இந்திரன் அருச்சனைப் படலம்
 
3137.
கொடி உருக் கொண்டு முன்னம் குண்டிகை இருந்த
                                     பிள்ளை
படி மிசை அதனைத் தள்ளப் படர்ந்த காவிரியின்
                                     தன்மை
விடல் அரும் தளையின் நீக்கி வியன் நெறிப்
                                படுத்தலோடும்
அடிகளின் அருளால் செல்லும் ஆர் உயிர் போன்றது
                                     அன்றே.
1
   
3138.
பண்டு ஒரு தந்தி ஆனோன் படர் சிறைப் புள்ளாய்த்
                                     தள்ளக்
குண்டிகை இருந்த நீத்தம் குவலயம் படர்ந்த பான்மை
எண்டருந் தடையால் வல்லோன் இரும் கடத்து இட்ட
                                     பாந்தள்
மண்டலத்து ஒருவன் நீப்ப வழிக் கொளல் போன்றது
                                     அன்றே.
2
   
3139.
ஏதத்தின் ஒழுக்கு நீக்கும் இறைவன் நூல் ஒழுக்கும்
                                  தொல்லை
வேதத்தின் ஒழுக்கும் நோற்று வீட்டினை அடையும்
                                     நீரார்
போதத்தின் ஒழுக்கும் எம் கோன் புரிதரு கருணை
                                   என்னும்
ஓதத்தின் ஒழுக்கும் என்னக் காவிரி ஓடிற்று அன்றே.
3
   
3140.
தள் அரும் பரவை ஏழும் தரணியைச் சூழ்ந்து நின்ற
உள் உறு தொடர்பு நாடி யாவையும் ஒருங்கு நண்ணிப்
பொள் எனப் புகுந்தது என்னப் புவி எலாம் பரவி
                                    ஆர்த்துத்
தெள்ளிதில் கலங்கி நீத்தம் தெளிகிலாது ஒழுகிற்றாம்
                                       ஆல்.
4
   
3141.
தெண் திரைப் புணரி எல்லாம் தினைத் துணையாக வாரி
உண்டருள் முனிவன் தீர்த்தம் ஒன்றினை வேண்டும்
                                       எல்லை
அண்டர்தம் பெருமான் நல்க அன்னவன் கரத்தில் ஏந்தும்
குண்டிகைப் புனற்கு நேராக் கூறுதற்கு உவமை உண்டோ.
5
   
3142.
தொல்லையில் குறியோன் வந்தான் துய்க்குமோ
                            இன்னும் என்னா
வல்லையில் தழைகள் பற்றி வாரிதி கூவிப் பாரின்
எல்லையில் படர்ந்தது என்ன இலை செறி பொதும்பர்
                                     ஈட்டம்
ஒல்லையில் பரித்து மேல் கொண்டு ஓடியது ஒலிகொள்
                                       நீத்தம்.
6
   
3143.
சந்தமும் அகிலும் சங்கும் தரளமும் கவரி தானும்
சிந்துரத்து எயிறும் பொன்னும் மணிகளும் திரை மேல்
                                     கொண்டு
வந்து இழி நதியின் தன்மை வருணன் இப் பொருள்கள்
                                      எல்லாம்
இந்திரன் தன்பால் ஓச்ச ஏகுதல் போன்ற மாதோ.
7
   
3144.
வரை எனும் தடம் பொன் தேரும் மதகரித் தொகையும்
                                       மாந்தர்
நிரைகளும் தரங்க மாவும் நெறிக் கொடு மகவான்
                                      தன்பால்
விரைவொடு சேறல் சூரன் விண்ணவர்க்கு அரசன் மீது
பொரவிடு தானை வெள்ளம் போவன போன்றது அன்றே.
8
   
3145.
ஆவது ஓர் இனைய வாற்றால் அலையினால் அகல்
                                வான் முட்டிக்
காவதம் பலவாய் ஆன்று காசினி அளந்து கீழ்பால்
போவது ஓர் பொன்னி நீத்தம் புரந்தரன் இருந்து
                                     நோற்கும்
தாவறு வனத்தில் போதார் தண்டலை புகுந்தது அன்றே.
9
   
3146.
ஓடு நீர் நீத்தப் பொன்னி ஒல்லையில் காமர் காவில்
பீடு உற வருதலோடும் பேதுறு மகவான் காணா
ஆடினான் நகைத்தான் எம் கோன் அருச்சனை
                            முடிந்தது என்று
பாடினான் முதல்வன் தாளைப் பரவினான் படர்ச்சி
                                  தீர்ந்தான்.
10
   
3147.
சீரினை அகற்றி நீங்காத் திருவினை மாற்றித் தொல்பேர்
ஊரினைக் கவர்ந்து தன் ஓர் உயிருக்கும் இறுதி நாடும்
சூரனை வென்றால் என்னத் தொலைவு இலா மதர்ப்பு
                                    மிக்கான்
ஆரவன் உளத்தில் கொண்ட உவகையை அறைதற்
                                     பாலார்.
11
   
3148.
பாடு உறு பொன்னி நீத்தம் பாய்தலும் மகவானே போல்
வாடு உறுகின்ற தண்கா வல்லையில் கிளர்ச்சி எய்தி
ஆடுறு பசி நோய் உற்றோர் அரும் பெறல் அமிர்தம்
                                      வந்து
கூடுற நுகர்ந்தால் என்ன குளிர்ப்பொடு தளிர்த்தது
                                    அன்றே.
12
   
3149.
வான் நிறைகின்ற கொண்மூ வார் துளி தலைஇய பின்றைக்
கான் நிறை மரனும் பூடும் வல்லியும் கவின்றால் என்ன
மேல் நிறை அடைகள் மல்கி விரிதரு சினையும் போதும்
தான் நிறை கின்றது அம்மா சதமகன் வளர்த்த பூங்கா.
13
   
3150.
வானிலம் அளவிட வளர்ந்த புன்னைகள்
ஆனவை முழுவதும் அரும்புகின்றன
தூ நகை நிலத்தில் அத் தொடையல் மெய்யுடை
நீல் நிற மாயவன் நிலைஇயது ஒக்கும் ஆல்.
14
   
3151.
தண் உறு பாசடை தயங்கு புன்னைகள்
கண் உறு வியன் சினை கவினப் பூத்தன
எண் உறு தாரகை ஈண்டி மொய்த்திட
விண் உறு முகில் இனம் விளங்கிற்று என்னவே.
15
   
3152.
பண்படும் அளி இனம் பயில் உறாதன
சண்பக அணிமரம் தயங்கிப் பூத்தன
எண்படு தபனியத்து இயன்ற போதினை
விண் படு தருக்கொடு மேவல் போன்றவே.
16
   
3153.
புயல் படலம் தொடும் புது மென் பாடலம்
வியல் பட மலர்ந்த பூ விழுமென் வண்டினம்
அயல் பட ஊதுவான் வயந்தக் கம்மியன்
செயல் படு மணிச்சிறு சின்னம் போலும் ஆல்.
17
   
3154.
விண் தொடர் மதி கதிர் மிளிரும் தாரகை
கண்டிட வைகலும் கணிப்பில் கண்ணடி
மண்டல நிரைத்து மண் மாது வைத்து எனக்
கொண்டலை அளவிய கோங்கு பூத்தவே.
18
   
3155.
மா மலர்க் கொன்றையும் மணி மென் பூவையும்
தாம் இருபுடை உறத் தளிர்த்த செய்யமா
ஏமுறு மால் அயன் இடையில் வந்து எழு
தோமறு பரம் சுடர்த் தோற்றம் போன்றவே.
19
   
3156.
ஆதவன் மீது போய் அசையும் தாழைகள்
மேதகு பாளைகள் மிசை தந்து உற்றன
பூதலம் அணங்கினார் புனைய நீட்டிய
கோது அறு நித்திலக் கோவை போன்றவே.
20
   
3157.
வச்சிர மேனிய வரை கொள் காட்சிய
பச்சிளம் பூகம் வெண்பாளை கான்றன
நச்சுறு சோலையா நங்கைக்கு எண் இலார்
எச்சம் இல் சாமரை இரட்ட ஏந்தல் போல்.
21
   
3158.
மேல் திகழ் செம்கர வீரம் ஆனவை
ஆற்றவும் சினை தொறும் அரும்பு கின்றன
நால் தடம் புயம் உடை நாதற்கு இந்திரன்
ஏற்றிய மணிச் சுடர் என்னல் ஆயதே.
22
   
3159.
அல் இடை அன்றியே அலர்ந்த மாலதி
வல்லிகள் தரு வெனும் மகிழ்நர் தங்களைப்
புல்லுவ பகலினும் பொருந்துமோ எனா
முல்லைகள் மலர்ந்தன முறுவல் செய்வபோல்.
23
   
3160.
ஆசறு வாவியில் அலர்ந்த காவிகள்
பாசடை இடை இடை பரவு கின்றன
தேசு உறு தரு நிழல் திருவில் துஞ்சிய
வாசவன் விழிகளின் மல்கு கின்றவே.
24
   
3161.
தொல்லையின் முறைநெறி ஒருவித்து ஓயமேல்
வல்லையில் அங்கிகள் வந்து உற்று ஆல் என
அல்லியும் சேயன அரத்த ஆம்பலும்
புல்லிய கிடங்கினில் பொலிந்து பூத்தவே.
25
   
3162.
பாய் இரும் புனல் கயம் பரந்த பாசடை
ஆயின இடை இடை அவிழ்ந்த பங்கயச்
சேய் அலர் வண்டினம் திளைப்பச் சேர்வன
காயெரி புகையொடு கானம் புக்கபோல்.
26
   
3163.
எண்ணும் இத் தருக்களும் கொடியும் ஏனவும்
கண் உற மலர்வதும் அரும்பும் காட்சியும்
வண்ணம் அது எற்று எனின் மாலைச் செக்கரும்
விண் உறும் உடுக்களும் விரவிற்று ஒக்கும் ஆல்.
27
   
3164.
இந்திரன் மகிழ்வுற இனைய பான்மையால்
நந்தன வனம் எலாம் நன்று பூத்தலும்
அந்த நன் மலர் கொடே ஆதிக்கு அன்பினால்
முந்துறு பூசனை முயல முன்னினான்.
28
   
3165.
விடியல் வைகறை தனின் மேவி வண்டுதேன்
புடை உறு முன்னரே புரை இலாதது ஓர்
கடி மலர் கொய்தனன் கொணர்ந்து கண் நுதல்
அடிகளில் விதி முறை அருச்சித்தான் அரோ.
29
   
3166.
அப்பெரு நாண்முதல் ஆதி அண்ணலை
இப்படி அருச்சனை இயற்றி வைகலும்
ஒப்பற நோற்றரோ உம்பர் கோமகன்
வைப்பு உறு சண்பக வனத்தின் வைகினான்.
30