மகா சாத்தாப் படலம்
 
3213.
முன்னம் பரமன் அருள் இன்றி முகுந்தன் ஆதி
மன்னும் சுரர்தானவர் வேலை மதித்த வேலைக்
கன்னம் கரிய விடம் வந்துழிக் கார் இனங்கள்
துன்னும் பொழுதில் குயில் போல் துணுக்கு உற்று
                             இரிந்தார்.
1
   
3214.
அண்ணல் கயிலைக் கிரிதன்னில் அடைந்து செம் தீ
வண்ணத்து அமலன் அடி போற்ற வருந்தல் என்றே
உண்ணற்கு அரிய பெரும் நஞ்சினை உண்டு காத்துக்
கண்ணற்கும் ஏனையவர்க்கும் இவை கட்டு உரைப்பான்.
2
   
3215.
இன்னும் கடைமின் அமுதம் எழும் என்று கூற
அந் நின்றவர் பால் கடலின் கண் அடைந்து முன்போல்
பின்னும் கடைந்தார் இபமா முகப் பிள்ளை தன்னை
முன்னம் வழிபட்டிலர் வந்து முடிவது ஓரார்.
3
   
3216.
என் நாயகற்கு வழிபாடு இயற்றாத நீராற்
கொன்னார் கடலின் நடு மத்தங் குலைந்து வீழ்ந்து
பல் நாகர் வைகும் இடம் செல்ல அப்பான்மை நோக்கி
அன்னானை அர்ச்சித்தனர் அச்சுதன் ஆதி ஆனோர்.
4
   
3217.
ஆராதனை செய்துழி மந்தரம் ஆதி மைந்தன்
பேரா அருளால் பிலம் நின்று பெயர்ந்து முன் போல்
வாரா நிலை பெற்றிடலோடு மகிழ்ந்து போற்றிக்
காரார் திருமால் முதலோர் கடலைக் கடைந்தார்.
5
   
3218.
கடைகின்று உழிச் செம் மதியாம் எனக் காமர் செம்பொன்
அடைகின்ற கும்பத்து எழுந்திட்ட அமுதம் அங்கண்
மிடைகின்ற தொல்லைச் சுரர் தானவர் யாரும் வெஃகி
உடைகின்ற வேலை என ஆர்த்தனர் ஒல்லை சூழ்ந்தார்.
6
   
3219.
எம்மால் இது வந்து உளதால் எமக்கே இது என்றே
தம் ஆசையினால் சுரர் தானவர் தம்மின் மாறாய்த்
தெம்மானம் உடன் பொர உன்னலும் தீர்வு நோக்கி
அம்மால் விரைவின் ஒரு மோகினி ஆயினானே.
7
   
3220.
மூலம் பிறந்த விடம் போல் அழல் மூண்டிடாமல்
நீலம் பிறந்து பிறர் அச்சு உற நேர்ந்திடாமல்
ஞாலம் பிறந்த ஓர் சுரர் தானவர் நச்ச ஆங்கு ஓர்
ஆலம் பிறந்தது என மோகினி ஆகி நின்றான்.
8
   
3221.
சேணார் உலகில் புவிதன்னில் திசையில் எங்கும்
காணாத அப்பெண் உருக் கண்டனர் காதல் கைமிக்கு
ஊணார் அமுதம் தனை விட்டு முன் ஒன்று கண்டோர்
மாண் ஆகிய பல்பொருள் கண்டு என வந்து சூழ்ந்தார்.
9
   
3222.
மெய்த்தாமரையே முதல் ஆய விசிக நான்கும்
உய்த்தான் மதவேள் அதுகாலை உலப்பில் காமப்
பித்தாய் உணர்வு பிழை ஆகிப் பெரிது மாலாய்
அத்தாருக மா முனிவோரினும் ஆர்வ மிக்கார்.
10
   
3223.
எண்ணா அவுணர் தொகை அல்லதை எந்தை மாயம்
உண்ணாடு வானோர்களும் பெண் மயல் உற்று நின்றார்
மண் ஆசை தன்னில் பொருள் ஆசையின் மாய
                                 வாழ்க்கைப்
பெண் ஆசை நீங்கல் எளிதோ பெரியோர் தமக்கும்.
11
   
3224.
பூண்டு உற்ற கொங்கைப் பொலன் மோகினி ஆன
                                    புத்தேள்
ஆண்டு உற்றவர் தங்களை நோக்கி அமரை நீங்கும்
ஈண்டு உற்றனன் யான் அமுதும் உளது ஏது நீவிர்
வேண்டு உற்றது உம்பால் உறக் கொண்மின் விரைவின்
                                     என்றான்.
12
   
3225.
மால் ஆனவன் அங்கு அது கூற மனம் திரிந்து
நோலாமையினால் இறக்கின்றவர் நோக்கி எங்கள்
பாலாவது நீ என முன் வரும் பான்மை நாடி
மேல் ஆம் அமுதே எமக்கு என்றனர் விண் உளோர்கள்.
13
   
3226.
வான் நாடவர் நல் அமுதம் கொடு மாயை நீங்கி
போனார் ஒரு சார் அவரோடு பொருத தீயோர்
தேன் ஆர் மொழி மோகினி ஆகிய செம் கண் மாலை
ஆனா விருப்பில் கொடு போயினர் ஆங்கு ஒர் சாரில்.
14
   
3227.
கொண்டு ஏகிய தானவர் தங்கள் குழுவை நோக்கித்
தண் தேன் மலர்ப் பாயலின் என்னைத் தழுவ வல்லான்
உண்டே இதனில் ஒரு வீரன் உவனை இன்னம்
கண்டேன் இலை என்றனன் பெண் உருக் கொண்ட
                                      கள்வன்.
15
   
3228.
ஈறாம் அவுணர் பலரும் இது கேட்டு எனக்கு
மாறாய் ஒருவர் இலையாரினும் வன்மை பெற்றேன்
வீறு ஆகிய வீரனும் யான் என வீற்று வீற்றுக்
கூறா எனையே புணர் என்று குழீஇயி னாரே.
16
   
3229.
கொம்மைத் துணை மென் முலை அண்ணலைக்
                                 கூட யாரும்
வெம்மைப் படலால் இகல் கொண்டனர் வேறு வேறு
தம்மில் பொருது முடிந்தார் கிளை தம்மில் உற்ற
செம்மைக் கனலால் முடிவு உற்றிடும் செய்கையே போல்.
17
   
3230.
அன்னார் தொகையில் இருவோர் அரி மாயை உன்னி
என் ஆம் இவரோடு இறக்கின்றனம் என்று நீங்கித்
தொன்னாள் உருவம் தனைமாற்றிச் சுரர்கள் போல் ஆய்ப்
பொன் நாடவர் தம் குழுவோடு புகுந்து நின்றார்.
18
   
3231.
மாண்டார் அவுணர் அது நோக்கி வரம்பு இல் மாயம்
பூண்டாரும் வெஃக மடமாது எனப் போந்த கள்வன்
மீண்டான் அமரர் பலரும் விருப்பு உற்று மேவ
ஈண்டு ஆழி தன்னில் அமுதம் தனை ஈதல் உற்றான்.
19
   
3232.
ஈயும் பொழுதின் இமையோர்கள் இனத்தின் ஊடு
போய் அங்கு இருந்த இருகள்வரும் பொற்பு மிக்க
மாயன் பகிரும் அமிர்தம் தனை மந்திரத்தால்
ஆயும்படி கொண்டிலர் வல்லையின் ஆர்த்தல் உற்றார்.
20
   
3233.
தண்டா மரைக்குப் பகை நண்பு எனச் சாரும் நீரார்
கண்டார் புடை உற்று அவர் இங்கு இவர்கள்வரே யாம்
உண்டார் அமுதம் கடிது என்று உளத்து உன்னி அங்கண்
விண்டான் அவற்குக் குறிப்பால் விழி காட்டினார் ஆல்.
21
   
3234.
காட்டு உற்றிடலும் அரி நோக்கிக் இக் கள்வரேயோ
வீட்டு உற்ற வானோருடன் உண்குவர் என்று தன்கை
நீட்டு உற்றிடும் சட்டுவம் கொண்டு நிருதர் சென்னி
வீட்டிச் சுரருக்கு அமுது ஊட்டி விருந்து செய்தான்.
22
   
3235.
அண்டத்து அவர்முன் அருந்து உற்ற அமுதம் அன்னார்
கண்டத்து இடையே வரும் முன் அது கண்டு மாயன்
துண்டித்த சென்னி அழிவு அற்ற துணிந்த யாக்கை
முண்டத்துடனே துணி பட்டு முடிந்த அன்றே.
23
   
3236.
மாளாத சென்னி உடைத் தானவர் மாண்பு நோக்கி
நீள் ஆர் அமுது உண்டவர் விண் இடை நிற்பர் என்னாத்
தாளால் உலகம் அளந்தோன் அவர் தங்களுக்குக்
கோளா நிலையை இறையோன் அருள் கொண்டு நல்க.
24
   
3237.
புன்னாகம் நாகம் அணிவான் அடிபோற்றி நோற்றுச்
செம் நாகமோடு கருநாகத்தின் செய்கை பெற்றுப்
பின்னாக முன்னம் தமைக் காட்டிய பெற்றி யோரை
அந் நாகம் மீது மறைப்பார் அமுது உண்ட கள்வர்.
25
   
3238.
கெழிய ராகுவும் கேதுவுமே என
மொழிய நின்ற முதல் பெயர் தாங்கியே
விழுமிது ஆகிய வெய்யவன் ஆதி ஆம்
எழுவர் தம்மொடு இருவரும் ஈண்டினார்.
26
   
3239.
ஈது நிற்க முன் இன் அமுதம் தனை
ஆதரத்தொடு அயின்ற விண்ணோர் தொழ
ஓத வேலை ஒரு புடை ஆகவே
மாது உருக் கொண்ட மாதவன் வைகவே.
27
   
3240.
நால் வகைப் பட நண்ணிய சத்தி உள்
மாலும் ஆதலின் மற்று அது காட்டுவான்
ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறும்
கோலம் எய்திக் குறுகினன் அவ்விடை.
28
   
3241.
தண் துழாய் முடியான் தனி நாயகன்
கண்டு வெஃகக் கறை மிடற்று எம்பிரான்
உண்டு எமக்கு உனைப் புணர் காதல் நீ
கொண்ட வேடம் இனிது என்று கூறினான்.
29
   
3242.
ஆணின் நீங்கிய அச்சுதன் ஆற்றவும்
நாணி இவ்வுரு நல்கிய தன்மை ஆள்
காணி ஆய் உனைக் காதலித்து உற்றனள்
பேணி நிற்பது என்னைப் பெரும நீ.
30
   
3243.
ஆதி காலத்து அயன் செயல் முற்றிட
மாதை மேவிட வந்து உனை வேண்டினம்
காதலோ அன்று காரணன் ஆகையின்
மீது சேர் தரும் வீரியன் அல்லையோ.
31
   
3244.
நெற்றி அம் கண் நிமல உனக்கு இகல்
பற்றது இல்லை எப் பான்மையர் கண்ணினும்
அற்றது ஆக என் ஆகம் தழுவுவான்
உற்ற காதலும் உண்மையது அன்று அரோ.
32
   
3245.
என்ன காரணம் எண்ணிக் கொல் ஏகினை
அன்ன பான்மை அறிகிலன் எம்பிரான்
இன்னது ஆடலை நீ அல்ல தேவரே
பின்னை நாடி அறி உறும் பெற்றியோர்.
33
   
3246.
அன்பில் ஆடவர் ஆடவரோடு சேர்ந்து
இன்பம் எய்தி இருந்தனர் இல்லையால்
முன்பு கேட்டதும் அன்று முதல்வ நீ
வன் பொடு என்னைப் புணர்வது மாட்சியோ.
34
   
3247.
என்று மாயன் இசைத்தலும் எம்பிரான்
அன்று நீயும் நமக்கு ஒரு சத்தி காண்
அன்று தாருகத்து அந்தணர் பாங்கு உறச்
சென்ற போழ்தினும் சேய் இழை ஆயினாய்.
35
   
3248.
முன்னை வேதன் முடிந்தனன் போதலும்
உன்னொடு வந்து உவப்பொடு கூடினோம்
பின்னர் இந்தப் பிரமனை உந்தியால்
அன்னை ஆகி அளித்தனை அல்லையோ.
36
   
3249.
ஆகையால் உன் அணி நலம் துய்த்திட
ஓகையால் இவண் உற்றனன் செல்க என
மாகை ஆரப் பிடிப்ப வருதலும்
போகை உன்னிப் பொருக்கு என ஓடினான்.
37
   
3250.
நாணி ஓடிய நாரணனைப் பிறை
வேணி அண்ணல் விரைவு உடன் ஏகியே
பாணியால் அவன் பாணியைப் பற்றினான்
சேண் நின்று திசைமுகன் போற்றவே.
38
   
3251.
பற்றி ஏகிப் படிமிசை நாவலால்
பெற்ற தீவில் பெரும் கடல் சார்பினின்
மற்று நேரில் வடதிசை வைப்பினில்
உற்ற சாலத்தின் ஒண்ணிழல் நண்ணினான்.
39
   
3252.
நண்ணியே தனி நாயகன் அவ்விடைப்
பெண்ணின் நீர்மையைப் பெற்றிடு நாரணன்
உள் நெகிழ்ந்து மயக்கு உற்று உருகியே
எண் இல் இன்பு உறக் கூடினன் என்பவே.
40
   
3253.
மூன்று கண்ணன் முகுந்தன் இருவரும்
ஏன்று கூடிய எல்லையில் அன்னவர்
கான்று உமிழ்ந்த புனல் கண்டகி என
ஆன்றது ஓர் நதி ஆகி அகன்றதே.
41
   
3254.
அந்த நீரின் அகம் புறம் ஆழிகள்
தந்து வச்சிர தந்தி எனப்படும்
முந்து கீட முறை முறை ஆகவே
வந்து தோன்றின மாழையின் வண்ணம் ஆய்.
42
   
3255.
ஆய மண்ணில் அகம் கெழு பஞ்சர
மேயெனத்தந் திருந்து சில பகல்
மாயும் அவ்வுயிர் மாய்ந்தபின் கூடுகள்
தூய நேமிக் குறிகொடு தோன்றும் ஆல்.
43
   
3256.
நீர்த் தரங்க நிரல் பட வீசியே
ஆர்த்து இரங்கி அணை உறு கண்டகித்
தீர்த்தி கைப்புனல் சென்றக் குடம்பைகள்
ஈர்த்து வந்திடும் இம்பர் கொண்டு எய்தவே.
44
   
3257.
அன்ன கீடம் அமர்ந்த குடம்பையை
இந் நிலத்தர் கொண்டு ஏகி அகத்துறை
பொன்னை வாங்கிப் பொறியினை நோக்கியே
இன்ன மூர்த்தம் இஃது என நாடுவார்.
45
   
3258.
நாடியே அவை நாரணன் ஆகவே
கூடும் அன்பில் குவலயத்தே சிலர்
தேடி அர்ச்சனை செய்வர் அதன் பெயர்
கேடு இல் சாளக் கிராமம் அது என்பரால்.
46
   
3259.
மாலும் எந்தையும் மாண்பொடு கூடியே
சால மேவும் தனி நகரே இதன்
மூல காரணம் ஆகையின் முந்தையோர்
மேலை நாமம் அதற்கு விதித்தனர்.
47
   
3260.
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே
முந்து கூடி முயங்கிய எல்லையில்
வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயனே.
48
   
3261.
மைக் கருங்கடல் மேனியும் வான் உலாம்
செக்கர் வேணியும் செண்டு உறு கையும் ஆய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்.
49
   
3262.
அத்தகும் திரு மைந்தற் அரிகர
புத்திரன் என்னும் நாமம் புனைந்து பின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம் பல நல்கியே.
50
   
3263.
புவனம் ஈந்து புவனத்து இறை என
அவனை நல்கி அமரரும் மாதவர்
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
சிவனது இன் அருள் செப்புதல் பாலதோ.
51
   
3264.
முச்சகத்தை முழுது அருள் மேனி கொண்டு
அச்சுதன் தொழ அச்சுதன் போற்றிட
மெச்சியே அவருக்கு விடை கொடுத்து
எச்சம் இல் சிவன் ஏகினன் என்பவே.
52
   
3265.
நாயகன் செல நான் முகத்தோனை முன்
தாய் எனத் தரும் தாமரைக் கண்ணினான்
சேய வைகுண்டம் சேர்ந்தனன் ஐயனும்
போயினான் தன் புவனத்து அரசினில்.
53
   
3266.
அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்கும் ஆகி இருந்து எவ் உலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பான் ஆல்.
54
   
3267.
மண் அகத்தரும் வானவரும் மலர்
அண்ணலும் தினம் அர்ச்சிக்கும் நீர்மையான்
கண்ணனும் புகழப்படு காட்சியான்
எண்ணின் அங்கு அவனுக்கு எதிர் இல்லையே.
55
   
3268.
அன்ன நீர்மையன் காண் எனது அன்பினால்
உன்னை வந்தினிக் காத்து அருள் உத்தமன்
என்னல் ஓடும் இசைந்து நின்றாள் அரோ
பொன்னி நாடு தணந்த புலோமசை.
56
   
3269.
இந்திரன் மங்கை இசைந்தது காணா
நம் தமர் கையனும் நம்பனும் நல்கும்
மைந்தனை உன்னி வழுத்துத லோடும்
அந்தம் இலா எமது ஐயன் அறிந்தான்.
57
   
3270.
கார் உறழ் வெய்ய களிற்று இடை ஆகிப்
பார் இடர் எண்ணிலர் பாங்கு உற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன் உற வந்தான்.
58
   
3271.
முன் உற மேவலும் மூ உலகோர்க்கு
மன்னவன் ஆகிய வாசவன் ஐயன்
பொன் அடி தாழ்ந்து புகழ்ந்தனன் நிற்ப
என் இவண் வேண்டும் இயம்புதி என்றான்.
59
   
3272.
கேட்டலும் இன்ன கிளத்தினன் மாயை
மாட்டு உறு சூரன் வருந்து தலால் பொன்
நாட்டினை விட்டனன் நானிவளோடும்
காட்டு உறுவே எனவே கரவுற்றே.
60
   
3273.
நோற்று இவண் மேவினன் நோதகும் வானோர்
ஆற்ற அரிதா அவுணன் செயும் இன்னல்
சாற்றினர் வந்து தளர்ந்தனம் எம்மைப்
போற்றுதி என்று புலம்பினர் அன்றே.
61
   
3274.
தள்ளரும் வானவர் தம்மொடும் முக்கண்
வள்ளல் தனக்கு எம் வருத்தம் உரைக்க
வெள்ளி மலைக்கு விரைந்து செல்கின்றேன்
எள் அரிதாகிய இல்லினை வைத்தே.
62
   
3275.
தஞ்சம் இலாது தனித்து இவ் வனத்தே
பஞ்சு உறழ் செய்ய பதத்தியை வைத்தால்
வஞ்சகர் கண்டிடின் வௌவுவர் என்றே
அஞ்சினள் உன்தன் அடைக்கலம் ஐயா.
63
   
3276.
ஆத்தன் அமர்ந்த அகன் கிரி நண்ணி
வாய்த்திடும் இவ்விடை வந்திடு காறும்
பூத்திடு காமர் புலோமசை தன்னைக்
காத்து அருள் என்று கட்டுரை செய்ய.
64
   
3277.
மேதகு செண்டு உள வீரன் இசைப்பான்
ஏதம் உறாத நின் ஏந்திழை தன்னைத்
தீது அடையாது சிறப்பொடு காப்பன்
நீ தனி என்று நினைந்திடல் கண்டாய்.
65
   
3278.
இல்லுறு நங்கையை இங்ஙனம் வைத்தே
அல் உறழ் கண்டன் அரும் கயிலைக்குச்
செல்லுதி என்று அருள் செய்து திரும்பித்
தொல்லை எம் ஐயன் ஒர் சூழலின் உற்றான்.
66
   
3279.
வாள் அமர் நீந்தி வயந்தனின் மிக்க
காளன் எனப்படு கட்டுரை யோனை
ஆள் உடை அண்ணல் அருள் கொடு நோக்கிக்
கேள் இவை என்று கிளத்திடுகின்றான்.
67
   
3280.
மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப்
போவது உன்னினன் பொன் நகர் மன்னன்
தேவி இருந்தனள் தீங்கு வராமே
காவல் கொள் நீ எனக் கற்பனை செய்தான்.
68