திருக் குற்றாலப் படலம்
 
3117.
செற்றாலம் உயிர் அனைத்தும் உண்டிடவே நிமிர்ந்து
                      எழலும் சிந்தை மேற்கொள்
பற்றால் அங்கு அது நுகர்ந்து நான்முகனே முதலோர்
                            தம் பாவை மார்கள்
பொன் தாலி தனை அளித்தோன் புகழ் போற்றி முகில்
                       மேனிப் புத்தேள் வைகும்
குற்றாலம் ஆவது ஒரு வளநகரை குறு முனிவன்
                               குறுகினன் ஆல்.
1
   
3118.
அப்பதியில் அச்சுதனுக்கு ஆலயம் ஒன்று உளது
                        அம்மா அவனி மீதில்
ஒப்பு இலது ஓர் திரு முற்றம் அஃது என்பர் இம்பர்
                        எலாம் உம்பர் தாமும்
செப்புவர் ஆயிடை தன்னில் அந்தணர்கள் அளப்பு
                  இல்லோர் செறிவர் அன்னார்
மெய்ப் படு நூல் முறை கண்டு மோகத்தால் தமது மத
                         மேற்கொண்டு உள்ளார்.
2
   
3119.
அன்னவர்கள் எம் பெருமான் தன் அடியார் தமைக்
                      காணின் அழன்று பொங்கி
முன் உறு தொல் பகைஞர் என மிக இகழ்ந்து மற்று
                  அவர் தம் முகம் நோக்காராய்த்
துன் நெறியே மேற் கொண்டு மறை பயில்வோர் என்பது
                         ஒரு சொல்லே தாங்கித்
தன் நெறியும் புரியாது அங்கு இருந்தனர் ஆல் அஃது
                   உணர்ந்தான் தமிழ்நர் கோமான்.
3
   
3120.
குறு முனிவன் ஆங்கு அவர் தம் செயல் உணர்ந்து
                       குற்றாலம் என்னும் மூதூர்
மறுகின் இடையே நடந்து மாயவன்தன் ஆலயம் முன்
                                வருதலோடும்
நெறி வரும் அவ் ஆலயத்தில் செறிகின்ற வைணவர்கள்
                               நெடிது நோக்கிச்
செறுநர் தமைக் கண்டு பதை பதைப்பார் போல் வெய்து
                  உயிர்த்துச் செயிர்த்துச் சொல்வார்.
4
   
3121.
ஒல்லாத கண்டிகையும் நீறும் அணிந்து அனையதனால்
                                 உலகில் தேவர்
எல்லாரும் அறிய வைய மேற்றோனுக்கு அடியவன் நீ
                                ஈண்டு செல்லச்
செல்லாது கைத்தலத்தில் ஒரு கோலும் கொண்டனை
                          யால் சிறியை போலும்
நில்லாய் எம் பெருமான் தன் மாநகரம் அணுகாது
                               நீங்குக என்றார்.
5
   
3122.
என்றிடலும் வெகுளாது நகை செய்து மறை நெறியை
                                இகந்து நின்றீர்
துன்றி இவண் உறைகின்றது உணரேன் இத்திறம்
                    எவரும் சொன்னார் இல்லை
நன்று நெறி என்று வந்தேன் நும் பான்மை
                  உணர்வேனேல் நான்இம் மூதூர்
சென்றிடவும் நினையேனால் முனியற்க யான் மீண்டு
                           செல்வேன் என்றான்.
6
   
3123.
பொதிய மலை தனில் ஏகும் முனிவன் இது
                  புகன்றிடலும் பொறாது நீ இப்
பதி அதனில் வருவதுவும் பாவம் ஆம் ஈண்டு நீ
                                படர்தி என்ன
இது சரதம் மொழ்ந்தீர்கள் தொல்லோர்தம் நூல்
                        முறையும் ஈதே என்னா
விதி அருளும் தக்கனார் வழிமுறையோர் தமை நீங்கி
                             மீண்டு செல்வான்.
7
   
3124.
சிட்டர் புகழ் கயிலை மலை காத்து அருளும் திரு
                        நந்திதேவன் செம்கேழ்
மட்டு உறு பங்கயத்து உறையும் நான் முகத்தோன்
                   துருவாசன் மறை நூல் யாவும்
தட்டு அறவே உணர் பிருகு கவுதமன் கண்ணுவ
                     முனிவன் ததீசி இன்னோர்
இட்ட பெரும் சாபம் எலாம் பொய்த்திடுமோ என
                         உன்னி ஏகல் உற்றான்.
8
   
3125.
ஏகல் உறு குறுமுனிவன் உயிர்க்கு உயிராய்
                 நின்றோனை இகழ்வார் தம்கண்
மோகம் உறும் அகந்தையினை முதலோடும் களைவன்
                        என முன்னி முன் நாள்
போகிய தன் மாயையினால் இரதத்தின் ஆவி படு
                            பொன்னே போலப்
பாகவதம் ஆகுவது ஓர் உருக் கொண்டான்
                கருணையினால் பரவை போல்வான்.
9
   
3126.
ஆள் உடைய நாயகன் பால் அன்பு உடையான்
                  மாயவன் தன் அடியனே போல்
கோள் உடைய மாயத்தான் மேனி கொண்டு மீண்டும்
                          அங்கட் குறுகலோடும்
நீள் இடையில் வரக் கண்ட வயிணவர்கள் எதிர்சென்று
                               நெடிது போற்றித்
தாள் இடையில் வீழ்ந்திடலும் நாரணனுக்கு ஆக எனச்
                                சாற்றி நின்றான்.
10
   
3127.
அடி முறையின் வணங்கி எழும் வேதியர் தங்களை
                       நோக்கி அரிபால் அன்பு
முடிவு இலை நும்பால் என்று மொழிந்தனர் அங்கு
                     அது காண முன்னி வந்தாம்
படி அதனில் உமக்கு நிகர் யாரும் இலை நுமைக்
                         கண்ட பரிசால் யாமும்
தொடர்வு அரிய பேர் உணர்வு பெற்றனம் என்றே
                     பின்னும் சொல்லல் உற்றான்.
11
   
3128.
முத்திதரு பேர் அழகர் திருமலையின் இடை
     உற்றோம் முன்னம் இன்னே
அத்திகிரி தனில் இருப்பச் செல்கின்றோம் நம்
     பெருமான் அமரும் கோயில்
இத்தல மேல் உளது என்பர் அது பரவும் விருப்பு
     உடையோம் என்ன அன்னோர்
கைத்தலத்து ஓர் விரல் சுட்டி அது திருமால் இருக்கை
     எனக் காட்டல் உற்றார்.
12
   
3129.
காட்டுதலும் கை தொழுது மால் உறையும் மந்திரத்தைக்
                                 கடிது நண்ணி
ஈட்டம் உடன் வலம் செய்து கண்ணபிரான் அடி
                     இணையை இறைஞ்சி ஏத்திப்
பாட்டில் உறு தொல் அடியார் தமை நோக்கி இவரை
                           வழிபடுதற்கு உள்ளம்
வேட்டனம் ஆல் மஞ்சனமே முதலியன கொணர்மின்கள்
                             விரைவின் என்றான்.
13
   
3130.
நன்று எனவே சிலர் ஏகித் தூய திரு மஞ்சனமும்
                           நறுமென் போதும்
மன்றல் உறு செம் சாந்தும் அணித் துகிலும்
                  ஏனையவும் மரபில் கொண்டு
சென்று முனிவரன் முன்னம் உய்த்திடலும் அனையவர்
                          தம் திறத்தை நோக்கி
இன்று இவரை அருச்சனை செய் விதி முறையைப்
                   பார்த்திடுங்கள் யாரும் என்றே.
14
   
3131.
அறுகுமதி நதி புனையும் செம் சடை எம் பெருமானை
                            அகத்துள் கொண்டு
சிறுகும் உரு உடைய முனி நாரணனார் திருமுடிமேல்
                                செம்கை ஓச்சி
குறுகு குறுகு என இருத்தி ஒள் அரக்கில் புனை
                          பாவைக் கோல மீதும்
அறுகு தழல் உற்று என்னக் குழைவித்து ஓர் சிவலிங்க
                              வடிவம் செய்தான்.
15
   
3132.
அல்லி மலர்ப் பங்கயனும் நாரணனும் எந்நாளும்
                            அறிய ஒணாத
எல்லை இலாப் பரம் பொருளைத் தாபித்து மந்திரங்கள்
                               எடுத்துக் கூறித்
தொல்லை உருக் கொண்டு மலர் மஞ்சனமே முதலியன
                                  தூய ஆக்கி
ஒல்லை தனில் அருச்சிப்பக் காண்டலும் அவ்
                 வந்தணர்கள் உருத்துச் சொல்வார்.
16
   
3133.
காயத்தான் மிகச் சிறியன் முப்புரத்தை நீறு ஆக்கும்
                             கடவுட்கு ஆற்ற
நேயத்தான் இவ் விடையே முன் வந்தான் யாம் இகழ
                               நில்லாது ஏகி
ஆயத்தான் பாகவத வடிவாய் வந்து இச்சமயம்
                           அழித்தான் அந்தோ
மாயத்தான் பற்றுமினோ கடிது என்று குறு முனியை
                          வளைந்து கொண்டார்.
17
   
3134.
பற்றிடுவான் வளைகின்றோர் தமை நோக்கி எரி
                    விழித்துப் பரவை தன்பால்
உற்ற விடம் விடுத்தது என முனிவன் தன் வெகுளித் தீ
                              உய்த்த லோடும்
சுற்றியது சுற்றியவர் தமைப் பின்னும் பொறி படுத்தித்
                               துரந்து செல்ல
மற்றவர்கள் இரிந்தே தம் பதி இழந்து சிதறினர் ஆல்
                           மண் மேல் எங்கும்.
18
   
3135.
அன்னோர்கள் போயிடலும் இன்று முதல் சிவன் இடம்
                              ஈதாயிற்று என்று
முன்னோனை அருச்சித்துப் பணிந்து விடை கொண்டு
                      தென்பால் முன்னிச் சென்று
பொன்னோடு மணிவர் அன்றி அருவி இழி தரு
                   பொதியப் பொருப்பில் நண்ணி
மன்னோ மெய்த்தவம் புரிந்து வீற்று இருந்தான்
                   அப்பரமன் மலர்த்தாள் உன்னி.
19
   
3136.
பூ விரிகின்ற காமர் பொதும்பர் சேர் பொதிய வெற்பில்
தா விரி கும்பத்து அண்ணல் வந்திடும் தன்மை சொற்றாம்
மா விரிகின்ற சாதி வனத்து இடை மலர்ப் பூங்காவில்
காவிரி போந்தவாறும் ஏனவும் கழறு கின்றாம்.
20