஆகித்
துன் நெறி அவுணர் யாரும் துவன்றிய அரணம் ஆகி
நென்னலின் முதல் நாள் காறும் நின்றனன்
                           அனையான் தன்னை
என்னை ஆளுடைய நீ அன்றி யாவரே அடுதல் பாலார்.
1
   
3007.
பைந்தமிழ் முனிவன் வான் தோய் பனிவரை அதனை
                                       நீங்கிக்
அந்தரம் செறி பொன் கோட்டுக் கடவுளர் வரைச் சார்
                                        எய்தி
அந்தம் அது அடைந்தோர்க்கு அங்கண் அருளினால்
                                    தனது மூல
மந்திரம் உணர்த்தும் முக்கண் வானவன் காசி புக்கான்.
2
   
3008.
கங்கை சென்று ஒழுகும் காசிக் கறை மிடற்று அகில
                                      நாதன்
பங்கய அடிகள் தாழ்ந்து பரவல் செய்து ஆண்டு நீங்கித்
துங்கதை கொண்ட விந்தத் தொல்வரைக்கு ஒருசார் ஏகி
அங்கு அதன் நிலைமை நோக்கி அறிவன் ஒன்று
                               இயம்பல் உற்றான்.
3
   
3009.
சேய் உயர் நிவப்பிற்று ஆகிச் சேண்புகும் விந்தம்
                                   என்னும்
மாயிரும் குவடு கேண்மோ மற்று யாம் பொதிய வெற்பில்
போய் இருந்திடவே உன்னிப் போந்தனம் அதனுக்கு
                                     இன்னே
நீ ஒரு சிறிது செல்லும் நெறி அளித்திடுதி என்றான்.
4
   
3010.
எறி கதிர் மதியினுக்கும் ஏக அரும் திறத்தால் வான
நெறியினை அடைத்துத் தொல்லை நெடியமால் போன்று
                                      நின்றேன்
குறிய நிற் கஞ்சி ஆறு கொடுப்பனோ எனது தோற்றம்
அறிகிலை மீண்டு போகென்று அவ்வரை மொழிந்தது
                                      அன்றே.
5
   
3011.
கேட்டலும் அதனைச் சீற்றம் கிளர்ந்திட நகைத்து நாதன்
தாள் துணை உன்னித் தொல் நாள் சதமகன் வேண்ட
                                       ஆழி
மாட்டு உறச் செறித்த கையை மலர் அயன் பதத்தின்
                                      காறும்
நீட்டினன் தவமே அன்றி நெடும் பொருள் பிறவும்
                                   உண்டோ.
6
   
3012.
அற்புதம் அமரர் கொள்ள ஆற்றவும் குறியோன் விந்த
வெற்பினது உம்பர் தன்னில் மீ உயர் குடங்கை சேர்த்தி
வற்புற ஊன்ற வல்லே மற்று அதுபுவிக்கண் தாழ்ந்து
சொற்பிலம் புகுந்து சேடன் தொல் நிலை அடைந்தது
                                      அன்றே.
7
   
3013.
அள்ளலை அடைகின்றோரில் அரம் புகும் அடுக்கல்
                                      அஞ்சி
வள்ளலை அருளிக் கேண்மோ மற்று உனை வழி படாமல்
எள்ளலை இழைத்து மேன்மை இழந்தனன் தமியன் குற்றம்
உள்ளலை எழுவது எஞ்ஞான்று உரை எனக் கூறிற்று
                                        அன்றே.
8
   
3014.
அன்னது ஓர் பொழுது தன்னில் அலை கடல் செறித்த
                                      அங்கை
முன்னவன் விந்த வெற்பின் மொழியினை வினவி
                                   யான்போய்
இந்நெறி இடையே மீளின் எழுதியால் நீயும் என்னா
நல் நகையோடு சொற்றான் நாரதன் சூழ்ச்சிக்கு ஒப்ப.
9
   
3015.
வன்புலக் புவிக்குள் விந்தம் மறைதலும் அறிவின் நீரால்
புன்புலப் பகையை வென்றோன் கரத்தை முன்போலச்
                                        செய்து
துன்பு உலப்பு உற்ற சிந்தைச் சுரர்கள் பூ மாரி தூர்ப்பத்
தென்புலப் பொதிய வெற்பில் செல்வது சிந்தை செய்தான்.
10
   
3016.
ஆயிடை விந்தம் பார் புக்கு அழுந்திட அகல் வானத்துத்
தேயம் வெள் இடையது ஆகத் தினகரன் முதல் ஆம்
                                         தேவர்
பாய் சுடர் விளக்கம் யாண்டும் பரந்தன சிறையை நீங்கி
ஏய் என அளக்கர் நீத்தம் எங்கணும் செறியு மாபோல்.
11
   
3017.
அது பொழுது அலரி ஆதி அமரர்கள் அகத்தியன் பால்
கதும் என அடைந்து போற்றிக் கை தொழுது எந்தை
                                        செய்த
உதவி யார் புரிவர் நின்னால் உம்பரார் ஒழுகப்
                                     பெற்றோம்
பொதிய மேல் இனி நீ நண்ணி இருத்தி எம்
                            பொருட்டால் என்றார்.
12
   
3018.
என்றலும் விழுமிது என்னா இசைவு கொண்டு அமரர்
                                      தம்மைச்
சென்றிட வானில் தூண்டித் தெக்கிணம் தொடர்ந்து
                                      செல்லக்
குன்று அமர் குடாது தேயம் குறுகும் வில்வலன் வாதாவி
அன்று உயிர் இழப்ப நின்றார் அகத்தியன் வரவு கண்டார்.
13