அசமுகி புலம்புறு படலம்
 
3486.
மறிமுகம் உடைய தீயாள் மன்றினுக்கு அணியள் ஆகிக்
கிறி செயும் அன்னை தன்னைக் கேளிரை மருகானோரைத்
திறல் உடை முன்னையோரைச் சிந்தையில் உன்னி
                                    ஆண்டைப்
பொறி மகள் இரியல் போகக் கதறியே புலம்பல் உற்றாள்.
1
   
3487.
வெறி யாரும் இதழி முடிப் பண்ணவர் கோன் அருள்
                      புரிந்த மேல் நாள் வந்தாய்
பிறியாது நும்மைப் போற்றித் திரிவன் என்றாய்
               அம்மொழியும் பிழைத்தாய் போலும்
அறியாயோ கரம் போனது அஞ்சல் என்றாய் இலை
                      தகுமோ அன்னே அன்னே
சிறியேன் நான் பெண் பிறந்து பட்ட பரிபவம் என்று
                                 தீரும் ஐயோ.
2
   
3488.
தாதை யானவர் அளித்த மைந்தர்கணே விருப்புறுவர்
                                 தாயார் பெற்ற
மாதரார் பால் உவகை செய்திடுவர் ஈது உலக வழக்கம்
                                      என்பார்
ஆதலால் என் துயரம் அகற்ற வந்தாய் இலை அந்தோ
                                  ஆரும் இன்றி
ஏதிலார் போல் தமியேன் கரம் இழந்தும் இவ் உயிர்
                         கொண்டு இருப்பதேயோ.
3
   
3489.
வருவீர் எங்கணும் என்றே அஞ்சாது புலோமசையை
                              வலிதே வௌவிப்
பெரு வீரமுடன் வந்தேன் எனது கரதலம் துணித்துப்
                               பின்னே சென்று
பொரு வீர மாகாளன் அவளையும் மீட்டு ஏகினன்
                        அப்பொதும்பர்க் கானில்
ஒருவீரும் செல்லீரோ நமரங்காள் நீரும் அவர்க்கு
                               ஒளித்திட்டீரோ.
4
   
3490.
புரம் குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கிய தொல்
                   நிலை குறைத்தும் புரை உறாத
வரம் குறைத்தும் புகழ்குறைத்தும் மறை ஒழுக்கம்
             தனைக் குறைத்தும் மலிசீர் தொல்லை
உரம் குறைத்தும் வானவரை ஏவல் கொண்டோம்
             என்று இருப்பீர் ஒருவன் போந்து என்
கரம் குறைத்தது அறியீர் நும் நாசி குறைத்தனன்
                    போலும் காண்மின் காண்மின்.
5
   
3491.
மேயினான் பொன் உலகின் மீன் சுமந்து பழிக்கு
                     அஞ்சி வெருவிக் காணான்
போயினான் போயினான் வலி இல் என்று உரைத்திடுவீர்
                           போலும் அன்னான்
ஏயினான் ஒருவனையே அவன் போந்து என் கரம்
                    துணித்தான் இல்லக் கூரைத்
தீயினார் கரந்த திறன் ஆயிற்றே இந்திரன் தன்
                             செயலும் மாதோ.
6
   
3492.
எள் உற்ற நுண் துகளில் துணை ஆகும் சிறுமைத்தே
                            எனினும் யார்க்கும்
உள் உற்ற பகை உண்டேல் கேடு உளது என்று
           உரைப்பர் அஃது உண்மை ஆம் ஆல்
தள் உற்றும் தள் உற்றும் ஏவல் புரிந்து உழல் குலிசத்
                            தடக்கை அண்ணல்
கள் உற்று மறைந்து இருந்தே எனது கரம் துணிப்
                   பித்தான் காண்மின் காண்மின்.
7
   
3493.
சங்கு இருந்த புணரிதனில் நடு இருந்த வடவை எனும்
                              தழலின் புத்தேள்
உங்கிருந்த குவலயமோடு அவை முழுதும் காலம்
                      பார்த்து ஒழிப்பதே போல்
அங்கு இருந்து என் கரம் துணித்த ஒரு வோனும்
               உங்களை மேல் அடுவன் போலும்
இங்கு இருந்து என் செய்கின்றீர் வானவரைச் சிறியர்
                           என இகழ்ந்திட்டீரே.
8
   
3494.
முச்சிரம் உண்டு இரணியனுக்கு இருசிரம் உண்டு அந்த
                            வன்னிமுகற்கு மற்றை
வச்சிர வாகுவுக்கு ஒருபான் சிரம் உண்டே அவை
                        வாளா வளர்த்திட்டாரோ
இச்சிரங்கள் என் செய்யும் ஒரு சிரத்தோன் என்
                    கரத்தை இறுத்துப் போனான்
அச்சுரர்க்கு அஞ்சுவரே பாதலத்தில் அரக் கரிவர்க்கு
                              அளியர் அம்மா.
9
   
3495.
பிறை செய்த சீர் உருவக் குழவி உருக் கொண்டு உறு
                        நாள் பெயர்ந்து வானின்
முறை செய்த செம் கதிரோன் ஆதப மெய் தீண்டுதலும்
                                முனிந்து பற்றிச்
சிறை செய்த மருகாவோ மருகாவோ ஒருவன் எனைச்
                             செம்கை தீண்டிக்
குறை செய்து போவதுவோ வினவு கிலாய் ஈது என்ன
                              கொடுமை தானே.
10
   
3496.
நீண்ட ஆழி சூழ் உலகை ஓர் அடியால் அளவை
                     செய்தான் நேமி தன்னைப்
பூண்டாய் பொன் ஆரம் என இந் நாளும் ஓர் பழியே
                               பூணா நின்றாய்
ஈண்டு ஆரும் குறும் பகைஞர் என்கரம் போந்து திறம்
                          இயற்ற இனிது வையம்
ஆண்டாய் நம் தாரகனே குறை மதி நீரோ நின் பேர்
                               ஆற்றல் அம்மா.
11
   
3497.
வை ஒன்று வச்சிரக்கைப் புரந்தரனைத் தந்தியொடும்
                              வான் மீச்செல்ல
ஒய் என்று கரத்து ஒன்றால் எறிந்தனை வீழ்ந்தனன்
                     கிடப்ப உதைத்தாய் என்பர்
மெய் என்று வியந்து இருந்தேன் பட்டிமையோ அவன்
                    தூதன் வெகுண்டு வந்து என்
கை ஒன்று தடிந்தானே சிங்கமுக வீர இது காண்கிலாயோ.
12
   
3498.
சூரனாம் பெயர் படைத்த அவுணர்கள் தம் பெருவாழ்வே
                              தொல்லை அண்டம்
சேரவே புரந்தனை நின் பரிதி செம்கோல் குடை எங்கும்
                                 செல்லா நிற்கும்
ஆரும் வானவர் அவற்றிற்கு அச்சு உறுவர் பொன்
                       நகரோன் ஆணை போற்றும்
வீரமாகாளன் இடைக் கண்டிலனால் வலியர் முனம் மேவு
                                      உறாவோ.
13
   
3499.
ஒன்னார் தம் சூழ்ச்சியினால் ஒருமுனிவன் என்சிறுவர்
                       உயிர் கொண்டு உற்றான்
இந் நாளில் அஃதன்றி ஒருவனைக் கொண்டு எனது
                         கையும் இழப்பித்தாரே
பின்னாள் இவ் வருத்தம் உற நன்று அரசு
              புரிந்தனையால் பிழை ஈது அன்றோ
மன்னாவோ மன்னாவோ யான் பட்ட இழி வரவை
                                மதிக்கிலாயோ.
14
   
3500.
காவல் புரிந்து உலகு ஆளும் அண்ணாவோ
             அண்ணாவோ கரம் அற்றேன் காண்
ஏவர் எனக்கு உறவு ஆவார் ஊனம் உற்றோர்
                இருப்பதுவும் இழுக்கே அன்றோ
ஆவிதனை விடுவேன் நான் அதற்கு முனம் என்மானம்
                              அடுவது ஐயோ
பாவி ஒரு பெண் பிறந்த பயன் இதுவோ விதிக்கு
                   என்பால் பகை மற்று உண்டோ.
15