அசமுகி சோகப் படலம்
 
3387.
அறைபடு கழலினான் அவுண மாதர் கை
எறிதலும் குருதி நீர் எழுந்த தன்மையால்
திறல் கெழு வெய்ய சூர் திருவைச் சுட்டிடும்
குறை படு ஞெகிழியின் கோலம் போலுமே.
1
   
3388.
திரைந்து எழு குடிஞை போல் குருதி சென்றிடக்
கரம் துமி படுதலும் கவன்று வீழ்ந்தனள்
வருந்தினள் அரற்றினள் மறி முகத்தினாள்
விரிந்திடு கனல் உடை வேலை போன்று உளாள்.
2
   
3389.
மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள்
வெருண்டனள் நிலன் உற வியன் கை எற்றினள்
உருண்டனள் வெரி நுடன் உரமும் தேய் உறப்
புரண்டனள் செக்கரில் புயலில் தோன்றுவாள்.
3
   
3390.
புரந்தரன் தேவியைப் பொம் எனப் பிடித்
துரந்தரு வாயிலில் இட்டு உண்பன் ஈண்டு எனா
விரைந்து எழும் சென்றிடும் மீளும் வீழ்ந்திடும்
இருந்திடும் சாய்ந்திடும் இரங்கும் சோருமே.
4
   
3391.
கடித்திடும் இதழினைக் கறை கண் மீச்செலக்
குடித்திடும் உமிழ்ந்திடும் குவலயத்து இரீஇத்
துடித்திடும் பெயர்ந்திடும் துளக்கும் சென்னியை
இடித்து எனக் கறித்திடும் எயிற்றின் மாலையே.
5
   
3392.
திகைத்திடும் நன்று நம் செய்கை ஈது எனா
நகைத்திடும் அங்குலி நாசியில் தொடும்
புகைத்து என உயிர்த்திடும் புவியைத் தாள்களால்
உகைத்திடும் புகை அழல் உமிழும் வாயினால்.
6
   
3393.
உம் என உரப்பிடும் உருமுக் கான்று என
விம் எனச் சினத்திடும் எரி விழித்திடும்
தெம் முனைப் படை அடும் சேனை வீரனை
விம்மிதப் படும் உடல் வியர்க்கும் வெள்குமே.
7
   
3394.
அற்றிடு கரத்தினை அறாத கையினால்
தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும்
ஒற்றிடும் விழிகளில் உகுக்கும் சோரி நீர்
இற்று எவர் பட்டனர் என்னின் என்னுமே.
8
   
3395.
வீவதே இனி எனும் வினையினேன் தனக்கு
ஆவதோ இஃது எனும் ஐயகோ எனும்
ஏவரும் புகழ் தரு எங்கள் அண்ணர் பால்
போவது எவ்வாறு எனப் புலம்பு கொள்ளுமே.
9
   
3396.
காசினி தனில் வரும் கணவர் கை தொடக்
கூசுவரே எனும் குறிய பங்கு எனப்
பேசுவரே எனும் பிறரும் வான் உளோர்
ஏசுவரே எனும் என் செய்கேன் எனும்.
10
   
3397.
தேவர்கள் அனைவரும் சிந்தித்து என்கரம்
போவது புணர்த்தனர் பொன்றுவேன் இனி
ஆவதன் முன்னரே அவரை அட்டு உல
கேவையும் முடிப்பன் என்று எண்ணி சீறுமே.
11
   
3398.
பார் உயிர் முழுவதும் படுத்திடு ஓ எனும்
ஆர் அழல் வடவையை அவித்திடோ எனும்
பேர் உறு மருத்தினைப் பிடித்திடோ எனும்
மேருவை அலைத்தனன் வீட்டு கோ எனும்.
12
   
3399.
பீள் உறும் எழிலிகள் பிறவும் பற்றியே
மீள அரிது எனும் வகை மிசைந்திடோ எனும்
நாளினை முழுவதும் நாள் உடன் வரும்
கோளினை முழுவதும் கொறித்திடோ எனும்.
13
   
3400.
சீர்த்தகை இழந்து யான் தெருமந்து உற்றது
பார் திகழும் கொல் இப் பரிதி வானவன்
ஆர்த்திடும் தேர் ஒடும் அவனைப் பற்றியே
ஈர்த்தனன் வருவதற்கு எழுந்திடோ எனும்.
14
   
3401.
கண்டது ஓர் பரிதியைக் கறித்துச் சூழ்ச்சி செய்
அண்டர்கள் யாரையும் அடிசில் ஆகவே
உண்டு எழு கடலை உறிஞ்சிக் கை புறத்
தெண் திரை தனில் கழீஇத் திரும்புகோ எனும்.
15
   
3402.
செம் நலம் நீடிய தென்னம் காய் இடைத்
துன்னிய தீம் பயன் சுவைத்திட்டால் எனப்
பின் உறு மதியினைப் பிடித்துக் கவ்வி மெய்
இன் அமிர்தினை நுகர்ந்து எறிகெனோ எனும்.
16
   
3403.
இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச்
செம் துவர்க் காய் எனச் சேர வாய்க்கொளா
ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர்
வெம் துகளாக் கொடு மிசைக எனோ எனும்.
17
   
3404.
தாக்குகோ பணிகளைத் தலை கிழக்கு உற
நீக்குகோ பிலம் படு நிலயத் தோரையும்
தூக்குகோ புவனியைச் சுழற்றி மேல் கீழ்
ஆக்குகோ மால் என அருந்து கோ எனும்.
18
   
3405.
ஆரும் அச்சு உற இனையன அசமுகி வெய்யாள்
சூரன் தங்கை மால் உளத்தினள் இறப்பது துணிவாள்
பேர் இடும்பையள் தொலை உறா மானமே பிடித்தாள்
வீரவன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள்.
19
   
3406.
வெகுளும் எல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய
தகுவர் தம் குலத்து உதித்தனள் ஆயினும் தகவின்
புகுதி சால்பு உணர் புந்தியள் ஆதலில் பொருக்கு என்று
இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள்.
20
   
3407.
வையம் என் செய்யும் வானகம் என் செயும் மற்றைச்
செய்ய வானவர் என் செய்வர் வரைகள் என் செய்யும்
ஐய மால் கடல் பிறவும் என் செய்திடும் அவனால்
கை இழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ.
21
   
3408.
பாரும் வானமும் திசைகளும் பல் உயிர்த்தொகையும்
சேரவே முடித்திடுவதை நினைந்தனை செய்யின்
ஆரும் நின்றனை என் செய்வர் அவை எலாம் உடைய
சூரனே உனை முனிந்திடும் அவன் வளம் தொலையும்.
22
   
3409.
ஆதலான் மனத்து ஒன்று நீ எண்ணலை அவுணர்
நாதன் ஆகிய வெய்ய சூர் முன்னுற நாம் போய்
ஈது எலாம் சொலின் இமையவர் கிளை எலாம் முடிக்கும்
போதலே துணிவு என்றனள் பின்னரும் புகல்வாள்.
23
   
3410.
ஞானம் இல் சிறு விதி நடாத்தும் வேள்வியில்
வானவர் தங்களின் மடந்தை மார்களில்
தானவர் தங்களில் தத்தம் மெய்களில்
ஊனம் இல்லோரையாம் உரைக்க வல்லமோ.
24
   
3411.
நினைவருங் கண் நுதல் நிமலற்கே அலால்
அனையனை அடைதரும் அறிஞர்க்கே அலால்
எனைவகை யோர்க்கும் எவ் உயிர்க்கும் ஏற்பது ஓர்
வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ.
25
   
3412.
ஆகையின் மங்கை நீ அரற்றல் வெள்கியே
சோகமும் கொள்ளலை துயரும் இன்பமும்
மோகமும் உயிர்க்கு எலாம் முறையில் கூடும் ஆல்
ஏகுதும் எழுக என இயம்பித் தேற்றினாள்.
26
   
3413.
மொழிந்து துன்முகி தெளித்தலும் நன்று எனா உன்னா
எழுந்து துண் என அசமுகி என்பவள் இலதாய்க்
கழிந்த துன்பொடு நின்றது ஓர் சசியினைக் காணூஉ
அழிந்த மானம் வெம் தீச் சுட இனையன அறைவாள்.
27
   
3414.
துப்பு உறுத்திய அண்டங்கள் யாவினும் சூரன்
வைப்பு உறுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும்
இப்புறத்தினில் ஒளிப்பினும் இது அன்றி அண்டத்து
அப்புறத்தினில் ஒளிப்பினும் பிழைப்பு உமக்கு அரிதே.
28
   
3415.
மறைதல் உற்றிடும் இந்திரன் தன்னை இவ் வனத்தின்
உறைதல் உற்றிடும் உன்தனை ஒழிந்த வானவரை
இறைதனில் பற்றி ஈர்த்துப் போய் என்னகர் தன்னில்
சிறைப் படுத்துவன் திண்ணம் எம் கோமகன் செயலால்.
29
   
3416.
உங்கள் தம்மை யான் சிறைப் படுத்தேன் எனின் உலகம்
எங்கு மாள்கின்ற சூரபன்மா எனும் இறைவன்
தங்கை அன்றியான் எனது உரம்தனில் எழுந்தனவும்
கொங்கை அன்றியான் பேடியே குறிக்கோள்
                            என்று அகன்றான்.
30