தேவர் புலம்புறு படலம்
 
3167.
அந் நாள் அதனில் அவுணர்க்கு இறை ஏவல்
தன்னான் மிகவும் தளர்ந்து சிலதேவர்
எந் நாள் இப் புன்மை எமை நீங்கும் என்று இரங்கிப்
பொன் நாடு விட்டுப் புவிதன்னில் போந்தனரே.
1
   
3168.
தீம் தமிழின் வைப்பு ஆன தெக்கிண தேயநண்ணி
மாந்தர் புகழ் காழி வனம் போந்து வானவர் தம்
வேந்துதனைக் கண்டு விரை நாண் மலர் அடிக் கீழ்ப்
போந்து பணிந்து புகழ்ந்து புகல்கின்றார்.
2
3168.
தீம் தமிழின் வைப்பு ஆன தெக்கிண தேயநண்ணி
மாந்தர் புகழ் காழி வனம் போந்து வானவர் தம்
வேந்துதனைக் கண்டு விரை நாண் மலர் அடிக் கீழ்ப்
போந்து பணிந்து புகழ்ந்து புகல்கின்றார்.
2
   
3169.
ஒன்றே தருமம் ஒழிந்து புவனம் எலாம்
சென்றே அடுகின்ற தீ அவுணர் தம் துடக்கில்
அன்றே எமை விட்டு அகன்றாய் உனக்கு இதுவும்
நன்றே எமை ஆளும் நாயகனும் நீ அன்றோ.
3
   
3170.
கோட்டுக் களிற்றோடும் கோள் அரி யோடும் புவியை
வாட்டு உற்றிடும் சூர வல்லியத்தின் வன் சிறையில்
ஈட்டு உற்ற தேவர் எனும் பசுக்கள் தம்மை எலாம்
காட்டிக் கொடுத்துக் கரந்தது என்கொல் காவலனே.
4
   
3171.
ஏனம் பசு மான் இரலை மரை படுத்த
ஊனும் வடியும் ஒலி கடலின் உள்ள பல
மீனும் சுமந்து விறல் அசுரர்க்கு ஏவல் செய்து
மானம் குலைந்து மறந்தோம் மறைகளுமே.
5
   
3172.
மையார் களத்தார் வரம் பெற்ற சூரனுக்குச்
செய்யாத ஏவல் எலாம் செய்தோம் நெறி நீதி
எய்யாத மானம் இவை எல்லாம் தான் இழந்தோம்
ஐயா மிகவும் அலுத்தோம் அலுத்தோமே.
6
   
3173.
முந் நாளும் தந்தி முகத்து அவுணன் ஏவல் செய்து
பல் நாள் உழன்றோம் பரமர் அது தீர்த்தார்
பின் நாளும் சூரன் பெயர்த்தும் எமை வருத்த
இந் நாடு இரிந்தோம் இனித்தான் முடியாதே.
7
   
3174.
எந்நாளும் உன்னைப் புகல் என்று இருந்த வியாந்
துன்னா அவுணரால் சோர்ந்து துயர் உழப்ப
உன்னா உயிர் காத்து ஒளித்து இங்கு இருந்தனையால்
மன்னா உனக்குத் தகுமோ வசை அன்றோ.
8
   
3175.
சூரன் முதலாச் சொலப் பட்ட வெவ்வசுரர்
வீரம் குலைந்து விளிவதற்கும் இவ் வுலகில்
ஆரும் பழிக்கத் திரிகின்றோம் ஆகுலங்கள்
தீரும் படிக்கும் செயல் ஒன்று செய்வாயே.
9
   
3176.
என்னாப் பலவும் இயம்பி இரங்குதலும்
மன் ஆகிய மகவான் மாற்றம் அவை கேளா
அன்னார் மனம் கொண்ட ஆகுலத்தைக் கண்டு நெடிது
உன்னா அயரா உயிரா உரைக் கின்றான்.
10
   
3177.
மாயை உதவ வருகின்ற வெம் சூரன்
தீய பெரு வேள்வி செய்யத் தொடங்கும் அன்றே
போய நமது உரிமை பொன் நாடும் தோற்றனம் என்று
ஓயும் உணர்வால் உமக்கு அங்கு உரைத்திலனோ.
11
   
3178.
அற்றே மகம் செய்து அமலன் தரும் வரங்கள்
பெற்றே நமது பெரும் பதமும் கைக் கொண்டு
சற்றேனும் அன்பு இல்லாத் தானவர் கோன் தாழ்வான
குற்றேவலை நம்பால் கொண்டான் குவலயத்தே.
12
   
3179.
நீள் வாரிதியின் நெடு மீன் பல சுமந்து
தாழ்வாம் பணி பிறவும் செய்தும் தளர்ந்து உலகில்
வாழ்வாம் எனவே மதித்து இருந்தோம் மற்றது அன்றி
சூழ்வால் ஒரு தீமை சூரபன்மன் உன்னினனே.
13
   
3180.
என்னே அத்தீமை எனவே வினவும் கால்
பொன்னே அனைய புலோமசையைப் பற்றுதற்கும்
கொன்னே எனையும் கொடும் சிறையில் வைப்பதற்கு
முன்னே நினைந்தான் முறை இல்லாத் தீயோனே.
14
   
3181.
ஆன செயல் உன்னி அனிகம் தனை நம்பால்
வான் உலகில் உய்ப்ப மதியால் அஃது உணர்ந்து
நானும் இவளும் நடு நடுங்கி அச்சு உற்று
மேனி கரந்து விரைந்து விண்ணை நீங்கினம் ஆல்.
15
   
3182.
மீனும் வடியும் வியன் தசையும் தான் சுமந்த
ஈனம் அது அன்றி ஈது ஓர் பழி சுமக்கின்
மானம் அழிய வருமே அது அன்றித்
தீனம் உறு சிறையும் தீராது வந்திடுமே.
16
   
3183.
வெய்யவர் தம் வன் சிறையின் வீழின் முடிவு இல்லா
ஐயன் அடிகள் அருச்சித்து யாம் எல்லாம்
உய்ய அவுணர் உயிர் இழப்ப மா தவத்தைச்
செய்யும் நெறி உண்டோ எனச் சிந்தை செய்தனனே.
17
   
3184.
சிந்தை அதனில் இனைய செயல் உன்னி
அந்தம் அறு துயரத்து ஆழும் நுமை விட்டு
வந்து புவியின் மறைந்து தவம் செய்து முக்கண்
எந்தை அடிகள் அருச்சித்து இருந்தனனே.
18
   
3185.
அல்லல் புரியும் அவுணர் பணியால் வருந்தித்
தொல்லை உள மேன்மை எலாம் தோற்றனமே மற்று
                                  இனி நாம்
எல்லவரும் வெள்ளி மலைக்கு ஏகி இறைவனுக்குச்
சொல்லி நமது துயர் அகற்றிக் கொள்வோமே.
19
   
3186.
வம்மின் என உரைப்ப வானோர் அது கேளா
வெம்மின் அது கண்ட வியன் கண்டகி எனவும்
அம்மென் மயில் எனவும் ஆடி நகை செய்து
தம்மின் மகிழ்ந்து மதர்ப்பினொடு சாற்றல் உற்றார்.
20
   
3187.
கோவுநீ எங்கள் குரவனும் நீ தேசிகன் நீ
தேவும் நீ மேல் ஆம் திருவும் நீ செய்தவம் நீ
ஆவி நீ மற்றை அறிவு நீ இன்ப துன்பம்
யாவும் நீ ஆகில் எமக்கு ஓர் குறை உண்டோ.
21
   
3188.
பார்த்துப் பணித்த பணி செய்து நின் தன்னை
ஏத்தித் திரிதல் எமக்குக் கடன் ஆகும்
நீத்துத் துயர நெறி உறுத்தி எம்மை என்றும்
காத்துப் புரத்தல் உனக்குக் கடன் ஐயா.
22
   
3189.
தோர அவுணர் திறம் தன்னை முன் தடிந்தாய்
சூராதியர் அயிரும் கொள்ளும் நெறி சூழ்கின்றாய்
பார் ஆள்பவர்க்கும் பல முனிவர்க்கும் சுரர்க்கும்
ஆராயின் நீ அன்றி யாரே துணை ஆவார்.
23
   
3190.
ஆதலால் எங்கள் அலக்கண் அகற்றிடுவான்
காதலாய் அத்தன் கயிலைக்கு எமைக் கொண்டு
போது நீ என்னப் புரந்தரனும் நன்று என்று
கோது இலா உள்ளத்து ஒரு சூழ்ச்சி கொண்டனனே.
24
   
3191.
ஆவது ஒரு காலை அமரர் கோன் தான் எழுந்து
தேவர் தமை நோக்கிச் சிறிது இங்கு இருத்திர் என
ஏவரையும் அம் கண் இருத்தி ஒரு தான் ஏகிப்
பாவை அயிராணி பாங்கர் அணுகினனே.
25