இந்திரன் மீட்சிப் படலம்
 
3417.
அகல நின்றது ஓர் வீர மாகாளன் ஆம் அடலோன்
உகவை யோடு உறு சசியினை நோக்கி நின் உளத்தில்
தகுவர் தங்களுக்கு அஞ்சலை அன்னை உன் தலைவன்
புகுதும் எல்லையும் அளிப்பன் ஈண்டு உறைக
                              என்று போனான்.
1
   
3418.
போன காலையில் புலோமசை அடவி அம்புறன் ஓர்
மான் இனம் பிரிந்து உற்று என அவ்வனம் வைகிக்
கோன் அவன் வினை முற்றிய நோற்றனள் குறிப்பால்
ஆன பான்மையை நாரத முனிவரன் அறிந்தான்.
2
   
3419.
மேலை வெள்ளி அம் பருப்பதம் தனில் விரைந்து ஏகிச்
சீல விண்ணவர் தம் உடன் சிவன் அடி பரவக்
காலம் இன்றியே இருந்திடும் இந்திரன் கடைபோய்
ஞாலம் வைகிய புலோ மசைக்கு உற்றவா நவின்றான்.
3
   
3420.
நவின்ற வாசகம் கேட்டலும் மகபதி நனி உள்
கவன்று தேறியே முனிந்து பின் இறைஅருள் கருதி
அவன்தன் மாமுறை தூக்கியே தன்னை நொந்து அழுங்கித்
துவன்ற தேவரோடு எழுந்தனன் அரன் புகழ் துதித்தே.
4
   
3421.
வந்து நந்தி எம் அடிகளின் அடி முறை வணங்கி
அந்தம் இல் பகல் வேலை நோக்கு உற்றனம் அமலன்
சிந்தை செய்து எமை அருள் புரிந்திடுகிலன் தீயேம்
முந்தி இயற்றிய தீ வினைப் பகுதியை முன்னி.
5
   
3422.
கைம்மை ஆம் பெயர் அணங்கின் ஓர் பெறாவகை கறுத்த
செம்மை யார் களத்து எம்பிரான் எமக்கு அருள் செய்வான்
பொய்ம்மை தீர் தவம் இயற்றிட நிலம் மிசைப் போதும்
எம்மை ஆங்கு அருள் புரிந்தனை விடுத்தி என்று இயம்ப.
6
   
3423.
நன்று போம் என நந்தி எம் பெருந்தகை நவிலத்
துன்று வானவர் தம்மொடும் கழுமலம் துன்னி
நின்ற வீரமாகாளனைக் கண்டனன் நேர் போய்ச்
சென்று புல்லியே முகமன் ஓர் அளப்பு இல செப்பி.
7
   
3424.
போதி ஐய என் தனையனை ஐயன் பால் புகுத்தி
மாது நோற்றுழிக் குறுகியே அவள் துயர் மாற்றிக்
கேதம் எய்திய அசமுகி சூள் உரை கேளா
ஏது செய்வது என்று உன்னினன் இமையவர்க்கு இறைவன்.
8
   
3425.
சுடர்ப் பெரும் குலிசத்து இறை சூழ்ந்தனன் துணியா
அடுத்த மங்கையை உடன் கொடே விரைந்து
                              அவண் அகன்று
புடைக் கண் வந்திடும் கடவுளர் தம்மொடும் புராரி
எடுத்த வார் சிலைப் பொற்றையில் கரந்தனன் இருந்தான்.
9